“என்னோட லுங்கியைத் துவைக்கலியா?” என்று தலையைத் துவட்டிக்கொண்டே கேட்டான் தியாகு.

“குளிச்சு முடிச்சாச்சா?” கேட்டாள் மனைவி வசந்தி.

“ஆமா”

“பாத்ரூம்ல கால் அடிக்கு ஏன் தண்ணீ நிக்குது?”

“நின்னுகிட்டே குளிச்சேன். அதான்”

“போய் அடைப்பைக் குத்தி விடுங்க”

“இப்போ தான் குளிச்சேன் வசந்தி. உடனே குப்பையைத் தொடச் சொல்றியா?”

“குத்தி விட்டுட்டு மறுபடியும் குளிங்க”

“மறுபடியும் அடைச்சிக்கும்”

“ஏன் அடைக்குது?”

“தலை முடி கொட்டுது. அடைக்குது”

தியாகுவுக்கு அநியாயத்துக்கு முடி கொட்டிக் கொண்டிருந்தது. பிளாஸ்டிக் மக்கில் தண்ணீர் எடுத்துத் தலைக்கு ஊற்றவே பயமாக இருந்தது. மக்கைத் திருப்பி வைத்துக் குளித்துப் பார்த்தான். பிடி, முடி இரண்டுமே உதிர்ந்தன.

தலையில் இங்க் ஃபில்லர் வைத்து சொட்டை நீர்ப் பாசனம் செய்தும் பலனில்லை.

“வசந்தி.. விடிஞ்சா தண்ணீ வடிஞ்சிடும், பொறுத்துக்கோ. நான் ஈரத் துணியோட நிக்கறேன்.. என்னோட துவைச்ச லுங்கி எங்கே?”

“ம்ம்ம். மூனு நாளா துணி துவைக்கல்லே”

“ஏன்?”

“வாஷிங் மெஷின் ரிப்பேர்”

அவர்கள் வீட்டு வாஷிங் மெஷின் ஏழு வருடம் முன்னால் வாங்கியது. டாப் லோட் வாஷிங் மெஷின்.

“சரியாவே துவைக்கறது இல்லே. ஃபரண்ட் லோட் மெஷினா இருந்தா நல்லாத் துவைக்குமாம்” என்றாள் வசந்தி.

“மெஷினைப் படுக்க வைச்சிடு வசந்தி. ஃப்ரெண்ட் லோட் ஆகிடும்”

“ஏன் இப்படிப் படுத்தறீங்க? புது மெஷின் வாங்குங்க”

“பண்டிகை கால ஆஃபர் போடுவாங்க. அப்போ வாங்கிக்கலாம்”

அமேசானில் அவ்வப்போது Great Indian Festival என்று போட்டு சீன, கொரியத் தயாரிப்புகளை விற்றுக் கொண்டிருப்பார்கள். அதற்காகக் காத்திருந்தான் தியாகு.

“இப்போதைக்கு இந்த மெஷினை சர்வீஸ் செஞ்சுக்கோ. கஸ்டமர் கேரைக் கூப்பிட்டுப் பேசு”

அதை விடக் கஷ்டமான வேலை இந்த உலகில் வேறெதுவும் கிடையாது என அவனுக்குத் தெரியும். எனவே தான் அந்த வேலையை வசந்திக்குத் தள்ளி விட்டான்.

1800 என்று ஆரம்பிக்கும் நம்பரை அழைத்தாள் வசந்தி. 1800 செகண்டுகள் பியானோ வாசிக்கும் சத்தம் கேட்டது. பிறகு ‘ப்ளீஸ் பி ஆன் தி லைன்’ என்றது ஒரு குரல்.

“என்ன சொல்லுது?” என்றான் தியாகு.

“லைன்ல இருக்கச் சொல்லுது”

“பின்னே சோபால இருக்கே”

வசந்தி முறைத்தாள்.

சிறிது நேரத்துக்குப் பிறகு ‘தமிழுக்கு எண் நான்கை அழுத்தவும்’ என்றது.

நான்கை அழுத்தினாள் வசந்தி.

“வணக்கம்” என்றது ஒரு ஆண் குரல். விக்ஸ் மாத்திரை சாப்பிட வேண்டிய குரல்.

“சொல்லுங்க சார்” என்றது மறுபடியும்.

“நான் சார் இல்லே. மேடம்”

“ஸாரி. மெஷின் என்ன செய்யுது?”

“எதுவுமே செய்யல்லே”

“ரிப்பேர்னு நான் எடுத்துக்கலாமா?”

“விலைக்குக் கூட எடுத்துக்கலாம்”

“நோ. மெஷின் மாடல் என்னன்னு சொல்லுங்க. டிஜிட்டலா?”

“தெரியாது”

“மெஷின் மேல என்ன போட்டிருக்கு?”

“அழுக்கு லுங்கி போட்டிருக்கு”

“எவ்வளவு கிலோ?”

“கிலோ கணக்கிலே லுங்கி கட்ட அவர் என்ன காண்டாமிருகமா?”

“மேடம். நீங்க தப்பாப் புரிஞ்சிகிட்டீங்க. மெஷின் எவ்வளவு கிலோ கெபாசிட்டி?”

“தெரியாது”

“மெஷின் எப்போ வாங்கினீங்க?”

“ஏழெட்டு வருஷம் முன்னாலே”

“அப்போ அவுட் ஆஃப் வாரண்டி. அட்ரஸ் சொல்லுங்க”

சொன்னாள்.

“அவுட் ஆஃப் சிட்டியா?”

அவனின் இந்த அட்ராசிட்டி கோபத்தை வரவழைத்தது வசந்திக்கு.

“சர்வீஸுக்கு ஆள் அனுப்ப முடியுமா? முடியாதா?”

“48 மணி நேரத்திலே தெரியும்” சினிமா டாக்டர் மாதிரிப் பேசினான். பிறகு “வீட்டு லொகேஷனுக்கு ஏதாவது லேண்ட் மார்க் சொல்லுங்க”

“வீட்டு வாசல்ல ஒரு பெரிய நாய் இருக்கும்”

“லொகேஷன் கேட்டா அல்சேஷன் சொல்றீங்க! ஓ.கே. சீக்கிரமா ஆள் அனுப்பறோம்”

போன் துண்டிக்கப்பட்டது.

சிறிது நேரத்தில் ஒரு மெஸ்ஸேஜ் வந்தது. ‘உங்கள் சர்வீஸ் பதியப்பட்டது, டெக்னீஷியன் உங்களைத் தொடர்பு கொள்வார்’ என்றது.

அடுத்த நாள் காலை ஒரு போன் வந்தது.

“நான் வாஷிங் மெஷின் சர்வீஸ் மெக்கானிக் பேசறேன், இன்னைக்கு வரலாமா?”

“வரலாம்” என்றாள் வசந்தி.

“அரை மணி நேரத்திலே இருப்பேன்”

வசந்தி வாசலையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். யாரும் வரவில்லை. ஒரு மணி நேரம் ஆயிற்று. நாற்பது ரீல் பார்த்து முடித்திருந்தாள். அப்போதும் வாசல் மணி அடிக்கவில்லை.
போன் செய்தாள் வசந்தி.

“எங்கே இருக்கீங்க”

“ஒரு சர்வீஸ் பார்த்துகிட்டிருக்கேன். இப்போ வந்துடுவேன்”

“நான் இன்னும் சமைக்கக் கூட இல்லே. எப்போ வந்து வாஷிங் மெஷினை சரி செய்யப் போறீங்க?”

“வாஷிங் மெஷின்லயா சமைக்கப் போறீங்க மேடம்? அது தப்பு. வாந்தி வந்துடும்”

வசந்தி மறுபடியும் காத்திருந்தாள். பிறகு போன் செய்தாள். போனை அவன் எடுக்கவில்லை. துண்டிக்கப்பட்டது.

வசந்திக்கு மண்டை காய்ந்தது. மறுபடியும் அழைத்தாள். ரிங் போய்க் கொண்டே இருந்தது. அர்த்த ராத்திரியில் ரயிலில் அழும் குழந்தை போல நாராசமாய்ப் போய்க் கொண்டிருந்தது. அவன் எடுக்கவே இல்லை.

மீண்டும் மீண்டும் அழைத்தாள். அவனது போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

சமைப்பதில் கூட புத்தி போகவில்லை. ஆன்லைனில் ஆர்டர் செய்தாள். ஆனியன் ஊத்தப்பம் கூட வந்து விட்டது. சர்வீஸ் மெக்கானிக் சனியன் தான் வரவில்லை.

மதியம் மூன்றரை மணி. ராஜ்ய சபா எம்.பிக்கள் உறங்கும் நேரம். திடீரெனப் போன் அடித்தது. அலறிக் கொண்டு எழுந்தாள். மெக்கானிக் நம்பரைக் காட்டியது போன்.

“மேடம்”

“எங்கே இருக்கே? எந்த நாசமாப் போனவ வீட்டிலே இருக்கே?”

“உங்க வீட்டு வாசல்ல மேடம். கதவைத் திறங்க”

ஓடிப் போய்க் கதவைத் திறந்தாள். ஒடிசலாக ஒருவன் நின்று கொண்டிருந்தான். இவனால் பால் பாயிண்ட் பேனா கூட சர்வீஸ் செய்ய முடியாதே என நினைத்துக் கொண்டாள்.

“ஸாரி மேடம். இன்னைக்கு அஞ்சு சர்வீஸ். மெஷின் எங்கே இருக்கு? பாத்ரூம் பக்கத்திலேயா?”

“பின்னே! பூஜை ரூம் பக்கத்திலேயா இருக்கும்?”

மெஷினைக் கழட்டினான் அவன். அவன் முகம் மலர்ந்தது. மூவாயிரம் ரூபாய்க்கு ஸ்பேர் பார்ட் மாற்ற வேண்டும் என்ற மலர்ச்சி அது.

“ஒரு பழைய துணி கொடுங்க”

“வீட்ல இருக்கறது எல்லாமே பழைய துணி தான். துவைச்சு நாலு நாள் ஆகுது”

சிறிய சிறிய பாகங்களைக் கழட்டினான். மிக்ஸியில் அரைப்பதற்கு தயாரக இருக்கும் பருப்புத் துகையலுக்கானப் பொருட்கள் போல அவை பரவியிருந்தன.

“உன் பேர் என்னப்பா?” என்றாள் வசந்தி.

“வாஷு”

“வாசுவா?”

“இல்லே. வாஷு”

“அவ்வளவு தடவை போன் செஞ்சேன். எடுத்து பேசக் கூட முடியல்லியா? ஆனாலும் இது ஓவர்”

வாஷு வாய் திறக்காமல் வேலையில் ஈடுபட்டிருந்தான்.

“கஸ்டமர்னா அவ்வளவு கேவலமா?”

டிரம்மைக் கழட்ட யத்தனிக்கும் போது அவனுக்கு ஒரு போன் வந்தது. ஸ்பீக்கரில் போட்டான்.

“சின்மயா நகருக்கு எப்போ வருவீங்க?” என்று கத்தினது ஒரு பெண் குரல். சிங்கப்பூருக்கே அது கேட்டிருக்கும்.

“வரேன்மா” போனை கட் செய்தான் அவன்.

டிரம்மை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது இன்னொரு போன். எடுத்துப் பேசினான். ஏழு நிமிடங்கள் பேசினான்.

“சீக்கிரம் வேலையை முடிப்பா” என்றாள் வசந்தி.

“இந்த போர்டு மாத்தினா முடிஞ்சது”

புது போர்டை எடுத்தான். பாலிதீன் கவரைப் பிரிக்கும் போது இன்னொரு போன்.

“ஆமா. காத்தால இளங்கோ நகர்ல வீட்டுக்கு வந்து பாத்தேன். ஈஸ்வரி மேடம் தானே நீங்க? ஓவர் ஹெட் டேங்க்ல தண்ணீ இருக்கான்னு பாருங்க”

போனை வைத்தான். அடுத்த வேலை தொடங்கும் முன் இன்னொரு போன்.

“ஏன்பா இப்படி லேட் ஆகுதே!” அலுத்துக் கொண்டாள் வசந்தி.

போனை எடுத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டான் வாஷு.

“அதை ஏன் பக்கத்திலே வைச்சுக்கறே? மறுபடியும் போன் பேசறதுக்கா? வேலையை முடிக்க வேணாமா?”

“இப்போ நான் என்ன செய்யனும் மேடம்?”

“போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணு”

வாஷு சிரித்தான். நமுட்டுத்தனமான சிரிப்பு அது.

Author

You may also like

3 comments

S. Harihaean October 17, 2025 - 1:29 pm

ஓர் உழைப்பாளியின் அன்றாடத் தொல்லைகளை நகைச்சுவை நிரம்ப மிக நேர்த்தியான முறையில் எழுதி இருக்கிறார். அவர் மென்மேலும் வளர வாழ்த்துகள்!

Reply
Sudha Thirunarayanan October 17, 2025 - 5:54 pm

சூப்பர் சிரிப்பு. வா(ஷ்)ழ்த்துகள்.

Reply
Asokan kuppusamy October 18, 2025 - 1:13 pm

சுப்பர் வாய் விட்டு சிரித்தேன்

Reply

Leave a Reply to S. Harihaean Cancel Reply