Home சிறுகதைடயானா ஹேர் கட்

டயானா ஹேர் கட்

by Subi Senthur
3 comments
Diana-Haircut

தனது மூன்று வயது குழந்தை யாழினியை சென்னை அண்ணா நகரில் உள்ள யூனிசெக்ஸ் சலூன் ஒன்றில் குழந்தைகள் அமர்ந்து கொள்ளும் சேரில் அமர வைத்துவிட்டு முடி திருத்தும் பெண்ணுக்குக் காத்திருந்தாள் மைதிலி. யாழினி உட்கார மாட்டேன் என்று முரண்டு பிடிக்க குட்டிமா டோரா புஜ்ஜி பாருங்க பாருங்க ஒண்ணும் இல்ல இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு போயிடலாம் என சமாதானம் செய்தபடியே இருந்தாள் மைதிலி

முடி திருத்தும் பெண் என்னென்ன வகையான ஹேர்கட் இருக்கிறது என தேர்ந்தெடுக்க வசதியாக சலூனின் புக்கை மைதிலி கையில் திணித்து விட்டுப் போயிருந்தாள். மைதிலி டோராவில் மூழ்கி இருந்த யாழினியை விட்டு நகர்ந்து அங்கே போட்டிருந்த சோஃபாவில் அமர்ந்தாள். அவளுக்கு மயக்கம் வரும் போலானது. அதற்கு முதல் முறை முடி வெட்டும் போதே ஊரைக் கூட்டி இருந்தாள் யாழினி. முடி வெட்டும் பெண் கன்னத்தில் கை வைத்தவுடன் படீரென்று தள்ளிவிட்டாள். சாரி சாரி என்று மைதிலி கேட்க வேண்டியதாகிற்று.

பரவாயில்ல மேம் குழந்தைகள் அப்படித் தான் நீங்க ஃப்ரீயா இருங்க நாங்க பாத்துக்கறோம் என்றாள் முடி திருத்தும் பெண். தேங்க்ஸ்ங்க என்று அசடு வழிந்தபடியே நின்றவளை யாழினி தலையை அசைக்காமல் இருக்க பின்புறம் தலையைப் பிடித்துக் கொள்ள இவளை உதவச் சொன்னபோது யாழினி மீண்டும் தனக்கு நேர் இருந்த கண்ணாடி வழியே பார்த்து விட்டு மீண்டும் கத்தினாள். ‘மம்மா என்ன பண்ற நோ நோ வலிக்குதுஎன்று தலையை வேகமாக ஆட்டினாள். ஒரு வழியாக கன்னத்தை காதை தலையோடு அமுக்கிப் பிடித்து முடி வெட்டுவதற்குள் மைதிலிக்கு அம்மாவிடம் குடித்த பாலெல்லாம் வந்துவிட்டது போலுணர்ந்தாள். சலூனின் புத்தகத்தைப்புரட்டியவள் அந்த ஹேர்கட் பக்கத்தை தவிர்த்து மூடிவைத்து விட்டு யூட்யூபில் வேறு ஏதாவது ஸ்டைல் பார்க்கலாம் என தேடத் தொடங்கினாள்

நீள முகம், வட்ட முகம், சதுர முகம் என ஒவ்வொரு முகத்திற்குத் தகுந்தாற்போல அலை அலையான தோள்பட்டை வரை தொங்கும் கூந்தல்களோடு வெளிநாட்டுக் குழந்தைகளின் வீடியோக்கள் குவிந்து கிடந்தன. ஆப்ரிக்க குழந்தைகளின் சுருள் சுருளான கூந்தல் ஸ்டைல் வீடியோக்கள் ஒரு புறம் என எல்லா குழந்தைகளையும் ரசித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தாள் மைதிலி. உள்ளூர ஒரு ஓரத்தில் என்னத்த பார்த்து என்ன செய்ய யாழி முரண்டு பிடிக்கையில் ஏதோ ஒன்றை கொசகொசவென வெட்ட வேண்டியதாகிவிடுகிறது. அவள் பள்ளிக்கு வரும் குழந்தைகள் அழகழகான ஹேர்ஸ்டைலுடன் வருகையில் இவள்மட்டும் அடம் பிடிப்பதை நினைத்து எரிச்சல் வர

சுரத்தின்றி ஏதோ ஒன்றைத் தேர்வு செய்து திரும்பியவளுக்கு அதிர்ச்சி கூடஏஏய் என்ன பண்ற யாழிஎன்று எழுந்து ஓடினாள். அதற்குள் யாழினி அருகில் தயாராக வைத்திருந்த கத்தரிக்கோலை எட்டி எடுத்து கண்ணாடியைப் பார்த்து அவளே பிசுறு பிசுறாக இரண்டு மூன்று இடங்களில் வெட்டத் தொடங்கி இருந்தாள். அருகில் சென்று லாவகமாக அவளிடம் அதை வாங்கியவள் இனி அப்படி செய்யக் கூடாது எனக் கடிந்து சொல்லியபடியே கத்திரிக்கோலை நகரும் ட்ராலி ஸ்டாண்டில் வைத்தாள்.

என்னடி யாழி இந்த அழிச்சாட்டியம் பண்றஎன மீண்டும் அதட்டியபடியே அவள் முகத்தில் சிறிது சிறிதாக ஒட்டிக் கொண்டிருந்த முடிகளை கைகளால் எடுத்து விட்டாள். அவள் வாயின் ஓரத்தில் உதட்டு ஈரத்தால் ஒன்றிரண்டு முடிகள் ஒட்டிக் கிடந்ததை எடுத்தவள் கழுத்து பகுதியில் கிடந்த முடிகளை ஒதுக்கி விட்டாள். முன்புறம் போர்த்தியிருந்த கருப்புத் துணியை எடுத்து உதறி மீண்டும் கழுத்துடன் ஒட்டிப் பூட்டினாள்

தான் பார்த்து வைத்திருந்த லேயர் கட், ஸ்டெப் கட், பாய் கட், ஷாலினி கட், டோரா கட் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் வண்ணம் அவள் பாதி வெட்டிய படி கிடந்த தலை அவளைக் கண்டு சிரித்தது. கோவையில் வசிக்கையில் மைதிலி சிறு வயதாக இருக்கும் போது வீட்டுக்கு அருகே இருக்கும் நடராஜன் அண்ணா சலூன் தான் இருபாலருக்கும். இப்போது மாதிரி இத்தனை பார்லர்கள் இல்லை. அவளைக் கொண்டு போய் உட்காரவைத்து விட்டு பேபி ஷாலினி கட் பண்ணி விடுப்பா என்பார் அவளுடைய அப்பா

நடராஜன் அண்ணன் மற்றவர்களுக்கு சவரம் செய்யும் அழகு ரசிக்கும் படியாக இருக்கும். அவரும் அதை ரசித்துக் கொண்டேதான் செய்ய ஆரம்பிப்பார். ஒவ்வொருவருக்கும் தனித்தனி பிளேடு தான். அதில் கண்டிப்பாக இருப்பார். ஒரு தேங்காய்ப் பூத்துண்டை போர்த்திய படி, வரும் இளவயது பையன்களின் கன்னங்களில் நீரை லேசாக தட்டியபடி இசை நயத்துடன் மேலும் கீழுமாகத் தடவி சேவிங் க்ரீம் போடுவார். அவர்கள் முகத்தருகே இவரது முகத்தை வைத்து ஒவ்வொரு முடியையும் கவனத்தோடு வலிக்காமல் தலையைப் பிடித்து அவரவருக்கு தகுந்தவாறு குறுந்தாடி, முற்றிலும் மழிப்பது, கிருதாவின் நீள அகலங்களென அவரது கைகள் மனம் சொல்வதைச்சரியாகக் கேட்கும். ஒவ்வொரு முறையும் டப்பாவில் சவரக்கத்தியை விட்டு ஒரு உதறு உதறி துளி நீரில்லாது எடுத்து படுக்கை வசத்தில் ஸ்டைலாக இழுப்பார். மைதிலியை உட்கார வைக்க மனமின்றி இந்தா வந்துட்டேன் கண்ணு என வருபவர் பத்தே நிமிடத்தில் முன்புறம் புருவங்கள் வரை முடியை இழுத்து விட்டு சீராக வெட்டுவார். அவர் சிறிய கத்தரிக்கோலால் கண்களருகே பிசிறு முடிகளை வெட்டும் சத்தம் மைதிலி காதுகளில்டொரக்டொரக்கென  ஒலிக்கும். அவரிடம் தலையைத் தந்துவிட்டால் பயமின்றி இருக்கலாம் என்பது எல்லோருக்கும் தெரியும். பக்கவாட்டில், பின்புறம் என லேசாக உப்பினாற் போலிருக்கும் பாப் கட் வெட்டும் வரை மைதிலி அசையமாட்டாள். அப்போதைய படங்களில் ஷாலினி அப்படி கட் செய்து நடித்ததால் அது பிரபலமாகியிருந்தது. சமத்துப் பொண்ணுடா கண்ணு நீயி ஆடாமல் அசையாமல் அமைதியா உட்கார்ந்து இருக்கியே என்று நடராஜன் அண்ணா ஒவ்வொரு முறையும் புல்லரித்துப் போவார். மைதிலி யாழினியை நினைத்து சிரித்துக் கொண்டாள்.

முடி திருத்துபவள் என்னாச்சு மேம் என்றபடி ஓடி வந்தாள். யாழினி செய்து வைத்திருந்த செயலைக் கண்டு அவளும் அதிர்ந்து போனாள். ஆனால் அதை எப்படி சரி செய்வது என்ற யோசனை அவளுக்கு. என்ன செய்யலாமென சட்டென்று அவளுக்குத் தோன்றியது போலும் . மேம் நாம்டயானா ஹேர் கட்போய்விடலாம் மேம் என்றாள்.

தன்னையறியாமல்நோ அது வேண்டாம்என்று கிறீச்சிட்ட குரலில் கத்தினாள் மைதிலி.

பள்ளி நாட்களில் இருந்தே மைதிலிக்கு இங்கிலாந்து இளவரசி டயானாவை மிகவும் பிடிக்கும். அது கல்லூரி வரை தொடர்ந்தது. ஹாஸ்டல் அறைகளில் புத்தகங்களில் எல்லோரும் அஃப்ரிடியை, டிராவிட்டை , கங்குலியை ஒட்டிக் கொஞ்சிக் கொண்டிருக்க இவள் புத்தகத்தில் டயானா புகைப்படம் ஒன்று எப்போதும் இருக்கும். செய்தித் தாளில் வந்த புகைப்படத்தை வெட்டி ஒட்டி வைத்திருந்தாள்.

டயானாவின் அதீத அழகு அவளைக் கவர்ந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆண்களைப் போல இடதுபுறம் வகிடு எடுத்து மற்ற முடிகளை ஆங்காங்கே துண்டு துண்டாக வெட்டி பின்புறம் லேசாக ஒட்ட வெட்டிய அவளின் ஹேர்கட்தான் டயானாவின் அழகு மேலும் தனித் தன்மையோடு மிளிரக்காரணம் என்று நினைத்தாள். விதவிதமான ஓவர் கோட்டுகளுடன் முட்டி வரையிலான ப்ராக் அணிந்து அதற்கு மேட்சான சிறிய வகை தோடுகள் கைப்பைகள் கழுத்தில் முத்துப் பெண்டன்ட் என அவள் ஒரு ட்ரண்ட்செட்டராக வலம் வந்த காலத்தை அவள் புகைப்படமாக இருப்பதை எங்கே பார்த்தாலும் சேகரித்து வைத்துக் கொள்வாள்.

பிடித்தமானவர்கள் பிரபலமானவராகவும் இருந்தால் புகைப்படங்களோடு நிற்பதில்லைஅவர்கள் பற்றிய செய்திகளை வாழ்வைத் தெரிந்து கொள்ள எல்லோரும் விரும்புவது போல டயானா இளமைக் காலத்தை திருமண வாழ்வை எல்லாவற்றையும் தேடிப் படித்து தெரிந்து கொண்டாள் மைதிலி.

சாதாரண குடும்பத்தில் பிறந்தவளுக்கு ராஜ வம்சத்தைச் சேர்ந்த சார்லஸூடன் காதல் ஏற்பட்டு அவரை மணந்து மருமகளாக வலம் வந்தபோது சந்தோஷம் கொண்டாள் மைதிலி. அவளுக்கு மாமியார் என்பதாலேயே எலிசபெத்தை பிடிக்காமல் போனது. மேலும் முதலில் அவளை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற கோபம் வேறு இருந்தது மைதிலிக்கு.

அந்த நாட்டின் கலாச்சாரப் படி எல்லோருக்கும் காதல் செய்யும் உரிமை இருந்தது போல டயானாவுக்கு மறுக்கப்பட்டது அவளுக்கு வருத்தம் தந்தது. அவள் ஏன் அரச குடும்பத்தின் மருமகள் ஆனாள் என்று கவலைப் பட்டாள். மைதிலிக்கு அவளை ஒரு முறையாவது சந்தித்து விடவேண்டும் என்று கனவிருந்தது. தான் ரசித்த பேரழகியை அருகில் நின்று கிள்ளிப் பார்க்கும் குழந்தைத் தனமான ஆசை அது

அது இனி எப்போதும் நடக்க வாய்ப்பே இல்லை என்பது போல ஒரு நாள் எல்லா செய்திகளிலும் டயானா பாப்பரஸிகளால் துரத்தப்பட்டு அவள் இறந்த சம்பவம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அவ்வளவு தான், மைதிலி ஓஓவென தேம்பி தேம்பி அழுதபடியே இருந்தாள். ஒரு நாள் முழுவதும் சாப்பாடு இல்லாமல் ஹாஸ்டலில் கிடந்தவளை தோழிகள் அதட்டி கூட்டிச் சென்று சாப்பாட்டை விழுங்க வைத்தனர். அவர்களிடம் சார்லஸைத் திட்டித் தீர்த்தாள். அவருடனான காதல் வாழ்வும் திருமண வாழ்வும் முறிவும் தான் இதற்கு காரணம் என்று அழுதாள்அவளுக்கு எந்த சுதந்திரமும் தரவில்லை, இப்படி போவதற்கு அவள் சாதாரண குடும்பத்திலேயே இருந்திருக்கலாம் என தனக்குள்ளேயே சொல்லி புலம்பினாள்

டயானாவின் வசீகரிக்கும் அழகிற்கு காரணமென மைதிலி நம்பியடயானா ஹேர்கட்யார் வெட்டி இருந்தாலும் டயானாவின் மேல் இருந்த பிரியத்தின் நீட்சியாக அவர்களிடமும் ஒரு ஒட்டுதல் இவளுக்கு வந்தது. அவர்களிடம் வலியச்சென்று பேச்சு குடுப்பாள். அந்த ஹேர்கட்டை நீங்களே தேர்வு செய்தீர்களா கடையில் உள்ளவர்கள் பரிந்துரைத்தார்களா என்று ஆசையோடு கேட்பாள். அந்த பெண்களின் தலைமுடியை ஒரு முறை தொட்டுக் கொள்ளவா என அனுமதி கேட்டு தடவிப் பார்ப்பாள். வித்யாசமான அவளது இந்த செய்கைகளை  என்ன நினைப்பார்கள் என்ற யோசனை களுக்குள் மைதிலி போனதே இல்லை. அவளைப் பொறுத்தவரை  டயானா  சாகவில்லை. அவளது ஹேர்கட் வழியாக இங்கே உலவுவதாகவே நம்பினாள்.

மனம் போலோரு விசித்திர குணம் உடையது வேறொன்றுமில்லை. விரும்புவதை வெறுப்பதும் வெறுப்பதை விரும்புவதும், பிடித்த விஷயங்கள் ஒரு கட்டத்தில் காணாமல் போவதும், தூக்கி சுற்றி திரிந்தவற்றை விலகுவதும், வேண்டவே வேண்டாம் என்றிருந்த தை பற்றிக்கொண்டு அலைவதுமென முரண் மூட்டைகளால் ஆனது. எண்ணங்களைப் பிரித்து இரண்டு துண்டாக வெட்டிய பிறகு மனம் அதன் நீள் பாதையில் முரணாகப் பயணிக்கத் தொடங்குகையில் எண்ணங்கள் மனதைப் பிடித்து ஆட்டுவிக்க அதன் பின்னாலேயே ஓடுகின்றன

டயானாவின் நினைவு வந்தவுடன் அவளது ஹேர்கட் தான் முதலில் நினைவுக்கு வரும் மைதிலிக்கு. அதன் தாக்கத்தில் இருந்து விடுபட எண்ணியவளுக்கு, விடுமுறையில் வீடு வந்தவளுக்கு மீண்டும் அவளை நினைவூட்டும் வண்ணம் அவளது வீட்டுத் திண்ணையில் ஒரு பெண்ணைப் புதிதாகக்கண்டாள். அவளது தலைமுடி பரட்டையாகக் கிடந்தது. நேர்த்தியாகவும் இல்லாமல் கலைந்தவாக்கிலும் இல்லாமல் ஆங்காங்கே சிதறிய முடிகளுடன் இடது புறத்தில் வகிடு எடுத்து இருந்தது. பார்ப்பதற்கு வகிடானது.. இடது புறத்தில் நெடுநாட்களாக அப்படியே சீவியிருந்ததால் அச்சாகி விழுந்தது போல் தோன்றியது. வெகுநாட்கள் தேங்காய் எண்ணெய் வைக்கப்படாமல் ஒரு விதமான செம்பட்டை நிறத்தில் அவளது முடிகள் அச்சு அசலாக டயானா ஹேர் கட் பண்ணியது போலவே இருக்கவும் மைதிலி அவளருகே ஓடினாள். வழக்கம் போலவே அவளது தலையை தடவிப் பார்க்கும் ஆசையில் அருகே சென்றவளுக்கு  விநோதமான பார்வையை வீசினாள் அந்த பெண். அப்போதுதான் கவனித்தாள் அவளது ஆடை ஆங்காங்கே கிழிந்து கிடந்ததை. மைதிலி அவளிடம் சென்று நின்றதை கவனித்த அவளது அம்மா வேகவேகமாக மகளை திட்டி இழுத்து வந்தாள்.

ஏண்டி, உனக்குப் பேச வேற ஆளே இல்லியா?’

ஏம்மா என்னாச்சு?’

அது கொஞ்சம் மண்ட கோளாறாயிருச்சு…?’

பாவம் மா.. உனக்கு தான் மண்ட கோளாறாயிருச்சுஎன்று கத்தினாள் மைதிலி. பின் வந்த நாட்களில் மைதிலியின் அம்மா சொன்னதற்கு தகுந்தாற்போல் தான் அவளது நடவடிக்கைகளும் இருந்ததை மைதிலி கவனித்தாள்.

பரட்டைத்தலை, ஒளியற்ற கண்கள், கிழிந்த சட்டை, கிழிந்த பாவாடை இவற்றோடு அப்படியே தெருவில் சுற்றுவாள். எல்லோரும் அவளைக் கண்டு அஞ்சினர்

யார் வீட்டுத் திண்ணைகளில் அமர்ந்தாலும் விரட்டினார்கள். இரவில் கூர்க்கா போல எல்லா  வீடுகளின் திண்ணைகளிலும் குச்சி வைத்து அடித்தபடியே போனாள். அவளின் மாரும், மார்க்காம்புகளும் தெரியும்படி சட்டைபோட்டிருக்கையில்திரைப்படங்களில்  வருவது போல  யாரும் ஓடிப் போய்  சட்டை போர்த்தவில்லை. மாறாக அருவெறுப்பாக கூசியபடி நகர்ந்திருந்தனர். சில ஆண்கள் கூட தெறித்து ஓடினார்கள்.

பல நேரங்களில் அவளது பிட்டம் தெரியும். தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்தனர் எல்லோரும். எப்போதாவது பாவாடை நாடாவின் ஓட்டையை மாற்றிக் கட்டி அதன் வழியே அவள் பெண்ணுறுப்பு தெரிந்துவிடும். ஏண்டி மானத்தை வாங்கற என்று கத்தியபடியே தெருப்பெண்கள் யாரேனும் மூடப்போனால் சிரித்தபடி கால்களை விரித்து விடுவாள். பதறித் துடித்தபடி மூடிவிட்டு ஓடி வருவார்கள்.

அவளைப் பற்றி அம்மாவிடம் மைதிலி விசாரித்தாள். அவள் வீடே அவளைக் கைவிட்டது என்றாள். அவளோடு வீட்டையும் விற்றுவிட்டுச்சென்றிருந்தார்கள்.

அவள் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து படித்த நினைவுகளில் தான்  எல்லா வீட்டுத் திண்ணைகளிலும் குச்சி வைத்து சுழற்றித் திரிகிறாள் என்றாள் அம்மா. அவள் நினைத்த வேலைக்கு போகமுடியாததால் இப்படி ஆனாள் என்றாள். அதிகம் படித்தவளை அழகாக இருக்கிறாள் என வீட்டில் வேலைக்கு அனுப்பவில்லை அதனால் நொந்து அடைந்து கிடந்து இப்படி ஆகிவிட்டாள். அவளுக்கு டயானா ஹேர் கட் மிகவும் பிடித்திருக்கிறது. அதனால் எப்போதும் அதுபோல கட் செய்து கொண்டு கையில் புத்தகங்களோடு மிடுக்காக வலம் வருவாள் என்றாள் மைதிலி அம்மா.

இனி அவளிடம் பேசாதே என்றாள் மைதிலி அம்மா. மைதிலிக்கு அவள் மேல் இருந்த கருணையால் ஒவ்வொரு முறையும் அம்மாவுக்குத் தெரியாமல் பேசினாள்.

ஒரு நாள் திண்ணையில் புத்தகத்தோடு கிடந்து உறங்கியவளை  யாரோ யாருமறியாது வன்புணர்வு செய்ததில் நடு சாமத்தில் எழுந்து கத்தினாள் என்றனர். அது அடிக்கடி நடக்க ஆரம்பித்தது. ஆள் யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி நடக்கையில் ஒவ்வொரு முறையும் மறுநாள் மைதிலியிடம் வந்து அழுதபடியே தொடையில் கீறல்களைக் காண்பித்தாள். செய்வதறியாது மைதிலி கட்டிக் கொண்டு அழுதாள். யார் என்று கேட்டாலும் அவளுக்கு சொல்லத் தெரியவில்லை. கண்களை உருட்டி குழறிக்குழறி தலையை சொறிந்தவாறு தேம்பியவள் வானத்தைப் பார்த்து தெரிலயே என்றாள். அவளை எங்கேயாவது அனுப்பி கருணைக் கொலை செய்யச்சொல்லி விடலாம் எனும் அளவுக்குப் பரிதாபமாக இருந்தது.

அம்மா இல்லாதபோது திண்ணையில் அமர்ந்து கொண்டால் மைதிலி எதுவும் சொல்ல மாட்டாள். அவளுக்கு யாரோ நிகழ்த்திய பாதிப்பால் திடீர் திடீரென எல்லா ஆண்களைக் கண்டாலும் காது கூசும் வசவுச் சொற்களை ஏசுவாள் என்றார்கள்இதெல்லாம் மைதிலிக்குத் தெரிந்த போது அவள் முப்பதைத் தாண்டியிருந்தாள். மைதிலிக்கு அவள் கதையை அறிந்த அந்த சமயத்தில் இருந்துதான் டயானா ஹேர்கட்டின் மீதிருந்த க்ரேஸ் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் ஆனது. டயானா ஹேர் கட் செய்த இரண்டு நபர்கள் வாழ்வு இப்படி சிதறியது அவளுக்கு அதன் மேலோரு சொல்லத் தெரியாத ஒரு பெரிய அச்சத்தை உண்டு பண்ணியிருந்தது

முடி திருத்துபவள் டயானா ஹேர் கட் போகலாம் என்றவுடன் கத்தியவள் தான் நினைத்ததை விரும்பியதை இந்த பிரபஞ்சம் ஈர்ப்பு விதி மூலம் கொண்டு வந்து நிறுத்துகிறதா என்று ஒரு நிமிடம் குழம்பி தவித்தாள்.

வாட் மேம், என்னாச்சு என்னாச்சு?’ என்றாள் முடி திருத்தும் பெண்ஒன்றுமில்லை என்றாள் மைதிலி.

Author

You may also like

3 comments

Pavalamani Pragasam July 2, 2025 - 1:47 pm

அருமையாக எழுதப்பட்ட அழகான கதை.

Reply
சாந்தி மாரியப்பன் July 2, 2025 - 6:58 pm

வித்தியாசமான கதைக்களம். அருமை

Reply
Ramasamy July 2, 2025 - 10:59 pm

நல்ல கதைங்க. என்ன நடுவில டக்குன்னு மிரள வைக்கிற மாதிரி பட்டவர்த்தனமா வார்த்தைகள். மத்தபடி கதை நல்லாருக்குங்க

Reply

Leave a Reply to Pavalamani Pragasam Cancel Reply