நன்னாளும் நன்முழுத்தமும் நன்கறிந்து
பகை நாட்டார்க்குப் பறையறைந்து
தூதன் சொல் கேட்டறிந்து
சமாதானத்திற்கு வழியில்லை என்றுணர்ந்து
ஆநிரையும் முதியோரும் பிணியுடையோரும்
அந்தணரும் குழவிகளும் பெண்டிரும்
அரணுக்குள் பொத்திய பிறகு…
குறித்ததொரு உதயப் பொழுதில்
முரசறிவித்து படை நிறுத்தி
அந்தி வரை சமரிட்டு
எதிர்ப்புறம் மடிந்த வீரர்கள்
எரியூட்ட நேரங் கொடுத்து
இறுதியில் நிராயுதபாணியாய் சரணடைந்தோரை
மரியாதையோடு சிறைப்பிடித்து
அறநெறியில் நிலம் வென்றன
அன்றைய அரசுகள்.
மண்ணா? பொன்னா? கனிமமா?
எதை அடைய போதையோ?
இனமா? நிறமா? மதமா?
எதை அழிக்க வெறியோ?
எந்த நூற்றாண்டுப் பகையோ?
யார் தொடங்கிய விரோதமோ?
தசாப்தங்கள் தாண்டியும் தொடரும்
இன்றுள்ள போர்கள் என்றுதான் ஓயுமோ?
அதிகாலை அந்திவேளை நோக்காது
அப்பாவிகளா தீவிரவாதிகளா பார்க்காது
ஆலயமா ஆதூரச்சாலையா காணாது
ஆகாயவழி ஏவுகணை மழை பொழிந்து
அனைத்தையும் அழிக்கும் அரசுகள்
அறம் மறந்த கொடுங்கோலர்கள்.
செய்திகளாய் படித்த காலம் போய்
ஊடகங்களில் நேரலையாய்
குருதி தோய்ந்த மண்ணும்
இடிபாடுகளினூடே மரண ஓலங்களும்
பிணக் குவியல் கோரங்களும் காண்கையில்
ஆ! என் நாடில்லையென ஆசுவாசம் கொள்ளவா?
ஓ! இந்நிலை இங்கும் வருமோவென அச்சப்படவா?
ஐயகோ! யாரோ பாவமென பதைக்கவா?
“தலை காக்கக் கூரை, ஒரு குவளைத் தண்ணீர்,
ஒரு துண்டு ரொட்டி, ஒதுங்கக் கழிப்பிடம்
இவை என் குழந்தைக்காவது…???”
இறைஞ்சி கைக் கூப்பிக் கேட்கும்
கந்தலாடை அன்னையொருத்தி,
போரில் பிழைத்திருத்தல்
இறப்பதைக் காட்டிலும் நரகம்
என்று நெஞ்சைக் கீறிச் சொல்கிறாள்.
அன்றலர்ந்த மலர்க்கொத்து போல்
அன்னையின் கையில் தவழும் இளந்தளிரையும்
கொத்து குண்டுகள் துளைத்து
தந்தையின் கையில் பிரேதமான
பிஞ்சின் படத்தையும் ஒப்பிட்டு,
முந்தையது உங்களுக்கு தற்போதைய வாழ்வென்றால்
கிடைத்த வரத்திற்கு நன்றி சொல்லுங்கள்
உங்கள் சிறார்களை
இன்னும் இறுக அணைத்துக் கொள்ளுங்கள்
என்று பதிவிடுகிறார்கள்;
ஒருவர் துயர் கண்டு நம் நிலை மேல் என்று
நிம்மதி கொள்ளும் நிலை எத்தனை சுயநலம்!
இத்தனையும் புலம்பத்தானே முடிகின்றது?
எங்கோ நடக்கும் அவலங்களுக்கு
என்றுதான் தீர்வு? என்ன நாம் செய்வது?
கையறு நிலையால் பரிதவித்து
காகிதத்தில் நான் வார்க்கும் பேனா மைத்துளிகளால்
உயிர்க்கும் உணர்ச்சிகளின் நிறம் நீலமில்லை,
இரத்தச் சிவப்பாகவே எனக்குத் தோன்றுகிறது;
உங்களுக்கு?!