இலக்கியம் என்னும் பாதை 

அன்பதன் தோற்றம் என்ன?
… ஆற்றலின் ஏற்றம் என்ன?
மன்பதை வாழ்வு தன்னில்
… மாண்பமை நோக்கம் என்ன?
இன்பமே வேண்டும் யார்க்கும்
…ஏற்படும் துன்பம் ஏன்ஏன்?
என்பன கேள்வி என்றால்
….இலக்கியம் காட்டும் இங்கே

மண்ணிதில் விதையாய் வீழும்
…. மழையென அதுவே மீளும்
கண்ணதன் உறுப்பாய்க் காணும்
… கருவிழிப் படலம் ஆகும்
பெண்ணவள் பொறுமை கூட
… பெரும்பெரும் கவிதை என்பேன்
எண்ணமும் எழுத்தாய் ஆக
…. எழிலுறும் கவிதை ஆங்கே.

சிந்தையில் உயர்வின் சுட்டல்
… சிறப்புடன் உரைக்கக் கற்றல்
சந்தையில் கிடைப்ப தன்று
…. சரித்திரம் படைப்ப தொன்று.
விந்தைகள் பலவும் வார்க்கும்
… வியப்பினில் புருவம் தூக்கும்
கந்தக மணத்தை நீக்கிக்
… கவிதையின் மலர்கள் பூக்கும்

உலகினில் வந்தோ ரெல்லாம்
… உணவினைத் தேடி ஓட்டம்
விலங்கினில் மாந்தர் மட்டும்
… வியத்தகு வெற்றி ஈட்டும்
நலத்தினை நாடி நின்று
….நவில்வதும் நல்ல நோக்கம்
இலக்கியம் என்னும் பாதை
… இயற்கையில் மாந்தர் பேறே!

Author

  • எழுத்தாளர், வெண்பா வித்தகர், தமிழ் ஆர்வலர், மேனாள் தலைவர் - ரியாத் தமிழ்ச் சங்கம்.

Related posts

விசுவநாதபுரி – 10

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 11

அறிவெழுச்சி: 11