Home இதழ்கள்இதழ் - 1இன்னா நாற்பது

இன்னா நாற்பது

by Prabha Devi
1 comment
innaa-naarpathu

நம் தமிழ் இலக்கியத்தின் மாபெரும் கருவூலமாக கலைக்களஞ்சியமாக நம்மிடம் இருப்பவை சங்க இலக்கியங்கள். அதன் தொடர்ச்சியாகப் பற்பல இலக்கியங்கள் உருவாயின. சங்கம் மருவிய கால நூல்கள் என்ற வகைப்பாட்டில் பதினெண்மேல்கணக்கு நூல்களும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் அடங்கும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றுதான் இன்னாநாற்பது. இந்நூலினை இயற்றியவர் கபிலர். இவர் சங்கப்பாடல் எழுதிய கபிலரே என்றும் பிற்காலத்தில் வந்த வேறொரு கபிலர் என்றும் கருத்துகள் நிலவுகின்றன.

நாற்பது பாடல்களின் தொகுப்பு. கூடவே ஒரு கடவுள் வாழ்த்துப்பாடலும் பிற்காலச் சேர்க்கையாக இணைக்கப்பட்டிருக்கிறது. எவையெல்லாம் பயனற்றவை இன்னல்தருபவை செய்யக்கூடாதவை என்பதை இந்த நாற்பது பாடல்களும் விளக்குகின்றன. இன்னா என்று சொல்லப்பட்டிருப்பவை எல்லாமே மாந்தர்க்கு இன்னல் தருபவை என்று பொருள் கொள்ளவேண்டும்.

கடவுள் வாழ்த்துப்பா :-

முக்கட் பகவ னடி தொழா தார்க்கின்னா
பொற்பனை வெள்ளையை யுள்ளா தொழுகின்னா
சக்கரத் தானை மறப்பின்னா வாங்கின்னா
சத்தியான் றாடொழா தார்க்கு.

பதம் பிரித்த நிலை :

முக்கண் பகவன் அடி தொழாதார்க்கு இன்னா
பொற்பனை வெள்ளையை உள்ளாது ஒழுகு இன்னா
சக்கரத்தானை மறப்பு இன்னா ஆங்கு இன்னா
சத்தியான் தாள் தொழாதார்க்கு.

சூரியன் நிலவு உடு என்னும் மூன்று கண்களையுடைய சிவனை அடிதொழுது வணங்காதோர்க்குத் துன்பமுண்டாம். அழகிய பனைக்கொடியினைக்கொண்ட வெண்ணிறத்தோனாகிய பலராமனை நினைக்காமல் நடப்போர்க்குத் துன்பமுண்டாம். சக்கரம் என்னும் திகிரிப்படையினைக்கொண்ட மாலவனை மறந்தோர்க்குத் துன்பமுண்டாம். வேல் கொண்டிருக்கும் வேலவனின் தாள் தொழாதார்க்குத் துன்பமுண்டாம்.

உள்ளுவது உயர்வுள்ளல் என்பது நாமறிந்த குறள் சொற்றொடர். உள்ளுவது என்றால் எண்ணுவது நினைப்பது என்று பொருள். உள்ளுவது என்னும் சொல்லுக்கு எதிர்ப்பதம் உள்ளாது என்னும் சொல். உள்ளாது என்றால் நினையாது என்று பொருள். மறுத்தல் என்பதை மறுப்பு என்றும், மறைத்தல் என்பதை மறைப்பு என்றும் சொல்கின்றோம் அல்லவா. அதேபோன்று மறத்தல் என்பதை மறப்பு என்றும் சொல்லலாம். ஆனால் நம்முடைய புழக்கத்தில் மறப்பு என்ற சொல் இல்லை. இனியாவது நாம் அதைப் பயன்படுத்தலாம். சத்தி என்றால் ஆற்றல் வேல் சூலம் என்றெல்லாம் பொருள் சொல்கின்றது பிங்கல நிகண்டு. சத்தி உடையவனைச் சத்தியான் எனலாம். ஆற்றலுடையவன் வேலினையுடையவன் சூலத்தினைக் கொண்டவன் என்றெல்லாம் சொல்லலாம். எல்லாமே முருகனையே குறிக்கின்றன.

பகு – பகவு – பகவன். பகுத்தளிப்பவன் பகவன். இவ்வுலகில் எல்லாவுயிர்க்கும் தேவையானவற்றைப் பகுத்தளிப்பவன். முதன்மையாக உணவினைப் பகுத்தளிப்பவன். அதனால்தான் படியளப்பவன் என்றும் இறைவனைச் சொல்லும் வழக்கு இன்றும் இருக்கிறது. எல்லாத் தெய்வங்களுக்குமான பொதுப்பெயராகவே பகவன் என்னும் சொல்லினைத் திருவள்ளுவரும் கையாண்டிருக்கிறார் என்று மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் குறிப்பிடுகிறார்.

இவ்வாறு ஓர் அழகிய கடவுள் வாழ்த்துப்பாவுடன் தொடங்குகிறது இன்னா நாற்பது. இனித் தொடர்ந்து நாற்பது பாடல்களையும் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

Author

You may also like

1 comment

Ramasamy July 2, 2025 - 10:58 pm

வெகு அழகிய ஆரம்பம். இனியவை நாற்பதும் தொடர வேண்டுகிறேன்

Reply

Leave a Comment