Home இலக்கியம்இன்னா நாற்பது – பாடல் இரண்டு

இன்னா நாற்பது – பாடல் இரண்டு

by Prabha Devi
0 comments
innaa-naarpathu

பார்ப்பாரிற் கோழியு நாயும் புகலின்னா
ஆர்த்த மனைவி யடங்காமை நன்கின்னா
பாத்தில் புடைவை யுடையின்னா வாங்கின்னா
காப்பாற்றா வேந்த னுலகு.

பதம் பிரித்த நிலை :-

பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா;ஆர்த்த மனைவி அடங்காமை நற்கு இன்னா;பாத்து இல் புடைவை உடை இன்னா; ஆங்கு இன்னா காப்பு ஆற்றா வேந்தன் உலகு. 

பார்ப்பார் என்ற சொல் ஓர் இனப்பாகுபாட்டினைத் தாங்கிய சொல்லன்று. செய்தொழிலின் அடிப்படையில் வைக்கப்பட்ட பெயராகும். குறி பார்த்தல்  கணியம் (சோதிடம்)  பார்த்தல் போன்ற தொழிலைச் செய்தோர் பார்ப்பார் என்றழைக்கப்பட்டனர். உழவு செய்வோர் உழவர் தச்சுவேலை செய்வோர் தச்சர் என்பவைபோல பார்ப்பு வேலை செய்வோர் பார்ப்போர். 

பார்ப்பாருடைய மனையில் கோழியும் நாயும் புகுதல் துன்பமாம். அதற்கு என்ன காரணம் இருந்திருக்க முடியும்?  பொதுவாக வீட்டில் வளர்ப்பு விலங்குகளாக மனிதன் வைத்திருப்பவற்றுள் முதன்மையாவை ஆடு மாடு நாய் ஆகியன. ஆடுமாடு இல்லாத வீட்டில்கூட நாய்  இருப்பதுண்டு. நாய்கள் பலர்க்கும் அச்சத்தைத் தருபவை. எதிர்பாரா நேரத்தில் கடித்துவிடுபவை.  குறி / கணியம்  பார்க்க வருவோர் பலரும் நாயைக் கண்டால் அச்சமுறுவர். 

அதேபோல கோழியும் வீட்டினுள் கண்ட இடத்திலும் புகுந்து அவ்விடத்தைக் கொத்திக் கிளறி ஒழுங்கற்றதாக ஆக்கிவிடும். ஓலைச்சுடிகளைக் கொத்தியே பாழாக்கிவிடவும் வாய்ப்புண்டு. அதனால்தாம் கோழியும் நாயும் வீட்டினுள் நுழைதல் துன்பமாம் என்று ஆசிரியர் கூறியிருக்க வேண்டும். வேறேதும் மூடநம்பிக்கையான காரணங்கள் இருக்குமெனத் தோன்றவில்லை. 

மணமுடித்த பெண் தன்னுடைய மணாளனுக்கு அடங்கியே நடக்க வேண்டும். அவ்வாறில்லையெனில் அது துன்பம் என்கிறார் ஆசிரியர். அவர் வாழ்ந்த காலமென்பது சங்கக்காலத்துக்குப் பிற்பட்ட காலம். அதாவது ஆரியம் தன் வேரினைத் தமிழ்நிலத்தில் வலுவாய் ஊன்றிய காலம். அதனால் தமிழ்க்குமுகாயத்தில் பற்பல பிற்போக்கு எண்ணங்கள் புகுத்தப்பட்டு ஆண்டான் அடிமை என்னும் வழக்கு உருவானது. அப்போதைய காலகட்டத்தில்தான் பெண்ணடிமையும் பெரிதாய் உருவெடுத்தது. அதனால்தான் புலவரும் அவ்வாறு எழுதியிருக்கிறார் என்பது திண்ணமாகிறது. இரு உள்ளங்களுக்கிடையே சரியான புரிதல் இருக்கும்போது அடங்கிநடத்தலுக்கான தேவை ஏன் வரப்போகின்றது? 

அடுத்து அக்காலக்கட்டத்தில் புடைவை என்பது ஆடவரும் உடுத்துகின்ற உடையாக இருந்திருக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்குமான உடைகள் வடிவங்களில் வேறுபட்டிருக்கலாம். சரியான பகுப்பு இல்லாத புடைவை துன்பம் தரும் என்கிறார் புலவர். மரத்துக்குத் துணியைச் சுற்றுவதைப்போல மனிதர்கள் துணியைச் சுற்றிக்கொள்ள முடியாது. அவ்வாறு சுற்றிக்கொண்டால் நடக்க முடியாது. சரியானமுறையில் பகுத்து அணிந்துகொள்ளும் ஆடைகளே கைகால்கள் இயல்பாய் அசைக்க வசதிசெய்யும். அதனால்தான் ஆள்பாதி ஆடைபாதி என்கின்றனர். அதையும் ஒரு கருத்தாக இங்கே புலவர் சொல்லியிருக்கிறார். 
இறுதியாக, காப்பாற்றுவதற்கு மன்னன் இல்லாத நாடு துன்பம் தரும் என்கிறார். மன்னராட்சிக் காலத்தில் மன்னனின் தேவை என்பது முதன்மையானது. தற்காலத்திலும் தலைமை என்பது வழிநடத்துதலுக்கு எத்துணை இன்றியமையாதது என்பதை  நாமும் அறிகிறோம்.  சரியான தலைமை அமையாவிட்டால் ஒரு நாட்டின் வளர்ச்சி குன்றி எல்லாவற்றிலும் பின்தங்கிவிடும் நிலை உருவாகிவிடும். அதனால் மக்களுக்கு நன்மை செய்ய நினைக்கின்ற அறவழியில் நடந்து காப்பாற்றுகின்ற தலைவன் அமையாவிடில் அது பெருந்துன்பமாம்.

Author

You may also like

Leave a Comment