Home கட்டுரைஇன்றைய மாணவர்கள்

சமீபத்திய தமிழக வெற்றிக்கழக அரசியல் ஈடுபாட்டில் அதிக அளவு இளைஞர்கள் பங்கேற்பதும், அதன் தலைவர் விஜய் அவர்களின் பிரச்சாரத்தில் ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பதும் நாம் கண்கூடாகக் கண்டுவரும் மாற்றம். மாணவர்களின் அரசியல் பங்கேற்பு ஜனநாயக நாட்டில் மிக அவசியமான ஒன்று என்ற போதும், சமூக ஊடங்களில் இவர்களது செயல்பாடு வயதில் மூத்த தலைமுறையினரை திகைக்கச் செய்யும் அளவில் இருந்தது.

உண்மையில் இந்தத் தலைமுறை இளைஞர்களும், மாணவர்களும் சந்திக்கும் சவால்கள் என்ன? அவர்தம் பெற்றோர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன?

வழக்கமாக ஒவ்வொரு 20 ஆண்டுகள் இடைவெளிக்கும் உருவாகும் தலைமுறை இடைவெளியில் இளைஞர்களின் செயல்பாட்டில் வளர்ச்சியில் தங்களைப்போன்ற பொறுப்புணர்வோ அக்கறையோ இல்லை என்ற ஆதங்கம் எப்போதும் வயதில் மூத்தவர்களுக்கு இருந்து வருவதுதான்.

“இக்கால இளைஞர்கள் ரொம்பவே கெட்டுப் போய்விட்டார்கள். மரியாதையே தெரிவதில்லை. பெரியவர்கள் வந்தால் எழுந்து நிற்பதில்லை! சத்தமாகப் பேசுகிறார்கள். எதைக் கற்பதிலும் பெரிய ஆர்வம் இல்லை! உடல் வணங்கி உழைப்பதில்லை! ஆசிரியர்களையும் மதிப்பதில்லை” – சாக்ரடீஸ் இரண்டாயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு அக்கால இளைய சமுதாயத்தைப் பற்றிச் சொன்னது.

இன்றும் நமக்கு இளைஞர்கள் மீது இதுபோன்ற குறைகள் எதிர்பார்ப்புகள் உண்டுதான்.

ஆனால் கடந்த 15 ஆண்டுகால சமூகத்தில் இளைஞர்களின் போக்கில் காணப்படுகின்ற மாற்றம், முன் எப்போதும் இல்லாத அளவிற்கான சுயநலப்போக்கும் பொறுப்பற்ற தன்மையும் பிடிவாதமும் அதிகமாக இருப்பது கண்கூடாகத் தெரிகின்றது. இதற்கான காரணங்களைத் தேட, நாம் நம் வளர்ப்பின் மீதான பொறுப்பினைத்தான் மறுபரிசீலனை செய்து கொள்ள தேவையாய் இருக்கின்றது.

தனது பிள்ளைக்கு தனக்கு கிடைக்காதவை கிடைத்திடவேண்டும் என எண்ணுவது பெற்றோரின் இயல்பான மனது. 1930- 50 களில் பெற்றோர்களாக வாழ்ந்தவர்களது கனவு என்பது மூன்று வேளைக்குமான நல்ல உணவு. அதைப் பிள்ளைக்குத் தரவே விரும்பினார்கள். அதுவே அவர்களுக்குப் பெரும் சிரமமாக, பெரும் சாதனையாக இருந்தது. அவர்களிடம் வளர்ந்த, 1950-70 பெற்றோர்களானவர்கள், கனவு வெறும் உணவு மட்டுமல்ல. அத்தோடு கூடிய கல்வி வேலை. அதைக் கூடிய அளவு தந்தார்கள். அவர்களிடம் வளர்ந்த 1970-90 வரை பெற்றோர்களாக இருந்தவர்களது கனவு வெறும் வேலை மட்டுமல்ல. மரியாதையான வேலை, சுயமரியாதைகள் சார்ந்த தேவைகள், உச்சத்தில் இருக்கும் பணிகள், ஆராய்ச்சிப் பணிகள், தொழில்கள்.

இந்தச் சூழலில்தான் பெருமளவிலான அறிவுசார் வளர்ச்சி ஏற்பட்டது. அவர்களிடம் வளர்ந்த 1990 முதல் 2005 வரையிலான பெற்றோர்களின் கனவு சுகமான வாழ்வு, stress free life, early retirement. பொறுப்பு ஏற்பதில் தயக்கம். ஏனெனில் இவர்களுக்கு சோறு, வேலை, மரியாதை எல்லாம் கிடைத்திருந்தது. ரிமோட் காரும் வீடியோகேம்சுகளும் 90 கிட்சுகளின் கனவு. அதை, பெற்றோரான பின்பு இன்று நுகர்வு மிகுதியில் குழந்தைகளுக்குப் பொருட்களாக, சுதந்திரமாக, இன்னும் பிற வழிகளில் செல்லமாகத் தந்துதந்து பொறுப்பற்ற, கண்டிப்பைப் பார்க்காத ஒரு தலைமுறையை வளர்த்து அறுவடை செய்யுமளவில் உள்ளது.

பிடிவாதம், சுயநலம், தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் தன் சுயம் மட்டுமே சார்ந்த சிந்தனைகள் இவையெல்லாம் 2000த்திற்குப் பிறகு பிறந்த குழந்தைகளின் சிக்கல். இது உலகின் பொருளாதார சிந்தனைகள் மாறத்துவங்கியதன் நீட்சி. அவர்களுக்கும் நமக்குமான பெரிய வயது இடைவெளி இங்குதான் ஆரம்பம். இந்த சிந்தனைகளோடேயே தானுண்டு, தன் முன்னேற்றம் உண்டு என நகர்ந்த இளைஞர்களிடம் நாம் ஒரு சுயநலமான அணுகுமுறையினைப் பார்த்தோம். இதற்கான முக்கியக் காரணம் அவர்களை வெறும் நுழைவுத்தேர்வு குழந்தைகளாக வளர்த்தது. சமூக அறிவியியல், மாரல் சயின்ஸ் போன்ற வாழ்க்கைக்கு அவசியமில்லை என எந்த நேரமும் அவர்களை நுழைவுத்தேர்வு பந்தயத்தில் ஓட விட்டதே அவர்களை மனித உறவுகளிடமிருந்த்து விலக்கி வைத்த முதல் நடவடிக்கை.

அடுத்தது, அவர்களுக்கு சமூக ஊடகங்கள் வழி கிடைத்த மட்டற்ற.. அதே வேளை தவறான செய்திகள், இலக்கில்லா சுதந்திரம், அவர்களுடைய சிந்தனையில் பெரும் தாக்கத்தினைத் தந்துள்ளன. அதில் பெரியவர்கள் பயன்படுத்தும் மரியாதையற்ற கெட்டவார்த்தைகள் உள்ளிட்ட தவறுகள் வெகு சீக்கிரமாக இவர்களிடம் தொற்றிக்கொண்டன. அத்தனை இளைஞர்களும் மோசமா? விஜய் போன்ற நடிகர்கள் பின்னால்தான் போவார்களா? என்றால் இல்லை. நிறைய மாணவர்கள் தெளிவாக, தங்களின் எதிர்காலம், படிப்பு, Career என கட்டுக்கோப்பாகப் படித்து மேலே வருகின்றனர். ஆனாலும் அவர்களின் பெரிய குறை அவர்கள் சமூகத்துக்காக யோசிப்பதில்லை. தெளிவாக தாங்கள் வெளிநாடுகளில் செட்டில் ஆக வேண்டும் என்னும் திட்டம் மட்டுமே அவர்களிடம் உள்ளது.

ஆனால் அப்படியும் தெளிவில்லாத அதேசமயம் அப்பா அம்மாக்களின் செல்லக்குட்டிகளாக மட்டும் இருந்து பிடிவாதம், சுயநலம், மூர்க்கம் இப்படி வளர்ந்துள்ள பல இளைஞர்களைத்தான் நாம் எளிதாக தற்குறிகள் என அழைத்துவிடுகின்றோம்.


இவர்கள் அப்பா அம்மா, அவ்வளவு ஏன் இவர்கள் தலைவன் என அழைக்கும் நடிகர்களே சொன்னாலும் கூட அடங்கமாட்டார்கள். வெறித்தனமாக அலையும் பிடிவாதத்துடன், முரட்டுத்தனமாக வளர்ந்த பிள்ளைகளாகவும் உள்ளனர். வேலைக்குச் செல்ல மறுப்பது, அனைத்து வசதி வாய்ப்புகளையும் பெற்றோரே செய்து தர வேண்டும் என எதிர்பார்ப்பது என இவர்களது சோம்பலுக்கு விதவிதமாகப் பெயர் சூட்டிக்கொள்ளவும் செய்கின்றனர்.

இது போன்ற பொறுப்பற்ற கும்பல் முன்பு இல்லையா? என்றால் இருந்தார்கள், ஆனால் அளவில் குறைவாக. அனைவருமே (அவர்களது பெற்றோர்) அன்று கஷ்டப்பட்டதால் அவர்களுக்கு சீக்கிரம் வறுமை, பசி உறைத்து, உருப்படக்கூட செய்தார்கள். இந்தப் பிள்ளைகளுக்கு அதற்கான வாய்ப்பும் இல்லை. ஒட்டுமொத்த சமூகத்திற்கு ஒரு சுமையாக மாறத் தவிப்பவர்களாக இந்த அரசியல் பழகாத தொண்டர் கூட்டம் உள்ளது.

ஆசிரியர்களுக்கு இவர்களைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது. பாடத்திட்ட சுமைகளோடு இவர்களுக்கு ஒழுக்கம் சொல்லித்தர பொழுதும் போதிய சுதந்திரமும் அற்றவர்களாக உள்ளனர். ஆசிரியர் மாணவர்களுக்கு உரையாடலுக்கான காலமோ சூழலோ அமைவது பெரும் சவாலாக உள்ளது.

பெற்றோரும் தங்களது குழந்தைகள் எது செய்தாலும் சரி, அவர்களை யாரும் எதுவும் சொல்லிவிடக் கூடாது என்னும் மனநிலையில் குழந்தைகளை வளர்க்கின்றனர்.

இவர்களை இனி வரும் காலங்களில் நாம் எப்படி அணுக உள்ளோம், இவர்களை நல்வழிப்படுத்த வாய்ப்புள்ளதா என்பதெல்லாம்தான் இனி நமது பேசுபொருளாக வேண்டும்.

நாம் ஒரு கூட்டத்தைத் தற்குறிக் கூட்டம் என்று அடையாளப்படுத்தித் தனிமைப்படுத்தினால் அவர்கள் ஒருபோதும் நம்முடன் உரையாடலுக்குத் தயாராக மாட்டார்கள். ஏதோ ஒரு வறட்சி, போதாமையினால் இவர்கள் மற்ற தெரிவுகளின் மீது மற்ற தேர்வுகளின் மீது நம்பிக்கையற்றவர்களாக வளர்ந்துள்ளனர்.

அதைச் சரி செய்ய முயல வேண்டும். சமூகத்தைப் பற்றிய பொறுப்பற்ற உணர்வு, குடும்ப அமைப்பின் மீதான விலகல், பொறுப்பேற்க மறுக்கும் குணம் இவையெல்லாம் தவறு என்று அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். மனிதர்களோடு சாதி மதம் தாண்டிய மனிதநேயத்துடன் கூடிய அன்புதான் முக்கியமானது என்பதனைத் தெளிவாகச் சொல்லித்தர வேண்டும். அதனைக் கேள்விக்குறியாக்கும் எந்த அமைப்பும் இயக்கமும் நாயக வழிபாட்டு செயல்களும் உதவாது என்பதைத் தெளிவாக உணர்த்த வேண்டும்.

அவர்களுக்காக இல்லாவிட்டாலும் நமக்காகவேனும்.

நம் தலைமுறை வளர்த்த பிள்ளைகள் தான் இவர்கள். அவர்களை வெறும் தற்குறிகள் என அழைத்து நகர்வதில் ஒரு பலனும் இல்லை.

Author

You may also like

1 comment

அவந்திகா October 2, 2025 - 10:08 am

எல்லாரும் தற்குறிகள் என அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் போது அந்த வார்த்தையினால்.உண்டாகும் சமூக ஆபத்தை விளக்கும் கட்டுரை. உளவியல் சார்ந்து இன்னும் தெளிவாக எழுதினால் பலருக்கும் உதவியாக இருக்கும்.

Reply

Leave a Reply to அவந்திகா Cancel Reply