இரா. முருகனும் ‘சேது’ சிறுகதையும்

கொஞ்சம் கதைக்கலாம் வாங்க – கட்டுரை அத்தியாயம் பதினொன்றின் இறுதிப் பகுதி

அடுத்த கதையை எழுதியவர் நம்ம அண்ணாச்சி இரா. முருகன். இரா. முருகனுக்கும் நடிகை குஷ்பூவிற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது… அடுத்த வாரம்.

அத்தியாயம் பன்னிரண்டு (இறுதிப் பகுதி)

காற்றும் மனித எண்ணங்களும் ஒரு வகையில் பார்த்தால் ஒன்று எனச் சொல்லலாம். காற்று ஒரே திசையில் அடிப்பதில்லை; மனித எண்ணங்களும் அப்படித்தான். எனில் இப்போது இரா. முருகன்.

இரா. முருகனுக்கும் குஷ்பூவிற்கும் இருக்கும் ஒற்றுமை இருவருக்கும் சிரிக்கின்ற கண்கள்.

இரா. முருகனின் கதைகளில் புதிய எழுத்தாளர்கள், எழுத முயற்சித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்கள் எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் இருக்கிறது. அது… அடுத்த வாரம்.

அத்தியாயம் பதின்மூன்று

சேதுவில் தெரியும் முருகன்

பல எழுத்தாளர்களிடம் பேசிப் பழகியிருந்த என்னுடைய ஒரு நண்பர் கூறினார், “சில எழுத்தாளர்கள் நன்றாக எழுதுவார்கள்; பேச மாட்டார்கள். ஒரு சில எழுத்தாளர்கள் நன்றாகப் பேசுவார்கள்; ஆனால் எழுத்தில் அவ்வளவு சுவை இருக்காது.”

இரா. முருகனைப் பொறுத்தவரை அவரது எழுத்துக்களிலும் சுவை குறையாமல் இருக்கும். நேரில் சென்று பழகிய போது அழகாக, இனிமையாக, கர்வம் கொஞ்சம் கூட இல்லாமல் பேசினார். அவரது எழுத்துகளில் உள்ள சொல்லாடல், வர்ணனைகள், நகைச்சுவை எல்லாமே நன்றாகச் சுவை குன்றாமல் இருக்கும்.

படிப்பவரைக் கதைக்குள் இழுக்கும் திறமை அவருக்கு நிறையவே உண்டு. மனதை உலுக்கும் கதைகள் (சேது, வெறுங்காவல்), மகிழ்வில் நிறைத்திடும் நகைச்சுவைக் கதைகள் (கொக்கு, ரூமியும் உதடுகளும்), சிந்திக்கத் தூண்டுகிற கதைகள் (எழுத்துக்காரர், ரட்சகன்) என நிறைய எழுதியிருக்கிறார். எனது நல்ல நண்பர் என்பதற்காகச் சொல்லவில்லை; அவருடன் நட்புக் கொள்வதற்கு முன்பே அவரது எழுத்துகளில் நான் நட்புக் கொண்டுவிட்டேன்.

முருகனின் கதைகளில் ஆரம்பகால எழுத்தாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் – ‘செல்ஃப் எடிட்டிங்’ (Self-editing). ஒரு வார்த்தை – ஒரே ஒரு வார்த்தை கூட அனாவசியமாக இருக்காது.

இரா. முருகனின் சிறுகதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் ஒன்று – ‘சேது’. இராமேஸ்வரம் சென்று தீர்த்தங்களில் குளித்திருக்கிறீர்களா? ‘சேது’ கதையைப் படித்தாலே போதும்; கண் முன் காட்சிகளாக விரியும் – கதையுடன்.

சின்னா ஒரு வழிகாட்டி. கயிறு கட்டப்பட்ட வாளியுடன் வருகின்ற டூரிஸ்டுகளுக்கு எல்லாத் தீர்த்தங்களையும் காட்டி, நீர் இறைத்துக் குளிக்க வைத்து வயிறு வளர்ப்பவன். இருபது வருடங்களுக்கு முன்னமேயே இதுதான் தொழில் என வந்துவிட்டவன்.

அன்று மாலை மயங்கும் நேரம். இனி யார் வரப் போகிறார்கள் என்று சின்னா நினைத்த போது ஒரு தாடிக்காரன் வருகிறான். அழுக்கு வேட்டி, காவி ஜிப்பா, தோளிலிருக்கும் பையிலிருந்து எட்டிப் பார்க்கும் சிவப்புத் துண்டு. எல்லாத் தீர்த்தங்களையும் சுற்றிப் பார்க்க ஐம்பது ரூபாய் எனச் சின்னா கேட்க, தாடிக்காரன் சரி என்கிறான்.

ஒவ்வொரு கிணறாகச் சென்று நீரிறைக்கையில் தாடிக்காரன் பேசிக் கொண்டு வருகிறான் – அவனது கதையை.

சாவித்திரி தாடிக்காரனின் மனைவி. பிள்ளை இல்லை என எல்லாரும் குத்திக் காட்ட, டாக்டரும் குழந்தை கிடையாது என்று சொல்லிவிட, இருவரும் ராமேஸ்வரம் புறப்படுகிறார்கள். அவர்களது பெட்டியிலேயே ஒரு பீகாரி ஏறுகிறான். கரிக்கட்டை மாதிரி நிறம். பீகாரில் கரிச்சுரங்கத்தில் வேலை பார்ப்பவனாம். கையில் தங்க விக்கிரகமாட்டம் பெண் குழந்தை. மனைவி இறந்துவிட, யாரோ ராமேஸ்வரம் சென்று காரியங்கள் செய்தால் மனைவி கடைத்தேறுவாள் என்று சொல்ல, குழந்தையை எடுத்துக் கொண்டு வந்துவிட்டான்.

தாடிக்காரனுக்கோ குழந்தையின் மீது கண். பீகாரி ஏழை. குழந்தை வளர்ந்து பெரியவளானால் எப்படிக் கல்யாணம் எல்லாம் செய்து கொடுப்பான்? நமக்கோ குழந்தை இல்லை. நாம் அவனிடம் கேட்டுத் தத்தெடுத்து வளர்க்கலாமே!

அவன் மனைவி மறுக்கிறாள். “அவனுக்குன்னு யார் இருக்கா? பாவம் அவனிடம் கேட்க வேண்டாம்.”

பீகாரி சத்திரத்தில் விட்டுவிட்ட பர்ஸை எடுப்பதற்காகக் குழந்தையை அவர்களிடம் விட்டுவிட்டுச் செல்ல, தாடிக்காரன் மனைவியைச் சமாதானப்படுத்தி குழந்தையுடன் சொந்த ஊர் சென்று விடுகிறான்.

ஊர் போய்ச் சேர்ந்த ஒரே மாதத்தில் சாவித்திரி இறந்து விடுகிறாள். இதைச் சொல்லி நிறுத்திய தாடிக்காரன், “ஏன் நீ கேள்வில்லாம் கேட்க மாட்டேங்கற?” என்கிறான் சின்னாவிடம். சின்னா பதற்றத்துடன், “பிள்ளைக்கு என்ன ஆச்சு?” என்கிறான்.

தாடிக்காரன் தொடர்கிறான்: “ராமேசுவரின்னு அவளுக்குப் பேர் வச்சு கண்ணுக்குள்ள பொத்தி வளர்த்தேன். கல்யாணம் கூடக் கட்டிக்கலை. மூணு வயசுல கூட்டி வந்தேன். இப்போ இருபத்தி மூணு வயசிருக்கும். ஒட்ட வச்ச பந்தம் உடைஞ்சுதான் போனது. ராமேசுவரி மூணு வருசம் முன்னாடி கூடப் படிச்சவனோட என்னை விட்டு ஓடிப் போயிட்டா” என்றபடி சின்னாவை கடற்கரைக்குக் கூட்டிச் செல் என்கிறான். “இவ்வளவு தீர்த்தங்கள்ள குளிச்சுட்டேன். கடலிலும் குளிக்கணும். அதுக்கு என்ன புண்ணியம்னு விதிச்சிருக்கோ!”

சின்னா கடலுக்கு அவனைக் கூட்டிச் செல்ல, தாடிக்காரன் சொல்கிறான்: “கிறிஸ்தவங்கள்ள மாதாக்கோயில் பாதிரிக்கிட்ட எல்லாம் சொல்லி மன்னிப்புக் கேட்பாங்களாம். அது மாதிரி உன்கிட்ட எல்லாம் சொல்லிட்டு இதுவும் சொல்ல வேண்டாமா? சொல்லிடறேன்.”

அத்தியாயம் 14: மேரி முன்னீ… மேரி பேட்டி

“ராமேசுவரி… ராமேசுவரி. ரெண்டு மாசம் முன்னால பம்பாய் கிராண்ட் ரோட்ல என்ன இடம் தெரியுமா அது? எப்படிப் போய்ச் சேர்ந்தாளோ என் குழந்தை! ஏதோ புரியாத ரோகம் வந்து செத்துப் போய்ட்டாப்பா. போறதுக்கு முன்னால என் பழைய அட்ரஸ் கொடுத்திருப்பா போல. அது எங்கெல்லாமோ சுத்திட்டு போன வாரம் தான் என்கிட்ட வந்தது.

பாவி, நான் பாவி. அநியாயமா ஒரு பூச்செடியைக் குத்திக் கிளறி மண்ணை மாத்தி வெச்சுக் கருக்கின படுபாவி. அவ என்னோட நாசமாப் போற கண்ணுல தட்டுப்படாம இருந்தா எங்கேயோ கரிச்சுரங்கத்தில் வேலை பார்க்கிறவனைக் கல்யாணம் கட்டிக்கிட்டு பிள்ளையும் குட்டியுமா சந்தோஷமா இருந்திருப்பா. நான் பாவி” எனப் புலம்பி தாடிக்காரன் கடலுக்குள் இறங்க, ஒரு அலை அவனை இழுத்துச் செல்கிறது.

இல்லை, கதை இங்கே முடியவில்லை.

தாடிக்காரன் ஆரம்பத்திலேயே ஒரு தாமிரச் சொம்பை எடுத்து வாளியுடன் வைத்திருந்தான். அந்தச் சொம்பு ராமேசுவரியுடன் வந்தது எனச் சொல்லியிருந்தான்.

தாடிக்காரன் கடலில் மறைவதைப் பார்த்தவாறு இருந்த சின்னா அந்தச் செம்பை வாளிக்குள் வைக்கும் போது அவன் நெஞ்சிலிருந்து புறப்பட்ட விம்மல் கரை நெடுகக் கேட்கிறது.

“ராமேசுவரி, மேரி முன்னி… மேரி பேட்டி!”

உள்ளத்தை உருக்கும் இந்தக் கதைக்குச் சுருக்கம் எழுதுவது மிகக் கஷ்டமாக இருக்கிறது. இரா.மு.வே கூட இந்தக் கதை எழுதும் போது நிறையவே உணர்ச்சிவசப்பட்டிருக்க வேண்டும். பிறிதொரு பொழுதில் பேசிய போது இது அவருக்கு மிகப் பிடித்த கதை என்று சொன்னார். சுருக்கத்தில் பல இடங்களில் அவரது வார்த்தைகளை அப்படியே கொடுத்திருக்கிறேன்.

முன்பே சொன்னது போல் இரா. முருகனின் படைப்புகளில் புதிய எழுத்தாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் செல்ஃப் எடிட்டிங். சொல்ல வந்த செய்தியில் சமரசம் செய்து கொள்ளாமல், அவருடைய கதைகள், கட்டுரைகள், கவிதைகளில் அவரது வார்த்தைச் சிக்கனம் அருமையானது.

Author

Related posts

விழ வைத்த அன்பும், விடைபெற்ற சிரிப்பும்..

ஓர் விஸ்வரூபப் பெருவிருட்சம்

நெருக்கடி — சார்லஸ் புக்கோவ்ஸ்கி