உராஷிமா தாரோ
முன்னொரு காலத்தில், ஒரு ஜப்பானியக் கடலோரக் கிராமத்தில், உராஷிமா தாரோ என்னும் பையன் தன்னுடைய அம்மாவுடன் வசித்து வந்தான். எப்போதும் போல ஒரு நாள் அவன் மீன் பிடிப்பதற்காகக் கடற்கரைக்குச் சென்றான். அங்கே சிறுவர்கள் ஓர் ஆமையைப் பிடித்து வைத்து அதை அடித்துத் துன்புறுத்தி விளையாடினார்கள். அதைப் பார்த்த உராஷிமா தாரோவுக்கு ஆமையின் மீது இரக்கம் வந்தது.
உராஷிமா தன்னிடம் இருந்த காசை சிறுவர்களிடம் கொடுத்து அந்த ஆமையைச் சிறுவர்களிடமிருந்து காப்பாற்றினான். அதன் பிறகு அந்த ஆமையை மீண்டும் கடலுக்குள்ளேயே உராஷிமா அனுப்பிவைத்தான்.
ஆமை உராஷிமாவைப் பார்த்து நன்றியுடன் தலையாட்டியது, பின்னர் கடலுக்குள் நீந்தி மறைந்தது.
அடுத்த நாள் உராஷிமா கடற்கரைக்குச் சென்றான். அப்போது ஆமை வந்து உராஷிமாவைப் பெயர் சொல்லி அழைத்தது.
“உராஷிமா அண்ணா!”
உராஷிமா ஆச்சரியமாக அந்த ஆமையைப் பார்த்தான். ஆமை பேசியது.
“அண்ணா, நேற்று நீங்கள் காப்பாற்றிய ஆமை நான்தான். அதற்கு நன்றி தெரிவிப்பதற்காக நான் இன்று உங்களைக் கடலுக்கு அடியில் அழைத்துச் சென்று கடல் ராஜ்ஜியத்தைக் காட்டுகிறேன். என் முதுகின் மீது அமருங்கள்” என்றது.
அவன் ஆமையின் முதுகில் அமரும்போது அந்த ஆமை பெரிய ஆமையாக மாறியது. ஆமை கடலுக்குள் இறங்கியதும், அதன் முதுகில் இருந்த உராஷிமாவுக்குத் தூக்கம் வந்தது, தூங்கிவிட்டான்.
தூங்கிய அவனை ஆமை உசுப்பியது. விழித்துப் பார்க்கும்போது கடலுக்கு அடியில் ஒரு அழகிய அரண்மனையின் வாசலில் உராஷிமா இருந்தான். அரண்மனையின் கூரையில் தங்க ஓடுகள் இருந்தன. சுவர்கள் வெள்ளியாலும் நீலப் படிகக்கற்களாலும் கட்டப்பட்டிருந்தன.
கடல் ராஜ்ஜியத்தின் இளவரசி அரண்மனையின் வாசலுக்கு வந்தாள். அப்படி ஒரு அழகியை உராஷிமா பார்த்ததே இல்லை.
“ஆமையைக் காப்பாற்றியதற்கு நன்றி. நீங்கள் வந்ததற்கும் நன்றி. வாருங்கள்” என அவனைக் கடல் அரண்மனைக்கு உள்ளே அழைத்துச் சென்றாள்.
இளவரசி உராஷிமாவை சாப்பிடச் சொன்னாள். அத்தனை ருசியான உணவை உராஷிமா அதுவரையில் சாப்பிட்டதே இல்லை. சாப்பிட்டு முடித்ததும் இசை ஒலித்தது. வண்ணமயமான உடையில் பெண்கள் நடம் ஆடினார்கள். உராஷிமா மகிழ்ச்சியாக இருந்தான். ஒவ்வொரு நாளும் கனவைப் போலக் கடந்தன.
திடீரென ஒருநாள் உராஷிமாவுக்கு அவன் அம்மாவின் ஞாபகம் வந்தது. கடல் இளவரசியிடம் தான் திரும்பிச் செல்லவேண்டும் எனச் சொன்னான். கடல் இளவரசி விருப்பம் இல்லாமல் அவனை அனுப்பி வைத்தாள்.
அனுப்பும்போது ஒரு மந்திரப் பெட்டியைப் பரிசாகத் தந்தாள். அந்தப் பெட்டியை எப்போதும் திறக்கக்கூடாது எனச் சொன்னாள். ஆமை அவனை மீண்டும் கொண்டு வந்து கடற்கரையில் விட்டது.
உராஷிமா கடற்கரைக்கு வந்து பார்க்கும்போது, எல்லாம் மாறியிருந்தன. பழைய வீடுகள் எதுவும் இல்லை. அவனுடைய அம்மாவையும் யாருக்கும் தெரியவில்லை.
உண்மையில் என்ன நடந்தது என்றால், கடலுக்கு அடியில் அரண்மனையில் சில நாள்களே இருந்ததாக அவனுக்குத் தோன்றினாலும், வெளியே கடற்கரையில் நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. உராஷிமா மிகவும் வருந்தினான்.
கடல் இளவரசியின் பேச்சை மீறி, மந்திரப் பெட்டியைத் திறந்தான். அதிலிருந்து புகை வந்தது. திடீரென உராஷிமா நூறு வயதுக் கிழவனாகிவிட்டான்.