- மோமோதாரோ
முன்னொரு காலத்தில், ஒரு ஜப்பானிய நதியோரத்தில் தாத்தாவும் பாட்டியும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. அதனால், அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் குழந்தைகளைப் போல் விளையாடிக்கொண்டும் தங்களுக்குள் விளையாட்டாகக் கேலி செய்துகொண்டும் வாழ்ந்தனர்.
தாத்தா காலையில் எழுந்து காட்டுக்குள் சென்று மரங்களிலிருந்து விழும் காய்ந்த சுள்ளிகளைச் சேர்ப்பார். அவற்றைக் கட்டிச் சுமந்து அருகிலிருக்கும் கிராமத்துக்குச் செல்வார். கிராமத்து மக்களிடம் சுள்ளிகளைக் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக சமைப்பதற்கு எதையாவது வாங்கி வந்து பாட்டியிடம் கொடுப்பார். இது அவருடைய தினசரி வேலை.
பாட்டி காலையில் எழுந்து நதிக்கரைக்கு வந்து பாத்திரங்களைக் கழுவுவது, துணி துவைப்பது போன்ற வேலைகளைச் செய்வார். சுள்ளிகளைக் கொடுத்துவிட்டு சமைக்க எதையாவது வாங்கி வரும் தாத்தாவுக்குச் சுவையாக எதையாவது சமைத்துத் தருவார்.
இப்படியாக, அந்த ஜப்பானியத் தாத்தாவும் பாட்டியும் தங்களுக்குக் குழந்தை இல்லாத கவலையை மறந்திருந்தனர்.
ஒரு நாள் பாட்டி நதிக்கரையில் வழக்கம் போலத் துணி துவைத்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு பெரிய குழிப்பேரிப்பழம் (Peach, பீச்) அந்த நதியில் துள்ளித்துள்ளி மிதந்து வந்தது. பாட்டி அதைப் பிடித்துச் சிரமப்பட்டுத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றார். தாத்தா வீட்டுக்கு வரும் வரையில் காத்திருந்தார். தாத்தாவும் வந்த பின் இருவரும் சேர்ந்து அந்தப் பெரிய குழிப்பேரிப்பழத்தை வெட்டிச் சாப்பிட நினைத்து வெட்டினர்.
அந்தப் பழத்துக்கு உள்ளே இருந்து ஒரு ஆண் குழந்தை வெளியே வந்தது. முதலில் இருவரும் பயந்தனர். பிறகு, இந்தக் குழந்தை கடவுள் அவர்களுக்குக் கொடுத்த அன்பளிப்பு என நினைத்து மகிழ்ச்சியாக அதை அணைத்துக்கொண்டனர்.
குழிப்பேரிப்பழத்தை ஜப்பானிய மொழியில் ‘மோமோ’ என அழைப்பார்கள். ‘தாரோ’ என்பது ஜப்பானில் ஆண் குழந்தைகளுக்குப் பொதுவான பெயர். அந்த இரண்டு வார்த்தைகளையும் சேர்த்து மோமோதாரோ என அந்தக் குழந்தைக்குப் பெயரிட்டனர். பாசத்துடன் அந்தக் குழந்தையை வளர்த்தனர். மோமோதாரோ மிகவும் பலமுள்ள சிறுவனாக வளர்ந்தான். பலசாலியாகவும், நல்ல குணங்களை உள்ள சிறுவனாகவும் மோமோதாரோ வளர்ந்திருப்பதைக் கண்டு தாத்தாவும் பாட்டியும் மிகவும் மகிழ்ந்தனர்.
அப்போது ஓனிகாஷிமா என்னும் அரக்கர் தீவிலிருந்த அரக்கன் ஒருவன் நாட்டு மக்களுக்குத் தொல்லை கொடுத்துவந்தான். அந்த அரக்கனைக் கண்டு நாட்டு மக்கள் அஞ்சினர்.
மோமோதாரோ ஓனிகாஷிமா தீவுக்குச் சென்று அரக்கனை அடக்க நினைத்தான். அதற்காகத் தன் தாத்தா பாட்டியிடம் அனுமதி கேட்டான். அவர்கள் முதலில் அவனை அனுப்பச் சம்மதிக்கவில்லை. பிறகு அவனுடைய வலிமையால் அவனால் அரக்கனை வெல்ல முடியும் என நம்பி ஒப்புக்கொண்டனர். வழிப்பயணத்தில் சாப்பிடுவதற்குக் கொழுக்கட்டைகளைக் கட்டிக்கொடுத்தனர். மோமோதாரோ அரக்கனை அடக்க ஓனிகாஷிமா தீவுக்கு புறப்பட்டான்.
வழியில் ஒரு நாய் குதித்துக்குதித்து ஓடி வந்தது. அதற்கு அவன் ஒரு கொழுக்கட்டையைச் சாப்பிடக் கொடுத்தான். அந்த நாயும் அவனுடன் சேர்ந்துகொண்டது. வழியில் ஒரு காட்டுக்கோழி வந்தது. அதற்கும் அவன் ஒரு கொழுக்கட்டையைச் சாப்பிடக் கொடுத்தான். காட்டுக்கோழியும் அவனுடன் சேர்ந்துகொண்டது. வழியில் ஒரு குரங்கு தாவித்தாவி வந்தது. அதுவும் ஒரு கொழுக்கட்டையைச் சாப்பிட்டுவிட்டு அவனுடன் சேர்ந்துகொண்டது. மோமோதாரோவும், நாயும், காட்டுக்கோழியும், குரங்கும் சேர்ந்து பயணம் செய்து, படகில் ஏறிச் சென்று ஓனிகாஷிமா தீவை அடைந்தனர்.
அவர்கள் உள்ளே செல்லமுடியாதபடி மதில் சுவரில் கதவு மூடியிருந்தது. கட்டுக்கோழி பறந்து உள்ளே சென்று கதவின் தாழ்ப்பாளை உள்ளேயிருந்து திறந்தது. தீவின் உள்ளே அரக்கன் மகிழ்ச்சியாக ஆடிக்கொண்டிருந்தான். அரக்கனை அடக்குவதற்காக வந்திருப்பதாக மோமோதாரோ வீரமாகப் பேசினான். அரக்கன் மோமோதாரோவைத் தாக்க ஓடிவந்தான்.
காட்டுக்கோழி அரக்கனைக் கொத்தியது, குரங்கு அரக்கனைக் குத்தியது, நாய் அரக்கனைக் கடித்தது, மோமோதாரோ அரக்கனைத் தாக்கினான். இப்படியாகத் தன் நண்பர்களின் உதவியாலும் தன் வலிமையாலும் அரக்கனுடன் போரிட்டான். கடைசியில் அரக்கன் தோல்வியடைந்தான். தன்னை விட்டுவிடும்படிக் கெஞ்சினான்.
மோமோதாரோ வெற்றி பெற்றான்.
இனிமேல் என் நாட்டுமக்களைத் தொல்லை செய்யக்கூடாது எனக் கண்டித்துவிட்டுப் படகில் ஏறித் தன் நண்பர்களுடன் வீட்டுக்குத் திரும்பினான். தாத்தாவும் பாட்டியும் மகிழ்ச்சியுடன் அவனை வரவேற்றனர்.