5. குரங்கும் நண்டும் ( 猿蟹合戦 )
முன்னொரு காலத்தில், ஜப்பானில் ஒரு விளைநிலத்தில் குரங்கும் நண்டும் வசித்து வந்தன. ஒருநாள் நண்டு தன் கொடுக்கில் சோற்று உருண்டையைச் சுமந்து சென்றது. குரங்கு தன் கையில் சீமைப்பனிச்சை என்னும் பழத்தின் விதையை வைத்திருந்தது.
நண்டைப் பார்த்துக் குரங்கு, “நண்டே.. நண்டே.. நீ சோற்று உருண்டையை எனக்குத்தா. நான் உனக்கு இந்த சீமைப்பனிச்சை விதையைத் தருகிறேன்” என்றது. பழவிதைக்குச் சோற்று உருண்டையைத் தர நண்டுக்கு விருப்பம் இல்லை. “வேண்டாம்” என மறுத்தது.
குரங்கு விடவில்லை. “நண்டே, நீ இந்த விதையை விதைத்தால் அது மரமாகி நிறையப் பழங்களைத் தரும். சோற்று உருண்டை என்ன தரும்?” என நண்டிடம் ஆசை வார்த்தை கூறியது. நண்டும் யோசித்துத் தன்னிடம் இருந்த சோற்று உருண்டையைக் கொடுத்து சீமைப்பனிச்சைப் பழத்தின் விதையை வாங்கிக்கொண்டது.
வாங்கிய விதையைத் தனது நிலத்தில் விதைத்து அதற்குத் தண்ணீர் ஊற்றியது.
“விதையே.. விதையே.. நீ சீக்கிரம் முளைத்து வெளியே வராவிட்டால், நான் உன்னைத் தோண்டியெடுத்து வீசிவிடுவேன்” என்று சொன்னது. நண்டின் வார்த்தையைக் கேட்ட விதை, அவசரமாக முளைத்து பூமிக்கு வெளியே வந்து வளர்ந்து பெரிய மரமாகியது. “மரமே.. மரமே.. சீக்கிரம் கனிகளைத் தா” என நண்டு கேட்டது. நண்டின் பேச்சைக்கேட்டு மரமும் சீக்கிரமாக பழங்களைத் தன் கிளையில் பழுக்கவைத்தது.
பழுத்த பழங்களை மரத்தில் கண்ட குரங்கு, மரத்தின் மீது ஏறிப் பழங்களைத் தின்றது. பழங்களைப் பறிக்க வந்த நண்டால் மரத்தின் மீது ஏறமுடியவில்லை. “குரங்கே குரங்கே, எனக்காக மரத்திலிருந்து பழங்களைப் பறித்துக் கீழே போடு” என நண்டு குரங்கிடம் சொன்னது.
“பழம்தானே வேண்டும், இந்தா” என அந்த ஏமாற்றும் குரங்கு, பழத்தை எடுத்து நண்டின் தலையில் வீசியது. தலையில் அடிபட்டதால் வலியால் துடித்த நண்டு படுக்கையில் படுத்துவிட்டது. நண்டின் நிலையைப் பார்த்து நட்பு நண்டுகளுக்குக் கோபம் வந்தது. குரங்கின் ஏமாற்றும் புத்திக்குப் பாடம் கற்பிக்க அவை நினைத்தன. நண்டுகளுடன் ஒரு ஊசி, ஒரு தேனீ, ஒரு பழுப்புக்கொட்டை, ஒரு சுண்ணாம்புக் கலவை இவை நான்கும் சேர்ந்து நண்டுகளுக்கு உதவ நினைத்தன.
குரங்கு தன் வீட்டைவிட்டு வெளியே சென்றிருந்த நேரத்தில் அவை குரங்குக்குப் பாடம் கற்பிக்கத் திட்டம் தீட்டின. ஊசி குரங்கின் படுக்கையில் ஒளிந்துகொண்டது. தேனீ சமையல் அறையில் இருந்த சோயாக் குழைவில் ஒளிந்துகொண்டது. பழுப்புக்கொட்டை குளிர்காயும் தணலுக்குள் ஒளிந்தது. சுண்ணாம்புக் கலவை கதவின் மேல் மறைந்து நின்றது. நண்டு குளியலறையில் தண்ணீர் வாளிக்குள் ஒளிந்துகொண்டது. அனைத்தும் குரங்கு வீடு திரும்புவதற்குக் காத்திருந்தன.
மாலையில் குரங்கு வீட்டுக்குத் திரும்பியது. “என்ன குளிர் வெளியே!” எனக் குளிரில் உதறிக்கொண்டே குளிர்காயும் தணலுக்கு முன்னால் குரங்கு அமர்ந்தது. உடனே, தணலுக்கு உள்ளே இருந்த பழுப்புக்கொட்டை குதித்து வெளியே வந்து குரங்கின் முதுகில் ஒட்டிச் சூடு போட்டது.
“ஐயோ எரிகிறதே” என அலறிக்கொண்டே குரங்கு குளியலறைக்குச் சென்று தீக்காயத்தின் மீது தண்ணீர் ஊற்ற நினைத்தது. குரங்கு குளியலறைக்கு வந்ததும் தண்ணீர் வாளியில் ஒளிந்திருந்த நண்டு குரங்கின் கையைக் கடித்தது.
குளியலறையிலிருந்து தப்பித்து அந்தக் குரங்கு சமையலறைக்கு ஓடியது. தீக்காயத்தின் மீது சோயாக் குழைவைப் பூசி எரிச்சலைத் தணித்துக்கொள்ள நினைத்தது. அதற்கு உள்ளே ஒளிந்திருந்த தேனீ வெளியே வந்து குரங்கைக் கொட்டியது.
குரங்கு தேனீயிடமிருந்து தப்பிக்கப் படுக்கையில் படுத்து மூடிக்கொள்ள நினைத்தது. அது படுக்கையில் படுத்ததும், அங்கே ஒளிந்திருந்த ஊசி குரங்கின் உடல் முழுதும் குத்திக் காயப்படுத்தியது.
எங்கு சென்றாலும் தாக்குதல் நடப்பதைப் பார்த்துப் பயந்த குரங்கு, தன் வீட்டைவிட்டு வெளியே ஓட நினைத்தது. அது கதவுக்கு அருகில் வந்ததும், கதவின் மேல் மறைந்திருந்த சுண்ணாம்புக் கலவை குரங்கின் தலையில் தொப்பென விழுந்தது. தலையில் விழுந்த சுண்ணாம்புக் கலவை குரங்கின் மேலெல்லாம் சொதசொதவென வழிந்தது.
எல்லாப் பக்கத்தில் இருந்தும் தாக்கப்பட்ட குரங்கு, “இனிமேல் நான் யாரையும் எமாற்றமாட்டேன்” என மன்னிப்புக்கேட்டது.