Home தொடர்காலிக்கூட்டின் தனிமை

காலிக்கூட்டின் தனிமை

by Padma Arvind
0 comments

காலை ஆறுமணிக்கு சென்னை மயிலாப்பூரில் வசிக்கும் 62 வயதான ராதா பால்கனியில் நின்று காபியைக் குடித்துக்கொண்டிருந்தார். பக்கத்து வீட்டுக் குழந்தைகள் பள்ளிக்குத் தயாராகும் சத்தம் கேட்டது. “அம்மா, என் டிஃபின் பாக்ஸ் எங்கே?” “அப்பா, நான் இன்னிக்கு லேட் ஆகிட்டேன்!” இதே கூச்சல்கள் பத்து வருடங்களுக்கு முன் இந்த வீட்டிலும் எதிரொலித்தன.

அப்போதெல்லாம் நிதானமாகக் காலையில் ஒரு வாய் காபி குடிக்கமாட்டோமா! என மனம் ஏங்கும். ஆனால், இப்போது? முழு அமைதி. அவர் கணவர் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தார். மகன் பெங்களூரில் software engineer. மகள் அமெரிக்காவில் டாக்டர். இருவரும் நன்றாக settle ஆகிவிட்டார்கள். பெருமையாக இருக்கிறது.

“இவ்வளவு வருஷம் அவங்களுக்காக ஓடினேன். இப்ப என்ன செய்யறதுன்னே தெரியல,” ராதா தனக்குள் நினைத்துக்கொண்டார். “நான் யார்?அர்ஜூனுக்கும், தீபாவுக்கும் அம்மாவா? இல்லை, எனக்கான தேடல்கள் இன்னும் இருக்கிறதா?”

இது ராதாவுக்கான கேள்வி மட்டுமல்ல. இன்று பல லட்சம் தமிழ் பெற்றோர் அனுபவிக்கும் உணர்வு. எம்ப்டி நெஸ்ட் சின்ட்ரோம் – காலியான கூட்டின் நோய்க்குறி.

நமது பாட்டி தாத்தா காலத்தில், குடும்பம் என்பது பெரிய கூட்டுக்குடும்பம். ஒரே வீட்டில் மூன்று நான்கு தலைமுறைகள். பெரியப்பா, சித்தப்பா, அத்தை, மாமா, எல்லோரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். குழந்தைகள் எப்போதும் யாராவது ஒருவரின் பார்வையில் வளர்ந்தனர். தனிமை என்ற வார்த்தையே இல்லை.

நமது பாரம்பரிய மதிப்புகள் மூத்தோரின் மரியாதை, மற்றும் பராமரிப்பை மிக முக்கியமாகக் கருதுகின்றன. குழந்தைகள் பெற்றோரைக் கவனிக்க வேண்டும் என்ற கடமை உணர்வு ஆழமாக வேரூன்றியிருக்கிறது. “பெத்த பிள்ளை பக்கத்துல இருக்கணும்” என்ற எதிர்பார்ப்பு வெறும் விருப்பமல்ல, சமூக நம்பிக்கையாக இருந்தது. பெரும்பாலும் மூத்த மகன் பெற்றோருடன் தங்கி அவர்களைக் கவனிப்பது வழக்கம். மருமகள்மீது வயதான பெற்றோரின் பராமரிப்புப் பொறுப்பு இருக்கும் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதியாக இருந்தது.

கடந்த இரண்டு தலைமுறைகளில் தமிழகம் மாபெரும் மாற்றங்களைச் சந்தித்துள்ளது. IT துறையின் வளர்ச்சி இளைஞர்களை பெங்களூரு, ஹைதராபாத், மும்பையை நோக்கி இழுக்கிறது. வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பலரை அழைத்துச் செல்கின்றன. உயர் கல்விக்காக நகரங்களுக்கு இடம்பெயர்தல் இயல்பான விஷயமாகிவிட்டது.

குடும்ப அமைப்பிலும் பெரும் மாற்றம். கூட்டுக்குடும்பத்திலிருந்து தனிக்குடும்பத்திற்கு மாற்றம் நிகழ்ந்துவிட்டது. குழந்தைகளின் எண்ணிக்கை ஐந்து, ஆறிலிருந்து ஒன்று, இரண்டாகக் குறைந்துள்ளது. திருமண வயது உயர்ந்துவிட்டது. பெண்களின் வேலை வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.

புவியியல் தூரமும் குடும்பங்களைப் பிரிக்கிறது. பெற்றோர் கிராமங்களில் அல்லது சிறு நகரங்களில் தொடர்ந்து வசிக்க, குழந்தைகள் பெருநகரங்களில் அல்லது வெளிநாடுகளில் குடியேறுகின்றனர். அடிக்கடிச் சந்திக்க முடியாத நிலை உருவாகிவிட்டது.

சமீபத்திய ஆய்வுகளின்படி சீனாவில் 150 மில்லியன் எம்ப்டி நெஸ்டர்கள் இருக்கின்றனர், இது முதியோர் மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமானதாக இருக்கிறது. 2030-க்குள் 90 சதவீத முதியோர் வீடுகள் காலியான கூடுகளாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலும் இதே போக்குதான் இருக்கிறது, மேற்கத்திய நாடுகளில் ஏற்கனவே 35 முதல் 45 சதவீத வீடுகள் எம்ப்டி நெஸ்ட் வீடுகள்தான்.

தமிழகத்தின் சூழலில் துல்லியமான புள்ளி விவரங்கள் இல்லை என்றாலும், சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் இளைஞர்கள் வேலைக்காக வெளியேறுவது வேகமாக அதிகரித்துவருகிறது. கிராமப்பகுதிகளில் வயதான தம்பதியர் மட்டுமே வசிக்கும் வீடுகள் பெருகி வருகின்றன.

குழந்தைகள் வீட்டை விட்டுச் சென்றபின் பெற்றோருக்கு என்ன நடக்கிறது? சில பெற்றோர் மகிழ்ச்சி அடைகின்றனர், சிலர் மனச்சோர்வு அடைகின்றனர். ஏன் இந்த வித்தியாசம்?

இருபது வருடங்கள் அல்லது அதற்கு மேல், நமது முழு அடையாளமும் “அம்மா” அல்லது “அப்பா” என்ற பாத்திரத்துடன் பின்னிப் பிணைந்தே இருந்திருக்கின்றது. காலை எழுந்ததிலிருந்து இரவு தூங்கும் வரை குழந்தைகளுக்காகவே வாழ்க்கை இருந்தது. காலையில் டிஃபின் பாக்ஸ் கட்டுவது, பள்ளி முடிந்து வரும் நேரத்தில் வீட்டில் காத்திருப்பது, ட்யூஷன், கிளாஸ், பயிற்சிகளுக்கு அழைத்துச் செல்வது, படிப்பில் கவனம் செலுத்துவது, உணவு, உடை, உடல்நலம் எல்லாம் பார்த்துக்கொள்வது என முடிவில்லாத பொறுப்புகள்.

குழந்தைகள் சென்றபின் திடீரென இந்த வழக்கமான நடவடிக்கைகள் அனைத்தும் நின்றுவிடுகின்றன. எழுந்தவுடன் டிஃபின் பாக்ஸ் கட்ட வேண்டாம். யாருக்கும் டிஃபின் கட்ட வேண்டாம். மாலையில் சாப்பிட்டாயா? என்று கேட்க யாரும் இல்லை. இந்த வெற்றிடம் ஆழமான உணர்வுகளை உருவாக்குகிறது.

“நான் யார்?” என்ற அடையாள நெருக்கடி முதலில் வருகிறது. “இருபது வருஷம் அவங்க அம்மாவா இருந்தேன். இப்போ நான் யார்? என்னோட identity என்ன?” இது மிக ஆழமான கேள்வி. சுயத்தைத் தேடும் பயணம். “எனக்கு இனி என்ன வேலை?” என்ற நோக்கம் அடையாள இழப்பாகவும், இனிமேல் தன்னால் எந்தப் பயனும் இல்லையோ! என்ற ஏக்கமாகவும் மாறுகிறது. குழந்தைகளை நல்லபடியாக வளர்ப்பது, படிக்க வைப்பது, settle செய்வது இதுவே வாழ்க்கை இலக்காக இருந்தது. இப்போது அது நிறைவேறிவிட்டது. அடுத்து என்ன?

“நான் தேவையற்றவனா?” என்ற தன்மதிப்புப் பாதிப்பும் வருகிறது. குழந்தைகள் இப்போது சுதந்திரமாக வாழ்கின்றனர். தங்கள் பிரச்சனைகளை தாங்களே தீர்த்துக்கொள்கின்றனர். “என் தேவை இனி யாருக்கு தேவை?” என்ற எண்ணம் மனதை வருத்துகிறது.

இந்த மன உளைச்சல் உடல்நலம் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. தூக்கமின்மை ஏற்படுகிறது. பசியின்மை அல்லது அதிகமாகச் சாப்பிடுவது தொடங்குகிறது. எதிலும் ஆர்வமின்மை உருவாகிறது. அடிக்கடி அழுகை வருகிறது. மனச்சோர்வும் பதற்றமும் அதிகரிக்கின்றன. தனிமை உணர்வு ஆழமாகிறது. ஆனால் எல்லாப் பெற்றோரும் துன்பப்படுவதில்லை. பலர் உண்மையில் நிம்மதி அடைகின்றனர்.

நவீன தமிழ்ப் பெற்றோர், குறிப்பாகத் தாய்மார், இரண்டு முழு நேர வேலைகளைச் செய்கின்றனர். முதலாவது வெளியே வேலை, காலை ஒன்பது முதல் மாலை ஆறு வரை அலுவலகம், அந்தப் பணி அழுத்தங்கள், பயண நேரத்தில் இரண்டு மூன்று மணி நேரம் போக்குவரத்தில். இரண்டாவது வீட்டு வேலை மற்றும் குழந்தை வளர்ப்பு, சமைத்தல், சுத்தம் செய்தல், துவைத்தல், குழந்தைகளின் படிப்பு, உடல்நலம், உணர்வு வளர்ச்சி, வீட்டு வேலையாட்களை நிர்வகித்தல், உறவினர்களுடன் தொடர்பு பேணுதல் போன்றவற்றைச் செய்கின்றனர்.

ஆசியப் பெண்கள் ஆண்களைவிட ஐந்து மடங்கு அதிக வீட்டு வேலைகள் செய்கின்றனர். இந்தியாவில் இது இன்னும் அதிகம். இதனால் தொடர்ச்சியான மன அழுத்தம். பணி-குடும்பம் இடையே சமநிலை காண்பது மிகக் கடினம். வேலையில் இருக்கும்போது குழந்தைகளைப் பற்றிய கவலை, வீட்டில் இருக்கும்போது வேலை பற்றிக் கவலை. அவர்களில் பலருக்குச் சொந்த நேரம் என்பதே இல்லை. உடற்சோர்வும் மனச்சோர்வும் தொடர்கின்றன.

குழந்தைகள் சென்றபின் திடீரென அந்தப் பணிகளில் இருந்து, அதனால் வந்த அழுத்தங்களில் இருந்தும் விடுதலை! இப்போது நேரம் இருக்கிறது, அவர்களுக்கே அவர்களுக்கான சொந்த நேரம்! காலையில் அவசரமில்லை. மாலையில் யாருக்காகவும் காத்திருக்க வேண்டாம். வார இறுதியில் சிறப்பு வகுப்புகள் இல்லை. சமைக்க குறைவான அளவு. கவலைகள் குறைவு. எதிர்பாராத செலவுகள் குறைவு. சுமை குறைகிறது.

புதிய வாய்ப்புகள் திறக்கின்றன. நீண்ட காலமாகக் கைவிட்டிருந்த ஓவியம், எழுதுதல் படித்தல் போன்ற பொழுதுபோக்குகளைத் தொடரலாம். நண்பர்களுடன் நேரம் செலவிடலாம். கோவில் சுற்றுப்பயணம், மலைநாடுகளுக்குப் பயணம் செல்லலாம். தொண்டுப்பணி, சமூக சேவை செய்யலாம்.

பல வருடங்களாக முழுக் கவனமும் குழந்தைகளிடம் இருந்தது. கணவன்-மனைவி என்ற உறவு பின் தள்ளப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் ஒருவரையொருவர் கண்டுபிடிக்க வாய்ப்பு. சேர்ந்து காபி குடித்துப் பேசலாம். திரைப்படம் பார்க்கலாம். சேர்ந்து நடைப்பயிற்சி செய்யலாம். பொதுவான ஆர்வங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். சில தம்பதியர் தங்கள் வாழ்க்கையில் இரண்டாவது தேனிலவை அனுபவிப்பதாகக் கூறுகின்றனர்!

மனித மகிழ்ச்சிக்குச் சமூக உறவுகள் அவசியம். முதியோருக்கு இது இன்னும் முக்கியம். பாத்திர இழப்பால் சமூகத் தனிமை வரலாம். குழந்தைகளுடன் தினசரி நடக்கும் உரையாடல்கள் இல்லை. அவர்களது நண்பர்கள், ஆசிரியர்களுடன் தொடர்பு இல்லை. பள்ளிக் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் இல்லை. சக பெற்றோருடன் நட்பு குறைகிறது.

தமிழ்ச் சூழலில் கூடுதல் சிக்கல்கள் உண்டு. ஆசிய முதியோர் மேற்கத்தியர்களைவிட அதிகச் சமூக ஒதுக்கலுக்கு ஆளாகின்றனர். காரணங்கள் பல. “இந்த வயசுல வெளியே போறீங்களா?” என்ற வயது சார்ந்த சமூக விதிமுறைகள் இருக்கின்றன. சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தயக்கம். “என்ன சொல்வார்கள்?” என்ற பயம். போக்குவரத்துச் சிக்கல்கள் இருக்கின்றன. தனியாக வெளியே செல்லக் கஷ்டம். மகன் அல்லது மகள் இல்லாமல் எப்படிப் போவது? வாடகைக்காரின் நம்பகத்தன்மை பிரச்சனை. தொழில்நுட்ப இடைவெளியும் உண்டு. வாட்ஸப் கால் பயன்படுத்தச் சிரமம். இணையத் தொடர்புகள் முழுத் திருப்தியும் தருவதில்லை. நேரடிச்சந்திப்பின் அரவணைப்பு என்பது வேறு.

ஆனால் பாத்திர அழுத்தத்தின் நீக்கத்தால், புதிய சமூக வாய்ப்புகளும் வருகின்றன. நேரமும் சுதந்திரமும் இருக்கும்போது பாரம்பரியத் தமிழ்ச் சமூக வட்டங்களில் சேரலாம். கோவில் நடவடிக்கைகள், பஜன் மண்டபங்கள், சத்சங்கங்கள், சுய உதவி குழுக்கள் அல்லது மகளிர் சங்கங்கள், திருவிழாக்கள், பண்டிகைகளில் தீவிரப் பங்கேற்பு என்று பல வழிகள். நவீன வாய்ப்புகளும் இருக்கின்றன. முதியோருக்கான கிளப்கள், யோகா வகுப்புகள், தியான மையங்கள், நூலக உறுப்பினர், தொண்டு நிறுவனங்களில் ஆலய சேவை அல்லது அன்னதானம், கலை வகுப்புகள் நடனம், இசை, ஓவியம் போன்றவற்றில் சேரலாம்.

முக்கியமான உண்மை என்னவெனில், தன்னுடன் வசிக்காத குழந்தைகளுடன் வழக்கமான தொடர்பு வைத்திருக்கும் பெற்றோர் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். தொலைபேசி அழைப்புகள், video chat, அடிக்கடிச் சந்திப்பு இவை மிக முக்கியம்.

இதுதான் தமிழ்ப் பெற்றோருக்கு மிகப்பெரிய சவால். மனதில் பாரம்பரிய எதிர்பார்ப்புகள், ஆனால் வாழ்க்கையில் நவீன யதார்த்தம். பாரம்பரியம் சொல்வது, குழந்தைகள் திருமணத்திற்குப் பிறகும் பெற்றோருடன் வாழ வேண்டும். குறைந்தபட்சம் ஒரு குழந்தை, பெரும்பாலும் மூத்த மகன், பெற்றோரைக் கவனிக்க வேண்டும். பல தலைமுறைகள் ஒரே வீட்டில், “சேர்ந்து இருப்பதே மகிழ்ச்சி”. மருமகள் மாமியாருக்குச் சேவை செய்ய வேண்டும்.

ஆனால் இன்றைய யதார்த்தம் என்பது வேறு. வேலை வாய்ப்பு வேறு நகரத்தில், அல்லது நாட்டில் கிடைத்த இடத்திற்குச் செல்கின்றனர். சிறிய குடும்பத்தை விரும்பும், தம்பதி மற்றும் குழந்தைகள் மட்டும் என நியூக்ளியர் குடும்பம். இருவரும் வேலைக்குச் செல்லும் தம்பதிகள், பெற்றோரைக் கவனிக்க நேரமில்லை. மாமியார்-மருமகள் உறவில் மோதல்கள் தலையெடுக்க ஆரம்பிக்கும், வெவ்வேறு தலைமுறைகள், வெவ்வேறு மதிப்புகள் வேறு.

இதனால் பெற்றோருக்கு “நாங்க என்ன தப்பு பண்ணோம்?” என்ற குற்றவுணர்வு வேறு எழும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாத ஏமாற்றம் வேறு. “அவங்களை நல்லபடியா வளர்த்தோம், இப்போ நம்மளையே மறந்துட்டாங்க” என்ற வருத்தம் அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும். குழந்தைகளுக்கும் பிரச்சனை. பணி, மற்றும் பெற்றோர் எதிர்பார்ப்பு இரண்டும் இருபக்கமாக இழுக்க, எப்போதும் குற்ற உணர்வு. இதை எல்லாம் எப்படிச் சமாளிப்பது? இந்தக் காலியான கூட்டினால் வரும் தனிமை உணர்வில் இருந்து எப்படி மீள்வது? வரும் வாரம் காணலாம்.

Series Navigation<< முதுமையில் தனிமை தீர்க்க முடியாதது அல்லஓய்வு பெற்றபின்னும் வாழ்க்கையை வாழ்வது எப்படி? >>

Author

You may also like

Leave a Comment