Home இலக்கியம்காட்டுக்குள்ளே கல்வித் திருவிழா!

அண்ணாந்து பார்த்தா வானத்தைப் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு வானத்தை மறைச்சபடி மரங்கள் அடர்ந்த பச்சைப் பசேல்னு ஒரு காடு. அந்தக் காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம். அந்தப் பள்ளிக் கூடத்துக்கு “அமைதி வனம் தொடக்கப் பள்ளி”ன்னு பேரு. சிங்கம்தான் அந்தப் பள்ளிக்கூடத்தோட தலைமை ஆசிரியர். புலி உதவித் தலைமை ஆசிரியர், குயில் பாட்டு டீச்சர், மயில் நடன ஆசிரியர்.

புள்ளி மான் தமிழ் அய்யா, பஞ்சவர்ணக் கிளி ஓவிய ஆசிரியர், சிறுத்தை விளையாட்டு ஆசிரியர், கிளி ஆங்கில ஆசிரியர், கரடிதான் கணக்கு சார், குரங்கு சமூகவியல் சார், வரிக்குதிரை அறிவியல் ஆசிரியர், அந்தப் பள்ளிக்கூடத்தோட நூலகர் வண்ணத்துப்பூச்சி.

எப்படியும் அந்த பள்ளிக் கூடத்துல யானை, நரி, ஓநாய், மரங்கொத்தி, வாத்து, சிட்டுக்குருவிங்க, குரங்குகள், கரடிகள், காகம், முயல், ஆமை, அணில், சேவல், கோழி, ஆடுகள், மாடுகள், வண்டுகள், மின்மினிப் பூச்சிகள்னு அவைகளோட பிள்ளைங்க 500 பேருக்கு மேலே படிச்சாங்க.

அங்க மணிச் சத்தமெல்லாம் கிடையாது. சேவல் கூவினா பள்ளிக் கூடம் ஆரம்பிக்கப் போவுதுன்னு அர்த்தம். சிங்கம் கர்ஜித்தா பிரேயர், மயில் அகவுனா காலை நேர இடைவேளை, ஆந்தை அலறுனா காலை இடைவேளை முடிஞ்சிருச்சினு அர்த்தம்.

குதிரை கனைச்சதுன்னா மதிய உணவு இடைவேளை. குரங்கு அலப்புனிச்சின்னா மதிய உணவு இடைவேளை முடிஞ்சி மதிய வகுப்புகள் தொடங்கப் போவுதுன்னு அர்த்தம். காகம் கரைஞ்சதுன்னா மதிய பாட இடைவேளை.

புறா குணுகுச்சின்னா மதிய இடைவேளை முஞ்சிருச்சின்னு அர்த்தம். யானை பிளிறுச்சின்னா பள்ளிக்கூடம் விட்டாச்சுன்னு அர்த்தம்.

இதுதான் அந்த அமைதி வனம் தொடக்கப் பள்ளியோட பாடவேளையை உணர்த்தும் மணிச் சத்தங்கள்.

ஜூன் 5 ந் தேதி அமைதி வனம் தொடக்கப் பள்ளி திருவிழாக் கோலத்துல இருந்தது. மாவிலைத் தோரணங்களை குரங்குக் குட்டிங்க கட்டிகிட்டு இருந்தன. புள்ளி மான் குட்டிங்க எல்லாம் புள்ளி வச்சி கோலம் போட்டன. அந்தக் கோலத்துக்கு பஞ்சவர்ணக்கிளிக் குஞ்சுகள் வண்ணங்களை வரைஞ்சபடி இருந்தன.

மரங்கொத்திக் குஞ்சு தன்னோட அலகால கொத்திக்கொத்தி ஒலி பெருக்கி ஒழுங்கா கேட்குதான்னு சரி பண்ணிகிட்டு இருந்திச்சி. உயரமான வரிக்குதிரைக் குட்டிங்க விழா மேடையை வண்ண வண்ணத் தோரணங்களைக் கட்டி அலங்காரம் பண்ணின.

கலர் கலரான வண்ணத்துப் பூச்சி கூட்டம் மேடையிலயும், மேடைக்கு முன்னாலயும் பறந்தபடி இருந்தன. அது வானவில் பூமிக்கு இறங்கி வந்தது மாதிரி இருந்தது.

வண்டுகளோட முரலுச் சத்தத்தால ஒரு இன்னிசைக் கச்சேரியே ஒலி பெருக்கி முன்னால நடத்தின. விழா மாலை நேரத்துல நடக்குறதால காட்டுல இருக்குற மின்மினிப் பூச்சிங்க எல்லாம் ஒன்னா திரண்டு வந்து வெளிச்ச வெள்ளத்தைப் பாய்ச்சிக் கொண்டிருந்தன.

அந்தப் பள்ளிக்கூடத்து மாணவர்களான விலங்குக் குட்டிங்க, பறவைக் குஞ்சுங்க, வண்டு வாண்டுகள், பூச்சி இனங்கள் எல்லா மனசுக்குள்ளயும் இன்னிக்கி என்ன விழாவா இருக்கும்..?

சாருங்க… டீச்சருங்க கிட்ட கேட்டதுக்கு…

“அதெல்லாம் ரகசியம்… அந்த ரகசியத்தை விழா மேடையில நம்ம தலைமை ஆசிரியர்தான் சொல்வாருன்னு” சொன்னாங்க.

தலைமை ஆசிரியர் சிங்கமும், உதவித் தலைமை ஆசிரியர் புலியும் விழா மேடையில் ஏற…

எல்லோரும் எழுந்து நின்னு வணக்கம் சொல்லி மரியாதை செலுத்தினாங்க.

“என் அன்பான மாணவச் செல்வங்களே!.. இந்த விழா எதுக்குன்னு உங்களால யோசிக்க முடியுதா?” ன்னு எதிரில் அமர்ந்திருந்த மாணவர்களைப் பார்த்து தலைமை ஆசிரியர் சிங்கம் கேட்டாரு.

மாணவர்கள் எல்லோரும் என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம “திரு..திரு…” ன்னு முழிச்சாங்க.

தலைமை ஆசிரியர் சிங்கம், மின்மினிப் பூச்சிக் கூட்டத்தை ஒரு பார்வை பார்த்து கண்ணசைச்சாரு. ஒன்னா இருந்து ஒளிபரப்புன மின்மினிப் பூச்சிங்க எல்லாம் பறந்து போயி இருட்டான வானத்துல சில வார்த்தைகளை வெளிச்சம் போட்டுக் காட்டின. மாணவர்களுக்கு ஒரு கிராஃபிக்ஸ் படம் பார்க்குற உணர்வு ஏற்பட்டுச்சி!

மின்மினிப் பூச்சிங்க..

“உலக சுற்றுச் சூழல் தினம்!” என்கிற வாசகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டின.

அந்த இருட்டுல பளீர்னு அந்த வெள்ளை எழுத்துகள் வெள்ளி மாதிரி ஜொலிச்சிச்சு. மாணவர்கள் எல்லோரும் எழுந்து நின்னு கைத்தட்டினாங்க. தலைமை ஆசிரியர் சிங்கம், மாணவர்களை உட்காரச் சொல்லிப் பேச ஆரம்பிச்சாரு..

“இன்னைக்கு ஜூன் 5 உலக சுற்றுச் சூழல் தினம். இந்த பூமியைப் பாதுகாக்குறது நம்மோட கடமை. இதுவரைக்கும் நம்மோட காட்டுக்குள்ளே நெகிழிப் பைகளையோ, பாட்டில்களையோ அனுமதிச்சதும் இல்லை, பயன்படுத்துனதும் இல்லை. மண்ணை மலடாக்கும் மோசமான பொருட்கள் அவை. பறவைகள், பழங்களைத் தின்னுட்டு ஈரப்பதமா இருக்குற நெலத்துல தங்களோட எச்சங்கள காலகாலமா பரப்புனதாலதான் காடு, மலை எல்லாம் மரங்களா இருக்கு. இன்னும் விதைகளை நிறைய இடத்துல பரப்பணும். நம்ம வனத்தைப் போல இந்த பூமியையே ஒரு வனமா மாத்தணும். ஏன்னா.. நாம எல்லோருக்கும் இருக்கிற ஒரே வீடு இந்த பூமி மட்டும்தான். இது நமக்கெல்லாம் சாமியும் கூட” ன்னு பேசி முடிச்சாரு.

மாணவர்கள் எல்லோரும் எழுந்து நின்னு,

சுற்றுச் சூழல் காப்போம்!”
“பூமிக்கு வளம் சேர்ப்போம்!
” ன்னு முழங்க ஆரம்பிச்சாங்க.

அந்தச் சத்தம், வனம் தாண்டி வானம் வரை போய்க் கொண்டிருந்தது.

விலங்கு, பறவை, மரம் மற்றும் ஊர்வனவற்றின் இளமைப் பெயர்கள்!

  1. அணில் – பிள்ளை,குஞ்சு
  2. எலி – குஞ்சு,குட்டி
  3. பூனை,குரங்கு – குட்டி,பறள்
  4. சிங்கம்,நாய் – குட்டி,குருளை
  5. குதிரை,ஆடு,பாம்பு,கரடி,புலி – குட்டி
  6. கோழி,மீன்,காகம் – குஞ்சு
  7. யானை – குட்டி,போதகம்,துடியடி,களபம்,கயமுனி
  8. மான்,மாடு,எருமை – கன்று
  9. வாழை,வேம்பு,பலா – கன்று
  10. உடும்பு,பல்லி – பிள்ளை

விலங்கு, பறவை, மரம் மற்றும் ஊர்வனவற்றின் ஒலி மரபுப் பெயர்கள்!

  1. சிங்கம் – கர்ஜிக்கும்.
  2. யானை – பிளிறும்.
  3. குரங்கு – அலப்பும்.
  4. எலி – கீச்சிடும்.
  5. குதிரை – கனைக்கும்.
  6. பாம்பு -சீறும்.
  7. மயில் – அகவும்.
  8. ஆந்தை – அலறும்.
  9. புறா – குணுகும்.
  10. வண்டு – முரலும்.

Author

  • தங்கபாபு, Thangababu

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் பிறந்தவர். அரசுப் பள்ளி தலைமை ஆசிரியராகக் கோட்டூர் ஒன்றியத்தில் பணியாற்றி வருகிறார். எழுத்தின் மீது கொண்ட தீராத காதலால் தொடர்ந்து பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். மாணவர்களையும் எழுத ஊக்குவிக்கிறார். தமிழக அரசின் புத்தகப் பூங்கொத்து திட்ட நூலாக்க குழுவில் ஒருவராக இருந்து பல்வேறு சிறார் கதைகளை எழுதியவர்.

You may also like

5 comments

I. Selvamani November 14, 2025 - 3:13 pm

சுற்றுச்சூழல் பாதுகாப்பை உணர்த்தும் கற்பனை வளமிக்க சிறந்த கதை, மரங்கள் தான் இயற்கை தந்த நல் வரங்கள் என்பதையும்,விலங்கினங்கள் சூழ்நிலைக்கேற்ப தம்மை தகவமைத்துக் கொள்கின்றன என்பதையும், இன்னும் சொல்லப் போனால் குழந்தைகள் பெரிய பெரிய மனிதர்களிடம் காட்டும் அன்பினை விட விலங்குகளிடம் அன்போடு இருக்கிறார்கள், அதன் செயல்பாடுகளை ரசிக்கின்றனர்.. என்பதை ஆழ ரசித்து குழந்தை மனம் கொண்ட ஆசிரியர் இக்கதையை எழுதி இருப்பது அழகு “*அடர்ந்த வனம் அன்பு வனமாகி*”இருப்பது அருமை
வாழ்த்துகள் சார்.

Reply
க.தங்கபாபு November 15, 2025 - 11:00 pm

மிக்க மகிழ்வும்…நன்றிகளும்!

Reply
Buvanaboopathi November 14, 2025 - 6:46 pm

அருமை… சார்… “கதையோடு கருத்து” “கதையோடு கற்றல்” இந்த வாசகங்கள் உங்களை கதைக்கு பொருத்தமானது… விலங்குகள் மற்றும் பறவைகளின் இளமை பெயர்களோடு அவைகள் எழுப்பும் ஒலியை அழகாக எடுத்து இயம்பிய விதம் பாராட்டுக்குரியது…

Reply
மதிப்புறுமுனைவர்.க.சந்தானலட்சுமி November 15, 2025 - 6:55 pm

அருமை!அருமை தம்பி! தங்களது கதைகளும்,ஓவியங்களும் 2006-2007லேயே எனக்குப்பரிச்சயமானது.கதையின்மூலம் கற்றல் நமது தாத்தாபாட்டி நமக்கு கற்றுத்தந்த பாரம்பரியக்கற்றல்!The animal school எனும் நூலை மீண்டும் படித்ததுபோல் சிறப்பான கதையாடல்உத்தி! தொடர்க!தொடர்கிறோம்!நல்வாழ்த்துகள்!!!!

Reply
க.தங்கபாபு November 15, 2025 - 11:01 pm

மிக்க மகிழ்வும்…நன்றிகளும்!

Reply

Leave a Reply to மதிப்புறுமுனைவர்.க.சந்தானலட்சுமி Cancel Reply