- அரக்கியுடறது.. கொங்கு வட்டார வழக்கு -3
- கூடப்போடறது.. கொங்கு வட்டார வழக்கு -2
- சீராட்டு: – கொங்கு வட்டார வழக்கு – 3
#கூடப்போடறது..
#கொங்குவட்டாரவழக்கு.
என்னனு தெரில ரண்டு நாளா இந்த வார்த்த உருட்டீட்டே கெடக்கு.
கூடப்போடறது- தொலச்சறது, இழப்பது இப்படி நேரத்துக்கு,எடத்துக்கு தகுந்தமாதிரி பொருள் கொள்ளலாம்.
ஏனுங் சுப்பாயக்கா,மாப்ள எங்கியோ வெளிநாடு போறதா சொல்லீட்டு இருந்தாரு கெளம்பீட்டாப்ளயா..
அட ஏனப்புனு நீ வேற..
வெளிநாடு போவோனும்னுதா மேக்கால தோட்டத்துல கால் ஏக்கராவ குடுத்து பணத்த குடுத்த.
இந்த பள்ளிக்கிருவி ( வசைச்சொல்)
எவனயோ நம்பி அத்தன பணத்தையும் குடுத்து கூடப் போட்டுட்டு இப்ப கொரவனாட்ட இங்கயே ஒரு வேலயப் பாத்துப்போறான்.
அடச்சேரிங்கா, எப்டியோ அத்தன காசயும் தொலச்சுதா மாப்ளைக்கு பித்தி ( அறிவு) வரோனும்னு இருக்குமாட்ட.
நா நா சம்பாரிக்கறத வேற விதமா இழக்கறேன்,அல்லது கடன் பண்ணறேன், இல்ல என்னோட சொத்துபத்துகள இழக்கறேனா அப்ப பெரியவங்க என்ன பாத்து சொல்ற வார்த்த அவ எல்லாத்தயும் கூடப்போட்டுட்டானு.. இது கடுங்கோவத்துல வர ஒரு வார்த்தை,வருத்தத்துனால வர வார்த்தை.
நான் என் உறவ இழந்திடுறேன். அதுக்கு நான் மட்டுமே காரணமா இருக்கேன்ணா அதுக்காக என்ன திட்ற வார்த்தையும் இவ அவனையும் கூடப்போட்டுட்டாங்கறதா இருக்கும்.
இப்படி பல இடங்கள்ல இழப்ப குறிக்கற சொல்லா கொங்கு வட்டார வழக்குல #கூடப்போடறது இருந்துருக்கு.