Home இலக்கியம்மாறியது நெஞ்சம்

“மணி..!”

“அம்மா.. விளையாடிக்கிட்டிருக்கேன்.”

அவன் கையில் வண்ணப் பந்து.

“இது ஏது உனக்கு?”

“பக்கத்து டவுனில் இருந்து பாட்டி வாங்கி வந்தாங்க.‌ ‘பூமராங்’ போல தூக்கிப் போட்டா திரும்பவும் நம் கைக்கு வந்துவிடும்”

அவர்கள் வீட்டில் வேலை செய்யும் மகேஸ்வரியின் மகன் செல்வம், ஏக்கத்துடன் பந்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“டேய் .. அந்தப் பையனிடம் கொஞ்ச நேரம் கொடுடா”

மணியின் பாட்டி, “நல்லா இருக்கு நீ சொல்றது. அவன் தொட்ட பந்தை என் பேரன் தொடலாமா? நீ விளையாடுடா செல்லம்” என்றாள்.

ஒன்றும் பேசாமல் உள்ளே சென்றாள் மணியின் அம்மா பத்மினி.

பாட்டியும் பேரனும், இரண்டு நாட்கள் ஒரு கல்யாணத்திற்கு வெளியூர் சென்றுவிட்டு, காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

“டிரைவர்.. காரை நிறுத்துங்க” கத்தினான் மணி.

செல்வம் மற்ற குழந்தைகளுடன் பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்துக் கோபத்துடன் இறங்கிய மணி “திருட்டுப் பயலே..”எனக் கத்தியபடி செல்வத்தைக் கீழே தள்ளி விட்டு, பந்தைப் பறித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான்.

வீட்டில் மணியின் பந்து அவன் வைத்த இடத்தில் இருந்தது.

அங்கு வந்த அவன் அம்மா, மணியைப் பார்த்த பார்வையில் தடுமாறினான்.

“என்னுடைய பந்தைத் திருடி விட்டான் என நினைத்து விளையாடிக் கொண்டிருந்த செல்வத்தின் பந்தைப் பறித்து வந்தேன்.‌ அப்பொழுது கூட செல்வம் ஒன்றும் கூறவில்லை”

“அவன் திருடன் இல்லை. நீதான் வழிப்பறித் திருடன். தன்னுடைய பந்து என்று சொல்லி இருந்தாலும் நீயோ உன் பாட்டியோ அதைக் காதாலும் கேட்டு இருக்கமாட்டீர்கள். ‘ஏழை சொல் அம்பலம் ஏறாது’ என்று மௌனமாக நின்று இருப்பான்.”

அம்மாவின் வார்த்தைகள் மணியின் இதயத்தில் நுழைந்தன. தன் செயலுக்கு வெட்கப்பட்டான்.

பந்தைத் திருப்பிக் கொடுத்து விட்டு, செல்வத்தையும் அவன் நண்பர்களையும் அழைத்து மன்னிப்புக் கேட்டான். “இனி நானும் உங்களுடன் விளையாட வருகிறேன்.”என்று மகிழ்ச்சியாகக் கூறினான்.

நடந்ததைக் கேள்விப்பட்ட தாயுள்ளம் மகிழ்ந்தது.

Author

  • தமிழின் மீதும், தமிழ்ப்புத்தகங்கள் மீதும் தீராப்பற்றுடைய ருக்மணி வெங்கட்ராமன், M.A.,M.Sc., B.Ed. பட்டங்கள் பெற்றவர். சில வருடங்கள் பண்ருட்டியில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவும், பின்னர் நெய்வேலியில் மேல்நிலைப் பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றியவர். 20 ஆண்டு காலம் கல்வித்தொண்டு புரிந்த இவர் சிறந்த எழுத்தாளர். நுட்பமான எழுத்திற்குச் சொந்தக்காரர். இது வரை 16 கதைத்தொகுப்புகளில் எழுதியுள்ளார்.

You may also like

Leave a Comment