கௌசிக முனிவரின் ஆசிரமத்தில் வேள்வி ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. ஆனால், இலக்குவனின் மனம் அமைதியற்று இருந்தது. தாடகையை இராமன் வீழ்த்தியது அவனுக்கு மகிழ்ச்சி தந்தாலும், மற்றொரு பக்கம் அவன் மனதில் ஒரு புரியாத அச்சம் தோன்றியிருந்தது.
“அண்ணா,” என்று இலக்குவன் மெல்ல அழைத்தான், இருவரும் வேள்விக் குடிலை சுற்றி நடந்து கொண்டிருக்கையில்.
“இந்தக் காடு அமைதியாகத் தோன்றினாலும், ஏதோ ஒரு பெரிய ஆபத்து நம்மைச் சுற்றி இருப்பது போல் உணர்கிறேன். நம்மை சில கண்கள் உற்று நோக்குகின்றன”
இராமன் புன்னகைத்தான்.
“தம்பி, உன் உள்ளுணர்வு எப்போதும் மிகக் கூர்மையாக இருக்கிறது. ஆம் எனக்கும் யாரோ நம்மைக் கண்காணிப்பதை உணர்கிறேன். வருவது வரட்டும், எந்த ஆபத்து வந்தாலும், நாம் ஒருவருக்கொருவர் துணையாக இருப்போம். நம் கையில் வில்லிருக்கிறது. கவலை ஏன்?” என்றான் இராமன்.
இலக்குவன் மௌனமாகத் தலையசைத்தான், ஆனால் அவன் கண்கள் காட்டின் அடர்ந்த பகுதிகளை ஆராய்ந்தன. கௌசிகர் கற்றுக் கொடுத்த மனப் பயிற்சியை அவன் விடாது தொடர்ந்து பயின்று வந்தான். காற்றில் கலந்த ஒலிகளைப் பிரித்து, இயற்கையின் மொழியைப் புரிந்து கொள்ள முயன்றான். திடீரென, அவன் நின்றான்.
“அண்ணா, கேள்… இது மரங்களின் அசைவு இல்லை. யாரோ நம்மைப் பின்தொடர்கிறார்கள்.”
அதே நேரத்தில்
” இராமா, இலக்குவா இரவு தொடங்கி இரண்டு நாழிகை ஆனபின்னும் ஏன் உறங்கச் செல்லவில்லை? “
என்ற கௌசிகரின் குரல் பின்னிருந்து கேட்டது.
இலக்குவன் தன் கண்களை மூடி கௌசிகரின் நடக்கும் ஒலியை கவனித்தான். இது சற்று மெல்லிய நடை. ஆனால் அப்போது கேட்ட ஓசைக்கு உரிய உருவம் பருத்து கனத்திருக்க வேண்டும். அவன் புலன்கள் தீவிர எச்சரிக்கையில் இருந்தன.
“இருவரும் உள்ளே வாருங்கள். நாளை வேள்வி தொடங்கியதும் வேள்வியில் அமர்ந்த நாங்கள் வேள்வி முடியும் மட்டும் எழக்கூடாது. ஆகவே சிவற்றை இப்போது நீங்கள் அறிந்துக் கொள்வது அவசியம்”
“இராமா, இலக்குவா இந்த யாகம் உலக அமைதிக்காக நடத்தப்படும் யாகம். அளவான மழையும் வெயிலும் வேண்டியும், தாவரங்கள் தழைத்து வளர வேண்டியும், எல்லா உயிரினங்களும் இன்புற்றிருக்க வேண்டி அந்தப் பரம்பொருளை தியானித்து நாங்கள் செய்ய இருக்கும் வேள்வி இது. இதை நடைபெறாமல் தடுக்க இந்த இடத்தை எடுத்துக் கொண்ட தாடகையும் அவளிரு மகன்களும் தங்களின் கூட்டத்தோடு வந்து தீராது தொல்லைத் தருகின்றனர். “
என்ற கௌசிகர் வேள்வி எப்படி செய்யப்படும், அதன் நன்மைகள் என்ன, எந்த எந்தப் பக்கங்களில் இருந்து தாக்குதல்கள் வரலாம், எப்படித் தடுக்கலாம் என்றெல்லாம் விவரித்து சொன்னார்.
அவர்களைத் தூங்கச் சொல்லி தானும் உறங்கச் சென்றார்.
மறுநாள் பொழுது விடிந்து வேள்வியில் முனிவர்கள் அமர்ந்தனர்.
முதன்மை ஆசானாக கௌசிகர் அமர்ந்தார். வேள்விக் குண்டங்களைச் சுற்றிப் பல முனிவர்கள் அமர்ந்தனர்.
மந்திர ஓசைகள் ஒரே நேரத்தில் ஒத்திசைவோடு ஆரம்பித்து அந்த இடமே மெல்ல அதிர்வுக்குள் உண்டானது. கூடவே வேள்விப் புகை நறுமணத்துடன் மெல்ல மெல்ல வானுயர ஆரம்பித்தது.
” அண்ணா, அந்த ஒலிகளை என்னால் இப்போது கேட்க முடிகிறது. கூட்டமாக பலர் ஓடிவரும் ஓசை. என் கணிப்பு சரியாக இருந்தால் இந்த வேள்விச் சாலை இன்னும் அரை நாழிகைக்குள் முற்றுகை இடப்படும் என்றான்.
இராமன் புன்னகையோடு தன் கை வில்லை உயர்த்திப் பிடித்தான்.
” கவலை வேண்டாம் இலக்குவா. இது குரு நாதர் நமக்களித்த வில். அவர் நமக்கு அளித்த மந்திர உபதேசங்களுடன் கூடவே வெறும் புல்லையும் அஸ்த்திரமாக மாற்றும் முறையையும் நமக்கு சொல்லித் தந்துள்ளார். ஆயிரம் பேர் வரட்டுமே.. ஒரு கை பார்த்துவிடுவோம்” என்று சொல்லிக்கொண்டே குடிலை விட்டு வெளியே வந்தான் இராமன்.
” ஆம் அண்ணா, நாம் அவர்களை எதிர்ப்போம். ஆனால் வருவது ஆயிரம் பேர்கள் அல்லர், குறைந்தது பத்தாயிரம் இருக்க வேண்டும்”
இராமன் வியந்தான். இலக்குவனின் அந்த கணிப்பு சரியென்றே அவர்கள் முன் எழும்பிய புழுதிக் கூட்டம் கட்டியம் கூறியது.
இருவரும் தங்கள் வில்லினை வளைக்க அங்கே பெரும் போர் உருவானது. இது இருவருக்குமான முதல் போர்க்களம். கன்னிப் போர். அதே நேரம் மிகக் கடுமையான போர். அரக்கர்கள் கூட்டம் பலவகையான ஆயுதங்கள் கொண்டு தாக்கினர். கவன்கள், கூரிய வேல்கள், தண்டாயுதங்கள் என பலப்பல ஆயுதங்கள். திறமையாக இருவரும் அவற்றை வில் கொண்டே எதிர்த்தனர்.
பலநாழிகைகள் கடந்தும் இருவரும் சளைக்காமல் போர்த் தொடுப்பதைக் கண்டு அந்தக் கூட்டம் வியந்தது. இருவரின் விற்திறனைக் கண்டு அந்தப் பெருங்கூட்டம் சிதறியது. பலர் இறந்தனர். சிலர் தப்பி ஓடினார்கள்.
ஆனாலும்
” என் தாயின் இறப்புக்கு காரணமான உங்களை விடமாட்டோம்” என்று இருவர் ஓடி வந்தனர். அதில் ஒருவன் இராமனை நோக்கிப் பாய்ந்தான். அதே வேகத்தில் இராமனின் அம்பினால் அடிபட்டுக் கீழே வீழ்ந்தான், அவன் சுபாகு, தாடகையின் மூத்த மகன்.
” அண்ணா அண்ணா.. ” என்று அழுதுக் கொண்டே மற்றொருவன் அவன் அருகில் செல்லும் போது இராமனின் இன்னொரு அம்பு அவன் காலருகே எச்சரிக்கையாஜ வீழ்ந்தது.
” மாரீசா, உயிர் பிழைத்துக் கொள் ஓடு, நம் குலம் தழைக்க. நீ பிழைத்துக் கொள்.” என்று அலறினான் கீழே விழுந்த சுபாகு. அத்தோடு அவன் உயிரும் பிரிந்தது.
மாரீசன் ஓடினான், வஞ்சினத்தோடு ஓடினான். இவர்களை எப்படியாவது அழித்தே விடுவேன் என்று மனதுக்குள் கறுவிக் கொண்டே ஓடினான்.
” அண்ணா அவனைக் கொன்றுவிடு, அவன் ஆபத்தானவன், என்றேனும் அவனால் நமக்குத் தீங்கு நேரிடலாம்” என்றான் இலக்குவன்.
“வேண்டாம் தம்பி. அது அறமல்ல. உயிர் பிழைக்க முதுகு காட்டி ஓடுபவனை கொல்வது வீரமும் அல்ல. அவன் போகட்டும் விடு” என்றான் இராமன்.
அங்கே வேள்வி இனிதாக முடிந்துவிட்டிருந்தது என்பதை முனிவர்களின் மகிழ்வான குரலோசைகள் அறிவித்தன. போரின் களைப்பு மெல்லத் தோன்ற அவர்கள் இருவரும் தளர்ந்து நடந்தனர். கௌசிகன் அவர்களை பூரிப்புடன் நோக்கினான். அனைவரும் இருவரையும் வானளாவப் புகழ்ந்தனர்.
அவர்களிருவரும் கூச்சத்துடன் அத்தனைப் புலழுரைகளையும் தலை தாழ்த்தி ஏற்றனர்.
முனிவர்கள் யாகத்தின் நீரை இருவரின் மீதும் தெளித்து அவர்களைப் புனிதப் படுத்தினார்கள். அவர்களின் தலை மீது தங்கள் இரு கரம் வைத்து ஆசி வழங்கி பின் தங்களின் குடிலுக்கு சென்றுவிட்டார்கள்.
” அண்ணா, நீ அவனைக் கொன்றிருக்க வேண்டும்”
” தம்பி, சொன்னேனே, அது அறமற்றச் செயல் என்று. அவனை விட்டுவிடு. இனி அவன் திரும்பி வரமாட்டான்” என்றான் ராமன்.
இலக்குவன் மனம் ஏனோ அதை ஏற்கவில்லை. மாரீசனின் காலடி தடதடத்து ஓடிய ஓசையை மீண்டும் மீண்டும் தன் நினைவுக்குள் கொண்டு வந்து தன் ஆழ்மனதில் பதித்தான். இயற்கையின் ஒலிகளை அறிந்துக் கொண்ட நாளில் இருந்து அவனுடைய தூக்கம் மெல்ல மெல்ல அகன்றது. அது ஒரு சாபம் போல அவனைத் தூக்க நேரத்தைக் குறைத்தது. கூடவே அவன் ஆழ்மனதில் தங்கிவிட்டான் மாரீசன்.
2 comments