‘மனசா வா(ச்)சா – இந்தப் படம் பத்திக் கேள்விப்பட்டதில்ல. நேத்து பார்த்தேன். திலீஷ் போத்தன், சாய்குமார், ஸ்ரீஜித் ரவி மட்டும்தான் தெரிந்த முகங்கள்.
ஒரு வீட்டில் திருடப் போகும்போது தாராவி தினேஷுக்கு ஏற்படும் எதிர்பாரா நிகழ்வுகள்தான் படத்தின் ஒற்றைவரிக்கதை.
வழக்கமாகக் கதாபாத்திரங்களை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தி கதைக்குள் நகரும் போக்கிலிருந்து விலகி நேரடியாக சிலைத் திருட்டுக்குள் நுழைந்து விடுகிறார்கள்.
கோவில் சிலையைத் திருடி விற்கும் ஏஜெண்ட் ஒரு முஸ்லிம். உதவுகிறவர் நாயர். அவருக்குத் துணை நம்பூதிரி. காசு என்று வந்து விட்டால் எல்லாப் பயல்களும் தெய்வத்தை வந்த விலைக்கு விற்று விடுவான்கள் என்கிறது படம். உண்மையும் அதுதானே?
போலி சிலையை கோவிலுக்குள் வைக்கும் முன் நன்றாக சுத்தப்படுத்துங்கள் என்கிறார் நாயர் நம்பூதிரியிடம். இசுலாமியன் தொட்டு விட்டானாம் 🙂 போலவே, நாயரை ஓரம் கட்டி விட்டு அந்த முஸ்லிம் நம்பூதிரியிடம் நேரடியாக சிலையை வாங்கச் செல்லும்போது சுத்தபத்தமாக தேவி சிலையை ஒப்படைக்கிறார் நம்பூதிரி. ‘நாலாம் மதக்காரன்’ தொட்டால் ‘அயித்தம்’ ( தீண்டாமை) அல்லவா?
” சிறுநீர் கழித்து விட்டு பிறப்புறுப்பைக் கழுவாமல் இருப்பது ‘ஹராம்’ ” என்பவனிடம் அப்படின்னா திருட்டு ஹராம் இல்லையா?’ என்கிறார் நாயர்.
திருட்டுப் போன சிலை கைப்பற்றப்பட்டதும் வழக்கைப் பதிவு செய்யாமல் கோவிலுக்கே கொண்டு போய் விடுமாறு அறிவுறுத்தும் காவல் ஆய்வாளர், “பேசவும் கேட்கவும் தெரியாத பாவம். எதுக்கு தேவையில்லாம அலைஞ்சுக்கிட்டு? ” என்கிறார்.
“நயும் நாயும் ஒண்ணு கூடியால் ப்ரஷ்னமானு சார்”
“அது ஏதடா நயும் நாயும்?”
“நம்பூதிரில ‘ந’யும் நாயர்ல ‘நா’யும்”
படம் முழுக்க விரவிக் கிடக்கும் இது போன்ற ‘ஒன் லைனர்’கள் எல்லாம் பட்டாசு. எப்போதோ எம். ஆர். ராதா தமிழில் செய்த அதே நாத்திக அங்கதத்தைத்தான் படத்தில் கையாண்டு வென்றிருக்கிறார்கள். முதல் பகுதியில் விறுவிறுவென்று நகைச்சுவையோடு நகரும் கதையில் இரண்டாம் பகுதியில் சற்றே தொய்வு ஏற்பட்டாலும் ‘கக்கூஸ் காமுகி’ யின் கதை அதைக் காப்பாற்றி மீண்டும் ஓடத் தொடங்கி விடுகிறது.
மலையாளப் படங்களுக்கேயுரிய தனிப்பட்ட அடையாளங்களுடனான கதாபாத்திரம் இந்தப் படத்திலும் உண்டு. காவல் நிலையத்தில் காவலர்களுக்குத் தேநீரும், ஆம்லெட்டும் சமைத்துக் கொடுப்பதற்காகவே முழுநேரமும் சிறையில் இருக்கிறது.
தாராவி தினேஷ் தான் முதன்மைக் கதாபாத்திரம். காவல் துறைக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து ஹிந்திப் பாடலொன்றைப் பாடி விட்டுத் திருடப் போகும் வழக்கமிருப்பதை அந்தக் கதாபாத்திரம்தான் காவல்துறைக்கு எடுத்துச் சொல்கிறது.
கூடவே, தாராவி கள்ளனின் அருமை பெருமைகளைச் சொல்லி தினேஷ் பிடிபடவே அவரே காரணமுமாவது சிறப்பு.
தாராவி தினேஷாக திலீஷ் போத்தனும் சரி, காவல் ஆய்வாளராக ஸ்ரீஜித் ரவியும் சரி கலக்கியிருக்கிறார்கள். சாய்குமார், அலெக்ஸாண்டர் ப்ரசாந்த் போன்ற தெரிந்த முகங்களும் மற்றவர்களும் தங்கள் பங்களிப்பைத் தேவையான அளவுக்குத் தந்திருக்கிறார்கள்.
மஜீத் செய்யதின் எழுத்தில் அங்கதம் அழகாக வெளிப்படுகிறது. ஈதோ ஐசக்கின் சிறப்பான ஒளிப்பதிவும், சுனில் குமாரின் பின்னணி இசையும் இயக்குநர் ஸ்ரீகுமார் பொடியனுக்கு பெரும் துணையாக இருந்திருக்கின்றன.
அவல நகைச்சுவையை விரும்புகிறவர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். மலையாளம் தெரிந்திருந்தால் கொஞ்சம் கூடுதலாக.