Home கவிதைநல்லாச்சி -8
This entry is part 7 of 14 in the series நல்லாச்சி

கைபேசியில் தற்படமெடுக்க
கற்றுக்கொண்டுவிட்டாளாம் பேத்தி
கால் பாவாமல் தாவிக்கொண்டேயிருக்கிறாள்

பூக்களின் பின்னணியில் ஒன்று
பூவுடன் முகம் பொருத்தி ஒன்று
கன்றுக்குட்டியுடன் கன்னமிழைத்து இன்னொன்று
கலர் கோழிக்குஞ்சை
தலையிலமர்த்தி மற்றொன்றென
கைபேசியின் மூளையை
படங்களால் நிரப்பிக்கொண்டேயிருக்கிறாள்.

சாக்கு சொல்லி தப்பித்துக்கொண்டிருந்த
தாத்தாவைக்கூட
செய்தித்தாள் வாசிக்கும்
அசந்த நேரத்தில்
காலையொளியின் பின்னணியில் படமெடுத்தாயிற்று

‘எல.. போட்டோ புடிச்சா ஆயுசு கொறையும்’
என நழுவிக்கொண்டிருக்கும்
நல்லாச்சிக்கும்
ஆசை ஒளிந்துதானிருக்கிறது
மனதின் மூலையில்
மோப்பம் பிடித்த பேத்தி நயந்துரைக்கிறாள்
பிடித்தவர்களுடன் கடக்கும் கணங்களால்
மகிழ்வு ஊற்றெடுக்கும்
அம்மகிழ்வு முகத்தில் பிரதிபலிக்கும்
உடலில் நல்மாற்றங்கள் உண்டாக்கும்
ஆரோக்கியம் மேம்படும் ஆயுசையும் கூட்டும்
அத்தகு கணங்களை
காலத்துக்கும் நினைவிருத்தும் இப்படங்கள்
மகிழ்வையும் ஆயுசையும்
மேலும் கூட்டுமேயன்றி குறையாது
தெளிந்த நல்லாச்சியும் வென்ற பேத்தியும்
தயாராகிறார்கள் படமெடுக்க
லேசான வெட்கத்துடன்.

Series Navigation<< நல்லாச்சி – 6நல்லாச்சி -7 >>

Author

You may also like

Leave a Comment