Home சிறுகதைமண் வீடு

மண் வீடு

by Iyappan Krishnan
0 comments

கோடை மழை பெய்து ஓய்ந்திருந்தது. நெல்லூர்ப் பட்டியின் மண் ஈரத்தில் சிவந்து, இறந்த உடலைத் தழுவிய பச்சிலை வாசனை போலக் கனமாக நின்றது. மழையோடு வந்த காற்று, தனித்து பேயைப் போல கிளைகளை விரித்துக் கிடக்கும் இலுப்பை மரத்தின் சருகுகளைத் தொட்டு, அதற்கு இரை போடுவது போல சலசலவென்று இரவு முழுவதும் வீசிக் கொண்டிருந்தது.

 கிராமத்து வீடுகளுக்கு இன்னும் மின்சாரம் வரவில்லை. ஒரே ஒரு வீட்டில்  பெட்ரோமாக்ஸ் விளக்கு மட்டும், பிரேதத்தின் கண் போல, திண்ணையில் தொங்கிக் கொண்டிருந்தது. அதன் மங்கிய நீல ஒளியில், மனித நிழல்கள் நிலத்தில் நீண்டு, சுவரில் இரகசியமாக ஏறுவது போல ஊர்ந்து கொண்டிருந்தன.

​ராமுவுக்கு வயது முப்பத்தைந்து  கடந்திருந்தது. அவனின் தந்தை இறந்து மூன்று ஆண்டுகள் ஆகியிருக்க, அவன் அம்மா அதற்கு இரண்டாண்டுகளுக்கு  முன்னமே விடைபெற்றிருந்தார் . இப்போது வீட்டில் ராமு, மனைவி சின்னம்மா, ஏழு வயது மாரிமுத்து, நாலு வயது செல்லி. நாலே பேர்தான். ஆனால் அந்த மண் வீடு எப்போதும் நிரம்பியிருந்தது போல, ஒரு இறுக்கமான உணர்வுடன் இருந்தது. யாரோ ஐந்தாவது ஆள், கண்ணுக்குத் தெரியாத ஒரு நிழல், வீட்டிற்குள் அசைந்து கொண்டிருப்பது போல.

​முதல் முறை சின்னம்மாதான் அதை உணர்ந்தது. ஒரு முழுப் பௌர்ணமி இரவில் நடுநிசிக்கு மேல் அடுப்பங்கரையில் பால் காய்ச்சிக் கொண்டிருந்தாள். பால் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பின் தீ, ஒரு கணம் சாதாரண சிவப்பிலிருந்து சட்டென்று  மாறி, உறைந்த நீல நிறத்தில் எரிந்தது. அவள் பயந்து திரும்பினாள். யாருமில்லை. ஆனால், கழுத்துக்குப் பின்னால், ஒரு குளிர்ச்சியான மூச்சு மெதுவாகப் படுவது போலிருந்தது. யாரோ தன் பின்னல் கூந்தலை நுகர்வது போல. அவள் நடுங்கி, “யாரு?” என்று கிசுகிசுத்தாள். பதிலில்லை. அந்த நேரம் பார்த்து, திண்ணையிலிருந்த ராமு, “என்னடி சத்தம்?” என்றான். “ஒண்ணுமில்ல,” என்று சமாளித்தாலும், அன்று முதல் அவளுக்கு அந்த வீட்டின் மேல் மரண பயம் தொற்றிக் கொண்டது.

​இரவு தூங்கப் போகும்போது, மண் சுவர்களுக்குள்ளிருந்து விசித்திரமான, மெல்லிய சத்தங்கள் கேட்டன. வெறும் காலால் தரையை மெதுவாகத் தட்டி நடப்பது போல. பூட்டிய கதவை யாரோ உள்ளிருந்து திறக்க முயல்வது போல ‘கிர்ர்ர்’ என்ற சத்தம். சில சமயம், படுக்கையறையில், தாலாட்டுப் பாட்டு கேட்கும்.

அது சின்னம்மாவுக்குப் பரிச்சயமான குரல் இல்லை. அது  நெஞ்சு அடைத்து, தொண்டை கரகரத்து வெளிவரும் பிணம் பேசும் குரல் போல இருந்தது. “கண்ணுறங்கு  தாலேலோ… கண்ணே தாலேலோ…” என்று வரும்.

​அந்தச் சத்தம் கேட்டதும், செல்லி சிரிப்பாள். “அம்மா பாடுறாங்க” என்று சொல்லி, உறங்கிப் போவாள். தான் பாடவில்லை என்பது சின்னம்மாவுக்குத் தெரியும்.

அவள் திடுக்கிட்டு ராமுவைப் பிடித்துக் கொள்வாள்.

​ராமு ஆரம்பத்தில் நம்பவில்லைதான்.

“நீ பிரசவத்துக்கு இருந்தப்ப கேட்ட சத்தமெல்லாம் இப்பவும் கேக்குதா? மழைக்காலம். மண் வீட்டுல எலி, பல்லி சத்தம் போடும்,” என்று சொல்லிச் சிரிப்பான்.

ஆனால், ஒரு நாள் அவனும் உணர்ந்தான்.

​அது பௌர்ணமி அல்ல; அமாவாசை இரவு. வானமே மண்ணுக்குள் கவிழ்ந்தது போல, முழு இருட்டு. வீட்டுக்கு வெளியே, ஊர் நாய்கள் எல்லாம் ஒன்றாகக் கூடி, ஒரே ஸ்ருதியில் ஊளையிட்டுக் கொண்டிருந்தன. ராமு திண்ணையில் படுத்திருந்தான். நடுச் சாமத்தில், உள்ளேயிருந்து அவன் பெயரைச் சொல்லி யாரோ கூப்பிட்டது போலிருந்தது.

​“ராமு…”

நிச்சயமாக அந்தக் ​குரல், அவன் அம்மா இறந்து பத்து வருடங்களுக்கு முன், கடைசியாகப் பேசியது போல, மிகவும் தெளிவாக இருந்தது. ராமு திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான்.

“யாரு?” என்று கத்தினான். உள்ளே சின்னம்மா, குழந்தைகள் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். ஆனால், மீண்டும் அந்தக் குரல் வந்தது.

​“ராமு… வா… உள்ள வா…” அது, அவர்களின் படுக்கையறைக்குள் இருந்து வந்தது.

​ராமுவின் உச்சி முதல் உள்ளங்கால் வரை பயம் பரவியது. அவன் மூச்சுத் திணற, விளக்கு ஏற்ற ஓடினான். ஏற்ற ஏற்ற விளக்கு அணைந்தது. அங்கே கண் முன்  யாருமில்லை. ஆனால், அந்த அறைக்குள் இருந்த காற்று மட்டும், இப்போதுதான் யாரோ அதன் வழியாகக் கடந்து சென்றது போலக் கனமாக சில்லிட்டுப் போயிருந்தது.

அன்று முதல் ராமுவுக்கும் பயம் பிடித்துக் கொண்டது.

​“போய் ஒரு சாமியாரைப் பார்ப்போம்,” என்று சின்னம்மா கெஞ்சினாள்.

ராமு மறுத்தான். “இது நம்ம வீடு.. நம்ம மண். யாரு வந்தாலும் நாம ஏன்  போகணும், வந்தவங்க அப்படியே போகட்டும்” என்றான்.

அவன் அதைச் சொன்ன போது ஒரு கோபமான பெருமூச்சு அவன் காதை உரசிச் சென்றது.

“இதுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன் ஆமா.  இது என் வீடு” என்றான்.

ஆனால், இரவுகளில் அவன் திறந்த கண்களுடன் வானத்தைப் பார்த்தபடி தூக்கமில்லாமல் கிடந்தான்.

​குழந்தைகள் இப்போதெல்லாம்.  விசித்திரமாகப் பேச ஆரம்பித்தார்கள். அவன் பிள்ளை மாரிமுத்து ஒரு நாள் திண்ணையில், தனியாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தான்.

 “ஆமா பாட்டி … நீ இப்ப வர வேண்டாம்… அம்மா பார்த்தா திட்டுவாங்க…” என்று கிசுகிசுத்தான்.

 சின்னம்மா அதைக் கேட்டு, “யாருகிட்டடா பேசுற?” என்று கேட்டாள்.

​மாரிமுத்து திரும்பிப் பார்த்தான். அவன் கண்களில் பயமில்லை. ஒருவித வெறுமை இருந்தது. “பாட்டி கிட்ட,” என்றான்.

​சின்னம்மாவின் உடம்பு நடுங்கியது. “பாட்டி செத்துப் போயிட்டாங்கடா” என்றாள்.

​மாரிமுத்து தலையை ஆட்டினான். “இல்ல… இங்கதான் இருக்காங்க… மண் வாசனை நல்லா இருக்குன்னு சொன்னாங்க… வெத்தலை இடிச்சுத் தான்னு கேட்டாங்க ” என்றான்.

​செல்லியோ  இன்னும் பயங்கரமாக இருந்தாள். அவள் தூக்கத்தில் தனக்குத் தானே  தாலாட்டுப் பாடுவாள். ஆனால், அது அவளுடைய மெல்லிய குழந்தைக் குரல் இல்லை. ஆழமான, வயதான, அழுகை தேங்கிய குரல்.

​“கண்ணுறங்கு  தாலேலோ… அம்மா வந்து தூளி கட்டுவா… அதுவரை நீ மண்ணுல கண்ணுறங்கு …” என்று பாடுவாள்.

​சின்னம்மா அவளை எழுப்பி, “யாரு பாடுனது?” என்று கேட்டால், செல்லி கண்கள் திறக்காமல், உதடுகளை மட்டும் அசைத்து, “பாட்டி என்னை தூங்க வைக்கிறாங்க,” என்று சொல்லி தன்னைத் தானே தட்டிக்கொண்டு  மறுபடியும் உறங்குவாள்.

​ராமு ஒரு நாள் இரவு துணிந்து முடிவு செய்தான். ஆவது ஆகட்டும் என்று ஒரு கைவிளக்கு ஏற்றி, வீட்டின் மையத்தில் உட்கார்ந்தான். சின்னம்மாவையும் குழந்தைகளையும் திண்ணையில் படுக்க வைத்தான்.

 நள்ளிரவு. ​திடீரென, உள்ளேயிருந்து அடுப்பங்கரையில், ஒரு பாத்திரம் தவறவிட்ட சத்தம் கேட்டது. ராமு ஓடினான். யாருமில்லை. ஆனால், அவன் அணைத்திருந்த அடுப்பின் நெருப்பு, மீண்டும் நீல நிறத்தில் எரிந்து கொண்டிருந்தது.

 அப்போது, படுக்கையறையிலிருந்து ஒரு விசித்திரமான, முனகல் கலந்த குரல் வந்தது.

​“ராமு… என்னடா… பயப்படுறியா? அதுவும் அம்மாவப் பாத்தே பயப்படறியா ” என்றது.   அது அவன் அம்மாவின் குரல்.

​ராமு ஆவேசமாகக் கத்தினான். “யாரு நீ? நீ என் அம்மா இல்ல! என் அம்மாவை விட்டுடு!”

​குரல் சிரித்தது. அந்தக் சிரிப்பு, மண்ணுக்குள்ளிருந்து வருவது போல, உதடுகள் ஒட்டாமல் வந்தது.

 “நான்தாண்டா  உன் அம்மா… நீ சந்தோஷமா வாழறதப் பாக்கத்தானே இங்க இருக்கிறேன் இன்னும்” என்றது.

​அறையின் மூலையில், நிழல், சுவரை விட்டுப் பிரிந்து, உருவம் கொள்ள ஆரம்பித்தது.

மெதுவாக, மங்கலான ஒரு பெண் உருவம். ஆனால், அது அவன் அம்மாவின் உருவம்  போல இல்லை. அம்மாவின் உடல், அதன் மேல் வேறு யாரோ போர்த்தியது போல இருந்தது. கண்கள் மட்டும் கருமையாக, துவாரங்கள் போல, உள்ளே ஒன்றும் இல்லாதபடி இருந்தன. வாய் புன்னகைத்தது. ஆனால், பற்கள் இல்லை. ஈறுகள் மட்டும் ரத்தச் சிவப்பாகத் தெரிந்தன.

​ராமு பயத்தில் நடுங்கினான். “போ… போய்டு… என் அம்மா இப்படி என்னை பயங்காட்ட மாட்டாங்க ” என்றான்.

​உருவம் நகர்ந்து வந்தது. “நான் எங்க போவேன்? இது தானே என் வீடு…இது தானே  என் மண்… உங்கம்மாவும் என் கிட்டத்தான் இருக்காங்க, அவங்களும் அதான் சொன்னாங்க. ” என்ற போது அவன் அவள் அம்மாவின் உருவத்தை மிகத் தெளிவாகப் பார்த்தான்.  அவள் கண்கள்  கொஞ்சம்  சோகத்தில் இருப்பது போல இருந்தது அவனுக்கு.

“நீயும் வந்தா நீ, உங்கப்பா உங்கம்மா, அப்படின்னு எல்லாம்  ஒண்ணா சந்தோஷமா  இருக்கலாம் வரியா?” என்றது.  இம்முறை ஆண் குரல்.   ஒரு வேளை அப்பாவினுடையதோ?

அப்போது ​திடீரென, செல்லி உள்ளே ஓடி வந்தாள். “பாட்டி!” என்று கத்தி, அந்த உருவத்தை அணைக்க, அதன் நிழலுக்குள் புகுந்து கொண்டாள்.

 ராமு அதிர்ந்து, செல்லியை இழுக்க முயன்றான். உடனே மின்சாரம் தாக்கியது போல கையை இழுத்துக் கொண்டான்.  அந்த உருவம் அவனுடைய கையை உதறித் தள்ளிவிட்டு, “இவன் கெடக்கறான்  கெட்ட பையன்! என் செல்லம்,  செல்லி நீ இங்க வா,” என்று கரகரத்த குரலில் சிரித்தது.

 செல்லி அந்த நிழலுக்குள்ளிருந்து திரும்பிப் பார்த்து, “பாட்டி என்னை கட்டிப் பிடிச்சாங்க,” என்று சிரித்தாள்.

 அவள் முகத்தில் இருந்த குழந்தைத் தனமான சிரிப்பு, இப்போது ஒருவித அலாதி  திருப்தியாக மாறியிருந்தது.

அவன் அந்த உருவத்தை மீண்டும் பார்த்தான்.  இப்போது தான்  காணும் அந்த உருவம்  திருமணத்துக்கு முன் தன்னால் கொல்லப்பட்ட ராகேஸ்வரி என்பதை அவன் உணர்ந்தான். 

அது எதேச்சையாகத்தான் நடந்தது என்பான் அவன்.   இருவரும் காதலித்தார்கள்.  காட்டுக்குள் திரிந்தார்கள்.  நமக்கு  கல்யாணம் என்றான்.  அனுமதித்தாள்.  கர்ப்பம் எனறாள். இவன் ஒதுங்கினான்.  ஊரில் தெரிந்துவிட ஒப்புக்கொண்டான்.

இருவரும் ஊர் கிணற்றின் அருகே பேசிக் கொண்டு வந்த போது, அந்த தரைக்கிணற்றில் அவள் கால் தவறி விழுவாள் என அவன் எதிர் பார்த்தானா? இல்லைதான், ஆனால் அவளைக் காப்பாற்ற எந்த பிரயத்தனமும் செய்யாமல்.அங்கிருந்து ஓடினான்.  போதுமான “கொஞ்ச” நேரம் கழித்தே ஊரில் விவரம் சொன்னான்.. 

“ராகேஸ்வரி.. அது எதேச்சையாதான் நடந்தது.. நான் ஒண்ணும் தள்ளிவிடல..” என்றான் உளறலாக.

உருவம்  கோபமாய் சிரித்தது. 

“என்னைத்தான் ஏமாத்தின, உன் பிள்ளையக் கூடவா ஏமாத்துவ என்றது”

 அங்கே உருவம் குழந்தையாக மாறியது. 

“நான் என்ன தப்பு பண்ணேன்ப்பா” என்றது அந்தக்  குழந்தையின் குரல்.

குழந்தை அவனைப் போலவே இருந்தது.  குழந்தையின்  அந்தக் கண்ணை உற்றுப் பார்த்த ராமு ” பாவி… பாவீ… நான் பாவீ” என்று அலறியபடி மயங்கி  விழுந்தான்.  

​அன்று முதல் ராமு பைத்தியமாக ஆகிப்போனான். ஒரு நாள் இரவு, நடுநிசியில், அவன் வீட்டை விட்டு, கால் கடுக்க எங்கோ வெகுதூரம் ஓடினான், ஓடிப்போய்விட்டான். கிராமத்து மக்கள் அவனைத் தேடினார்கள். காணவில்லை.

​இப்போது, வீட்டில் சின்னம்மாவும் குழந்தைகளும் மட்டும் இருக்கிறார்கள். வீடு ஒருபோதும் தனிமையில் இல்லை. நள்ளிரவுகளில், தாலாட்டுப் பாட்டு கேட்கும். “கண்ணுறங்கு  தாலேலோ… மண்ணுல தூங்கு…” என்று.

சின்னம்மா கணவனை நினைத்து எப்போது வருவான் என   அழுது கொண்டே உறங்குவாள்.

 குழந்தைகள் மட்டும், கைகள் கோர்த்தபடி, சிரித்துக் கொண்டே விளையாடுவார்கள். “பாட்டி, தங்கச்சி பாப்பால்லாம்  விளையாடுறாங்க,” என்பார்கள் .

​அந்தப் பக்கம் போகும் கிராமத்து பெரியவர்கள் சொல்வார்கள், “அது அந்தப் பாட்டியோட வீடு. அவள் இன்னும் அங்கதான் இருக்கா. தான் உசுர  தன் குடும்பத்தோட வெச்சிருக்கா.” என்பார்கள்.

​சில இரவுகளில், இலுப்பை மரத்தடியில் நின்று பார்த்தால், வீட்டு விளக்கு நீல நிறத்தில் எரியும். உள்ளே, ஐந்துக்கும் மேற்பட்ட நிழல்கள் நகரும். ஒரு அம்மா. இரண்டு குழந்தைகள். அப்பா,  ஒரு வயதான பெண்மணியின் நிழல். கூடவே இப்போதெல்லாம்  இன்னொரு நிழல், ஓட முடியாமல் தவிப்பது போலச் சுவரின் ஒரு மூலையில் நீண்டு கிடக்கும்.

​ராமு இன்னும் ஊர்  திரும்பவில்லை. ஆனால், சில இரவுகளில், வீட்டுக்குள் ஆழமான, பயந்த ஒரு ஆணின் குரல் கேட்கும்.

“அம்மா…”

அங்கிருந்தும் அதற்கு  ​பதில் வரும்.

“வாடா ராமு… இதுதான் உன் வீடு… இந்த மண்ணுக்குள்ள வா…”

Author

You may also like

Leave a Comment