Home கட்டுரைMRI பாதுகாப்புக் குறிப்புகள்

MRI பாதுகாப்புக் குறிப்புகள்

by Farooq Abdullah
0 comments

எம் ஆர் ஐ ஸ்கேன் செய்யும் அறைக்குள் நுழைந்த நபர் ஒருவர் அந்த இயந்திரத்தால் அதிவேகமாக ஈர்க்கப்பட்டு,விபத்தின் தாக்கத்தால் மரணமடைந்திருக்கிறார்..

அன்னாரை இழந்து வாடும் அவருடைய மனைவிக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்து இந்த விழிப்புணர்வுக் கட்டுரையை ஆரம்பம் செய்கிறேன்.

சம்பவம் நிகழ்ந்திருப்பது அமெரிக்காவில் என்றாலும் நவீன மருத்துவ முறை சிகிச்சை வழங்கும் பெரிய மருத்துவமனைகள் அனைத்திலும் தற்போது எம் ஆர் ஐ ஸ்கேன் செய்யும் வசதி உள்ளது.

நமக்கோ நமது உறவினர்களுக்கோ ஸ்கேன் செய்து பார்க்கும் தேவை என்பது எப்போதும் வரக்கூடும் என்பதால் நிச்சயம் எம் ஆர் ஐ குறித்த விழிப்புணர்வு நமக்கு அத்தியாவசியமாகிறது.

முதலில் எம்.ஆர்.ஐ என்றால் என்ன?
அது இயங்கும் தத்துவம் குறித்து அறிந்தால் நாம் அந்த ஸ்கேன் செய்யும் அறைக்குள் செல்லுமுன் எடுத்துக் கொள்ள வேண்டிய எச்சரிக்கை குறித்து புரிந்து கொள்ள முடியும்.

எம் ஆர் ஐ என்றால் மேக்னெட்டிக் ரெசோனன்ஸ் இமேஜிங் என்று பொருள். MRI – MAGNETIC RESONANCE IMAGING. அதாவது காந்தப் புலத்தில் அதிர்வை உண்டாக்கி அதன் வழியாக படம் பிடித்தல் என்பதாகும்.

எம் ஆர் ஐ இயந்திரமே  ஒரு அதிசக்தி வாய்ந்த காந்தமாகும். மின்சாரம் இந்த இயந்திரத்தில் பாய்ச்சப்படும் போது அதி கடத்தல் காந்தமாக உருமாற்றம் பெறுகிறது. மனித உடலில் உள்ள அனைத்து செல்களிலும் நீர் இருக்கிறது.

நீர் என்பது இரண்டு ஹைட்ரஜனும் ஒரு ஆக்சிஜனும் இணைந்து உருவாக்கும் வெற்றிக் கூட்டணி என்பது நாம் அனைவரும் கற்ற பால பாடமாகும். எம்.ஆர்.ஐ இயந்திரத்தின்  காந்தப் புலத்துக்குள் மனித உடல் படுத்த வாக்கில் காந்த புலத்துக்கு பக்கவாட்டில் நுழையும் போது,

நமது உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லுக்குள் இருக்கும் நீர் மூலக்கூறில் உள்ள ஹைட்ரஜன் அணுவில் உள்ள ப்ரோடான்கள் அனைத்தும் எம் ஆர் ஐ இயந்திரத்தின் காந்தப் புலத்துடன் ஒன்றுபட்டும் வரிசைப்பட்டும் இருக்கும்.

இப்போது எம் ஆர் ஐ இயக்குநர் ,ரேடியோ அலைகளை குறிப்பிட்ட இடைவெளியில் உடல் மீது பாயச் செய்வார்.

இவ்வாறு மின்காந்த விசை பெற்ற ரேடியோ  அலைகள் ஊடுறுவும் போது, ஹைட்ரஜன் அணுவில் உள்ள ப்ரோடான்கள் இந்த அலைகள் மூலம் சக்தியைப் பெற்று தனது முந்தைய சுழலும் நிலையில் இருந்து அடுத்த சுழலும் நிலைக்கு சற்று முன்னேறிச் செல்லும்.

ரேடியோ  அலை பாய்ச்சுவது நிறுத்தப்படும் போது, தான் உள்வாங்கிய சக்தியை வெளியிட்டு விட்டு மீண்டும் பழைய மாதிரி எம்.ஆர்.ஐ காந்தத்தின் காந்தப் புலத்துடன் ஓர்மையில்  ஓரணியில் நிற்க பழைய நிலைக்குத் திரும்பும்.

இவ்வாறு பழைய நிலைக்குத் திரும்ப அந்த ப்ரோடான்கள் வெளியிட்ட சக்தியைக் கொண்டும் ஏற்கனவே இருந்த பழைய நிலையில் அதற்கு இருந்து சக்தியையும் முன்வைத்து கணிணியானது நமது உடலின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை படமாக ஆக்கி நமது திரையில் கொண்டு வரும்.

இதன் வழியாக சிறுநீரகம், கல்லீரல், குடல் , நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள்,
தசை
ஜவ்வு
மூளை ஆகியவற்றில் உள்ள மாற்றங்களைத் துல்லியமாகக் காண முடிகிறது

இதுவே எம் ஆர் ஐ தத்துவம்.

எம்.ஆர்.ஐ இயந்திரம் என்பது ஒவ்வொரு ஸ்கேன் செய்யும் போதும் ஆஃப் செய்து ஆன் செய்யும் இயந்திர வகை அல்ல.

காரணம் –
எம் ஆர் ஐ இயந்திரம் மிகக் குறைவான வெப்பத்தில் இயங்கக் கூடிய அதி கடத்தல் மின் காந்தமாகும். இத்தனை அதி திறன் கொண்ட காந்தப் புலத்தை உருவாக்க குறைந்த வெப்ப நிலை அவசியமாகிறது. இதனால் எம் ஆர் ஐ இயந்திரத்தின் காந்தம் – திரவ ஹீலியத்தால் சூழப்பட்டிருக்கும்.

ஹீலியம் திரவ நிலையிலேயே இருப்பதற்கு எம் ஆர் ஐ இயந்திரம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

அதை ஆஃப் செய்தாலோ  அல்லது திடீரென அது ஆஃப் ஆனாலோ திரவ ஹீலியம் – வாயு நிலையை அடையும். அப்போது அந்த அறைக்குள் வாயு நிலை ஹீலியம் கசியலாம்.  இது அறைக்குள் இருப்பவர்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தக்கூடும்.

எம் ஆர் ஐ இயந்திரமானது குறைவான மின் உபயோகத்தில் இயங்கும் ஆற்றல் கொண்டது. ஆனால் அதை அடிக்கடி ஆஃப் செய்து ஆன் செய்யும் போது மின் தேவை அதிகரிக்கும்.

மேற்கூறிய காரணங்களால், நோயாளிகளுக்கு ஸ்கேன் செய்யப்படும் போதும் சரி நோயாளிகள் உள்ளே இல்லாத நிலையிலும் சரி எப்போதும் எம் ஆர் ஐ இயந்திரம் “ரெடி டு டேக்” நிலையில் தான் இருக்கும்.

எனவே எம் ஆர் ஐ அறைக்குள் இரும்பு , ஸ்டீல் உள்ளிட்ட காந்தத்தால் ஈர்க்கப்படக்கூடிய சாதனங்களுடன் நுழைவது பேராபத்தை வரவழைக்கும் செயலாகும்.

முதல் ரூல்ஸ்
எம் ஆர் ஐ அறைக்குள் அந்த அறையின் இயக்குநரின் அனுமதியின்றி உள்ளே நுழைதல் கூடாது.

இரண்டாவது ரூல்ஸ்
அப்படி நோயாளியாக உள்ளே நுழைய வேண்டுமெனில்  கட்டாயம் தங்கள் உடலில் ஆபரணங்கள், ஹேர் க்ளிப், ஹேர் பின் உள்ளிட்ட எந்த காந்தத்தால் ஈர்க்கப்படும்  பொருளும் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்த பின் நுழைய வேண்டும்.

மூன்றாவது ரூல்ஸ்
மருத்துவ ரீதியாக பேஸ் மேக்கர்/ இதய வால்வு உள்ளிட்ட இயந்திரங்கள் / உபகரணங்கள் உங்களுக்கு பொருத்தப்பட்டிருக்குமானால்
தாங்கள் அது குறித்து முன்கூட்டியே தெரிவித்து ஸ்கேன் அறைக்குள் நுழையும் அனுமதி பெற்ற பிறகே உள்ளே நுழைய வேண்டும். உங்களது உடலில் உள்ள உபகரணம் எம் ஆர் ஐ பாதுகாப்பானதா என்பதை அறிய mrisafety.com சென்று உபகரணம் குறித்த தயாரிப்பு தகவல்களைக் கொடுத்து பயன்பெறலாம்.

இவையெல்லாம் எம் ஆர் ஐ ஸ்கேன் செய்யுமுன் நாம் கற்க வேண்டிய முக்கியமான பாலபாடங்கள்.

காந்தத்தின் புலத்தின் வலிமை குறித் கணக்கீடு  “டெஸ்லா” கொண்டு கூறப்படுகிறது.

பொதுவாக எம் ஆர் ஐ எடுக்க 0.5 ( குறைவான காந்தப்புலம்) முதல் 3.0 ( அதி காந்தப் புலம்) வரை கொண்ட இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன.

இதில் பொதுவாக பெரும்பான்மையான இடங்களில் 1.5 டெஸ்லா இயந்திரங்கள் புழக்கத்தில் உள்ளன. இவை நமது பூமியின் காந்தப் புலத்தைக் காட்டிலும் 21,000 மடங்கு வலிமையானவை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய காந்தப் புலத்துக்குள் சாதாரண காகிதம் கோர்க்கும் க்ளிப்போ, அல்லது ஹேர் பின் உள்ளே போனாலும் உடனடியாக அவை “ஏவுகணைகள்” போன்ற வேகத்தில் ஈர்க்கப்படும். சுமார் ஒரு மணிநேரத்திற்கு  65  கிலோமீட்டர் வேகத்தில் ஈர்க்கப்படும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

தற்காலத்தில் வடிவமைக்கப்படும் நோயாளிகளை கொண்டு செல்லும் ஸ்ட்ரெட்சர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஆகியவை இரும்பு , ஸ்டீல் அல்லாத காந்தத்தால் ஈர்க்கப்படாத உலோகங்களால் செய்யப்படுகின்றன.

தற்காலத்தில் செய்யப்படும் பேஸ் மேக்கர்கள்/ இதய வால்வுகள் அனைத்தும் எம் ஆர் ஐ இயந்திரத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. எனினும் கட்டாயம் தங்களது உடலுக்குள் மருத்துவ உபகரணங்கள்/ இயந்திரங்கள் இருப்பின் வெளிப்படுத்தி அதற்குரிய எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த பின்னரே எம் ஆர் ஐ  அறைக்குள் நுழைய வேண்டும்.

2 டெஸ்லா அளவுள்ள எம் ஆர் ஐ இயந்திரங்கள் வரை செய்யப்பட்ட ஆய்வுகளில் அவற்றால் மனிதர்களின் செல்களுக்கு எந்த பாதகமும் விளைவிக்க இயலவில்லை. இவற்றால் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கவில்லை.

தற்காலத்தில் குறைவான டெஸ்லா அளவுகள் எம் ஆர் ஐ இயந்திரங்கள் பரவலாக்கம் அடையத் தொடங்கியுள்ளன.

எம் ஆர் ஐ என்பது நவீன மருத்துவத் துறையில் முக்கியமான அங்கமாக விளங்கி வருகிறது. அதன் வழியாக பல நோய்களை அதன் ஆரம்ப நிலையில் கண்டு சிகிச்சை அளிக்க முடிகிறது. பல அறுவை சிகிச்சைகளை துல்லியமாகவும் கனகச்சிதமாகவும் செய்து முடிக்க முடிகிறது. 

தற்போது அமெரிக்காவில் நடந்த நிகழ்வுக்கு வருவோம்..

மத்திய வயது மனைவி கால் மூட்டு பகுதிக்கு எம் ஆர் ஐ எடுக்க உள்ளே சென்று ஸ்கேன் செய்யப்பட்டு இருக்கிறார். .

பிறகு ஸ்கேன் படுக்கையில் இருந்து கீழிறங்க தனது 61 வயது கணவரை உள்ளே அழைக்கக் கூறியிருக்கிறார்.

ஸ்கேன் எடுத்த நபர் வெளியே சென்று அன்னாரது கணவரை உள்ளே செல்லக் கூறியிருக்கிறார்.

ஆனால் ஸ்கேன் எடுத்த நபரும்
கணவரும் ஒன்றைக் கருத்தில் கொள்ளவில்லை.

ஸ்கேன் எடுத்த நபர் – உள்ளே செல்லும் நபரிடம் இரும்புப் பொருட்கள் இல்லை என்பதை உறுதி செய்திருக்க வேண்டும்.

உள்ளே சென்ற நபர் – தன்னிடம் இரும்பு உள்ளிட்ட பொருட்கள் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு உள்ளே சென்றிருக்க வேண்டும்.

நிச்சியம் ஸ்கேன் அறைக்கு வெளியே பல பெரிய எச்சரிக்கை ஸ்டிக்கர்கள் ஒட்டியிருக்கும். ஆனால் வயது 60+ என்பதால் கவனிக்காமல் விட்டிருக்கலாம்.

தனது கழுத்து வலிக்காகவோ அல்லது எடை பயிற்சிக்காவோ தனது கழுத்தில் 9 கிலோ எடை கொண்ட இரும்புச் சங்கிலியை அவர் அணிந்திருந்திருக்கிறார்.

அந்த சங்கிலியோடு உள்ளே சென்றதால் சங்கிலி வேகமாக எம் ஆர் ஐ இயந்திரத்தால் ஈர்க்கப்பட வேகமாக இயந்திரத்தில் மோதியதால் அவர் இறந்திருக்கலாம்.

இந்த சம்பவத்தில் நமக்கும் படிப்பினை உண்டு சொந்தங்களே…

எம் ஆர் ஐ இயந்திரங்கள் மீதோ, எம் ஆர் ஐ தொழில்நுட்பம் மீதோ, பிழையில்லை.

எம் ஆர் ஐ இயந்திரங்கள் நமக்கு  நன்மை செய்பவை. நாள்தோறும் நன்மை செய்து வருபவை.

எனினும் அவற்றிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் அறிந்து நடந்து கொண்டால் எல்லாம் சுகமே…

Author

You may also like

Leave a Comment