மருத்துவர் பக்கம் -14: டெக்ஸ்ட் நெக்(Text neck) ஒரு மருத்துவ எச்சரிக்கை

சமீபத்தில் கிளினிக்கில், பணிமூப்பு வயதை நெருங்கும் ஆசிரியை ஒருவர் என்னைச் சந்தித்தார். அவருக்குப் பிரச்சனை “அடிக்கடி தலைசுற்றல்” வருவது.

பொதுவாக, தலைசுற்றல் அதிலும் மத்திய வயதுக்கு மேல் ஏற்படுமானால் முதலில் உயர் ரத்த அழுத்தம் இருக்கிறதா? என்பதைப் பரிசோதிக்க வேண்டும். அவரது ரத்த அழுத்தம் சரியாகவே இருந்தது.

அதற்கடுத்தபடியாக, தலைசுற்றல் எப்போதெல்லாம் ஏற்படுகிறது? என்பது குறித்துக் கேட்கப்பட்டபோது கழுத்தைச் சில குறிப்பிட்ட வகைகளில் வைக்கும் போது தலைசுற்றல் அதிகமாகிறது என்றார். அவரது கழுத்துப் பகுதிக்கு பின்புறம் உள்ள தசைகள் இறுக்கமாகவும், சற்று வீங்கியும், பின் நோக்கி வளைந்தும் காணப்பட்டன. அவருக்கு வந்திருப்பது “டெக்ஸ்ட் நெக்” எனும் பிரச்சனையாகும்.

தலையை முன்னோக்கிக் குனிந்து நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தால் கழுத்துப் பகுதித் தண்டுவட எலும்புகள், ஜவ்வுகள், கழுத்தைத் தாங்கிப்பிடிக்கும் தோள்பட்டைத் தசைகள் போன்றவை தொடர்ந்து தேய்மானமும் அழற்சியையும் சந்திக்கும். ஆசிரியையான அவர் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் பாடப் புத்தகங்கள், மற்றும் பரீட்சைத் தாள்களைத் திருத்த தலையை முன்நோக்கி வளைத்துக் குனிந்து பணிபுரிந்தமையால், அவரது கழுத்துப் பகுதித் தண்டுவட எலும்பு தேய்மானம் உள்ளாகி, ஜவ்வு விலகல் நடந்து தண்டு வட நரம்பு மற்றும் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அழுத்தி சீர் குலைக்கும் அளவுக்குச் சென்றுள்ளது.

இதன் விளைவாக, கழுத்தை ஒரு சில நிலைகளில் தொடர்ந்து வைக்கும் போது மூளைக்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டத்தில் குறைபாடு ஏற்பட்டு, தலைசுற்றல் வருகிறது என்பதைப் புரிய வைத்தேன். அவருக்குக் கழுத்தை முன்பக்கமாக, தலையை ரொம்ப அதிகமாகத் தொங்கப்போட்டு நோட் புக், ஃபோன் என்று எதைப் பார்த்தாலும் கழுத்துக்குப் பிரச்சனை என்பதை எடுத்துக் கூறினேன்.

வெறுமனே நமது தலையின் எடை ஐந்து கிலோ ஆகும். இந்த எடையானது நமது கழுத்துப் பகுதியை நேராக வைத்திருந்தால் நமது தண்டு வட எலும்புகள் அவற்றைத் தாங்கிக் கொள்ளும். இதனால் கழுத்தைத் தாங்கும் தோள்பட்டைத் தசைகளுக்கோ, பின்னங்கழுத்துத் தசைகளுக்கோ பெரிய பாரம் இராது. அதுவே, முன்பக்கமாக 15 டிகிரி தலை குனிந்தால் ஐந்து கிலோ தலையே 12.5 கிலோ பாரமாக நமது கழுத்துப் பகுதித் தண்டுவட எலும்புகளில் சேரும். இன்னும் 30 டிகிரி கோணத்தில் குனிந்தால் 18 கிலோ பாரத்தை ஏற்றியது போல ஆகிவிடும். 45 டிகிரி குனிதலுக்கு 22 கிலோ பாரம், 60 டிகிரி குனிதல் (இதுதான் பெரும்பான்மையினர் செய்வது)- 27 கிலோ பாரத்தைக் கழுத்தில் ஏற்றிய விளைவைத் தரும்.

இப்போது யோசித்துப் பாருங்கள், ஒரு நாள் முழுவதும் லேப்டாப் முன், டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் முன், கையில் மொபைல் வைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தபிறகு, அல்லது நூல்களை வாசித்த பிறகு, தொடர்ந்து புத்தகங்களைத் திருத்திய பிறகு, கழுத்தின் பின் பகுதி, தலையின் பின்புறம் சேதமடைவது, தோளில் கூன் விழுவது ஆகியவை ஏற்படும்.

இந்த நிலையை நாம் வருடக்கணக்கில் தொடர்ந்து கொண்டே இருந்தால், கழுத்து எலும்புகள் தேய்மானம் அடையும். கழுத்துத் தண்டுவட எலும்புகளுக்கு இடையே உள்ள ஜவ்வு விலகல் நடந்து தண்டுவட நரம்பை அழுத்தக் கூடும். இதனால் கழுத்துப் பகுதியில் இருந்து வலியானது ஒரு பக்கக் கை கால் வழியாக மின்சாரம் பாய்வது போன்ற வலியை உருவாக்கும். இது தண்டுவட நரம்பு அழுத்தத்தால் ஏற்படும் பரவும் நரம்பு வலி எனப்படுகிறது. இன்னும் மூளைக்குச் செல்லும் ரத்த நாளம் இத்தகைய குனிதலால் அழுத்தப்பட்டு, தலைசுற்றல் ஏற்படும் வாய்ப்பு வருகிறது.

இந்த டெக்ஸ்ட் நெக் சிண்ட்ரோம் இருப்பவர்களுக்கு, நுரையீரலின் கொள்ளளவும் குறைகிறது. எனவே தயவு கூர்ந்து ஐந்து கிலோ எடை கொண்ட தலையை, சில கிராம் எடை கொண்ட மொபைல் போனுக்கு அருகில் கொண்டு செல்லாமல் மொபைல் போனைத் தலைக்கு அருகில் கொண்டு சென்று பார்க்க வேண்டும். அதாவது, நமது கண்ணின் பார்வைக்கு நேர்க்கோட்டில் செல்போன் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இயன்றவரை அவ்வப்போது ப்ரேக் எடுக்க வேண்டும்.

கழுத்தை நேராக வைத்துக் கொண்டு ஒரு சிறுநடை போட்டால் கூட தசைகள் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும். கீழே குனிந்து எதையும் அதிக நேரம் பார்த்துக் கொண்டிருப்பதைத் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அடுத்து படிக்கவோ, பணிபுரியவோ, நாற்காலியில் அமரும் போது சரியாக முறையாக அமருகிறோமா.. என்பதை உறுதி செய்ய வேண்டும். நாற்காலியில் அமரும்போது, நமது முதுகுப்பகுதி முதல் குதம் வரை நாற்காலியின் பின் பக்கத்தில் சரியாகத் தொடுமாறு அமர வேண்டும்.

இங்கு நாம் பலரும் அவ்வாறு அமருவதில்லை. நமது குதப்பகுதியை சற்று முன் பக்கமாகத் தள்ளி வைத்துக் கொண்டு முதுகைச் சாய்க்கிறோம். இது காலப்போக்கில் கழுத்துப் பகுதியில் சிக்கலை உருவாக்கும். கூன் விழ வைக்கும். தீவிரமான டெக்ஸ்ட் நெக் பிரச்சனை இருப்பவர்கள், எலும்பியல் மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் இயன்முறை சிகிச்சை நிபுணர்கள் உதவியை நாட வேண்டும். எனினும், பாதுகாப்பற்ற முறையில் மசாஜ் செய்வது / நெட்டி எடுப்பது ஆகியவற்றைச் செய்தால் கழுத்து எலும்பு நொறுங்கிப் போய் கழுத்துத் தண்டுவட நரம்பு அறுபட்டு மரணம் சம்பவிக்கலாம் என்பதையும் கவனித்தில் கொள்ள வேண்டும். கவனத்தில் கொள்க.

தலைசுற்றலுக்குத் தலைகுனிதலும் காரணமாக இருக்கலாம்.

Author

Related posts

அசுரவதம் பாகம் இரண்டு: (அத்தியாயம் – 2: மலைக்கோட்டை)

உப்புக் காற்று

தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 5 – மொழியாக்கம்