Home தொடர்மருத்துவர் பக்கம் -18: HbA1c விரிவான பார்வை 

மருத்துவர் பக்கம் -18: HbA1c விரிவான பார்வை 

by Farooq Abdullah
0 comments

கடந்த மூன்று மாத காலத்தில், ரத்தக் குளுக்கோஸ் அளவுகள் எவ்வாறு இருந்தன என்பதை அறிய உதவும் முக்கிய பரிசோதனை. நீரிழிவுக் கட்டுப்பாட்டை அறிவதற்கு ஒரு சிறந்த பரிசோதனையாக (GOLD STANDARD) இன்றும் முன்நிற்பது இந்தப் பரிசோதனை என்றால் அது மிகையாகாது.

HbA1C எப்படி அளவீடு செய்யப்படுகிறது?

நமது ரத்தத்தில் சிவப்பணுக்கள் 90 முதல் 120 நாட்கள் உயிர்வாழ்கின்றன. இந்தச் சிவப்பணுக்களுக்கு அதன் சிவப்பு நிறத்தை வழங்குவது ஹீமோகுளோபின் எனும் புரதம் ஆகும்.

ஹீமோகுளோபின் = ஹீம் ( இரும்பு) + குளோபின்( புரதம்)

மூளைக்கு ஆக்சிஜன் தேவை. ஆக்சிஜன் ஒரு வாயு. அதை ரத்தம் எனும் திரவத்தில் அமிழ்த்த முடியாதுதானே… அதற்காகவே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட விஷயம்தான் “ஹீமோகுளோபின்” (HEMOGLOBIN) ஆகும். ஹீமோகுளோபினில் உள்ள இரும்பு, ஆக்சிஜனை ஒன்றிணைவு செய்து மூளைக்கும் இதர செல்களுக்கும் வழங்குகிறது.

ஹீமோகுளோபின் சரியான அளவில் இருப்பதற்கு நம் ரத்தத்தில் இரும்புச்சத்தும் புரதச்சத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த ஹீமோகுளோபினின் ஒரு குறிப்பிட்ட சதவீகிதம் – ரத்தக் குளுக்கோஸுடன் வினை ஏற்படுத்தி HbA1c உருவாகிறது. இதை GLYCOSYLATED HEMOGLOBIN என்கிறோம்.

இந்த அளவு:

  • 5.6%-க்குக் கீழ் இருப்பது நார்மல்.
  • 5.6-6.5% என்பது நீரிழிவிற்கு முந்தைய நிலை.
  • 6.5%-க்கு மேல் என்றால் நீரிழிவு என்று பொருள்.

இந்த HbA1c என்பதை அளக்கும்போது கடந்த மூன்று மாதங்களாக ஒருவரது ரத்தத்தில் எவ்வளவு குளுக்கோஸ் சராசரியாக இருந்தது என்பதை அறிய முடியும். இந்த ஹீமோகுளோபின் உருண்டை வடிவில் இருப்பதே நார்மல். அதே சமயம், பிறவி சார்ந்த மரபணுக் குறைபாடுகள் காரணமாக ஹீமோகுளோபின் அதன் சரியான வடிவத்தில் இராது. இதை “ஹீமோகுளோபினோபதிகள்” (HEMOGLOBINOPATHIES) என்று அழைக்கிறோம்.

  • சிக்கிள் செல் நோய் (கதிரரிவாள் போன்ற வடிவத்தில் பிறை நிலவு போல இருக்கும்).
  • தலாசீமியா.
  • சிவப்பணுக்கள் சிதைவினால் உண்டாகும் ரத்த சோகை (ஹீமோலைசிஸ்).

மேற்கூறிய நோய்களால், சிவப்பணுக்கள் / ஹீமோகுளோபின் சரியான அளவில் / சரியான வடிவத்தில் இல்லாத காரணத்தால், HbA1c கண்டறியப்படும்போது நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும். இது ஏற்கனவே மருத்துவர்கள் அறிந்த ஒன்றுதான்.

இரும்புச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படும் ரத்த சோகையில் சிவப்பணுக்கள் அளவில் சிறிதாக இருக்கும். ஹீமோகுளோபினும் அளவில் குறைவாக இருக்கும். எனவே, ஒருவரின் ரத்தக் குளுக்கோஸ், குறைவான இடத்தில் (சிவப்பணுக்கள்) அதிக அடர்த்தியில் இணைந்திருக்கும். எனவே, இரும்புச்சத்துக் குறைபாட்டு ரத்த சோகையில், அவருக்கு HbA1C அதிகமாகக் காட்டும்.

சாதாரண ரத்த அளவு:

  • ஆண்களுக்கு நார்மல் ஹீமோகுளோபின் – 14 g/dl
  • பெண்களுக்கு நார்மல் ஹீமோகுளோபின் – 12 g/dl

என்றால் அதிலிருந்து குறைபாடு இருப்பவர்களுக்கு ஒவ்வொரு கிராம் ஹீமோகுளோபின் குறைபாட்டிற்கும் 0.1 முதல் 0.4% கூடும் வாய்ப்பு உள்ளது. சாதாரண ரத்த சோகையில் (Mild anemia) HbA1c-இல் பெரிய மாற்றங்கள் இருப்பதில்லை. மிதமான மற்றும் தீவிர ரத்த சோகையில் HbA1c கூட்டிக் காட்டுவது இயல்பு.

இதுவே, ஹீமோகுளோபின் உருவாக்கத்தில் ஏற்படும் மரபணு சார்ந்த மாற்றங்கள் மற்றும் சிவப்பணுச் சிதைவு சார்ந்த ரத்த சோகைகளில், சிவப்பணுக்களின் சிதைவு காரணமாக, HbA1c குறைத்துக் காட்டும்.

இவையன்றி:

  • கர்ப்ப காலத்தில், சிவப்பணுக்கள் அதிகமாக உண்டாகும் பாலிசைத்தீமியா ஆகிய நிலைகளில் HbA1c கூட்டிக் காட்டும்.
  • சிறுநீரக நோய் இருப்பவர்களுக்கு, G6PD நொதிக் குறைபாடு இருப்பவர்களுக்கு, முதியவர்களுக்கு, வைட்டமின் சி அதிகமாக உட்கொள்பவர்களுக்கு, தீவிர கல்லீரல் பாதிப்பு இருப்பவர்களுக்கு, உடல்பருமன் மிக அதிகமாக இருப்பவர்களுக்கு அவர்களது HbA1c-ஐ விடக் குறைத்துக் காட்டும்.

இவையனைத்தும் மருத்துவர்கள் தங்களது மருத்துவப் படிப்பில் பயின்று தேர்ச்சி பெறுகிறார்கள். இதற்குச் சரிசெய்யும் முறையும் உண்டு.

உதாரணம் (இரும்புச்சத்துக் குறைபாடு):

ஒரு பெண்ணிற்கு hemoglobin – 10g/dl, HbA1c – 9% என்று வந்தால், பெண்களுக்கான நார்மல் Hb-இல் இருந்து 2 g குறைந்துள்ளது என்றால், கிராமிற்கு 0.4% என்று கணக்கில் கொண்டு 0.8% குறைத்துக்கொள்ள வேண்டும். அவரது சரியான HbA1c 8.2% ஆகும்.

உதாரணம் (அணுச்சிதைவு நோய்):

ஒருவருக்கு அணுச்சிதைவு சார்ந்த நோய் இருப்பவர்களுக்கு HbA1c தவிர்த்துவிட்டு ஃபிரக்டோசமின் பரிசோதனை செய்யலாம். அல்லது அவர்களுக்கான கரெக்ஷன் கண்டறியப் பின்வரும் விஷயத்தைப் பின்பற்றலாம். தலாசீமியா இருக்கும் நீரிழிவு நோயருக்கு Hb – 7 g/dl என்றால் அவரது HbA1c 5% என்று வந்தால் கீழ்க்காணும் ஃபார்முலா உதவும்:

சரியான Hba1c = நோயருக்கு வந்த HbA1c + ( 15 – Hb in g/dl) × 0.4
= 5 + ( 15 – 7) × 0.4
= 5 + (8×0.4)
= 5+ 3.2
= 8.2%
அவரது சரியான Hba1c 8.2% என்று கொள்ளலாம்.

இந்த HbA1c-ஐத் தனியாக அணுகாமல், கூடவே காலை வெறும் வயிற்றில் சுகர் மற்றும் உணவு சாப்பிட்ட பிறகு இரண்டு மணி நேரம் கழித்துச் சுகர் எடுக்கப்படுகிறது. இதன் மூலம் HbA1c ஒருவருக்குக் குறைந்திருந்து, இந்த காலை வெறும் வயிற்று மற்றும் சாப்பிட்ட பின் சுகர் அதிகமாக இருப்பின், அவருக்கு ஹீமோகுளோபின் சார்ந்த மரபணு நோய் இருக்கிறதா என்பதைக் கண்டறியலாம்.

இதனுடன், ஆறு புள்ளி பரிசோதனையும் உள்ளது:

  1. காலை வெறும் வயிற்றில் (Fasting)
  2. காலை உணவுக்குப் பிறகு இரண்டு மணி நேரம் (PPBS)
  3. மதிய உணவுக்கு முன் (PRE LUNCH)
  4. மதிய உணவுக்குப் பிறகு (POST LUNCH)
  5. இரவு உணவுக்கு முன் (PRE DINNER)
  6. இரவு உணவுக்குப் பின் (POST DINNER)

இந்த ஆறு புள்ளி பரிசோதனையை, வாரம் இரண்டு நாட்கள் எடுத்தால் போதும். HbA1c + Fasting + PPBS முடிந்தால் 6 point test (வாரம் இரண்டு நாள் மட்டும்) சேர்க்கும்போது நமக்கு இன்னும் சிறப்பான அளவில் ஒருவரின் சுகர் குறித்து அறிய முடியும்.

தலாசீமியா, சிக்கிள் செல் டிசீஸ் ஆகியன சமூகத்தில் 0.37% மற்றும் 1.17% என்ற அளவிலேயே இருக்கின்றன. இந்த மரபணுக் குறைபாடுகள், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உள்ள பழங்குடியினங்களில் அதிகம் காணப்படுகின்றன. பொதுச் சமூகத்தில் இதன் இருப்பு குறைவு.

G6PD குறைபாடு 63-இல் ஒருவர் கேரியராக இருக்கிறார். சமூகத்தில் சராசரியாக 8.5% பேருக்கு இருக்கிறது. பெரும்பான்மை மக்களுக்கு அவர்களது சிவப்பணுக்களும், ஹீமோகுளோபினும் நல்ல நிலையில் இருப்பதால், நாம் தொடர்ந்து HbA1c பரிசோதனையை அதன் சாதக பாதகங்கள் அறிந்து எடுத்து உபயோகிக்க வேண்டும். எந்தப் பரிசோதனைக்கும் சாதக பாதகமான அம்சங்கள் இருக்கும். அதைப் பகுத்தறிந்து உபயோகிக்கும் திறன் மருத்துவர்களுக்கு உண்டு.

HbA1c-ஐ ஒதுக்க வேண்டியதில்லை. இப்போதுதான் எளியோருக்கும் சிறுகுறு நகரங்களுக்கும் HbA1c சாமானியரும் உபயோகிக்கும் விலையில் கிடைக்கத் துவங்கி இருக்கிறது. இந்தப் பரிசோதனையை High performance Liquid chromatography முறையில் செய்யும்போது பிழைகள் நடப்பது குறைக்கப்படுகிறது. இயன்றவரை அனைத்து லேப்களிலும் இந்த முறையில் HbA1c எடுத்தால் துல்லியமான முடிவுகள் கிடைக்கும். அதை நோக்கி நாம் முன்னேறிக்கொண்டிருக்கிறோம்.

1976-இல் HbA1c கண்டறியப்பட்டது. 2010-க்குப் பிறகே அது நீரிழிவு கண்டறியப்படுதலுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இன்று 2026-இல் பெருநகரங்கள், சிறுநகரங்கள் எனப் பரவலாக எளிமையாகக் கிடைக்கிறது. இது கிராமங்களுக்கும் கிடைக்க வேண்டும். ஏழை எளியோரும் பயன்படுத்தும் பரிசோதனையாக வர வேண்டும். அதன் சாதகங்கள் மற்றும் அதில் இருக்கும் சூட்சுமங்கள் அறிந்து சரியான முறையில் அதைத் தொடர்ந்து உபயோகிப்போம்.

Author

You may also like

Leave a Comment