மருத்துவர் பக்கம் -20: இரத்த நாள அடைப்பு 

இதய ரத்த நாளங்களில் எப்படி அடைப்பு ஏற்படுகிறது?

என்று கேட்டால், அனைவரும் கூறும் பதில் “கொழுப்பு படிந்து இதயத்தின் நாளங்கள் அடைத்துக் கொள்கின்றன” என்பதாகத்தான் இருக்கும்.

ஆனால், இதயத்தின் ரத்த நாளங்கள் மட்டுமன்றி உடலின் அனைத்து ரத்த நாளங்களிலும் தொடர்ந்து பல காலமாக நீடித்து வரும் உள்காயங்களின் (Inflammation) காரணமாகவே இந்த அடைப்புகள் ஏற்படுகின்றன.

நமது உடலின் ரத்த நாளங்களின் உட்புறச் சுவரை “எண்டோதீலியம்” (Endothelium) என்று அழைக்கிறோம். அந்த உட்புறச் சுவரில் சிராய்ப்பு போன்ற காயங்களைத் தொடர்ந்து ஏற்படுத்துவதை “இன்ஃபிளமேஷன்” என்கிறோம்.

எப்படி நமது தோலில் காயம் ஏற்பட்டவுடன், அந்த காயத்தை ஆற்றுவதற்கு ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் மற்றும் காயத்தை ஆற்றும் பொருட்கள் ஒன்றிணைந்து சுயமாகக் காயத்தை ஆற்றுகின்றனவோ, அதேபோல ரத்த நாளங்களின் உள்காயங்கள் ஏற்படும்போதும் அந்த காயத்தை ஆற்றும் முகமாக எல்.டி.எல் (LDL) எனும் கொழுப்புப் புரதம் தன்னிடம் உள்ள கொழுப்பை அந்த காயங்களின் மீது பூசி அதைக் குணமாக்க முயல்கிறது.

ரத்த நாளங்களின் சிராய்ப்பு போன்ற காயங்கள் தட்டணுக்களைத் தூண்டிவிடுகின்றன. அவையும் அந்தக் காயங்கள் மீது பூச்சை ஏற்படுத்துகின்றன. நமது ரத்த நாளங்களில் தொடர் உள்காயங்களை ஏற்படுத்தும் விஷயங்களில் முக்கியமானவை:

  • இன்சுலின் எதிர்ப்பு நிலை (Insulin Resistance): கணையத்தில் சுரக்கப்படும் இன்சுலின் அதன் பணியைச் சரியாகச் செய்யாமல் இருப்பதால், கணையம் அதிகமாக இன்சுலினைச் சுரக்கும். ரத்தத்தில் இன்சுலின் அளவுகள் அதிகமாக இருப்பது உள்காயங்களைத் தூண்டும். நீரிழிவு (Diabetes Mellitus), ரத்தக்கொதிப்பு (Hypertension), உடல் பருமன் (Obesity) போன்றவற்றுக்கு ஆதியும் இந்த இன்சுலின் எதிர்ப்பு நிலையே ஆகும்.
  • குளுக்கோஸ் நச்சுத்தன்மை (Glucotoxicity): ரத்தத்தில் தேவைக்கு அதிகமாக குளுக்கோஸ் இருப்பதும், தேவைக்கு அதிகமான ரத்த அழுத்தம் இருப்பதும் தொடர்ந்து ரத்த நாளங்களின் உட்புறச் சுவர்களில் காயங்களை ஏற்படுத்துபவை.
  • மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை: அதீத மன அழுத்தத்தின் விளைவாலும், சரியான உறக்கமின்மையாலும் ரத்தத்தில் கார்டிசால் (Cortisol) அளவுகள் அதிகமாகவே இருக்கும்போது ரத்த நாளங்களில் உள்காயங்கள் தொடர்ந்து ஏற்படுகின்றன.
  • பழக்கவழக்கங்கள்: புகைப் பழக்கம், மதுப் பழக்கம் போன்றவற்றாலும் இந்த உள்காயங்கள் ஏற்படுகின்றன.
  • தொற்றுகள்: கோவிட் போன்ற வைரஸ் தொற்றுகளின்போது, அந்த வைரஸிற்கு எதிராக நமது உடல் போர் புரியும்போது ரத்த நாளங்களில் உள்காயங்கள் ஏற்படுகின்றன. இவை தவிர, மரபணுக் காரணிகளாலும் உள்காயங்கள் ஏற்படுகின்றன.

சாதாரண நிலையில் நமது உடலில் உண்டாகும் உள்காயங்களை ஆற்றுவதற்கு எல்.டி.எல் கொழுப்புப் புரதத்தில் உள்ள கொலஸ்ட்ரால் உபயோகப்படுகிறது. ஆனால், அதுவே இன்சுலின் எதிர்ப்பு நிலையில் எல்.டி.எல் அளவில் சிறியதாகிவிடுகிறது. ரத்த நாளத்தின் எண்டோதீலியத்திற்குள் இந்தச் சிறிய எல்.டி.எல் ஊடுருவிவிடுகிறது.

ரத்த நாளத்தின் சுவர்களுக்குள் சென்ற இந்தச் சிறிய ஊறு விளைவிக்கும் எல்.டி.எல்லின் விளைவால், ரத்த நாளத்திற்குள் தலையணையில் பஞ்சு திணித்தது போல வீக்கம் ஏற்படுகிறது. கெட்ட சிறிய எல்.டி.எல் கொழுப்பு எனும் “பஞ்சு” அளவுக்கதிகமாகத் திணிக்கப்படும்போது, ஒரு நாள் ரத்த நாளத்தின் உட்புறச் சுவரில் திடீரென வெடிப்பு ஏற்படுகிறது.

இந்த வெடிப்பு ஏற்பட்டவுடன் ரத்தத் தட்டணுக்கள் உடனே தூண்டப்பட்டு ஒன்றிணைந்து அந்த வெடிப்பை அடைக்க வருகின்றன. இதனால் ரத்த நாளத்தின் விட்டம் குறைந்து மாரடைப்பு அல்லது மூளை ரத்த நாள அடைப்பு ஏற்படுகிறது.

நமது ரத்த நாளங்களில் உள்காயங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

  1. இன்சுலின் எதிர்ப்பு நிலை இல்லாத நிலையை அடைய வேண்டும்.
  2. அதிக மாவுச்சத்து உணவு முறையை விடுத்து, குறைந்த மாவுச்சத்து உண்ணும் உணவு முறையைப் பேண வேண்டும்.
  3. நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.
  4. மது, புகை போன்ற தீய பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.
  5. மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும்.
  6. முறையாக உறங்க வேண்டும்.
  7. தினசரி உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
  8. இனிப்பு, எண்ணெயில் பொரித்தவை, பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படும் உணவுகள் மற்றும் குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

நாள்தோறும் ரத்த நாளங்களில் உள்காயங்களை ஏற்படுத்தும் மேற்கூறிய காரணிகளை நிறுத்தாமல், கொழுப்புச் சத்துள்ள உணவுகளை மட்டும் நிறுத்துவதால் எந்தப் பலனும் இல்லை; மாறாக ஆபத்துதான் அதிகரிக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.

Author

Related posts

மாறாததொன்றே மாறாதது

ஒற்றையடிப் பாதை

இனியவன் – 2