உடல் பருமனாக இருப்பது என்பது அழகியல் ரீதியாகவும், அதனுடன் ஆரோக்கிய ரீதியாகவும் பல சிக்கல்களைக் கொண்டு வருகிறது. இதனால் மனிதர்கள் உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை சுமார் 25 கோடி பேர் தேவைக்கும் அதிக எடையுடனோ உடல் பருமனுடனோ வாழ்ந்து வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணங்களாக இருப்பவை – நமது அதிக மாவுச்சத்து உட்கொள்ளும் உணவு முறை, உடல் உழைப்பற்ற வாழ்க்கை, அதனுடன் போதிய உறக்கமின்மையும் மன மற்றும் உடல் சார்ந்த அழுத்தமும் சேர்ந்துகொள்ளும் போது தேவைக்கும் மீறி உடல் எடை போட்டுவிடுகிறது.
இதற்கான தீர்வு தேடி மக்கள் பல்வேறு டயட் முறைகளையும், ஜிம்களுக்குச் சென்று வொர்க் அவுட் செய்வதையும் காண முடிகின்றது. நாளுக்கு நாள் உடல் பருமன் கண்டறியப்படுபவர்கள் அதிகரிக்க அதிகரிக்க, அதனுடன் நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, இதய நோய், சிறுநீரக நோய் என நோயாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் உடல் பருமனை மருத்துவ ரீதியாகக் கட்டுப்படுத்தும், உடல் எடையைக் குறைக்க வைக்கும் சிகிச்சை முறைகளுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. பேரியாட்ரிக் சர்ஜரி எனும் அறுவை சிகிச்சை முறைகள் மூலம் உடல் எடையைக் குறைக்கும் முயற்சிகள் அதிகரித்து வருகின்றன. எனினும் மக்களில் பெரும்பான்மையினர் கத்தியின்றி ரத்தமின்றி காரியத்தைச் சாதிக்கவே விரும்புகின்றனர். அந்த வகையில், உடல் பருமனானவர்களுக்கு வரப்பிரசாதமாக வந்திருக்கும் சிகிச்சை முறை தான் – ஜிஎல்பி-1 ஆர்ஏ (GLP-1 RAs) என்று சுருக்கமாக அழைக்கப்படும் “க்ளூகோகான் லைக் பெப்டைடு-1 ரிசப்ட்டார் அகோனிஸ்ட்” வகை மருந்துகள்.
அப்படி என்ன மாயத்தை இவை செய்கின்றன?
GLP-1 எனும் இந்த க்ளூகோகானை ஒத்த ஹார்மோன் – நமது சிறுகுடலில் இருந்து சுரக்கப்படுகிறது. இந்த ஹார்மோனுடைய வேலைகள்: இன்சுலினைச் சுரக்கச் செய்வது, ரத்த க்ளூகோசைக் கட்டுப்படுத்துவது, சாப்பிட்ட உணவை இரைப்பையில் அதிக நேரம் இருக்கச் செய்வது, பசி உணர்வை மட்டுப்படுத்துவது, சிறுகச் சாப்பிட்டாலும் திருப்தி உணர்வை அதிகப்படுத்துவது.
ஆஹா.. இவைதானே உடல் பருமனாக இருக்கும் நபருக்கு முக்கியத் தேவைகள். அவர் அடிக்கடி சாப்பிடக் கூடாது. அதற்கு அவருக்கு அடிக்கடி பசிக்கக் கூடாது. சிறிய அளவு சாப்பிட்டாலும் பூரண திருப்தி ஏற்பட வேண்டும். இதை ஒரு மருந்து தூண்டினால் அது உடல் பருமனுக்குச் சிறப்பான மருந்தாகத் தேரும் தானே.. அதைத்தான் GLP-1 RA-க்கள் செய்துகொண்டிருக்கின்றன.
2005-ஆம் ஆண்டு எக்சினாட்டைடு (Exenatide) எனும் இந்த வகையின் முதல் மருந்து நீரிழிவு நோய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது. பிறகு இந்த வகை மருந்துகளின் உடல் பருமன் குறைக்கும் ஆற்றல் அறியப்பட்டு, தற்போது லிராக்ளூடைடு (Liraglutide), செமாக்ளூடைடு (Semaglutide), டிர்செபாடைடு (Tirzepatide) எனப் பல மருந்துகள் சந்தைக்கு வந்து சக்கை போடு போடுகின்றன.
இந்த மருந்துகளின் சந்தை நிலவரத்தைக் கூற ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என, சமீபத்தில் மார்ச் 2025-ஆம் ஆண்டு இந்திய சந்தைக்கு ‘மவுன்ஜரோ’ (MOUNJARO) என்ற பெயருடன் வந்த டிர்செபாடைடு மருந்து மார்ச் முதல் மே 2025 வரை ரூபாய் 24 கோடிக்கு வர்த்தகமானது. எனினும் கடந்த ஜூன் மாதம் மட்டும் ரூபாய் 50 கோடிக்கு இதன் விற்பனை உயர்ந்திருக்கிறது என்றால், மாதம் ரூபாய் 14,000 முதல் ரூபாய் 17,500 செலவானாலும் மேல்-நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்கள் இந்த வகை மருந்துகளை அதிகம் நுகரத் துவங்கியிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இதுவன்றி வாய்வழி மாத்திரையாக உட்கொள்ளத்தக்க செமாக்ளூடைடு மாத்திரையின் வணிகம் ஜனவரி 2022-இல் 26 கோடி என்று இருந்தது, தற்போது ரூபாய் 412 கோடிக்கு விற்பனை அதிகரித்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட 15 மடங்கு அசுர வளர்ச்சியைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மேற்படி குறிப்பிடப்பட்டுள்ள செமாக்ளூடைடு மருந்தின் “காப்புரிமைக் காலம் (PATENT)” வருகிற ஜனவரி முதல் மார்ச் 2026 காலத்துக்குள் பெரும்பான்மை நாடுகளில் முடிவடைகிறது. இதன் விளைவாக, உடல் எடை குறைப்பு மருந்துகள் யாவும் ஜெனரிக் மருந்து சந்தைக்குள் நுழையும். இப்போதிலிருந்தே பல பெரிய ஜெனரிக் மருந்து நிறுவனங்கள் பல நூறு கோடி ரூபாய்களை இந்த மருந்துகளின் உற்பத்திக்காக ஒதுக்கிவிட்டன.
இதன் விளைவாக, பல கோடி கீழ்த்தட்டு, நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கும் உடல் எடை குறைப்பு மருந்துகள் சென்று சேரும் என்பதில் நன்மை இருந்தாலும், விலை குறைவாகக் கிடைக்கும் மருந்துகள் அதிகமாகத் துஷ்பிரயோகம் செய்யப்படும் என்பது வரலாறு.
அதாவது, உடல் பருமனைக் குறைக்கும் மருந்துகளை பிஎம்ஐ என்று கூறப்படும் BODY MASS INDEX 30 மற்றும் அதற்கு மேல் இருப்பவர்களுக்கும், BMI 27 மற்றும் அதற்கு மேல் இருப்பவர்களுக்கு அதிக உடல் எடையினால் ஏதேனும் ஒரு பாதிப்பு இருந்தாலும் அவர்களுக்கு மட்டுமே இத்தகைய உடல் பருமன் குறைக்கும் மருந்துகளை வழங்கிட வேண்டும். ஆனால் விலை மலிவாகச் சந்தையில் மாத்திரைகள் கிடைத்தால், அவற்றைச் சாதாரணமாக உடல் எடை குறைப்புக்கு என மருத்துவர்களும் மக்களும் தேவையின்றிப் பயன்படுத்தும் போக்கு அதிகரிக்கக் கூடும். ஆரோக்கியம் சார்ந்த காரணங்களுக்காகவன்றி அழகியல் காரணங்களுக்காக இத்தகைய மருந்துகள் அதிகம் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகலாம்.
இந்த எடை குறைப்பு மாத்திரைகளை மட்டும் மக்கள் நம்பிவிட்டு, இதனுடன் முக்கியமாகக் கடைபிடிக்க வேண்டிய உணவு முறை, உடற்பயிற்சி உள்ளிட்ட வாழ்வியல் விஷயங்களைக் கண்டுகொள்ளாமல் விடுவதற்கு வாய்ப்பு உள்ளது.
உடல் பருமன் கொண்டவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் வரப்பிரசாதமாக இந்த மருந்துகள் இருப்பினும், இவற்றுக்கும் பக்கவிளைவுகள் இல்லாமல் இல்லை. குமட்டல், வாந்தி, வயிற்று உபாதைகள் போன்றவை இந்த மருந்துகளால் ஏற்படும் முக்கியமான பக்கவிளைவுகள்.
இந்த மருந்துகளால் அரிதாக (Rare side effect), கணைய அழற்சி, பித்தப்பை பிரச்சனைகள் ஏற்படலாம். அரிதினும் அரிதாக (Very rare side effect) தைராய்டு சுரப்பி சார்ந்த புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு, ஏற்கனவே இருக்கும் நீரிழிவு சார்ந்த விழிப்படல அழற்சியை இன்னும் தீவிரமாக்கலாம்.
கட்டாயம் இந்த மருந்துகளைக் கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கக் கூடாது. கணைய அழற்சி, பித்தப்பை பிரச்சனை இருப்பவர்கள், தீவிர நெஞ்செரிச்சல் இருப்பவர்களுக்கு வழங்கக் கூடாது. இந்த வகை மருந்துகளை நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் நீரிழிவு நோயாளிகளுக்குக் கண்களில் ‘மாகுலார் சிதைவு’ ஏற்படும் வாய்ப்பு சற்று அதிகமாகக் காணப்படுகிறது. கூடவே இந்த மாத்திரை/மருந்துகளின் பெட்டிகளில், இந்த மருந்துகளால் தற்கொலை எண்ணங்கள் தூண்டப்படலாம் எனும் எச்சரிக்கை வாக்கியங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த எண்ணங்களுக்கும் மருந்துக்கும் நேரடித் தொடர்பு இல்லையென்றாலும் கூட, இந்த மருந்துகளைப் பரிந்துரைக்கும் மருத்துவர்கள், நோயாளிகளின் நடத்தை மற்றும் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன்னும் இந்த மருந்து ஜெனரிக் சந்தைக்கு வரும்போது, பல போலி மருந்துகளும் இதே பெயரில் விற்பனையாகும் வாய்ப்பு அதிகரிக்கும். அது குறித்து அதிகக் கவனம் தேவை. மேலும், மருத்துவர் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் இந்த மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்படக் கூடாது. இதில் கெடுபிடி இல்லாவிடில், எடை குறைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தேவைக்கும் அதிகமான அளவில் மருந்தை உட்கொண்டு ஆபத்துகளை மக்கள் தேடிக்கொள்ளும் வாய்ப்பு அதிகரிக்கும்.
இந்த ஜிஎல்பி-1 ஆர்ஏ-க்களால் உடல் எடை குறைவதுடன்:
- நீரிழிவு கட்டுப்படுகிறது
- ரத்த அழுத்தம் குறைகிறது
- ரத்தக் கொழுப்பு அளவுகள் சற்றுச் சீரடைகின்றன
- கல்லீரல் கொழுப்பு நோய் சற்று குறைகிறது
- இதய / சிறுநீரக நோய்களும் கட்டுப்படுகின்றன
இவ்வாறு பல சாதகங்களும் பாதக அம்சங்களும் நிறைந்துள்ள இந்தச் சிகிச்சை முறை தற்போது பணம் படைத்தோருக்கு மட்டுமானதாக உள்ளது. அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து அனைவருக்குமானதாக மாற உள்ளது.
என்னைப் பொறுத்தவரை உடல் பருமனைக் கட்டுக்குள் வைக்க முக்கியமான நான்கு விஷயங்கள்:
- உணவில் மாவுச்சத்தைக் குறைப்பது – உணவில் இனிப்புச் சுவை கொண்ட அனைத்தையும் நிறுத்துவது
- உடற்பயிற்சி – வாரம் ஐந்து நாட்களாவது ஒரு மணிநேரம் நடைப்பயிற்சி அவசியம்
- உறக்கம் – தினசரி எட்டு மணிநேரம் அவசியம்
- உளநலனைப் பேணல்
மேற்கூறியவற்றைச் சரியாகச் செய்தால் உடல் எடையைச் சிறப்பாகக் குறைக்கலாம். பேலியோ எனும் குறைமாவு வாழ்வியல், தீவிர உடல் பருமனுடன் இருப்பவர்கள் பலரைச் சரியான எடைக்குக் கொண்டு வர உதவியிருக்கிறது என்பதையும் பதிவு செய்கிறேன்.
உடல் பருமனை வெல்வதற்கு வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்கத்தக்க வாழ்வியல் மாற்றங்களைக் கைக்கொள்வதே சிறந்த வழி. எனினும் தீவிர உடல் பருமனுடன் இதய நோய், சிறுநீரக நோய், நீரிழிவு நோய் என்று பாதிக்கப்படுபவர்களுக்கு நிச்சயம் ஜிஎல்பி-1 ஆர்ஏ-க்கள் பலனளிக்கும் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை.
இந்த மருந்துகள் மூலம் உடல் எடை குறையும், எனினும் மருந்துகளை நிறுத்திவிட்டால் மீண்டும் சில மாதங்களில் முன்பை விட எடை கூடும். இதை REBOUND WEIGHT GAIN என்று அழைக்கிறோம். எவ்வளவு காலம் தொடர்ந்து இந்த மருந்துச் சிகிச்சையில் இருக்க முடியும் என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும்.
தீவிர உடல் பருமனுடன் இருப்பவர்களுக்கு இந்த மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டால், இந்த மருந்துகளுடன் டயட் கட்டுப்பாடு + உடற்பயிற்சி ஆகிய வாழ்வியல் மாற்றங்களையும் கையாண்டு அவற்றில் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும். இவ்வாறு உடல் எடை மீண்டும் கூடுதல் என்பது இந்த மருந்துகளுக்கு மட்டுமின்றி, வாழ்வியல் மாற்றங்களான டயட் முறைகள், உடற்பயிற்சி ஆகியவற்றிற்கும் பொருந்தும். எத்தனை காலம் தொடர்ந்து வாழ்வியல் முறைகளைக் கடைபிடிக்கிறோமோ, அவ்வளவு காலமும் நம்மால் இழந்த உடல் எடையைத் தக்கவைக்க முடியும்.