மருத்துவர் பக்கம் – 4: பழங்களும் பாதகங்களும்

This entry is part 4 of 8 in the series மருத்துவர் பக்கம்

சமீபத்தி ஃப்ரூட்டேரியன் டயட் கடைபிடித்து வந்த தம்பி சக்தீஸ்வர் மரணமடைந்த செய்தி நம்மை துயரடையச் செய்துள்ளது.

அன்னாரை இழந்து வாடும் அவர்தம் பெற்றோர் மற்றும் உறவினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைக் கூறிக் கொண்டு இந்த விழிப்புணர்வுப் பதிவைத் தொடர்கிறேன்.

உடல் எடையைக் குறைக்க வேண்டும், ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் நல்லது தான்.

அதாவது தான் சராசரியாக இருக்க வேண்டிய உடல் எடையை விட மேலதிகமாக இருப்பது என்பது நமது உடலில் தேவையின்றி சில முதல் பல வருடங்களாக சேகரிக்கப்பட்ட கொழுப்பின் விளைவாக நேர்ந்ததாகும்.

உடல் எடையைக் குறைக்க பல்வேறு முறைகள் உள்ளன. அவற்றில் பல சாதக பாதக அம்சங்களும் உண்டு.

உடல் எடையைக் குறைக்க எண்ணுபவர்கள் செய்யும் முக்கிய விஷயம் உண்ணும் கலோரி அளவைக் குறைப்பது, உண்ணும் மாவுச்சத்து அளவைக் குறைப்பது, கொஞ்சம் உடல் உழைப்பைக் கூட்டுவது

மேற்கூறிய மூன்று விஷயங்கள் தான் உலகம் முழுவதும் பெரும்பான்மை நபர்களால் கைகொள்ளப்படும் முறை

வேறு எந்த நோயுமின்றி நீங்கள் உடல் எடை குறைகிறீர்கள் என்றால் மேற்கூறிய மூன்றில் இரண்டையாவது நீங்கள் செய்து வருவீர்கள்.

இதில் பலரும் கவனிக்கத் தவறும் விஷயம் யாதெனில் உடலுக்கு முக்கியமான மூன்று பெரும் ஊட்டச்சத்துகள்

  1. மாவுச்சத்து ( Carbohydrates)
  2. கொழுப்புச் சத்து ( Fats)
  3. புரதச்சத்து ( Protein)

ஆகியன.

இவற்றுள் நீங்கள் மாவுசசத்தைக் குறைத்தால் ஆரோக்கியமான கொழுப்புச் சத்தை கட்டாயம் ஓரளவாவது கூட்டியே ஆக வேண்டும்.

உடலின் வளர்ச்சிக்கும், தசைகள் மற்றும் அனைத்து திசுக்களின் புணர்நிர்மானத்திற்கும் உதவும் புரதச்சத்தை எதற்காகவும் ஒருவர் குறைக்க இயலாது.

ஆனால் இங்கு பலரும் மாவுச்சத்தையும் குறைத்து கொழுப்புச்சத்தும் இல்லாமல் புரதசசத்தும் தேவையான உட்கொள்ளாமல் உடல் எடை குறைக்கிறேன் பேர்வழி என்று ஒரு டயட்டை தாங்களாகவே யூட்யூப், வலைதளங்கள் மூலம் நுனிப்புல் மேய்ந்து இறங்குகிறார்கள்.

ஒரு விஷயத்தில் இறங்குமுன் அது குறித்து தெளிந்த விஷய ஞானத்தை அறிந்து இறங்க வேண்டும். அதன் நன்மை தீமைகள் இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்து இறங்கிட வேண்டும்.

இன்னும் உடல் எடை குறையும் போது ஏற்படும் நுண்சத்து தாது உப்பு குறைபாடுகள் ஆகியவற்றை சரி செய்து வர வேண்டும்.

இந்த நிகழ்வில் தம்பி, முழுக்க பழங்களையும் பழச்சாறுகளையும் உணவாக உட்கொண்டு வந்துள்ளார்.

இதில் உள்ள சாதக பாதகம் யாதெனில்

  • ஒட்டுமொத்த மாவுச்சத்து உட்கொள்ளல் குறைவு
  • கலோரி குறைவு
    என்பதால் கட்டாயம் உடல் எடை குறையும்

ஆனால் அது ஆரோக்கியமான எடைக் குறைவு அன்று என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஃப்ரூட்டேரியன் உணவு முறையில் சில வைட்டமின்கள் குறிப்பாக விட்டமின் சி போன்றவறை அதிகமாக கிடைக்கும்.
ஆனால் அவற்றில் பி12 , இரும்புச் சத்து , கால்சியம், கொழுப்பு அமிலங்கள்,விட்டமின் டி மிக மிகக் குறைவு.

இதனால் நரம்பு அழற்சி,
மூளைத் தேய்மானம்,
எலும்பு தேய்மானம்,
ரத்த சோகை,
ஆகிய நோய்கள் உண்டாகக் கூடும்.

பழங்களில் நார்ச்சத்து அதிகம். அதில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. நார்ச்சத்து என்பது நம்மால் செரிமானம் ஆகாத ஒன்றாக இருப்பதால் மலச்சிக்கல் குணமாகும். நமது குடலில் உள்ள பாக்டீரியாக்களால் நொதிப்புக்கு உள்ளாகும் அது நன்மை.

ஆனால் அதுவே அளவுக்கு மிஞ்சிய நார்ச்சத்து என்பது சிலருக்கு அதிகமான நொதித்தலால் குடலில் வாயுவை அதிக அளவு உற்பத்தி செய்து வயிற்று உப்புசத்தை உண்டாக்கலாம்.

பழங்களில் நீர்ச்சத்து அதிகம் என்பதால் பழங்களை உண்பவர்களுக்கு நீர் சத்து குறைவில்லாமல் கிடைக்கும். ஆனால் அதே சமயம் பழங்களில் சர்க்கரை அளவுகள் அதிகமாக இருப்பதால் அளவுக்கு அதிகமாக பழங்களை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்தால்
இந்த க்ளூகோஸை உடல் கிரகித்துக் கொள்ள இன்சுலின் சுரப்பு ஏற்பட்டு அதன் விளைவாக அதிக அளவு நீரை சிறுநீரகங்கள் சேமிக்கும்.

அடுத்து பழங்களில் ஃப்ரக்டோஸ் உள்ளது. இது கல்லீரலால் மட்டுமே கிரகிக்கக்கூடிய சர்க்கரை ஆகும். அளவுக்கு அதிகமாக ஃப்ரக்டோஸ் உட்கொள்ளப்படும் போது கல்லீரல் அதிகமான அளவில் கொழுப்பை உற்பத்தி செய்து உள்ளுறுப்புகளிலும் தன்னகத்தே சேமிக்கும். இதனால் கல்லீரலில் கொழுப்பு சேரும் நோய் ஏற்படலாம்.

எனக்குத் தெரிந்து பழங்கள், தேன் உள்ளிட்டவற்றை ஆரோக்கியமானவை என்று ஒருதலைபட்சமாக எண்ணி அதிகமான பழங்கள் சாப்பிட்டு வந்த உடல் பருமன் இருந்தவர்கள், நீரிழிவு நோயர்களாக மாறி இருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் ஏற்கனவே உடல் பருமன், பிசிஓடி, நீரிழிவு, கல்லீரல் கொழுப்பு நோய் உள்ளிட்ட இன்சுலின் ரெசிஸ்டெண்சினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமான அளவு பழங்கள் வழியான ஃப்ரக்டோஸை உட்கொள்ளும் போது அது இன்சுலின் எதிர்ப்பு நிலையை இன்னும் மோசமாக்கிவிடுகிறது என்கின்றன ஆய்வுகள்.

பழங்களில் புரதச்சத்தும் கொழுப்புச் சத்தும் ( அவகாடோ போன்ற அரிதான பழங்கள் தவிர்த்து) மிகவும் குறைவு என்பதால் பழங்களையே பிரதானமாக உண்பவர்களுக்கு நாளடைவில் தசை இழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

பழங்களில் சாதகமும் உண்டு, பாதகமும் உண்டு.

பழங்களை சிலர் சாப்பிட்டால் நல்லது சிலர் தவிர்த்தால் நல்லது.

பழங்களை அதன் அளவறிந்து சாப்பிட வேண்டும். அதை விடுத்து அவற்றையே முழு உணவாக மாற்றிக் கொள்ள இயலாது.

என்னைப் பொருத்தவரை இன்சுலின் ரெசிஸ்டெண்ஸின் அறிகுறிகள் கொண்ட உடல் பருமன் கொண்டவர்கள், கல்லீரல் கொழுப்பு நோய் கொண்டவர்கள், நீரிழிவு, பிசிஓடி மக்கள், பழங்களை மிகக் குறைவாக உண்பதே சிறந்தது.

எந்த தொற்றா நோயும் இல்லாத / இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் இல்லாத குழந்தைகள் முதல் இளையோர் முதியோர் வரை – பழங்கள் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவற்றை ஸ்நாக்ஸ் என்ற அளவில் தான் உட்கொள்ள வேண்டும்.
மீல்ஸாக மாற்றுதல் கூடாது.

அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தும் நஞ்சே
தீதும் நன்றும் பிறர்தர வாரா

-Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

Series Navigation<< மருத்துவர் பக்கம் : 3 -உணவு கட்டுப்பாடும், அபாயமும்மருத்துவர் பக்கம் 5 : நாய்கள் குறித்த எனது பார்வை. >>

Authors

Related posts

நாள்: 21

நாள்: 20

நாள்: 19