திடலின் ஓரத்திலிருக்கும்
ஆலமரத்தைக் கண்ணுறுந்தோறும்
ஆவலும் பயமும் கொள்வாள் பேத்தி
கிளிகளைப்போன்ற அக்காக்களும்
அக்கக்கோவெனும் கிளிகளும்
இறுகப்பற்றி ஊஞ்சலாடும் விழுதுகள்
ஆசையையும் பயத்தையும் விதைத்திருந்தன அவளுக்குள்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
பாலமாயிருந்த விழுதுகளில் சில
பாதாள லோகத்தையும் பார்த்துவரப்புகுந்திருந்தன
எண்ணெய் தடவாத முடிக்கற்றையென
நுனிகளில் பிளந்து கிளைத்திருந்தன சில
அக்கையொருத்தி கைபற்றிச்சேர்க்க
விழுது பற்றி ஆடிய பேத்தி
அதே வீச்சில்
பூமியை முத்தமிட்டுப் புரண்டு
புழுதியை விபூதியெனப் பூசியெழுந்தாள்
கசிந்த குங்குமச்சொட்டுகளை ஒற்றியெடுத்தாள்
வாரியணைத்த நல்லாச்சி
சூனியக்கிழவிதான் இவ்வடிவெடுத்திருப்பதாயும்
‘வடக்கற்றையெலாம் அவளின் சடைக்கற்றை
அவ தலமுடியில தொங்குனா வலிக்கும்லா
அதாம் தள்ளியுட்டுட்டா’
என்றும் பயமூட்டுகிறாள்
உளுத்த மரத்திற்கொரு கதை சொன்னவள்
உயிர்மரத்துக்கும் ஒன்று வைத்திருப்பாள்
தள்ளிவிடாத மரமொன்று
தேவதையின் கூந்தலாய்க் கிளைத்திருக்கும்
எங்கேனும்.