விவரணை வேண்டாமே வேகமாய் நெஞ்சில்
சிவனை நினைந்தால் சிறப்பாம் – புவனமதை
ஆக்கியே காத்தும் அழிக்கவும் செய்திடும்
வாக்கினில் வல்லோன் அவன்
அவனன்றி ஓரணுவும் அண்டத்தில் தானாய்
உவந்து அசையாதே ஊக்கமாய் ஒற்றுமையாய்க்
காலம் முழுவதும் காத்திடக் கைப்பற்று
ஆலமுண்ட ஈசன்தாள் ஆம்
ஆமென்று சொல்பவரை அண்டிப் பதம்தருவான்
போமென்று சொல்பவரைப் பூவுலகில் – தாமென்று
வாழும் சுயநலம் மாய்ந்துதான் கொண்டவரும்
ஆழும் பரமன் அழகு
அழகென்றால் நீல அருள்முகத்தோன் ஆங்கே
பழக அரியன் பரமன் – வழக்குடன்
நாடிவரும் நல்லோர்க்கு நற்சிந்தை தந்தென்றும்
ஊடிநிற்பான் உள்ளம் உணர்
உணர்வினில் எல்லாமாய் ஊனுடலில் பாதி
கணப்பொழுதில் தந்தங்கே காட்டி – மணம்செய்த
பார்வதி மங்கைக்குப் பாக்கியம் செய்வித்த
ஆர்வலன் ஆடலோன் தான்
தானாடா விட்டாலும் தன்னெஞ்சம் ஆடிவிட
வானாட பூமி வகையாட அன்றொருநாள்
ஏற்றமாய்க் கைலை எழில்மலையில் ஆடிய
சீற்றம் மறக்குமா சீர்
சீராய் உளத்தில் சிவனை நினைந்துருக
தேராய் அசைந்தே திகைக்கவைக்கும் வாழ்வினில்
வாட்டி வதங்குகின்ற வன்நிலையில் ஈசனருள்
காட்டியே நீளும் கரம்
கரம்பற்றிக் காரியம் பல்செய்யக் கண்கள்
வரமென வண்ணமாய்ப் பார்த்தே – தரமுடன்
நெஞ்சினில் ஈசன்தாள் நேசமுடன் தான்பதிக்க
விஞ்சுமே இன்பமும் விண்
விண்ணில் குடியிருக்கும் விண்மீன்கள் எல்லாமும்
கண்களுக்குள் கொண்டுவிட்ட காவலன் – பெண்ணுக்குப்
பாதியினை ஈந்தே பரவசமாய் நின்றிருக்கும்
ஆதிசிவன் தாள்தான் அறி
அறியாமை போக்கியே ஆர்வமாய் மக்கள்
வறியதைப் போக்கிடும் வாகீசன் தன்னையே
வாழ்வினில் நன்றாய் வளமாய் இருந்திட
ஆழ்ந்திடு தாளினுள் ஆம்