உருதுக்கவிதை உலகு – 2

This entry is part 2 of 2 in the series உருதுக்கவிதை உலகு

அமீர் குஸ்ரூ

கையறுநிலையைக் கண்டும் கைவிட்டுப் பாதை மாறி விழிதிருப்பிப் பொய்யுரைத்தனையோ பிரிவினைத் தாங்கும் திடமனம் எனக்கிலையெனினும் நெஞ்சணைக்க விலக்குவையோ

  • அமீர் குஸ்ரூ (1253-1325)

பாரசீகமும் ஹிந்தவியும் கலந்து எழுதப்பட்ட இந்த இரண்டு அடிகள்தான் உருதுக் கவிதை உலகின் முதல் கஜலின் தொடக்க இரண்டு அடிகள். இது உருது யாப்பின் அடிப்படையில் ஒவ்வொரு ஒலியையும் அசையாகக் கணக்கிடுகையில், இருபத்திரண்டு அசைகளைக் கொண்ட அடிகளால் ஆனது.

இந்தக் கஜல் எழுதப்பட்ட காலகட்டத்தில் உருதுவுக்கு உருது என்னும் பெயர் வழங்கப்படவில்லை. ஏறத்தாழ ஆண்டு 1780-களில், குலாம் ஹம்தானி மஷாஃபி என்னும் கவிஞரால் அது உருது என அழைக்கப்படுகிறது. அதற்கு முன்னர் உருதுவுக்கு வழங்கப்பட்ட பெயர்கள் ஹிந்தவி, ஹிந்துஸ்தானி, ரேக்தா.

இரண்டு மொழிகளைக் கலந்து முதல் கஜலை எழுதிய அமீர் குஸ்ரூ, உருதுப் பாடல் வடிவம் கவ்வாலியின் தந்தை எனவும் புகழப்படுபவர். இந்திய இசைக்கருவிகள் தபெலாவையும், சித்தாரையும் வடிவமைத்தவர். சூஃபியாக, வீரனாக, கவிஞனாக, இசைக்கலைஞனாக, அரசவை அங்கத்தினராக இருந்த அமீர் குஸ்ரூ, தில்லியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிஜாமுத்தீன் அவுலியாவின் சீடர்.

நிஜாமுத்தீன் அவுலியாவின் மறைவின்போது அமீர் குஸ்ரூ எழுதிய கவிதை:

ஆழ்ந்து உறங்குகிறாள் முகத்தைக் குழல் மறைக்கிறது உன் வீட்டுக்குத் திரும்பு குஸ்ரூ உலகை இருள் சூழ்கிறது’

சூஃபியிசக் கவிதைகளுள் சில காதலியைப் பாடுவது போன்ற தோற்றத்தைத் தரும், அவற்றின் சொற்தேர்வுகளும் காதலை நோக்கியபடி இருக்கும்.

‘இஷ்க்’ – காதல் என்னும் சொல்லிலிருந்து பிறக்கும் ‘மஹ்ஷூக் – மாஷூக்‘ என்னும் சொல்லால் சூஃபிகள் தங்களுக்கு இறைவனின் மீதிருக்கும் அளப்பரிய காதலைக் குறிப்பிடுவர். சூஃபியிசக் கவிஞர்கள் இறைவனுடன் தாங்கள் கொள்ளும் காதலைப் புனிதமானதாக முன்வைக்கின்றனர். சூஃபியிசக் கவிஞர்களும் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்குவதைக் காணலாம். உருது மொழியில் மனிதரின் மீது கொண்ட காதலைச் சொல்லவும், இறைவனின் மீது கொண்ட காதலைச் சொல்லவும் தனித்தனிக் கூட்டுச்சொற்கள் உள்ளன.

  • இஷ்க்-ஏ-மஜாசி: மனிதக்காதல்
  • இஷ்க்-ஏ-ஹக்கீக்கி: புனிதக்காதல்

காதலிப்பவர், காதலிக்கப்படுபவர் இவ்விருவருக்கும் உருதுவில் தனித்தனிச் சொற்கள் உள்ளன. ஆஷிக் – காதலிப்பவர், மஹ்ஷூக், மாஷூக் – காதலிக்கப்படுபவர். மஹ்ஷூக் ரஹ்மானி – கருணையாளனாக விரும்பப்படுபவன்.

அமீர் குஸ்ரூவின் இரண்டு கவிதைகளும் காதலியைப் பாடுவதைப் போலத் தோற்றமளித்தாலும், அவை இறையின் மீது கொண்ட புனிதக்காதலைப் பாடுகின்றன. இக்கோட்பாட்டைப் பின்பற்றித் தமிழிலும் காதல் கவிதைகளைப் போல் தோற்றமளிக்கும் சூஃபியிசக் கவிதைகள் எழுதப்பட்டன.

என்னை விட்டால் மாப்பிள்ளைமார் எத்தனையோ உன்றனுக்கே உன்னை விட்டால் பெண்ணெனுக்கும் உண்டோ மனோன்மணியே

குணங்குடி மஸ்தான் சாகிபுவின் மனோன்மணிக் கண்ணியில் சொல்லப்படும் மாப்பிள்ளையும் பெண்ணும் இகவாழ்வின் மாப்பிள்ளையும் பெண்ணுமல்ல என்பது தெளிவு.

சூஃபியிசக் கவிஞர்களின் பார்வையிலும், ‘மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக்காதல் அல்ல, அதையும் தாண்டிப் புனிதமானது’.

சூஃபிக் கவிஞர் அமீர் குஸ்ரூவின் வரலாறு செங்கிஸ்கானுடன் தொடர்புள்ளது. செங்கிஸ்கானின் ஆக்கிரமிப்பு துருக்கிய அரசு அதிகாரி அமீர் சைஃபுத்தீனை இந்தியாவுக்கு உயிர் தப்பி ஓடச் செய்கிறது. ஆஃப்கானிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு வந்த அவர் டெல்லி சுல்தானின் அனுமதியுடன் இந்தியாவில் அடைக்கலமாகிறார். பீபி தௌலத் நாஸ் என்னும் இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறார். அவர்களுக்கு மகனாகப் பிறந்தவர் அபுல் ஹசன் யாமீனுத்தீன் குஸ்ரு என்னும் அமீர் குஸ்ரூ.

பன்முகக் கலைஞராக இருப்பினும் குஸ்ரூ எழுத்தில் அதிகக் கவனம் செலுத்தினார். எழுதியதாலும் அறிவுமயமான உரையாடல்களாலும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவராக இருந்தார். வங்காளம், அவாத் (லக்னௌ), தில்லி ஆட்சியாளர்கள் அவரை வரவேற்று மகிழ்ந்தனர். ‘இந்தியாவின் கிளிமொழி‘ (தோத்தா-ஏ-ஹிந்த்) என்னும் பட்டம் அவரைத் தானாகத் தேடி வந்தது.

முல்தானில் ஐந்து ஆண்டுகள் அறிவுத் தேடலில் ஈடுபட்டிருந்தார். அன்றைய முல்தான் அரபு, பாரசீகம், இந்தியா என மூன்று பகுதிகளிலிருந்து வணிகர்கள் சந்திக்கும் இடமாக இருந்ததால், அரபு மொழி பேசவும் தேர்ச்சி பெற்றிருந்தார். கஜல், கவ்வாலி, மஸ்னவி என உருதுவின் யாப்புகளில் பல தொகுப்புகளை எழுதிய அவர், பஞ்சாபி மொழியிலும் கவிதை எழுதக்கூடியவர்.

அலாவுத்தீன் கில்ஜியின் சித்தூர்ப் படையெடுப்பைக் கதைப் பின்னணியாகக் கொண்டு ஆண்டு 2018-இல் வெளியான ‘பத்மாவத்’ திரைப்படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் அமீர் குஸ்ரூவை அறிந்தவர்கள் அல்லர். ஆனால் தங்களையும் அறியாமல் அமீர் குஸ்ரூவின் வரலாற்றுக் குறிப்புகளுடன் அவர்கள் இணைகின்றனர்.

தன்னுடைய வெற்றிகளையும் அரசாட்சியையும் குறிப்பெடுத்துத் தொகுக்க அலாவுத்தீன் கில்ஜி அமீர் குஸ்ரூவைத் தன் அவையில் பதவியில் வைத்திருந்தது வரலாறு. கில்ஜியின் படையெடுப்புகளின்போது குஸ்ரூவும் உடன் சென்றதுண்டு. அக்குறிப்புகள் ‘கஸான்-உல்-ஃபுத்தாஹ்‘ (வெற்றிகளின் கஜானா) என்னும் நூலாகத் தொகுக்கப்பட்டன. அந்த நூலில் அலாவுத்தீன் கில்ஜியின் சித்தூர் படையெடுப்பு தொடர்பான குறிப்புகள் அமீர் குஸ்ரூவின் ‘வெற்றிகளின் கஜானா’ நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், ‘பத்மாவத்’ திரைப்படத்தில் படையெடுப்புக்கான மையப்புள்ளியான சித்தூர் ராணி அந்த வரலாற்றுக் குறிப்புகளில் இல்லை.

சித்தூர் ராணி பத்மினியின் கதை அமீர் குஸ்ரூவுக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின் தோன்றிய சூஃபியிசக் கவிஞர் மலிக் மொஹம்மத் எழுதியது. கில்ஜி சித்தூரின் மீது படையெடுத்தது வரலாறு. அப்படையெடுப்பிற்குக் காரணமாகச் சித்தூர் ராணியின் மீது கில்ஜி கொண்ட மோகத்தைச் சொல்வது புனைவு. அமீர் குஸ்ரூவின் குறிப்பில் இல்லாத பத்மாவத்தின் கதையை மலிக் மொஹம்மத் பதினாறாம் நூற்றாண்டில் எழுதி அது வழிவழியாகத் தொடர்ந்து, இருபத்தொன்றாம் நூற்றாண்டில் திரைப்படமாக எடுக்கப்பட்டது இன்னொரு வரலாறு.

அமீர் குஸ்ரூ எழுதியதாகப் பலராலும் நம்பப்படும் ஒரு புகழ்பெற்ற பாரசீக வரிகளில் இந்த ‘மூன்றின் உளவியல்‘ (மும்முறை அழுத்திச் சொல்லும் முறை) எவ்வாறு வெளிப்படுகிறது என்று பார்ப்போம்.

மூன்றின் உளவியல் நினைவாற்றலுக்கும் அழுத்திச் சொல்வதற்கும் முடிவெடுப்பதற்கும் கருத்தை நிலைநாட்டவும் உதவும். அமைதி அமைதி அமைதி என மூன்று முறை சொல்வதில் தொடங்கி ‘ஏன் ஏன் ஏன்’ எனக் கண்ணதாசனின் காவடிச்சிந்தில் ஒலிப்பதும் மூன்றின் உளவியல். உளவியலுடன் தொடர்பில்லாவிடினும், ‘ரோஜா என்பது ரோஜாதான்’ என்னும் கவிதை வரிகள் ‘Rose is a rose is a rose is a rose’ என ஆங்கிலத்தில் ஒலித்தன (கவிஞர்: கெர்ட்ரூட் ஸ்டெய்ன், கவிதை: சேக்ரட் எமிலி).

மூன்றின் உளவியலையொட்டி ஒலிக்கும் ஒரு கவிதை அமீர் குஸ்ரூ எழுதியதாகச் சொல்லப்பட்டது. பின்னாளில் இது குஸ்ரூவின் கவிதையல்ல என நிறுவப்பட்டாலும், பல இடங்களில் அவர் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. தவறுகளைப் பரப்புவது எளிது, ஆய்வுபூர்வமாக நிறுவிய பின்னரும் அவை தவறாகவே சில இடங்களில் தொடர்வதைத் தடுக்க இயலாது.

ஒருவேளை புவியில் சொர்க்கம் உண்டெனில் அது இதுதான்! அது இதுதான்! அது இதுதான்!

அகர் ஃபிர்தௌஸ் பர் ரூ-ஏ ஸமீன் அஸ்த் ஹமீன் அஸ்த் ஓ ஹமீன் அஸ்த் ஓ ஹமீன் அஸ்த்

குஸ்ரூ எழுதாததை குஸ்ரூ எழுதியதாகச் சொல்லிச் சென்ற தவறைவிடவும், அவ்வரிகள் இப்புவியில் எந்தப் பகுதியைக் குறித்தன என அடையாளம் தேடி, அவை மொகலாயர் மாளிகைகள் சிலவற்றில் செதுக்கப்பட்டிருப்பதும், காஷ்மீரைக் குறிப்பிடும் வரிகளென்றும், காஷ்மீரின் ஒரு பகுதியைக் குறிப்பிடும் வரிகளென்றும் பலவிதமாகப் பேசப்படுவது சுவாரசியமானது. அவர் சொன்னது இவர் சொன்னது என எவர் சொன்னதையோ யார் சொன்னதாகச் சொல்லும் வழக்கம் நூற்றாண்டுகளாகத் தொடர்வதும் வியப்பு.

சுஜாத் அலி சந்தல்வி என்னும் ஆய்வாளர் அமீர் குஸ்ரூவின் நாட்டுப்பற்றைக் குறிப்பிடுவதற்கு அவருடைய சில வரிகளை மேற்கோள் காட்டுகிறார்.

நான் துருக்கிய இந்தியன் ஹிந்தவி பேசுபவன் செயற்கை இனிமையோ அரபியின் வெளிப்பாடோ என்னிடம் இல்லை

A Turkish Indian speaking Hindavi am I No lump of sugar, or Arabic in expression

தன்னுடைய துருக்கிய வேர்களை அடையாளம் காட்டியும், ஹிந்தவி மொழியின் மீது தனக்கு இருக்கும் பற்றை வெளிக்காட்டியும் எழுதப்பட்ட இவ்வரிகள் அமீர் குஸ்ரூவுக்கு மட்டுமல்லாமல் மொழிப்பற்றுள்ள இந்தியர் அனைவருக்கும் பொதுவானது.

உரக்கச் சொல்வதெனில் நானொரு இந்தியச் சிட்டுக்குருவி நான் பாடுவது ஹிந்தவி என்னிடம் அதைக் கேளுங்கள்

Rightly speaking, I am an Indian finch Ask of me Hindavi’ that I may sing in it

இந்தக் கவிதையும் குஸ்ரூவுக்கு ஹிந்தவி மொழியின் மீதிருந்த பற்றைத் தெளிவாக்குகிறது.

இன்றைய காலகட்டத்தில் இஸ்லாமியர்கள் தங்கள் நாட்டுப்பற்று தொடர்பாகப் பேசுகையில், ‘நாட்டுப்பற்றென்பது இறைநம்பிக்கையின் ஒரு பகுதி‘ என்னும் நபிமொழியைக் குறிப்பிடுவதுண்டு [“Love of one’s country is a part of faith” reported by Al-Sakhawi]. நபிமொழிகளின் வரிசையில் இந்தக் குறிப்பிட்ட ஹதீஸின் அறிவிப்பு தொடர்பான மாற்றுக்கருத்து இருப்பினும், நாட்டுப்பற்றின் அடிப்படையில் இதனை மார்க்க அறிஞர்கள் ஏற்கின்றனர்.

இதனைத் தன்னுடைய கவிதையில் குஸ்ரூ குறிப்பிடுகிறார்.

இது நபிகள் நாயகத்தின் வழியாக வந்தது நாட்டை நேசிப்பதும் அதன் மீது நம்பிக்கை கொள்வதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதி இரண்டாவதாக இந்நாடு காலங்களின் மையமாக உள்ளதால் பாருக்குள்ளே உயர் நாடு

This comes from the Tradition of the Prophet “Love of country, believe it, a part of Faith” Secondly this land due to the Qutub of the age Is superior to all lands of the world

இந்திய விடுதலைப் போராட்ட வீரர், தேசியகவி, பத்மபூஷன் ராம்தாரி சிங்க் (தினகர்) குஸ்ரூவின் நாட்டுப்பற்றைத் தன்னுடைய கட்டுரையில் குறிப்பிடுகிறார். ‘ஒருமைப்பாட்டு நீரோட்டம் இந்துக்களிடம் மட்டுமல்லாமல் முஸ்லிம் கவிஞர்கள் ஞானிகளிடமும் இருந்தது. எந்தச் சாய்வுக்கும் ஆளாகாமல் சொல்வதெனில் அமீர் குஸ்ரூவை காரி போலி ஹிந்திக்கும் உருதுவுக்கும் தந்தையெனச் சொல்லலாம்.’ இந்தப் பாராட்டுடன் ‘இறைநம்பிக்கையின் ஒரு பகுதி’ கவிதையை ராம்தாரி சிங்கும் சுட்டிக்காட்டி குஸ்ரூவின் நாட்டுப்பற்றைப் பாராட்டுகிறார். முக்கியமாக, குஸ்ரூவை ‘முதல் தேசியவாத முஸ்லிம்‘ என்கிறார்.

பாரசீகம் ஹிந்தவி இரண்டையும் இணைத்து முதல் கஜலை எழுதியதைப் போலவே, முதல் கவ்வாலிப் பாடலையும் குஸ்ரூதான் இயற்றினார். ‘என்னை குருவாக ஏற்பவருக்கு / அலியும் குரு ஆவார்’ (மன் குன்ட்டோ மௌலா / ஃபா ஹாஸா அலி யுன் மௌலா) என்னும் கவ்வாலி இன்றைக்கும் இறைநேசர்களின் இருப்பிடங்களில் பாடப்படுகிறது.

ஆண்டு 1975-இல் இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அமீர் குஸ்ரூவின் நினைவாக இருநூறு பக்கங்கள் கொண்ட கட்டுரைத் தொகுப்பினை வெளியிட்டது. அமீர் குஸ்ரூவை நினைவுகூரும் வகையில் ஓர் ஆவணப்படமும், தூர்தர்ஷனில் வெளியான ஒரு தொலைக்காட்சித் தொடரும் உள்ளன.

வீரர், இசைக்கலைஞர், சூஃபித்துவக் கோட்பாட்டாளர், ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர், கவிஞர், தேசியவாத முஸ்லிம் எனப் பல புகழாரங்களுக்கு உரிய அமீர் குஸ்ரூ இந்தியாவின் கிளிமொழி (தோத்தா-ஏ-ஹிந்த்) என அழைக்கப்பட்டது முற்றிலும் பொருத்தமானது.

(தொடரும்)

Series Navigation<< உருதுக்கவிதை உலகு – 1

Author

Related posts

அக்னி நட்சத்திரம்

ஒரு (தற்)கொலை நடக்கப்போகிறது

ர.பா.இந்துமதி கவிதைகள்