Home கட்டுரைபேசும் சித்திரங்கள் | கிங் விஸ்வா

வாழ்வியல் இயக்கங்களை வரலாறாகப் பதிவு செய்யும் பாணி தொன்றுதொட்டே இருந்து வருகிறது. எழுத்துருக்கள் தோற்றுவிக்கப்படும் முன்பே ஆரம்பகாலக் குகை ஓவியங்கள் மூலமாக அப்போதைய வரலாற்றை, சம்பவங்களைப் பதிவு செய்தனர். இதன்பின்னர் பேச்சு மொழி உருவாக, வாய்வழிக் கதைகளாகவும், பாடல்களாகவும் இவை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்பட்டன. பின்னர் எழுத்துருக்கள் மூலமாக எந்த ஒரு விஷயத்தையும் துல்லியமாகப் பதிவு செய்வது சுலபமாகிவிட்டது. இப்படியாக ஓவியங்கள் மூலமாகவும், எழுத்து மூலமாகவும் சம்பவங்களைப் பதிவு செய்யும் இரண்டு வழிமுறைகள் நம்மிடையே இருந்து வந்தன.

மனிதனின் முதல் தகவல் சேமிப்பு வழிமுறையான ஓவியங்கள் மூலமாகக் கதையைச் சொல்லும் பாணிக்குப் பெயர்தான் காமிக்ஸ். காமிக்ஸ் ஜாம்பவானாகிய வில் ஐஸ்னர் காமிக்சை sequential Art என்று பெயரிட்டு இதற்கென்று ஒரு வரையறையை எழுதினார்: ”ஓவியங்களையும், வார்த்தைகளையும் ஒரு முறைப்படி ஒழுங்கு செய்து ஒரு கதையைச் சொல்வதே / ஒரு யோசனையை நாடகப்படுத்துவதே காமிக்ஸ்” என்பது அவரது கருத்து.

”பார்வையாளனிடமிருந்து ஒரு அழகியல் சார்-எதிர்வினையைத் தூண்டவோ அல்லது ஒரு தகவலைப் பரிமாறுவதற்காகவோ வேண்டுமென்றே ஒரு குறிப்பிட்ட வகையில் வரிசைப்படுத்தப்பட்ட சித்திரங்களின் தொகுப்பே காமிக்ஸ்” என்று ஸ்காட் மக்ளவுட் கூறுவார்.


சித்திரக்கதைகளுக்கென்று ஒரு தனி வரையறை உண்டு. அவற்றை இங்கே காண்போம். ஒவ்வொரு காமிக்ஸ் கதையும் பேனல்கள் என்று அழைக்கப்படும் கட்டங்களால் உருவாக்கப்பட்டது. இந்தக் கட்டங்கள், பெரும்பாலும், எல்லைக் கோடுகளால் பிரிக்கப்பட்டு இருக்கும். இந்த பேனல்கள் தொடர்ச்சியான செயலின் ஒரு அங்கமாகும். ஒரு கதையை முக்கியமான சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து, அந்தச் சிறு பகுதிகளை ஓவியங்களால் விளக்கி, வார்த்தைகளால் அலங்கரித்து உருவாக்கப்பட்டதே ஒவ்வொரு பேனலும்.

இந்தக் கட்டங்களை ஒன்று சேர்த்துப் படிக்கும்போது அவை தொடர்ச்சியாக ஒரு கதையின் இயக்கத்தை விவரிக்கின்றன. இதற்காக இரண்டு விதமான கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன:

Caption என்று அழைக்கப்படும் கதையின் இயக்கத்தை விவரிக்கும் வகையில் மூன்றாம் நபரின் பார்வையில் கதாசிரியரால் எழுதப்பட்டு இருக்கும்.

Speech Balloon என்றழைக்கப்படும் வளிக்கூண்டுகள். இவை உரிய கதாபாத்திரங்களின் உரையாடலை விவரிக்கும். இந்தப் பலூன்களின் முனை யாரை நோக்கி இருக்கிறதோ, அவரது கருத்தாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இந்த பலூன்களில் மொத்தம் நான்கு வகை உண்டு.

• கதாபாத்திரம் வழக்கம் போல, நடைமுறையாகப் பேசுவது
• இரகசியமாக, மெலிதான குரலில் பேசுவது
• எண்ணங்களாக மனதில் நினைப்பது
• உரக்கப் பேசுவது / கத்துவது – அலறுவது

இதிலேயே கூட சில வரையறைகள் உண்டு. ஒன்று கதாபாத்திரங்கள் பேசாமல், மூன்றாவது நபர் விவரிப்பின் மூலமாகக் கதையைச் சொல்வது. இரண்டாவது முறையில் கதாபாத்திரங்கள் பேச உதவியாக வார்த்தை வளிக்கூண்டுகள் (பேச்சு பலூன்கள்) உருவாக்கப்பட்டு, கதைமாந்தர்கள் பேசுவதைக்கொண்டு கதையை இன்னமும் விளக்கமாக நடைமுறைப் பாணியில் சொல்வது.

வசனங்கள் இல்லாமல் சித்திரங்களால் மட்டுமே கதையைச் சொல்லும் முறைதான் ஆரம்பத்தில் இருந்தது. சென்ற நூற்றாண்டின் மிகச்சிறந்த காமிக்ஸ் தொடர்களாகக் கருதப்படும் ஆரம்ப கால ப்ரின்ஸ் வேலியண்ட், ஃப்ளாஷ் கார்டன் போன்றவை இந்தப் பாணியிலேயே உருவாக்கப்பட்டவை. இதற்குப் பிறகு வசனங்களையும் இணைத்து முழு வடிவம் பெற்றது காமிக்ஸ் என்ற இந்த தளம்.

காமிக்ஸ் உருவான கதை:

சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோடோல்ஃப் டாஃபரின் “திருவாளர் மரமண்டையின் கதை” என்ற முப்பது பக்கப் புத்தகமே ஐரோப்பாவின் முதல் காமிக்ஸ் புத்தகமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு பக்கத்திலும் ஒன்று முதல் ஆறு ஓவியங்களைக் கொண்டு, ஓவியங்களின் கீழே வசனங்களால் விளக்கப்பட்ட இந்தப் புத்தகத்தை 1827ல் வரைந்து முடித்த டாஃபர், இதனை 1837 வரையில் புத்தகமாக அச்சிடவில்லை. இதனாலேயே உலகின் முதல் காமிக்ஸ் புத்தகம் என்ற அந்தஸ்தைத் தவற விட்ட இந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 1842ல் வெளியானது.

1841ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பஞ்ச் என்ற புத்தகம் வெளியானது. அரசியல் கேலிச்சித்திரங்களைக் கொண்ட இந்தப் புத்தகமே கார்ட்டூன் என்ற பாணியைப் பிரபலப்படுத்தியது. இதன்பின்னரே ஒரு சம்பவத்தைக் கேலிச்சித்திரங்களின் வாயிலாகச் சித்தரிக்கும் முறைக்குக் கார்ட்டூன் என்று பெயரிட்டு அழைக்க ஆரம்பித்தனர்.

ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட முதல் காமிக்ஸ் தொடர் 1867ல் இங்கிலாந்தின் ஜூடி வார இதழில் வெளியானது. வாடகை பாக்கியைக் கேட்கும் வீட்டு உரிமையாளரிடமிருந்தும், மற்ற கடன்காரர்களிடமிருந்தும் தப்பிக்க முயலும் ஒரு நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதியை மையமாக வைத்து எழுதப்பட்ட Ally Sloper’s Half Holiday ரஜினிகாந்தின் படம்போல மக்களைக் கவர, விற்பனையில் சாதனை படைக்க ஆரம்பித்தது இத்தொடர். பின்னர் 1884ல் ஏல்லி ஸ்லோப்பரை மையமாக வைத்து அவரது பெயரில் தனி பத்திரிகையும் ஆரம்பிக்கப்பட்டது. காமிக்ஸ் உலகின் முதல் சூப்பர் ஸ்டாரான ஏல்லி, ஆரம்பத்திலேயே மூன்றரை லட்சம் பிரதிகள் என்று சரித்திரம் படைத்தார்.

இருபதாம் நூற்றாண்டும், காமிக்சின் பரிணாம வளர்ச்சியும்: 1920களில் ஆரம்பித்து அடுத்த இருபது ஆண்டுகள் காமிக்ஸ் துறையின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்களிப்பு செய்தவை அமெரிக்காவின் தினசரிச் செய்தித்தாள்களில் வெளியான காமிக்ஸ் தொடர்களும், இங்கிலாந்தின் பீனோ, டேண்டி போன்ற காமிக்ஸ் இதழ்களும், ஐரோப்பாவில் டின்டின்னின் சாகசங்கள் என்ற தொடருமே.

ஒரே வரிசையில் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று கட்டங்களைக்கொண்டு வாரம் முழுவதும் வெளியாகும் காமிக்ஸ் தொடருக்கு டெய்லி ஸ்ட்ரிப் என்று பெயர். இவை பெரும்பாலும் கருப்பு வெள்ளையிலுமே தயாரிக்கப்பட்டன. ஒவ்வொரு நாளும் தொடரை ஆர்வத்துடன் படிக்க வைக்க, கடைசிக் கட்டத்தில் ஒரு கொக்கி போன்ற நாடகத்தனமான திருப்பம் ஒவ்வொருநாளும் வைக்கப்பட்டது. இதுபோல தினசரி காமிக்ஸ் தொடராக உலகைக் கலக்கியவை ஃப்ளாஷ் கார்டன், வேதாளர், பிரின்ஸ் வேலியண்ட், மாண்ட்ரேக் போன்ற தொடர்கள். வார இறுதியான ஞாயிற்றுக் கிழமையில் மூன்று அல்லது நான்கு வரிசைகளில் முழு வண்ணத்தில் வெளியாகும் காமிக்ஸ் தொடர்களுக்கு சன்டே ஸ்ட்ரிப் என்று பெயர்.

சிறுவர்களை மகிழ்விக்க நகைச்சுவையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட பீனோ மற்றும் டேண்டி ஆகிய வார இதழ்கள் இங்கிலாந்தில் காமிக்ஸ் வாசிப்பைப் பிரபலப்படுத்தின என்றால், உலகமெங்கும் இதனை ஒரு கலையாக அங்கீகாரப்படுத்தினார் ஓவிய மேதை ஹெர்ஜ்.

இவர் உருவாக்கிய டின் டின் என்ற இளைஞனின் சாகசத்தொடர் இருபதாம் நூற்றாண்டு என்ற பெல்ஜிய தினசரியின் வாரந்திர இலவச இணைப்பில் வெளிவரத்துவங்கியது. ஒவ்வொரு கதையும் நிறைவுபெற்ற பின்னர் தொகுக்கப்பட்டுத் தனியாக (பதிப்பக வெளியீடு போல) விற்கப்பட்டது. உலகின் 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இத்தொடர், இதுவரையில் இருபது கோடி புத்தகங்களுக்கு மேலாக விற்றுள்ளது.

தினசரிச் செய்தித்தாளில் காமிக்ஸ் தொடர்கள் பிரபலமாக, நகைச்சுவையைக் கடந்து மர்மம், சாகசம், இதிகாசம், வரலாறு என்று பல தளங்களில் காமிக்ஸ் தொடர்கள் வெளியாகத் துவங்கின. 1929ல் The Funnies என்ற வாராந்திர பத்திரிக்கை, இவ்வாறான தினசரி காமிக்ஸ் தொடர்களைத் தொகுத்து முழுக்கதையாக வெளியிட ஆரம்பித்தது. விற்பனையில் இதற்குக் கிடைத்த வரவேற்பினால் மற்ற பதிப்பகங்களும் இதே பாணியைப் பின்பற்ற, தினசரி காமிக்ஸ் தொடர்கள் முழுக் கதைகளாக வெளிவரத்துவங்கின.

1938 – காமிக்ஸ் உலகில் மறுமலர்ச்சி: இதுவரையில் தினசரிச் செய்தித்தாளிலோ, அல்லது கதை முடிந்தபின்னர் தொகுக்கப்பட்ட வடிவிலோ மாத்திரமே வெளிவந்துகொண்டிருந்த காமிக்ஸ் கதைகள், வெளிவராத புதிய கதைகளையும் இதைப்போல முழுப் புத்தகமாக வெளியிட்டால் என்ன என்று சிந்தித்து தனியாக, தொடர்ச்சியில்லாமல் ஒரே கதையைக் கொண்ட காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட ஆரம்பித்தனர். சூப்பர்மேனின் முதல் அறிமுகமான ஆக்‌ஷன் காமிக்ஸ் வெளியீட்டிற்குப் பிறகு இதுபோன்ற வெளியீடுகள் அதிகரிக்க, காமிக்ஸ் உலகில் புதுவெள்ளம் பாய்ச்சப்பட்டது. அடுத்த இருபது ஆண்டுகளில் உலகம் முழுவதிலுமே காமிக்ஸ் என்றாலே அது சூப்பர் ஹீரோக்களை மட்டுமே குறிக்கும் என்பதைப்போல தோற்றத்தை ஏற்படுத்தியவர் சூப்பர்மேன். இன்றளவிலும் சூப்பர்மேன் தான் உலகின் நம்பர் 1 காமிக்ஸ் ஹீரோ. இவர் அமெரிக்காவுக்கு மட்டும் கலாச்சாரச் சின்னமாக விளங்கவில்லை. ஒட்டுமொத்த காமிக்ஸ் துறைக்கே ஒரு ஆதாரமாக இருக்கிறார்.

படத்தை வரைந்து விட்டு அதன் கீழே, நடந்த சம்பவத்தை விளக்கும் வகையை காமிக்ஸ் என்ற முழுமையான வகையில் சேர்க்கக்கூடாது என்று வாதிடுகிறார் உலகிலேயே மிகப்பெரிய காமிக்ஸ் நூலகமான மிசிகன் மாகாண பல்கலைக்கழகத்தின் நூலக பிரிவு தலைவரான ராண்டி ஸ்காட். இதை ஆமோதிப்பவர்களும் உண்டு. ஆரம்ப காலத்தில் உருவான காமிக்ஸ் கதைகளில் பெரும்பாலானவை இந்த முதல் வகையில்தான் சேர்த்தி. இப்படி ஒரு பிரிவினர் இருக்க, கிராபிஃக் நாவல் என்று ஒரு பிரிவினர் தனியாக விலகி உள்ளனர். அவர்களையும் கொஞ்சம் அலசுவோம்.

காமிக்ஸ் & கிராபிஃக் நாவல்: இளவட்டங்களிடம் லேட்டஸ்ட் ட்ரெண்ட் என்ன? என்று கேட்டால் அது கிராபிஃக் நாவல் படிப்பது என்று புதியதாக ஒரு பதில் வருகிறது. ஆனால் “இதுவும் காமிக்ஸ் கதைதானே? அப்புறம் என்ன கிராபிஃக் நாவல் என்று புதுப்பெயர்?” என்று கேட்டால்….. பின்நவீனத்துவம் என்றால் என்ன? என்ற கேள்விக்கான பதிலைப்போல, எதை எதையோ சொல்கிறார்களே தவிர பதிலைக்காணோம். ஆகையால் இந்தக் கட்டுரையின் மூலம் காமிக்சுக்கும் கிராபிஃக் நாவலுக்கும் என்ன வித்தியாசம் என்பதைக் காண்போம்.

காமிக்ஸ் என்றால் பத்திரிக்கைகள் போல வெளிவந்த படக்கதைப் புத்தகங்களே. இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும், ஃப்ரான்சிலுமே இதுதான் வழக்கமாக இருந்தது. பல சித்திரத்தொடர்கதைகள் ஒரே இதழில் வெளியாகும். நம்ம ஊர் சிறுவர்மலர் போல, ஒவ்வொரு கதையும் இரண்டிலிருந்து எட்டு பக்கங்கள் வரை இருக்கும். பதினாறு பக்கங்கள் முதல் 32 பக்கங்கள் வரை கொண்ட இந்தக் காமிக்ஸ் இதழ்கள் பெரும்பாலும் வார இதழ்களாகவே இருந்தன. சித்திரக்கதைகளைத்தவிர துணுக்குகள், வேடிக்கை விளையாட்டுச் சம்பவங்கள், போட்டிகள் என்று பல்சுவை வார இதழாக இருக்கும்.
இந்த மாதிரி இதழ்களைத்தான் இங்கிலாந்தில் காமிக்ஸ் பத்திரிக்கைகள் என்று அழைக்கிறார்கள். ஐரோப்பாவில் (ஃப்ரான்ஸ் + பெல்ஜியம்) இதனை பாந்-தேசினி (BD) என்றும், ஜப்பானில் மாங்கா என்றும் பெயர்கள் மாறினாலும் சொல்லப்படும் பொருள் ஒன்றுதான். அமெரிக்காவில் பல கதைகள் இல்லாமல் ஒரே கதை தொடர்ச்சியாக 22 பக்க அளவில் வெளிவரும்.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக காமிக்ஸ் என்றாலே அவை சிறுவர்களுக்கானவை, நகைச்சுவையையும், பொழுதுபோக்கையும் தவிர அதில் வேறு ஒன்றும் இருக்காது என்ற போக்கு நிலவி வந்ததை மாற்ற, சீரிய கதைத்தொடர்களைக் கிராபிஃக் நாவல் என்ற பெயரில் விற்பனைக்குக் கொண்டு வந்தனர். இவ்வகையான கதைகளின் தளம் சற்றே வேறுபட்டு, விளையாட்டல்லாத கொஞ்சம் சீரியசான கதைகளைச் சொல்ல முயலும் சித்திரக்கதைகளே கிராபிஃக் நாவல்கள் என்று முத்திரை குத்தப்பட்டன.

வரையரையைப் பொருத்தமட்டில் காமிக்ஸ் மாதிரி தொடர் கதைகளையோ, அல்லது துண்டு துண்டான கதைகளையோ கொண்டிருக்காமல், ஒரே முழுக்கதையை கொண்ட புத்தகத்தையே ஆங்கிலத்தில் கிராபிஃக் நாவல் என்றும், ஐரோப்பாவில் ஆல்பம் என்றும் ஜப்பானில் டங்கோபான் என்றும் பெயரிட்டு அழைக்கிறார்கள்.

மேலே இருக்கும் இரண்டு பத்திகளையும் சுருங்கச் சொல்வதெனின், கதைகளின் வகையையும், புத்தகத்தின் அமைப்பையும் பொருத்து, கிராபிஃக் நாவலை வரையரை செய்துள்ளார்கள் என்று கொள்ளலாம்.

தமிழில் காமிக்ஸ் & கிராபிஃக் நாவல்: இந்தக் கட்டுரையாளரின் “தமிழ் காமிக்ஸ் உலகம் – தோற்றமும், வளர்ச்சியும்” என்ற ஆவணப்படம் கடந்த ஐந்து ஆண்டுகளாக நிறைவடையாமல் இருக்க ஒரே காரணம் இன்னமும் தமிழின் முதல் படக்கதை எது என்று அறுதியிட்டுக் கூற முடியாத நிலைதான். ஒவ்வொரு முறையும் ஒரு பழைய படக்கதையை தேடி எடுக்கும்போது அதைவிடப் பழைய ஒன்று சில நாட்களிலேயே தலைதூக்க, எதுதான் முதல் படக்கதை என்பதில் குழப்பம் இன்னமும் நீடிக்கிறது.

நாகர்கோவில் பிரச்சார சபையால் 175 வருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டதுதான் தமிழின் முதல் சிறுவர் பத்திரிக்கை என்று இந்தக் கட்டுரையாளரால் அறுதியிட்டுக் கூற முடியும். ஆனால் காமிக்ஸ் – படக்கதையைப் பொருத்த மட்டில் இன்னும் ஒரு தீர்க்கமான பதில் கிடைக்கவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு தமிழ் வார இதழில் 1956ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓவியர் மாயா வரைந்து வெளியானதே தமிழ்ப்பத்திரிக்கை உலகின் முதல் படக்கதை என்று அச்சிட்டு இருந்தார்கள். ஆனால் இந்தக் கட்டுரையாளரிடம் 1955ஆம் ஆண்டே குமுதத்தில் வெளியான படக்கதை இருக்கிறது (பதினெட்டாம் நாள்). இதைத்தவிர 1956ஆம் ஆண்டு வெளியான விளம்பரம் ஒன்றில் ‘ஆறாவது விரல்’ என்ற சித்திர நாவலின் மூன்றாம் பதிப்பு விற்பனைக்கு வந்ததைப்பற்றிய தகவல் உள்ளது. இப்படியாகத் தமிழின் முதல் படக்கதை வெளியானது அந்தக் குறிப்பிட்ட தமிழ் வார இதழில் அல்ல, அதற்கு முன்னரே குமுதம் வெளியிட்டு உள்ளது என்பது நிச்சயமாகிறது.

தமிழின் முதல் படக்கதையை போலவே தமிழின் முதல் கிராபிஃக் நாவலும் குமுதத்திலேயே வெளியாகி இருக்கவேண்டும். 1956ஆம் ஆண்டு சித்திரைச் சிறப்பிதழில் வெளியான பல்லாவரம் பங்களா என்ற 32 பக்க சித்திர நாவல், தொடராக அல்லாமல் நேரிடையாக ஒரே கதையாக வெளியானது. இப்படியாக வரையரைகளைப் பொருத்து குமுதம் இதழ் தமிழ் காமிக்ஸ் உலகில் தன்னுடைய முத்திரையைப் பதித்து உள்ளது. அமரர் தமிழ்வாணனும் தன்னுடைய முத்திரையை ஆரம்பகால தமிழ் காமிக்ஸ் உலகில் பதித்து உள்ளார். இவரது கதைகள் தொடராக அல்லாமல் முழுநீள காமிக்ஸ் கதையாகவே, பதிப்பக வெளியீடாக வந்துள்ளன.

தமிழில் கிராபிஃக் நாவல்: தமிழில் மொழிமாற்று கிராபிஃக் நாவல்களே அதிகமாக வெளிவந்துள்ள சூழலில் அரிதாகத் தமிழிலேயே உருவாக்கப்பட்ட இரண்டு கிராபிஃக் நாவல்களைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். தஞ்சாவூரைச் சேர்ந்த ஓவியர் தங்கம் மற்றும் அவரது துணைவியார் ஓவியர் திருமதி சந்திரோதயம் அவர்களின் கைவண்ணத்தில் வெளியான

• இராஜ கம்பீரன்
• மர்ம வீரன் ராஜராஜ சோழன்

ஆகிய இரண்டும் நமது தற்போதைய அளவுகோளில் தமிழுக்கான படைப்பாகக் கருதும்போது உயர்ந்த இடத்திலேயே வைக்கப்படவேண்டும். இராஜ கம்பீரன் கதையானது 900 ஆண்டுகளுக்கு முன்பு சரித்திரமாக வாழ்ந்த இராஜராஜ சோழன் காலகட்டத்தில் நடப்பதாக எழுதப்பட்டுள்ளது. தமிழகக் கடல் வணிகர்களை ஒரு தீவில் சிறைப்பிடிக்கிறான் கடற்கொள்ளையன் ஒருவன். அவர்களை மீட்க, புலிக்கொடியுடன் கூடிய கப்பலில் சோழ வீரர்கள் சென்று சாகசம் புரிவதாகக் கதையின் போக்கு அமைக்கப்பட்டு உள்ளது. தமிழர்களின் கலை, பண்பாட்டு அடையாளங்களை நமது கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் ஓவியர் தங்கம், ஆரம்ப காலத்துக் கன்னித்தீவு தொடரின் ஓவியர் என்பது ஆச்சரியமூட்டும் தகவல்.

அவரது துணைவியாரான திருமதி சந்திரோதயம் அவர்களின் கைவண்ணத்தில் உருவான மர்மவீரன் இராஜராஜ சோழன் கதை, கிட்டதட்ட அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் சம்பவங்கள் நடைபெறும் காலகட்டத்திலேயே இருப்பதாக எழுதப்பட்டுள்ளது. தன்னுடைய சகோதரி குந்தவைக்கு பாண்டியர்களால் தீங்கு நேரப்போவதை அறியும் சோழ இளவல், தன்னுடைய இதர கடமைகளையும் (புத்தர் சிலைகளை சாவகம் மற்றும் காம்போஜம் தீவுகளுக்கு கொண்டுசெல்வது, கடற்கொள்ளையர்களிடமிருந்து தமிழக வணிகர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது) இதனையும் எவ்வாறு சமாளிக்கிறார் என்பதே இந்த 200 பக்க சித்திரக்கதையின் சாராம்சம்.

அமரர் திரு சிவா அவர்களின் முயற்சியால் விடியல் பதிப்பகம் ஈரானிய எழுத்தாளர் மர்ஜானே சத்ரபியின் இரண்டு கிராபிஃக் நாவல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.

• ஈரான் – ஒரு குழந்தைப் பருவத்தின் கதை
• ஈரான் – திரும்பும் காலம்

முப்பது ஆண்டுகால ஈரானின் சரித்திரத்தைப் பிரதிபலிக்கும் தன்னுடைய வாழ்க்கைச் சரித்திரத்தை, ஒரு மர்ம நாவலைப்போலச் சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் கொடுத்திருக்கிறார் எழுத்தாளர் மர்ஜானே சத்ரபி. எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் இதனை மொழிபெயர்த்துள்ளார். 2011ஆம் ஆண்டு நண்பர் விஜய் ஆனந்த் அவர்களின் ‘பயணி பதிப்பகம்’ மூலமாகத் தமிழில் இரண்டு மொழிமாற்று கிராபிஃக் நாவல்கள் வெளியிடப்பட்டன.

• சே – வாழ்க்கை வரலாறு
• அமெரிக்க பேரரசின் மக்கள் வரலாறு

கிட்டதட்ட தமிழில் வெளியான கிராபிஃக் நாவல்களில் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு கொண்டதாக அமெரிக்கப் பேரரசின் மக்கள் வரலாற்றைக் குறிப்பிடலாம். இரா.செந்தில் மொழிபெயர்த்துள்ள இந்தப் புத்தகம், எழுத்தாளர் ஹோவார்ட் ஜின்னின் பார்வையில் எப்படி எழுதப்பட்டதோ, அதன்படியே நமக்குத் தமிழில் எந்தத் தவறும் இல்லாமல் கொடுக்கப்பட்டது குறிப்பிடப்படவேண்டிய விஷயம். இதற்குப்பிறகு மால்கம் எக்ஸ் கிராபிஃக் நாவலை வெளியிடும் முன்பே இந்தப் பதிப்பகம் முடங்கியது தமிழர்களுக்கு ஒரு இழப்பே.

லயன் காமிக்ஸ் வெளியிடும் கிராபிஃக் நாவல்கள்: நாற்பதாண்டுகளாகத் தமிழில் காமிக்ஸ் புத்தகங்களை மொழிபெயர்த்து வெளியிட்டு வரும் சிவகாசியைச் சேர்ந்த லயன் காமிக்ஸ், கடந்த சில ஆண்டுகளாக கிராபிஃக் நாவல்களையும் பிரசுரிக்கத் துவங்கியுள்ளனர். இவர்களின் படைப்புகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக,

• க்ரீன் மேனர் தொடர் (மூன்று பாகங்கள் கொண்ட கதை வரிசை)
• விரியனின் விரோதி + காலனின் கைக்கூலி
• தேவ இரகசியம் தேடலுக்கல்ல
• இரவே, இருளே, கொல்லாதே!
• பௌன்சர் – ரௌத்திரம் பழகு

இவை அனைத்துமே ஃப்ராங்கோ-பெல்ஜிய காமிக்ஸ் கதைகள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். மிகவும் சுமாரான ஒரு கதையை நேரியல் அல்லாத பாணியில், முன்கதைகளைச் சரியான இடத்தில் புகுத்தி ஒரு சாதாரணக் கதையை சுவாரஸ்யமான கதையாக மாற்றும் திரைக்கதை யுக்தியே கிட்டத்தட்ட அனைத்துக் கதைகளிலும் விரவியுள்ளது. இந்த பாணிக்கதைகளில் கதையை, எந்தவிதமான அறிமுகமும் இல்லாமல் நடுவில் இருந்து ஆரம்பித்து, பின்னர் ஓவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேவையான அளவுக்கு மாத்திரம் பின்கதைகளைச் சொல்லி, கதையை வேகமாக நகர்த்தி விறுவிறுப்பைக் கூட்டும் திரைக்கதைத் தந்திரம் இவர்கள் கைவசமுள்ளதால் விற்பனையில் தொடர்ந்து ஜெயிக்கிறார்கள்.

தமிழாக்கத்தைப் பொருத்த வரையில் ஆங்காங்கே நெருடல்கள் இருந்தாலும், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த வெளியீடுகள் சமகால கிராபிஃக் நாவல்களுக்கான தமிழர்களின் வேட்கையைப் போக்க உதவும் பாலைவன நிழற்சோலைகளே.

இந்திய கிராபிஃக் நாவல்கள்: இந்தியாவில் தற்போது ஓவியர்களுக்கும், கதாசிரியர்களுக்கும் பஞ்சமில்லை என்று சொல்லும் அளவுக்குச் சிறந்த படைப்பாளிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். குறிப்பிட்டுச் சொல்வதெனின்

  • ஓவியர்கள்:
    • முகேஷ் சிங்
    • சௌமேன் படேல்
    • விவேக் கோயல்
    • லலித் குமார் சிங்
    • கரன்வீர் அரோரா
    • மற்றும் கதாசிரியர்கள்
    • ஸ்வேதா தனேஜா
    • ஆலோக் ஷர்மா
    • ராம் வெங்கடேசன்
    • சௌரவ் மஹாபாத்ரா

என்று பலரும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். இவர்களது சேவையை அமெரிக்க, ஹாலிவுட் படங்களிலும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். அதிலும் முகேஷ் சிங் என்ற ஓவியரின் பெயரைக் குறிப்பிடும்போதே சூப்பர் ஸ்டார் ஓவியர் என்ற அடைமொழி தானாக வந்து ஒட்டிக்கொள்வது அவரது தனித்தன்மையை விளக்கும். இவர்கள் அனைவருமே கிட்டத்தட்ட வருடத்திற்கு முப்பது புத்தகங்களை வெளியிடும் இந்திய கிராபிஃக் நாவல்களின் மையமாகச் செயல்படுகின்றனர். இவை அனைத்துமே ஆன்லைன் சந்தைகளிலும், டிஜிடல் வடிவக் கோப்பைகளிலும் கிடைக்கின்றன.

Author

  • கிங் விஸ்வா, உலகளவில் காமிக்ஸ் எனப்படும் படக்கதைகள் வரலாறு பற்றிப் பரந்துபட்ட ஞானம் கொண்டவர். தமிழில் பல்வேறு படக்கதை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வரும் விஸ்வா, கிராஃபிக் படைப்புகளின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிகளைப் பற்றி ஆழ்ந்த பார்வை கொண்டவர். ’சாம்பலின் சங்கீதம்’ போன்ற புதிய கிராஃபிக் புத்தக முயற்சிகள் தமிழில் தொடர்ந்து நடைபெறத் துணை நிற்பவர்.

You may also like

Leave a Comment