1. இருள் தளர
நீலத்தில் தேயும் விண்மீன்கள்
விரியும் காலை!
2. வெண்மேகம் விலக
ஒளி சிந்தும் சூரியன்
பேசும் பகல்!
3. மேக நிழல்கள்
மண்ணில் வரையும் சித்திரங்கள்
வானமெனும் குழந்தை!
4. வானம் திறக்க
இலைகளைத் தொடும் வெயில்
மென்மையான வாழ்வு!
5. மலை மேல் சூரியன்
குருவியின் குரல் கரைய
மறையும் ஒளி!
6. குளிரும் மாலை
வான் ஏறும் நிலா
பரவும் இரவு!
7. காத்திருக்கும் விண்மீன்
அடங்கும் காற்று
ஒளிரும் மௌனம்!
8. படிக்கட்டில் நிலவொளி
சற்றே திறந்த கதவு
நுழையும் கனவு!
9. இரவு எனும் கருமண்
சிதறும் விண்மீன் விதைகள்
முளைக்கும் நம்பிக்கை!
10. தென்னை மேல் நிலா
சாலையில் நீளும் நிழல்கள்
நடக்கும் காலம்!
11. கண் சிமிட்டும் விண்மீன்
பிரதிபலிக்கும் நதி
வியப்பில் பூமி!
*
ஒளிப்படம்: ராமலக்ஷ்மி