Home இலக்கியம்சிறுவர் பாடல்கள்: மனிதரைப்போல் – அழ. வள்ளியப்பா

சிறுவர் பாடல்கள்: மனிதரைப்போல் – அழ. வள்ளியப்பா

0 comments

வில்லெ டுத்துப் பூனையார்
விரைந்து ஒடும் எலிகளைக்
கொல்ல ஆசை கொள்கிறார்;
குறியும் பார்த்து எய்கிறார்!

துறட்டி ஒன்றை யானையார்
துதிக்கை நுனியில் ஆவலாய்
இறுக்கிப் பிடித்துச் செல்கிறார்;
இளநீர் யாவும் பறிக்கிறார்!

உண்டி வில்லாமல் மந்தியார்,
உயரே உள்ள பழங்களைக்
கண்டு ஓங்கி அடிக்கிறார்;
கனிகள் தம்மை உதிர்க்கிறார்!

குட்டி நாயார் உச்சியில்
ரொட்டிப் பெட்டி இருப்பதை,
எட்டி எடுத்துத் தின்னவே,
ஏணி எறிச் செல்கிறார்!

“உங்க ளைப்போல் எதையுமே
யுக்தி யோடு செய்திட,
எங்க ளுக்கும் தெரியுமே!”
என்றோ காட்டு கின்றன!

Author

  • அழ. வள்ளியப்பா (நவம்பர் 7, 1922 - மார்ச் 16, 1989) குழந்தை இலக்கியங்கள் படைத்தவர். 2,000-க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதி குழந்தைக் கவிஞர் என்று அழைக்கப்பட்டவர். குழந்தைகளுக்கான இதழ்களை நடத்தினார்.

You may also like

Leave a Comment