எழுத்தில் செய்யும் பிழைகள் :
எழுத வேண்டும் என்கிற ஆவல் கொண்டோர், தம்மை அறியாமல் செய்யும் பிழைகள் சிலவற்றை இப்போது பார்ப்போம்:
அருகில் என்பதைக் குறிக்க அருகாமை என்று பலரும் பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்தி வருகின்றனர்.
படத்தில், அருகாமை என்பது அருகில் அல்லது அருகண்மையில் (அருகு+அண்மை) என்ற பொருளில் தான் (தவறாக) ஆளப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். அருகு என்றால் குறைவது அல்லது சுருங்குவது என்ற பொருள் . அதன் மாறுபட்ட சொல்லாக அருகாமை என்பதற்கு, நீளுதல், அதாவது சுருங்காமை, குறையாமை என்ற பொருள். ஆக, அருகில் என்று சொல்ல வந்து தொலைவில் என்பதாக அறியாமல் சொல்லிவிட்டார்.
இது போன்றே, மேலும் சில சொற்களிலும் கூர்நோக்கு வேண்டும்.
நினைவு கூர்வதை இன்னும் சிலர் நினைவு கூறுவதாகக் குறிக்கின்றனர். அவ்வளவாகப் பொருள் பேதமில்லை எனினும் கூறுதல் என்பது மேலோட்டமாக வாயால் பேசுவதையும், கூர்தல் என்பது மனத்தளவில் நினைவு மிகுதல் என்பதையும் சுட்டும். ஆகவே, நினைவு கூர்தலே நினைவைக் கூறுவதனினும் கூர்ந்த, தேர்ந்த சொல். அன்பு கூர்ந்து இதனைக் கருத்தில் கொள்க.
எனது வீடு என்று சொல்லலாம். எனது மகனார் என்று சொல்லலாமா? கூடாது. ஏன்? எனது என்பதைப் பிரித்தால் என்+அது என்றாகும்.
மகன் என்ப உயர்திணை ஆதலின் என் மகன் என்று சொல்ல வேண்டும். வீடு-அஃ றிணை என்பதால் எனது வீடு என்று சொல்லலாம்.
ஊர் நேசன் என்கிற ஒரு வாசகர் ‘அவர்களே’ என்கிற விளி பன்மையாகாதே? எனக் கேட்டிருக்கிறார். உண்மைதான். அவருக்குப் பாராட்டுகள்.
தமிழில் ன் விகுதி ஒருமையையும் ர் விகுதி பன்மையையும் குறித்தது. அமைச்சன் என்றால் ஒருவரைக் குறிக்கும். அமைச்சர் என்றால் பலர்.
நாளடைவில் ர் விகுதி மரியாதைப் பன்மை என்றானது. இக்காலை அதில் ‘கள்’ ளும் சேர்ந்து கொண்டது.
அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் பலர் வந்து கொண்டிருப்பதாகப் பொருள் கொள்கிறோம்.
அதையே, …….. ‘அமைச்சர் அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்’ என்றால் குறிப்பிட்ட ஓர் அமைச்சர் வந்து கொண்டிருக்கிறார் என்று இப்போது பொருளாகிறது. வழுவல; கால வகையினானே என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது. இப்படிப்பட்ட திரிபுகள் காலத்தே ஏற்படுகின்றன.
கட்டடம் கட்டிடம்
தேநீர் தேனீர்
எத்தனை? எத்துணை?
இவற்றுள் எது சரி?
யோசித்து வையுங்கள்.
(தொடர்வோம் )
1 comment
அருமை… விளக்கத்திற்கு நன்றி!