Home இலக்கியம்தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 3 – மொழியாக்கம்

தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 3 – மொழியாக்கம்

by திருவை, Thiruvai
0 comments

அத்தைமருமகள் கதை

தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன் 

ஒரு ஊரில் ஒரு அத்தைக்காரி இருந்தாள். அவளுக்கு மருமகள் என்றால் சுத்தமாக ஆகாது. வார்த்தைக்கு வார்த்தை திட்டியும், அடித்தும் அவளை அழ வைத்துக்கொண்டு இருப்பாள். ஒருநாள் அத்தைக்காரி வீட்டுத் தோட்டத்தில் பீர்க்கங்காய் விதைகளைப் போட்டாள். சில நாட்களிலேயே அது நன்கு வளர்ந்து, பெரியதாகி, வண்டி வண்டியாகக் காய்த்தது.

‎மருமகளுக்கு, அந்தப் பீர்க்கங்காய்களைப் பறித்து நன்கு குழம்பு வைத்துச் சாப்பிட வேண்டும் என்று எவ்வளவோ ஆசை. ஆனால், அத்தைக்காரி என்னவென்றால், அந்தக் காய்களை எல்லாம் பறித்துத் தான் ஒருத்தியே நன்கு சமைத்துத் தின்பாள். மிச்சமாவதை எதிர் வீட்டுக்காரர்களுக்கும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் கொடுப்பாளே தவிர்த்து, மருமகளுக்கு என்று ஒரு துண்டு கூட வைக்க மாட்டாள்.

‎ஒருநாள் அவர்கள் வீட்டிற்கு அத்தையின் சின்னத் தம்பி வந்து “அக்கா… அக்கா… நாளைக்கு என் மவளுக்குக் கல்யாணம். நீ கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரணும்” என்று கட்டாயப்படுத்தினான். சரியென்று அத்தைக்காரி தம்பியோடு சேர்ந்து கல்யாணத்திற்குச் சென்றாள். அவ்வளவுதான்… அத்தைக்காரி அப்படி வெளியே போனதுதான் தாமதம், மருமகள் மகிழ்ச்சியில் ஓடோடி வீட்டுத் தோட்டத்துக்குப் போய்ப் பீர்க்கங்காய்களை எல்லாம் பறித்து நன்கு கறி சமைத்துத் தின்றுவிட்டு, கொடிகள் எல்லாவற்றையும் பிடுங்கிக் குப்பையில் எறிந்தாள்.

‎நான்கு நாள்கள் கழித்து அத்தைக்காரி வந்து பார்த்தால், வேற என்ன!.. கொடியும் இல்லை, காய்களும் இல்லை. இது எல்லாம் மருமகள் வேலைதான்.. என்று யூகித்த மாமியாருக்கு அவள் மேல் அடக்க முடியாத கோபம் வந்தது. இராத்திரி மருமகள் சாப்பிட்டுத் தூங்கியதும் ஒரு பெரிய கட்டையை எடுத்துவந்து அவள் தலையில் ஒன்று போட்டாள். அவ்வளவுதான்.. அந்த அடியில் மருமகள் கண்ணெல்லாம் திருகிப்போய் அப்படியே மயங்கிப் பிணம் மாதிரி கீழே விழுந்தாள். எவ்வளவு எழுப்பியும் எழுந்திரிக்கவில்லை. அதைப் பார்த்து மருமகள் செத்துப்போய்விட்டாள் என்று நினைத்தாள் அத்தைக்காரி.

‎அதற்குள் அவள் மகன் வயலில் இருந்து வந்தான். உடனே அத்தைக்காரி கள்ள அழுகை அழுதுகொண்டே “டேய்! உன் பொண்டாட்டிக்கி என்ன ஆச்சுதோ! எவ்ளோ கூப்டாலும் ஒரு பதிலு கூட இல்லை, போ!.. போயி பாரு.. போ” என்றாள். கையோடு அவன் போய் மனைவியை அங்கும் இங்கும் தட்டிப் பார்த்தான். சத்தமாகக் கத்திக் கூப்பிட்டுப் பார்த்தான்.

‎அவள் மயக்கத்தில் இருந்தாள் இல்லையா? அதனால் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதோடு, அவனும் மனைவி இறந்துவிட்டாள் என்று நினைத்தான்.

‎இருவரும் பிணத்தை எடுத்துக்கொண்டு இருட்டிலேயே மயானத்திற்குச் சென்றனர். அதைக் கட்டையில் படுக்கப்போட்டுப் பற்ற வைக்கலாம் என்று பார்த்தால் தீப்பெட்டி இல்லை. அதோடு அத்தைக்காரி “டேய்! நீ, வீட்டு வரைக்கும் போயி தீப்பெட்டி எடுத்தினு வா.. போ” என்று மகனிடம் சொன்னாள். அதற்கு அவன் “எனக்கு இருட்டுல தனியா போறதுனா பயம். நீயும் கூட துணைக்கு வா” என்றான். சரியென்று அவள் மகனோடு சேர்ந்து வீட்டிற்குச் சென்றாள்.

‎அவர்கள் அப்படி வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்திற்கு எல்லாம் மருமகளுக்கு மயக்கம் தெளிந்தது. எழுந்து பார்த்தால் வேற என்ன?! மயானக் காட்டில் கட்டைகளின் மேல் கிடந்தாள். அவளுக்கு என்ன நடந்திருக்கும்? என்பது புரிந்துபோய் மெதுவாக எழுந்து, பக்கத்தில் கிடந்த முள்ளுச் செடிக்குத் தன்னோட வெள்ளைச் சேலையைப் பாதி கிழித்துக் கட்டி, அதைக் கட்டைகளின் மேல் வைத்தாள். பிறகு அவள், அருகில் இருந்த புளியமரத்தில் ஏறி, என்ன நடக்கிறது? என்று கவனிக்க ஆரம்பித்தாள். சிறிது நேரத்திற்கு எல்லாம் தீப்பெட்டியை எடுத்துக்கொண்டு அத்தைக்காரி மகனோடு சேர்ந்து அங்கு வந்துசேர்ந்தாள். இருட்டு ஆகையால் சரியாகப் பார்க்காமல் முள்ளுச் செடியை மருமகள் என்று நினைத்துத் தீ வைத்தாள். நன்கு தீப்பிடித்து எரிந்து, வெறும் சாம்பல் ஆனதற்குப் பிறகே அவர்கள் திரும்பிச் சென்றனர்.

‎மருமகள், ‘புளியமரத்தில் இருந்து இறங்கலாம்’ என்று நினைக்கும்போது நான்கு திருடர்கள் அங்கு வந்தனர். அவர்கள், புளிய மரத்திற்குக் கீழேயே உட்கார்ந்து சுற்றியும் இருக்கிற ஊர்களில் இருந்து திருடி வந்த தங்கம், இரத்தினங்கள், வைரங்கள், நகைகளை எல்லாம் குவியல் குவியலாகப் போட்டு அவரவர்களுக்கான பங்கைப் பிரித்துக் கொண்டிருந்தனர். இது அனைத்தையும் மேலே இருந்து பார்த்துக்கொண்டிருந்த மருமகள், எப்படியாவது அந்தத் தங்கத்தை எல்லாம் ஆட்டையைப் போட வேண்டும் என்று நினைத்து ‘ஓ’ என்று பேய் மாதிரி கத்திக் கொண்டே.. படார்னு அவர்கள் மேல் குதித்தாள்.

அவ்வளவுதான்.. நான்கு திருடர்களும் ஆடிப் போயினர். பார்த்தால்! வேற என்ன?.. வெள்ளைச் சேலையில், முடியை எல்லாம் விரித்துப் போட்டுக்கொண்டு ‘ஓ’ என்று ஊளையிட்டுக்கொண்டு இருந்தாள். அவர்கள்.. பேய்தான் வந்துவிட்டது என்று நினைத்துப் பயத்தில் கிடுகிடுவென நடுங்கிப்போய், அங்கங்கே போட்டு விட்டு ஆளுக்கொரு மூலையில் தலைதெறிக்க ஓடினர். மருமகள் தங்கம் எல்லாவற்றையும் மூட்டை கட்டிக்கொண்டு சந்தோஷமாக வீட்டிற்கு வந்தாள். கதவுகள் மூடி இருந்தன. ஆகவே, “அத்தை! அத்தை!” என்று கூப்பிட்டுக்கொண்டே கதவைத் தட்டிக் கொண்டிருந்தாள். “யாரப்பா?” என்று எழுந்து வந்து கதவைத் திறந்த மாமியாருக்கு எதிரில் மருமகள் நிற்கவும், ‘இவள் பேயா வந்து, என்னைப் பழி வாங்க வந்திருக்காள்’ என்று நினைத்துப் பயத்தில் அங்கேயே நெஞ்சு வெடித்து.. டமாரென கீழே விழுந்து இறந்து போனாள்.

மனைவியைப் பார்த்துக் கணவன் கிடுகிடுவென நடுங்கிக்கொண்டிருக்க, அவள் நடந்தது அனைத்தையும் கூறினாள். அவன் “அப்படியா!” என்று சந்தோஷம் அடைந்தான். அவள் கொண்டுவந்த தங்கம் எல்லாவற்றையும் வைத்து, பத்து அடுக்குமாடி வீடுகளைக் கட்டிக்கொண்டு நிம்மதியாக வாழ்ந்தனர்.

Series Navigation<< தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 2 – மொழியாக்கம்

Author

  • திருவை, Thiruvai

    மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற 'திராவிடன் பல்கலைக் கழகம்' இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். 'ஒப்பாய்வு நோக்கில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கீர்த்தனைகளும் பக்த இராமதாசு கீர்த்தனைகளும்' எனும் தலைப்பில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தெலுங்கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

You may also like

Leave a Comment