காக்கம்மா கிளியம்மா
ஒரு புளியமரத்தில் காக்கம்மாவும் கிளியம்மாவும் இருந்தன. காக்கம்மாவுடையது கூடு. கிளியம்மாவுடையது வீடு. ஒருநாள் இராத்திரி பலத்தச் சூறாவளி காற்றும் மழையுமாக இருந்தது. அதில் அந்தக் காக்கம்மாவின் கூடு கொஞ்சம் பறந்துபோனது. கிளியம்மாவுடையது வீடு இல்லையா… அதற்கு எதுவும் ஆகவில்லை. காக்கம்மா மழையில் நனைந்துகொண்டு… குளிரில் நடுங்கியபடி கிளியம்மா வீட்டுக்கு அருகில் வந்து “கிளியம்மா…. கிளியம்மா… கொஞ்சம் கதவை திறப்பியா… என் கூடு விழுந்துடிச்சு” என்று பாவமாகக் கேட்டது. கிளியம்மா மிகவும் நல்லவள் இல்லையா… அதனால் உடனே கதவைத் திறந்து காக்கம்மாவை உள்ளே வரச் சொன்னது.
காக்கம்மா நன்கு நனைந்துபோனது இல்லையா… அதனால் கிளியம்மா அதற்குத் துடைத்துக்கொள்வதற்குத் துண்டு கொடுத்தது… சுடச்சுடச் சோறு பொங்கி வயிறு நிறையப்போட்டது. கிளியம்மா வீடு முழுதும் ஒரே கூடைகளோ கூடை. அரிசி, பருப்பு, வெல்லம், சோளம், கோதுமை, கொண்டைக் கடலை அப்படி ஒவ்வொரு கூடையிலும் ஒவ்வொன்றென இருந்தன.
காக்கம்மா சோறு தின்னதும் “எனக்குத் தூக்கமா வருது. எங்க படுத்துக்கட்டும்” என்று கேட்டது. “வெல்ல கூடைக் கிட்ட படுத்துக்கோ போ” என்றது கிளியம்மா. காக்கம்மா வெல்லக் கூடைக்கு அருகில் படுத்திருந்து நடுராத்திரியில் கமுக்கமாக எழுந்திரித்து வெல்லத்தைத் தின்ன ஆரம்பித்தது. தின்னும் போது கடகட வென்று சத்தம் வரும் இல்லையா… அந்த சத்தத்தைக் கேட்டு கிளியம்மா “காக்கம்மா… காக்கம்மா… அது என்ன சத்தம் ” என்று கேட்டது. அதற்கு காக்கம்மா “அது ஒன்னும் இல்லை . மழையில நல்லா நனைஞ்சிட்டேன் இல்லையா… அதனால குளுருக்கு பல்லுலாம் நடுங்குது. அவ்ளோதான்” என்றது. “அப்படியா” என்று கிளியம்மா அப்பாவித்தனமாக காக்கம்மா பேச்சை நம்பித் தூங்கியது.
காக்கம்மா வெல்லம் முழுவதையும் தின்றுவிட்டு அது நிறையவும் மலத்தைக் கழித்து வைத்தது. கிளியம்மா தூக்கத்திலே இருந்தது இல்லையா… அதோடு மெதுவாக கொண்டைக் கடலைக் கூடைக்கு அருகில் சென்றது. அது முழுவதையும் தின்றுவிட்டு அது நிறையவும் மலத்தைக் கழித்து வைத்தது. அப்படி இராத்திரி முழுவதும் அரிசி, கோதுமை, பருப்பு, சோளம் அனைத்தையும் தின்றுவிட்டு எல்லாக் கூடையிலும் மலத்தைக் கழித்து வைத்துவிட்டு காலையிலே “நான் போயிட்டு வறேன் கிளியம்மா” என்று எதுவும் தெரியாத அப்பாவி மாதிரி கமுக்கமாகப் பறந்து போனது.
காக்கம்மா போன சிறிது நேரத்திற்கு எல்லாம் கிளியம்மாப் பிள்ளைகள் தூக்கத்தில் இருந்து எழுந்தன. எழுந்ததும் “அம்மா… அம்மா… பசிக்குது…. கொஞ்சம் வெல்லம் தா” என்றன. சரியென்று கிளியம்மா வெல்லக் கூடையில் கை வைத்தது. அவ்வளவுதான்… அதன் கை முழுவதும் மலம் ஒட்டிக்கொண்டது. கிளியம்மா ஆடிப் போனது. எந்தக் கூடையில் பார்த்தாலும் மலம். அதோடு கிளியம்மாவுக்குப் பயங்கர கோபம் வந்தது… “பாவம்னு உள்ள விட்டா இந்த அநியாயமா பண்றது… எப்படியானாலும் சரி அதுக்கு நல்ல பாடம் புகட்டனும்” என்று நினைத்தது.
சுடச்சுடக் கங்குகளைக் குவியல் குவியலாகக் கொண்டுவந்தது. கட்டிலில் இருந்த நார் அனைத்தையும் எடுத்துவிட்டு கீழே கங்குக் குவியலை வைத்தது. அது வெளியே தெரியாமல் இருக்கக் கட்டிலின் மேல் போர்வையால் மூடியது. காக்கம்மாவிடம் போய் “காக்கம்மா… காக்கம்மா… இன்னைக்கு எனக்கு பிறந்தநாளு. சுடச்சுட பலகாரங்கல்லாம் பண்ணி ஊருல எல்லாருக்கும் கொடுப்பேன். நீயும் வந்து ஒரு பலகாரம் சாப்பிட்டு போ” என்று அழைத்தது.
பலகாரம் என்றதும் காக்கம்மா வாயில் எச்சில் ஊறியது. அதோடு மகிழ்ச்சியாக நாக்கைச் சப்பைக் கொட்டிக்கொண்டு கிளியம்மா வீட்டிற்கு வந்தது. கிளியம்மா அதனை உள்ளே அழைத்து “அடுப்பாங்கரைல பலகாரம் சுட்டுட்டு இருக்கேன். கொஞ்ச நேரம் கட்டில்ல உக்காரு… சுடச்சுட சாப்பிடலாம்” என்றது.
கட்டிலுக்குக் கீழே கங்குக் குவியல் இருப்பது அதற்குத் தெரியாது இல்லையா… அதோடு மகிழ்ச்சியாகப் பறந்து சென்று கட்டில் மேல் அமர்ந்தது.
கட்டிலுக்கு நார் இல்லை இல்லையா. அதனால் சர்ருனு போர்வை வழுவிக் கீழே இருந்த சூடானக் கங்குகளின் மேல் டமார்னு விழுந்தது. அந்தச் சூட்டில் காக்கம்மா உடல் முழுதும் சுர்ருனு சுட்டது. அந்த வலியில் காக்கம்மா துடிதுடித்துப்போய் அங்கிருந்து ஓடிப்போனது. கிளியம்மாவின் பிள்ளைகள் சந்தோஷத்தில் கைக்கொட்டிச் சிரித்தன.