கோமாளி ராஜா
ஒரு காலத்தில், நம் தேசத்தில் ‘மொட்டை இராஜ்யம்’ என்றொரு இராஜ்யம் இருந்தது. அதை ஆண்டுவந்த ராஜா சரியான கோமாளி. தான் என்ன செய்தாலும் அதையே அனைவரும் செய்ய வேண்டும் என்று நினைப்பான். முடியாது என்றாலோ, எதிர்த்தாலோ அவர்களைப் பிடித்துவந்து காலையோ கையையோ எடுத்துவிடுவான். அதனாலே மக்கள் எல்லோரும் பயந்துபோய் எவ்வளவு கொடுமைகளை அனுபவித்து வந்தாலும் வாயைத் திறக்காமல் கம்மென இருந்தனர்.
அந்த ராஜாவுக்கு அழகான முடி இருந்தது. அந்த முடி என்றால் ராஜாவுக்கு அதீத விருப்பம். ஒருமுறை, ‘தன்னைத் தவிர வேறு எவருக்கும் முடி இருக்கக்கூடாது’ என்று நினைத்தான். உடனே படைவீரர்களை அழைத்து ராஜ்யத்தில் எல்லோரும் மொட்டை அடித்துக்கொள்ள வேண்டும் என்றும், யாராவது முடியோடு தென்பட்டால் அந்த இடத்திலேயே மொட்டை அடிப்பதோடு நூறு சவுக்கடிகள் கொடுக்கப்படும் என்றும் ஊர் முழுவதும் தண்டோரா போடச் சொன்னான். அவ்வளவுதான்.. மக்கள் எல்லோரும் பயந்துபோய் பெண்கள், ஆண்கள், முதியவர்கள், வயோதிகர்கள் என்று வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் சுத்தமாக மொட்டை அடித்துக்கொண்டனர். அதனாலேயே அந்த இராஜ்யத்திற்கு அந்தப் பேரு வந்தது.
ஒருமுறை ராஜாவுக்கு வேட்டைக்குச் செல்ல வேண்டுமென்று தோன்றியது. உடனே மந்திரியை அழைத்து “நீ ராஜ்யத்தைப் பாத்துக்கிட்டு இரு. நான் காட்டுக்குப் போயி மிருகங்களை வேட்டையாடிட்டு வர்றேன்” என்றான். மந்திரி ‘சரி’ என்றான். ராஜா ஆயிரம் படைவீரர்களை அழைத்துக்கொண்டு வேட்டைக்குச் சென்றான். அவர்கள் சென்றது ஒன்றும் அப்படி இப்படி சாதாரணக் காடு கிடையாது, மிகவும் பெரியது. எங்கு பார்த்தாலும் புலிகள், சிங்கங்கள், கரடிகள், யானைகளாய் இருந்தன. அவற்றைப் பார்த்து ராஜா பயத்தில் நடுநடுங்கிப் போனான்.
“அடேங்கப்பா… என்ன இவ்ளோ பெரிய மிருகங்களா… அதுங்கள நான் பிடிக்கிறது இருக்கட்டும், அதுங்கள்ட்ட நான் மாட்டுனா அவ்ளோதான்” என்று நினைத்து “டேய் … இவ்ளோ பெரிய பெரிய மிருகங்களாம் வேணாம். இருந்தாலும், எதாச்சும் சின்னச் சின்ன மிருகங்க இருந்தா பாருங்க.. வேட்டையாடலாம்” என்றான்.
வீரர்கள் ‘சரி’ என்று தேடிக்கொண்டிருக்க, அவர்கள் ஓரிடத்தில் ஒரு சின்ன எலியைக் கண்டனர். உடனே அவர்கள் உரத்தக் குரலில் “ராஜா… ராஜா… பயங்கரமான எலி மிருகம் ஓடிட்டு இருக்கு. வாங்க. வேட்டையாடலாம்” என்று கத்தினர். உடனே ராஜா ஒரு பெரிய கத்தியை எடுத்துக்கொண்டு படை வீரர்களோடு அதை விரட்டினான். அந்தக் கத்தலுக்கும் இரைச்சலுக்கும் பயந்துபோன எலி காற்றைக் கிழித்துக்கொண்டு வேகமாக ஓடத் தொடங்கியது. அப்படி ஓடி… ஓடி… அது ஒரு பெரிய மலைக்குக் கீழே இருந்த ஒரு சின்னப் பொந்திற்குள் நுழைந்தது. ராஜா களைத்துப்போய் வீரர்களோடு அங்கு வந்து சேர்ந்தார்.
”ராஜா… உங்களுக்குப் பயந்து அந்த எலி மிருகம் ஓடிப்போயி அந்தப் பொந்துக்குள்ள ஒளிஞ்சிக்கிச்சு” என்றான் ஒரு படைவீரன்.
”எங்க போதுனு நானும் பாக்குறேன்… இன்னைக்கு அதா? நானா?ன்னு பாத்திருவோம்” என்று ராஜா மீசையை முறுக்கிவிட்டு கத்தியைப் பிடித்துக்கொண்டு அந்த மலைக்கு அருகிலேயே அமர்ந்தான். ராஜாவோடு சேர்ந்து படைவீரர்கள் அனைவரும் கத்தியையும் கேடயத்தையும் பிடித்துக்கொண்டு காவலுக்கு நின்றனர். ஒரு நாள் முழுக்கக் கழிந்துபோயும் எலி மட்டும் பயத்தில் வெளியே வரவில்லை. அதோடு ராஜாவுக்கு ஆர்வம் மிகுதியானது. உடனே ராஜ்யத்தில் இருந்து இன்னும் ஆயிரம் படைவீரர்களை வரவழைத்தான். பெரிய பெரிய வலைகளைக் கொண்டுவந்து எலி எங்கும் தப்பித்து ஓடிப்போகாமல் இருக்க மலையைச் சுற்றியும் கட்டவைத்தான். படை வீரர்களை வலைக்கு வெளியே அடிக்கொருவரைக் கூர்மையான கத்தியோடு காவலுக்கு நிற்கவைத்தான். கூலிகளை அழைத்துவந்து மலையைத் தோண்டவைத்தான். அவர்கள் ஏழு பகல் ஏழு இராத்திரி கஷ்டப்பட்டுத் தோண்டி முடிக்கவும் எலி வெளியே வந்தது. அது ஓடிப்போகப் பார்க்கையில் வீரர்கள் வலைவீசி கடைசியில் அதைப் பிடித்துவிட்டனர்.
உடனே ராஜா அதன் நான்கு கால்களையும் கட்டி, எல்லாருக்கும் தெரிகிற மாதிரி ஒரு உயரமான தூணில் வைத்து மேளதாளங்களோடு ராஜ்யம் முழுவதும் சுற்றி வந்தான். அதைப் பார்த்த மக்களுக்கு ஒரு பக்கம் சிரிப்பாக இருந்தாலும், எதுவும் சொன்னால் என்னவாகுமோ! என்ற பயத்தில் “ஜெய் மகாராஜா… ஜெய் ஜெய் மகாராஜா” என்று தெருவின் இரண்டு பக்கங்களிலும் நின்றபடி பூக்களைத் தூவி ஆர்ப்பரித்தனர்.
அந்தச் சத்தத்திற்கும், அலறலுக்கும் எலி மிகவும் பயந்துபோனது. எப்படியாவது தப்பிக்க வேண்டுமென்று காலில் கட்டிய கயிற்றினை மெல்ல மெல்லக் கொரிக்கத் தொடங்கியது. அப்படிக் கொரித்துக்கொண்டே இருக்க, அது சிறிது சிறிதாக அவிழ்ந்து அவிழ்ந்து கடைசியில் எல்லாம் அவிழ்ந்துபோயின. அவ்வளவுதான்… அது ஒரே தாவலில் மேலிருந்து கீழே குதித்து மக்கள் காலுக்கிடையில் புகுந்து ஓட ஆரம்பித்தது. அதைப் பார்த்து ராஜாவின் படைவீரர்கள் திரும்பவும் அதனை விரட்டினர். அது அப்படி ஓடிப்போய்… ஓடிப்போய்… ஒரு குடிசைக்குள்ளே புகுந்தது. படைவீரர்கள் சுற்றி வளைத்துக்கொண்டு எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.
அதோடு ராஜாவுக்குப் பயங்கரமாகக் கோபம் வந்தது. உடனே ஒரு தீப்பந்தத்தை எடுத்துவந்து குடிசைக்குத் தீ வைத்தான். அந்தக் குடிசையைச் சுற்றியும் நிறையக் குடிசைகள் இருந்தன. அதனால் தீ மற்ற குடிசைகளுக்கும் பரவியது. அப்போது ஒரு பலத்தக் காற்று வீச, தீ மேலும் பெரிதாகி சுற்றியும் இருந்த வீடுகளுக்கும், வயலுக்கும் பரவியது. அப்படிக் கொஞ்ச நேரத்திலேயே ராஜ்யம் முழுவதும் பற்றிக்கொண்டது. மக்கள் எல்லோரும் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்துவந்து ஊற்றிக்கொண்டிருந்தனர். அப்போதும் தீ கொஞ்சம் கூட அணையவில்லை.
கையோடு… ராஜா படைவீரர்களை அழைத்து “டேய்… ஊரை ஒட்டி பெரிய குளம் ஒன்னு இருக்கு இல்லயா… போங்க… போயி அதோட கரையை உடைச்சி விடுங்க. தண்ணியெல்லாம் ஊருக்குள்ள வந்து எல்லாம் அணைஞ்சிரும்” என்று அனுப்பினான். ஆனால் அந்தக் குளம் சாதாரணக் குளம் கிடையாது. அது முழுவதும் முதலைகளும் விஷப் பாம்புகளுமாக நிறைந்திருந்தன. மக்கள் தவறுதலாகக் கூட அந்தக் குளத்துப் பக்கம் போகமாட்டார்கள். அப்படிப்பட்ட குளத்தைப் படைவீரர்கள் போய்க் கரையை உடைத்ததும் தண்ணீரும், அதோடு சேர்த்து முதலைகளும் பாம்புகளும் ஊருக்குள் வந்தன. மக்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒரு பக்கம் நெருப்பு, இன்னொரு பக்கம் முதலைகள், திக்குதிசைத் தெரியாமல் மக்கள் அல்லாடிப்போயினர். நிறைய பேர் இறந்தும் போயினர். நிறைய வீடுகள் எரிந்துபோயின.
ராஜா செய்த பைத்தியக்காரத்தனத்தை எல்லாம் பார்த்துப் பார்த்து, அந்த ஊரு நாசுவனுக்கு மிகவும் கோபம் வந்தது. எல்லாருக்கும் மொட்டை அடித்துவிட்டதால் பெரியதாக வேலை எதுவும் இல்லாமல் போனது. பண வரவும் இல்லை. அதோடு குளத்துத் தண்ணீரைத் திறந்துவிட்டதில் இருந்தக் கொட்டத்தில் கொஞ்சமும் அடித்துப்போனது. அதனால் வேறு வழியின்றி அந்த ஊரைவிட்டு விட்டு வேறொரு இடத்திற்குப் போக நினைத்தான். போவதற்கு முன்னால் எப்படியாவது அந்தக் கோமாளி ராஜாவுக்குச் சரியான தண்டனை கொடுக்க வேண்டுமென்று நினைத்தான்.
அன்று நடுராத்தியில் அனைவரும் உறங்கியதும் நாசுவன், கத்தியை எடுத்துக்கொண்டு அரண்மனைக்குள் சத்தம் எதுவும் வராமல் பூனை மாதிரி நுழைந்தான். ஒவ்வொரு அறையாகக் கடந்து… கடந்து… இறுதியாக ராஜா இருந்த அறையை அடைந்தான். ராஜா படுக்கையில் கிடந்து நிம்மதியாகக் குறட்டை விட்டுக்கொண்டிருந்தான். நாசுவன் மெதுவாகச் சத்தம் எதுவும் வராமல் ராஜாவுக்கு அருகில் சென்று கத்தியை எடுத்துத் தூக்கம் கெடாத மாதிரி சுத்தமாக வழித்து மொட்டை அடித்துவிட்டு, கையோடு மீசையையும் வழித்துவிட்டு அங்கிருந்து வந்த வழியில் வந்தவாறே சென்றான்.
காலையிலே கோமாளி ராஜா எழுந்து வேப்பங்குச்சியில் பல் துலக்கிக்கொண்டே கண்ணாடியில் பார்த்தான். அதில் சுத்தமாக வழித்தெடுத்த தலைமுடி, மீசை இல்லாமல் இருந்தது. உடனே ராஜா அதிர்ந்துபோய் “அடடே. எவனோ ராத்தியோட ராத்திரியா என் தலயை எடுத்துட்டு வேற எவன் தலையையோ வைச்சது போல இருக்கே” என்று நினைத்தான். உடனே மந்திரியை வரவழைத்து “என் தலயை எவனோ எடுத்துட்டுப் போயிட்டான். உடனே படை வீரர்களை நாடு முழுவதும் மூலைமூலைக்கு அனுப்பித் தேட வைங்க. ஒரு வாரத்துக்குள்ள தலை மட்டும் எனக்குத் திரும்ப கிடைக்கல.. உங்க எல்லார் தலையையும் எடுத்திருவேன்” என்று மிரட்டினான்.
மந்திரிக்கு என்ன செய்வதென்றே விளங்கவில்லை. இந்தப் பைத்தியக்காரன் ஏதாவது சொன்னான் என்றால் கண்டிப்பாகச் செய்தே தீருவான். இவனுக்கு விசயத்தை எடுத்துச் சொன்னாலும் கொஞ்சங் கூட விளங்காது. இனி இவனை வைத்து ஒரு பிரயோஜனமும் இல்லை. எப்படியாவது இந்த ராஜ்யம் இவனிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று எண்ணினான். கையோடு ஒரு பொம்மை செய்பவரிடம் சென்று அப்படியே அச்சு அசலாக ராஜா தலை மாதிரியே இருக்கிற ஒரு பொம்மைத் தலையை செய்து எடுத்துக்கொண்டு ராஜாவிடம் வந்தான்.
ராஜா அதைப் பார்த்துச் சந்தோஷப்பட்டு “உடனே இந்த மொட்டைத் தலயை எடுத்துட்டு என் தலயை எனக்கு வைங்க” என்று கத்தி எடுத்துத் தன் தலையைத் தானே வெட்டிக்கொண்டு செத்துப்போனான். அந்தக் கோமாளி ராஜாவோட தொல்லை ஒழிந்ததை எண்ணி ஊர்மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் கொண்டாடினர்.