Home இலக்கியம்தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 1 – மொழியாக்கம்

தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 1 – மொழியாக்கம்

by திருவை, Thiruvai
0 comments

குள்ளன்

ஒரு ஊரில் ஒரு கிழவி இருந்தாள். அந்தக் கிழவி தினமும் காலையிலே வீட்டு முற்றத்தைச் சுத்தமாகப் பெருக்கிச் சாணம் தெளித்து அழகாகக் கோலம் இடுவாள். ஒருநாள் வீட்டு முற்றத்தில் பெருக்கிக் கொண்டிருந்தபோது, வெள்ளையாகக் கோழி முட்டை ஒன்று பளபளவென மின்னுவதைக் கண்டாள். கிழவி அதை எடுத்து வந்து அடை போடலாம் என்று அடுப்பில் வைத்தாள். தோசைக்கல் சலசலசல என்று நன்றாகச் சூடேறியதும் உடைப்பதற்காக முட்டையைக் கையில் எடுத்தாள்.

‎அதற்கிடையில்… அதன் உள்ளே இருந்து, “பாட்டி… பாட்டி… பாத்து… கொஞ்சம் மெதுவா ஒடை” என்று சத்தம் வந்தது. “இது என்னடா பா? கோழி முட்டை பேசுகிறதே!” என்று ஆச்சரியப்பட்டு, அதைக் கவனமாக எடுத்து மெதுவாக உடைத்தாள். அவ்வளவுதான்… உள்ளே இருந்து நம் கட்டைவிரல் அளவுக்குச் சிறிய குள்ளன் கலகலகலவெனச் சிரித்துக்கொண்டே வெளியே வந்தான். கிழவி அவனைக் கவனமாகக் கையில் எடுத்து, வெந்நீர் போட்டு தலைக்குக் குளிப்பாட்டினாள்… மென்மையான துணியால் சுத்தமாகத் துடைத்து… அழகாக உச்சி எடுத்து வாரி முத்தமிட்டாள்.

‎குள்ளன் இருப்பது பெருவிரல் அளவுக்குதான் இல்லையா… அப்புறம் அவனுக்குத் துணிகள் எப்படி? கிழவி அவனுக்காக வண்ண வண்ணத் துணிக் கந்தல்களை எடுத்து வந்து சின்ன அங்கி, சின்ன பேண்ட், சின்ன தொப்பி தைத்துக் கொடுத்தாள். அவன், வண்ண வண்ண பேண்டையும் அங்கியையும் போட்டுக் கொண்டு, தலையில் தொப்பியையும் அணிந்து , “என் செல்ல பாட்டி” என்று மகிழ்ச்சியோடு பாட்டியை முத்தமிட்டான்.

‎குள்ளன் ஒரு நாள் வீட்டில் திரிந்து கொண்டிருந்தபோது, ஒரு மூலையில் சில மரத் துண்டுகளைக் கண்டான். அவற்றையெல்லாம் ஓரிடத்தில் சேர்த்து உளி, ரம்பம், சுத்தி கொண்டு வந்து கஷ்டப்பட்டு ஒரு சிறிய வண்டியைத் தயார் செய்தான். வண்டிக்கு நல்ல வண்ணம் அடித்து, பூக்களைக் கட்டினான். இரண்டு எலிகளைப் பிடித்துக்கொண்டு வந்து வண்டிக்குக் கட்டினான்.

‎கட்டியதும் வண்டி மேலேறி சல்சல் என்று மகிழ்ச்சியாகத் தெருவில் அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருந்த போது, வழியில் அவனுக்கு ஓரிடத்தில் செப்பு நாணயம் ஒன்று கிடைத்தது. அதை எடுத்து வந்து கிழவியிடம் கொடுத்தான். அதைப் பார்த்து கிழவி, “அடேய்… செப்பு நாணயம் கிடைக்கிறவனுக்கு ராஜா மவளோடு கல்யாணம் நடக்குமாம்… போ… போயி… அதை முடிச்சிட்டு வா.. போ” என்றாள்.

‎குள்ளன், சரியென்று கிழவி காலைத் தொட்டு ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு, வண்டியில் ஏறி ராஜா மகளைக் கல்யாணம் செய்து கொள்வதற்காகப் புறப்பட்டான். அப்படிச் சென்று கொண்டிருந்தபோது, வழியில் ஒரு கருப்புப் பூனை எதிரில் வந்து “குட்டிப் பையா… குட்டிப் பையா… எங்க போற?” என்று கேட்டது. அதற்கு அவன், “ராஜா மவளைக் கல்யாணம் பண்றதுக்காக” என்று கூறினான். “அப்படினா நானும் வறேன்… என்னையும் கூட்டிட்டுப் போ” என்றது அந்தப் பூனை.

‎அவன் சரியென்று தலையசைத்து “இந்தக் காதுல ஏறிக்கோ” என்று அதனை இடது காதில் ஏற்றிக் கொண்டான்.

‎மீண்டும் போய்க் கொண்டிருந்த போது, வழியில் ஒரு சிறுத்தைப் புலி எதிரில் வந்து”குட்டிப் பையா… குட்டிப் பையா… எங்க போற?” என்று கேட்டது. அதற்கு அவன், “ராஜா மவளைக் கல்யாணம் பண்றதுக்காக” என்று கூறினான். “அப்படினா நானும் வறேன்… என்னையும் கூட்டிட்டுப் போ” என்றது அந்தப் புலி. அவன் சரியென்று தலையசைத்து அதனை வலது காதில் ஏற்றிக் கொண்டான்.

‎மீண்டும் பக்குவமாய் சல்சல்லென்று எலிகளை விரட்டிப் போய்க் கொண்டிருந்தபோது, வழியில் ஒரு சமுத்திரம் அளவிற்குப் பெரிய குளம் குறுக்கே வந்தது.

‎குள்ளன் என்றால் சாதாரண குள்ளனா? பெரிய மாயக்காரன் இல்லையா!. உடனே வாயைத் திறந்து அந்தப் பெரிய குளத்திலிருந்த நீரையெல்லாம் ஒரு துளிகூட மிச்சம் வைக்காமல் சர்ரென்று வயிற்றில் உறிந்து வைத்துக் கொண்டான். மீண்டும் சல்சல்லென்று எலிகளை விரட்டி சாயந்தரத்திற்கு எல்லாம் ராஜ்யத்தை வந்து அடைந்தான்.

‎ராஜா அரசவையில் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார்… குள்ளன் அப்படியே உள்ளே நுழையப் போனான், வீரர்கள் மறித்து உள்ளே அனுமதிக்கவில்லை. அவன், சரியென்று மெதுவாக வண்டியைப் பின்னால் திருப்பி ஒரேமுறையில் சர்ரென்று எலிகளை விரட்டி, கண்ணை மூடித் திறப்பதற்குள் வீரர்கள் காலுக்கிடையில் ரிவ்வென்று உள் நுழைந்து அரசவையின் நடுவில் வண்டியை நிறுத்தினான். ராஜா அவனைப் பார்த்து கண்கள் சிவக்க “யார்ரா நீ… என் அனுமதியில்லாம முன்னால வந்து நிக்குற ?” என்றான் கோபமாக. அதற்கு, அவன் வண்டியிலிருந்து இறங்கி, துளியும் பயம் இல்லாமல், “ராஜா… நான் உன் மவளைக் கல்யாணம் பண்றதுக்காக வந்துருக்கேன், எனக்கு உன் மவளை ஒழுங்கா கல்யாணம் பண்ணி வையி” என்றான்.

‎அதைக் கேட்டதும் ராஜாவிற்குத் தலையே சுற்றியது. அவனைக் கோபத்தோடு இறங்க இறங்க பார்த்து, “பெருவிரல் அளவுக்கு கூட இல்லை, உனக்கு என் மவ வேணுமா… ஏய், யார் அங்கே?” என்றான். உடனே வீரர்கள் ஓடி வந்தனர். “ஏய்… இவனைத் தூக்கிட்டுப் போயி நம்ம கோழிப் பண்ணைக்குள்ள போடுங்கடா… இவனை அதுங்க கொத்திக் கொத்தியே சாவடிச்சிரும்” என்றான். சரியென்று வீரர்கள் அவனைப் பிடித்துச் சென்று கோழிப் பண்ணைக்குள் தூக்கி வீசினர்.

‎கோழிகள் எல்லாம் ஒரே நேரத்தில் குள்ளனைப் பார்த்தன. “கொக்கரக்கோ” என்று கத்திக்கொண்டு கொத்துவதற்காக முன்னால் ஓடி வந்தன. உடனே அவன் இடது காதில் இருந்த பூனையை அழைத்தான். அவ்வளவுதான், அது “மியாவ்” என்று பயங்கரமாகக் கத்திக்கொண்டு தாவி கோழிகள் மேல் பாய்ந்தது. வேற என்ன… கோழிகள் எல்லாம் ஒரே ஓட்டமோ ஓட்டம். பூனை அவற்றைத் துரத்திப் பிடித்து, ‘கிடைத்துப்போச்சு’ என்று எல்லாவற்றையும் சுத்தமாகக் கொன்று தின்றது. காலையிலே வீரர்கள் வந்தனர். பார்த்தால் வேறு என்ன? குள்ளன் நிம்மதியாக கலகலனு சிரித்துக்கொண்டு குஜாலாக இருந்தான். வீரர்கள் ஓடோடி… ராஜாவிடம் சென்று, “ராஜா… ராஜா… அந்தக் குள்ளன் சாதாரண ஆள் இல்ல. நம்ம கோழிங்க எல்லாத்தையும் ஒன்னு கூட மிச்சம் வைக்காம கொன்னு தின்னுட்டான்”. என்று கூறினர்.

‎ராஜாக்கு கோபம் அதிகமானது. “அப்படியா…அப்டினா அவனைப் பிடிச்சிட்டு போயி நம்ம காளை மாட்டுத் தொழுவத்துல போடுங்கடா” என்றான். வீரர்கள் அப்படியே ஆகட்டும் என்று குள்ளனைப் பிடித்துச் சென்று காளைமாட்டுத் தொழுவத்தில் வீசி எறிந்தனர். காளைகள் என்றால் சாதாரணமானவை கிடையாது. ராஜாவின் காளைகள். நல்லா தின்னுத் தின்னு, பருத்துக் கொழுத்துப் போயி ஒவ்வொன்றும் ஒரு யானை அளவிற்கு இருந்தன. குள்ளன் கொஞ்சம் கூட பதறவில்லை. உடனே வலது காதில் இருந்த சிறுத்தைப் புலியை அழைத்தான்.

‎அவ்வளவுதான்… சிறுத்தை உறுமிக்கொண்டே தாவி, காளைகள் மேல் பாய்ந்தது. புலியைக் கண்டதும் காளைகள் எல்லாம் ஓட்டமோ ஓட்டம். புலி அவற்றைத் துரத்தித் துரத்தி, ‘கிடைத்துப்போச்சு’ எனக் கொன்று தின்றது. அடுத்த நாள் காலையிலே வீரர்கள் வந்து பார்த்தனர். பார்த்தால் வேறு என்ன? குள்ளன் நிம்மதியாகக் கலகலனு சிரித்துக்கொண்டு இருந்தான். வீரர்கள் ஓடோடி… ராஜாவிடம் சென்று, “ராஜா… ராஜா… அந்தக் குள்ளன் நம்ம காளைகளக் கூட கொன்னுத் தின்னுட்டான்”. என்று கூறினர். ராஜா ஆச்சரியப்பட்டு, “அப்படி இருக்காது, இருந்தாலும்… அவனைத் தூக்கிட்டுப் போயி நெருப்புல போட்டு சுட்டெரிங்கடா?” என்றான்.

‎வீரர்கள் குள்ளனைப் பிடித்துக்கொண்டு போயி, பெரிய காய்ந்த புல் படுக்கை மேல் போட்டு… கடுகு எண்ணெய் எடுத்து வந்து படுக்கை முழுதும் நன்கு ஊற்றி தீ வைத்தனர். அவ்வளவுதான்… கடுமையாகப் பிடித்துக் கொண்டது. இருந்தாலும் குள்ளன் எதற்கும் பயப்படவில்லை. ஒரே முறையாக வயிற்றில் மறைத்து வைத்திருந்த நீர் எல்லாவற்றையும் மெதுவாக வெளியேற்ற ஆரம்பித்தான். தீ முழுவதும் அணைந்து போனது. அப்பொழுது கூட நீரை வெளியேற்றுவதை மட்டும் நிறுத்தவில்லை. வெளியேற்றிக் கொண்டே இருந்தான். நீர் வெளியேறிய வேகத்தில் அது வீடுகள், மரங்கள், பசுக்கள் எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு போனது. மக்கள் எல்லோரும் ஓட்டமும் நடையுமாய் ராஜாவிடம் சென்று “ராஜா… ராஜா… கொஞ்சநேரம் விட்டா ராஜ்யம் முழுக்க முங்கிப்போயி எல்லாரும் செத்துப் போயிடுவோம் போல இருக்கு. நீங்கதான் எப்படியாவது எங்களக் காப்பாத்தணும்” என்று கண்ணீர் வடித்தனர்.

‎ராஜா, குள்ளன் சாதாரண ஆள் இல்லை.. என்பதை உணர்ந்தான். விரைந்து… குள்ளனிடம் சென்று “தப்பு நடந்துடுச்சு, என்னை மன்னிச்சிடு. என் மவளை உனக்கே கல்யாணம் பண்ணி வைக்குறேன். என் ராஜ்யத்தைத் துவம்சம் பண்ணாத” என்று பணிவாகக் கேட்டான். அப்போது குள்ளன், சரியென்று நீர் எல்லாவற்றையும் பழையவாறு உறிஞ்சிக் கொண்டான். ராஜா கொடுத்த வாக்குப்படி பல்லக்கின் மேல் குள்ளனை ஏற்றி மேளதாளத்தோடு ராஜ சபைக்கு அழைத்து வந்தான். அடுத்த நாள் மக்கள் அனைவரையும் அழைத்து பூமி அளவு மேடையும், ஆகாசம் நிறைய பந்தலும் போட்டு, ஏழேழு பதினான்கு லோகமும் அதிர்ந்து போகிற மாதிரி பிரம்மாண்டமாகக் கல்யாணம் செய்து வைத்தார்.

Author

  • திருவை, Thiruvai

    மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற 'திராவிடன் பல்கலைக் கழகம்' இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். 'ஒப்பாய்வு நோக்கில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கீர்த்தனைகளும் பக்த இராமதாசு கீர்த்தனைகளும்' எனும் தலைப்பில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தெலுங்கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

You may also like

Leave a Comment