Home இலக்கியம்தென்றலோடு கண்ணாமூச்சி.. – பூனையின் பொழுதுகள் 

தென்றலோடு கண்ணாமூச்சி.. – பூனையின் பொழுதுகள் 

by Ramalakshmi Rajan
0 comments

1. தரையில் வெயில்

சூட்டில் சுருளும் பூனை

ஓய்வெடுக்கும் நண்பகல்.

2. நடுநிசி சன்னல் ஓரம்

நிலவொளியில் பதியும் பாதம்

களவு போகும் இரவு.

3. சருகுகள் நகரும் ஒலி

தீயாகத் துடிக்கும் வால் 

வேட்டைக்காரனைத் தூண்டும் காற்று.

4. தீண்டப்படாத பால் கிண்ணம், 

தூரத்து ஒலியில் துடிக்கும் மீசை 

பசியின் தவம்.

5. கண்ணாடியைத் தட்டும் மழை

துளித்துளியாய் ரசிக்கும் பூனை

விளையாட்டாகும் புயல்.

6. காகிதப் பையின் சலசலப்பு

குப்புற விழும் பூனைக்குட்டி

அவிழும் மர்மம்.

7. மின்னும் பால் தட்டு

வருடும் நாக்கு 

நடனமாடும் பசி.

8. உருளும் நூற்கண்டு

துரத்தும் பாதங்கள்

சிரிக்கும் குழப்பம்.

9. மங்கும் மாலை

கொட்டாவிக்குள் சிறு உலகங்கள்

பச்சைச் கண்களுக்குள் பதுங்கும் பகல்.

10. காற்றில் உயரும் திரைச்சீலை 

பற்றியிழுக்கும் சிறு நகங்கள்

தென்றலோடு கண்ணாமூச்சி.

11. கூடையின் மூலை 

உறக்கத்தில் குட்டிகள்

உறுமும் மௌனம்.

12. மிதந்து வரும் இறகு

மீண்டும் தவறும் பாய்ச்சல்

சிறகு விரிக்கும் கனவு.

Author

  • Ramalakshmi Rajan

    எழுத்தாளர், கவிஞர், ஒளிப்படக் கலைஞர். பெங்களூரில் வசிக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை மற்றும் ஆய்வு நிறைஞர் பட்டங்கள் பெற்றவர். சொந்த ஊர் நெல்லை. தனது வலைப்பூ மற்றும் இணைய இதழ்கள், சிற்றிதழ்கள், பத்திரிகைகளில் எழுதி வருகிறார். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நூல் விமர்சனம், ஒளிப்படம் ஆகிய பல தளங்களில் இயங்கி வருகிறார். இவரது ‘இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்பு, ‘மு.ஜீவானந்தம்’ இலக்கியப் பரிசையும், ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய' விருதையும் பெற்றுள்ளது. ‘அடை மழை’ சிறுகதைத் தொகுப்பு ‘திருப்பூர் அரிமா சக்தி’ விருதைப் பெற்றுள்ளது. இவர் எடுத்த ஒளிப்படங்களும் பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அட்டை முகப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

You may also like

Leave a Comment