Home சிறுகதைதிரைச்சீலை

திரைச்சீலை

0 comments

வாருங்கள்! நான் நன்றாக இருக்கும்போது வந்திருக்கக்கூடாதா.

உள்நாட்டுக் கலகம், ஃபிறங்கீக்களை எதிர்த்து சிப்பாய்க்கலகம் எல்லாவற்றிலும் உருக்குலைந்து எனக்குப் பிரியமான உம்ராவ் ஜான் அதா வையும் பிரிந்து தனியாகத் தொங்கிக்கொண்டிருக்கும் இந்தவேளையில் வந்திருக்கிறீர்களே!

பரவாயில்லை அமருங்கள். முன்பென்றால் அஜ்மீர் குவளைகளில் கீர் (பாயாசம்) கொடுத்திருப்பார்கள், கொஞ்சம் பொறுங்கள் எவனாவது ஃபிறங்கீ (வெள்ளைக்காரன்) ஆணையிட்டால் வேலைக்காரன் பீங்கானில் தேநீர் கொண்டு வருவான். இவர்களும் இவர்கள் தேநீரும். உம்ராவுக்கு இதெல்லாம் பிடிக்காது தெரியுமோ. பீங்கானிலெல்லாம் அவள் தேநீர் தரமாட்டாள். பாரம்பரியம் அவளுக்கு மிகவும் முக்கியம். அப்படித்தானே உருதுவில் உருகி உருகி கஜல்களாக எழுதிவைத்தாள்.

நவாப் சுல்தான் அவள் கஜலைக் கேட்டுதான் உள்ளே வந்தான். தில் சீஸ் க்யாஹை ஆப் மேரி ஜான் லீஜியே (உள்ளம் என்ன உள்ளம் என் உயிரை வாங்கிடு), அவள் பாடிய வரிகளை படுபாவி கவ்ஹர் மீர்ஸா தனது வரிகளாக்கி புளுகு மூட்டையை அவிழ்த்தான். சுல்தான் ஏற்கெனவே வரிகளைக் கேட்டுவிட்டானே, கவ்ஹர் மீர்ஸாவைப் பிடித்து உலுக்கியதும் வேலையைக் காட்டிவிட்டான். உம்ராவைப் புகழ்ந்து சொல்லி சுல்தானின் மனதில் ஆசையைத் தூண்டி, எனக்கும் உம்ராவுக்கும் நடுவில் பிளவைக் கொண்டுவந்தான்.

விதி எல்லாம் விதி. சுல்தானுக்கு முஜ்ராதான் பார்க்கவேண்டுமென்றால் காஸிப்பூர் போயிருக்கலாமே. உஸ்தாத்களின் ஜப்தாலுக்கு அபிநயிக்கும் யார் மீதாவது பிரியப்பட்டிருக்கலாமே. லக்னவ் வீதிகளில் வேறு ஹவேலிகளே (மாளிகைகளே) இல்லையா. சுல்தானின் சாரட்டில் பூட்டப்பட்டிருந்த குதிரையும் எனக்கு எதிராகவே சதி செய்திருக்கிறது. இதோ இந்த ஹவேலியின் வாசலில்தான் மந்திரம் போட்டதுபோல் நின்றது. தலையை ஆட்டியாட்டி நின்று என் உம்ராவின் பாடலை நவாப் சுல்தான் கேட்டு முடிக்கும் வரையில் ஒரு அடி நகரவில்லை, ஹைவான் (மிருகம்).

நல்ல கஜல் வரிகள் கிடைத்தால் போதும், உம்ராவ் அதை முணுமுணுத்துக்கொண்டே நிலையில் சாய்ந்திருந்து சுட்டு விரலில் என்னைச் சுற்றிச்சுற்றி அவிழ்ப்பாள். பம்பரத்தில் சாட்டையைச் சுற்றுவதுபோல் அடுக்கடுக்கான வரிகளாக இல்லாமல் கோணல்மாணலாக இருந்தாலும் அழகாக இருப்பேன், சுற்றப்படுவது அவள் விரலில் அல்லவா. கடைசிச் சுற்றில் நான் நிற்கும்போது சுட்டுவிரலின் நுனியைப் பார்ப்பேன், சிவந்து போயிருக்கும், அவளுக்குத் தெரியாமல் லேசாக வருடிக்கொடுத்துவிடுவேன். மருதாணிச் சிவப்பும் இரத்தம் கன்றிய சிவப்புமாக ரோஜாவையே தோற்கடிக்கும் நிறத்தில் அப்பப்பா விரல்களா அவை.

உள்ளே வரும் வழியில் என்னை விலக்கும்போது அந்த விரல்களில் அழுத்தம் கொடுக்கக்கூடாதென்று அவள் தொடும் முன்னரே வழுவி வழிவிடத்தான் விருப்பம், என்ன செய்வது என்னால் முடியாது. சில நேரங்களில் வேண்டுமென்றே அடம்பிடிப்பேன். போகும்போதும் வரும்போதும் முரண்டு பிடிப்பேன். நகராமல் இருப்பேன். உச்சியில் சிக்கிக்கொண்டேனோ என்னவோ என்று நினைத்து நான்கைந்துமுறை அசைத்துப் பார்த்தால் புன்னகைத்துக்கொண்டே வழிவிடுவேன். குறும்பு செய்யும் உரிமை மனிதர்களுக்கு மட்டுமன்று.

எனது உம்ராவை எப்படியெல்லாம் பார்த்துக்கொண்டேன். அவள் தூங்கும்போது தென்றல் வருவதற்கு நான் தடையாக நின்றதே இல்லை. வழிவிட்டு ஒதுங்கிக்கொள்வேன். பதினான்காம் இரவின் நிலவொளியில் அவள் முகத்தைப் பார்க்கவேண்டி, வேண்டுமென்றே அசைந்து அசைந்து ஒளியை அவள் முகத்தில் விழவைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன். சில நேரங்களில் கனவான்களின் பிரத்யோக அழைப்புக்காக கானும் பேகம் ‘உம்ராவ்’ என்று நைச்சியமாக அழைப்பாள். பேதைப் பெண் உம்ராவும் கலைப்பித்துப் பிடித்து வெங்காயச் சருகு மேலாடை படபடக்க ஓடுவாள். எதேச்சையாக சிக்கிக் கொள்வதைப் போல மேலாடையைப் பிடித்துக் கொள்வேன். அவசர அவசரமாக விலக்கிவிட்டு ஓடுவாள். ஆடிக்களைத்து மூச்சுவாங்கிக்கொண்டே திரும்பி வருவாள். ஆயாசத்துடன் அவள் படுக்கையில் வீழ்ந்த போதெல்லாம் நான் கண்ணியமாக விழிகளை மூடிக்கொண்டது சத்தியம். நவாப் சுல்தானுடன் உம்ராவின் நெருக்கம் அதிகமான பொழுதுகளில் அழுகையால் கண்களை மூடிக்கொண்டதும் சத்தியம்.

சொல்லிய காதல் நிராகரிக்கப்பட்டால் கிடைக்கும் வலியைவிடவும் சொல்லாத காதல் மனதிற்குள்ளே மரித்துப்போகும் வலி அதிகமானது. பிரசவத்தின் பின் குழந்தை மரிப்பதற்கும், கர்ப்பத்திலேயே மரித்துப்போவதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா. என் காதல் கர்ப்பத்தில் மரித்த குழந்தை. வேதனையில் வெடித்தேன். பணிப்பெண் தீபத்தைக் கொண்டு வந்தபோது காற்றைத் துணைக்கழைத்து தாவியோடி தீபத்தின்மேல் விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்தேன். முட்டாள் காற்று என்னைத் தூக்கிச் சென்றதோடு மட்டுமல்லவா நின்றிருக்கவேண்டும், கூடவே தொடர்ந்து வந்து தீபத்தையும் அணைத்துவிட்டது. கரியும் புகைச்சல் மணமுமாக சாவின் நுழைவாயிலை மட்டுமே சுகிக்க முடிந்தது.

இன்னமும் நான் வாழ விதியிருக்கிறதுபோல. அன்றே நான் இறந்திருந்தால் மதராஸ் ராஜதானிக்காரர்களாகிய உங்களைச் சந்தித்திருக்க முடியுமா. மனதிலிருக்கும் பாரத்தை இறக்கியிருக்கமுடியுமா? நல்லவேளையாக நீங்கள் வந்தீர்கள். உங்களிடம் சொல்கிறேன். ம்ஹூம் வாஜித் அலி ஷா மட்டும் நாட்டியத்திலும் இசையிலும் கவனம் செலுத்திய அளவிற்கு ராஜதந்திரத்திலும் கவனம் செலுத்தியிருந்தாரென்றால் ஃபிறங்கீக்களுக்கு இப்படி வழிவிட்டிருக்கமாட்டார். தோற்பதுதான் தோற்போம் அதிகமான எதிர்ப்பைக் காட்டிவிட்டுத் தோற்போமே. பார்த்தீர்களா மனதின் பாரத்தை உங்களிடம் இறக்கிவைக்கப்போய் அது அவாத் அரசியலில் சென்று விடிகிறது.

அவாத் அரசியல் உம்ராவையும் பாதித்ததுதானே. காவலர்கள் மட்டும் டாக்கூவை தீர்த்துக்கட்டியிராவிட்டால் அவளும் தனிமரமாகியிருக்கமாட்டாள். அன்றிலிருந்து காத்திருக்கிறேன், யாரிடமாவது என் மனதிலிருக்க்கும் பாரத்தை இறக்கிவைக்கத் துடித்துக்கொண்டிருந்தேன். நவாப்கள் பெயரில் யார் யாரோ வந்தார்கள் சென்றார்கள், புரட்சிக்காரர்கள் வந்தார்கள் சென்றார்கள். யாருக்குமே கலையின் மேல் ஈர்ப்பில்லாமற்போனது. அரசியல் அரசியல் அரசியல் இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அதுமட்டும்தான். ஃபிறங்கீ சிப்பாய்களுக்காக வேறு எங்கோ முஜ்ராக்கள் நடக்கின்றன. கலையை விட்டுவிட்டு வேறெங்கோ போய்விட்டதாகப் பேசிக்கொள்கிறார்கள்.

அவள் இனிமேல் முஜ்ரா ஆடமாட்டாள். என்னைவிட்டு வெகுதூரம் போனதைப் போல் ஆட்டத்தையும்விட்டு நீண்ட தொலைவு சென்றுவிடுவாள். உம்ராவை நான் காதலித்ததைப் போலவே ஃபைசாபாத் மண்ணையும் காதலித்தேன். அவளைப் பெற்றெடுத்த ஊர் என்பதால் ஃபைசாபாத்தின் திசையிலிருந்து காற்று வீசும்போதெல்லாம் சிலிர்த்துப்போவேன். அது ஒரு காலம். இப்போது அப்படியல்ல. அந்தத் திசையிலிருந்து வரும் காற்றில் உம்ராவின் கண்ணீர்த் துளிகள் நிறைத்த உப்பின் நெடி அடிக்கிறது. வெக்கையாக இருக்கிறது. ஃபைசாபாத்தில்தான் அவள் சகோதரன் அவளைத் தரக்குறைவாகப் பேசினான். ‘ஆடிப் பிழைப்பதைவிட இறப்பதே மேல்’ என்றான். அந்த நொடியில் அவள் இறந்துபோனாள், உள்ளத்தால். நானும் துடிதுடித்துப்போனேன். உள்ளுக்குள்ளே குற்ற உணர்வு தலைதூக்கி ஆடியது. யாரிடமும் வாய்திறக்கவில்லை. அமைதி காத்தேன்.

என்னவென்று கேட்கிறீர்களா? தவறு என்னுடையதுதான். அழுகையில் மனது துடித்தாலும் அப்படி நினைத்திருக்கக்கூடாதுதான், நினைத்துவிட்டேன். காதலித்தவள் விலகிப்போனதை விதியென நினைத்து விட்டிருக்கலாம். கொம்பின் துணையில்லாமல் நேராக நிற்கமுடியாத நானெதற்கு உம்ராவைக் காதலிக்கவேண்டும், பிறகு தேவையில்லாத வருத்தத்தை மனதில் ஏற்றுக்கொள்ளவேண்டும், இது சாத்தியமாகுமா என அறிவுபூர்வமாக அணுகியா காதல் தோன்றும். அதுவாகத் தோன்றியது. மனதிற்குள் புடம்போட்டு பெரிதாக்கி மகிழ்ந்தேன், இல்லையென்றானது. அமைதியாக அழுது தொலைத்து வருத்தத்தை வழித்தெடுத்திருக்கலாம். செய்யவில்லையே, தவறாகவல்லவா நினைத்தேன்.

நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள் என் இதயத்தில் பூட்டிவைத்து புழுங்கிக்கொண்டிருக்கும் விஷயத்தை உங்களிடம் மட்டும் சொல்லப்போகிறேன். வேதனையின் வெளிப்பாட்டில் ஒரு நொடி…ஒரே ஒரு நொடியில் எனக்குக் கிடைக்காத உம்ரா யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று அவளுக்கு சாபமிட்டுத் தொலைத்துவிட்டேன். அதன் பின்னர் இன்று வரையில் மௌனவிரதம்தான் இருந்தேன். அழுதேன். அழுது என்ன பலன். அவள் துன்பப்படுவதால் நானும் துன்பப்பட்டு, இப்போது பாருங்கள் சீரழிந்து கிடக்கிறேன்.

அழுக்கு என் மேனியில் மட்டுமில்லை.

இற்றுப்போய்க் கிடக்கும் நான் இனி சாகலாம். எனது காதல் கதை என்னுடன் மடிந்துபோகாமல் காப்பாற்றிவிட்டேன். மரணத்தை வென்றுவிட்டேன். யாருமறியாமல் எங்கே அனைத்தும் இற்றுப்போய் என்னுடன் வீழ்ந்துவிடுமோ என நினைத்தேன், நீங்கள் வந்து காப்பாற்றினீர்கள். சற்றே எழுந்து அருகே வருகிறீர்களா? முக்கியமான இன்னொரு விஷயம் இருக்கிறது.

ஆம், அப்படித்தான் அருகே வாருங்கள். எனது மேனியில் உங்கள் இடுப்பளவு உயரத்தைக் கொஞ்சம் கூர்ந்து பார்க்கிறீர்களா? எதாவது புலப்படுகிறதா? அதுதான் அதேதான். அன்றைக்கு என்னில் சிக்கிக்கொண்ட உம்ராவின் தலைமுடியை இன்னமும் யாராலும் பிரிக்க முடியவில்லை. அதனால்தான் இத்தனை நாள் உயிர்வாழ்ந்து உங்களிடம் எனது கதையைச் சொல்லமுடிந்திருக்கிறது.

கனவானே! ஏன் அதனை என்னிலிருந்து பிரிக்கிறீர்கள்? ஹைய்யோ உம்ராவ்! உன்னை என்னிலிருந்து பிரிக்கிறார்கள். எனது கூக்குரல் உனக்குக் கேட்கிறதா? உம்ராவ்…

இற்றுப்போயிருந்த அந்தத் திரைச்சீலை பிடிப்பறுந்து தரையில் விழுந்தது.

‘என் காதல் கர்ப்பத்தில் மரித்த குழந்தை’ திரைச்சீலையின் வசனம் மாளிகையின் ஒவ்வொரு மூலையிலும் எதிரொலித்துக்கொண்டிருந்தது

Author

You may also like

Leave a Comment