வாழ்க்கை ஒரு புதிர்ப்பாதையைப் போல தனக்கான தனித்த வழிமுறைகளை கொண்டிருக்கிறது; யார் எவரென்று அறியாதவர்களை ஒன்றுசேர்க்கவும் பிறகு பிரிக்கவும்.
திரு – 3:16
பாதி ஒளியிலும் பாதி இருட்டிலுமாக மூழ்கிக் கிடந்தது அந்தப் பேருந்து நிறுத்தம். அதற்கு நேர் மேலே கிட்டத்தட்ட நீல நிறமாயிருந்த நிலா வானில் மிதந்து கொண்டிருந்தது. சன்னமாகத் தூறிக் கொண்டிருந்தது மழை. கூரையின் கீழ் எதிரெதிர் முனைகளில் அவர்கள் நின்றிருந்தார்கள் – அவன் ஒளியிலும் அவள் இருளிலும். நீண்டு கருத்த அவர்களின் நிழல்கள் பின்புறச் சுவரில் ஒன்றன் மேல் இன்னொன்றாக வீழ்ந்து கிடந்தன. முதன்முறை அவள் உச்சரிக்கப் போகும் சொற்களுக்காக அவன் காத்திருந்தான். வெகுநேரம் நீண்ட அவளின் மௌனம் அவனைப் பொறுமையின்றி தவிக்கச் செய்தது.
“உ.. உங்களுக்கு.. ஒரு உடற்பயிற்சி சொல்லித் தரட்டுமா?”
கிசுகிசுப்பான ரகசியம் பேசுவது போன்ற குரல். உடைந்த சங்கிலிருந்து வழியும் நீரைப் போல அவளுடைய வார்த்தைகள் அவனுக்குள் சொட்டுச்சொட்டாக இறங்கின. பதிலேதும் பேசாமல் ஒருகணம் அவன் மௌனமாயிருந்தான். முதன்முதலில் எதையெல்லாம் பேசக்கூடும் என செய்து வைத்திருந்த கற்பனைகள் எதிலும் சேராத அவள் வார்த்தைகள் உண்மையில் அவனைக் குழப்பத்தில் ஆழ்த்தின.
“ம்..”
“உங்க வலது கையை எடுத்து இடது தோளின் மீது வைத்துக் கொள்ளுங்கள்..”
காரணம் கேட்காமல் அவள் சொல்லியபடி செய்தான்.
“அதே மாதிரி இடது கையை வலது தோளின் மீது..”
“ம்..”
“இப்போது தோளை விட்டு விரல்களை எடுக்காம உங்க முழங்கைகளை மட்டும் உயர்த்துங்க..”
என்ன மாதிரியான விளையாட்டு இது? அவன் குழப்பம் இன்னும் அதிகமானது. என்றபோதும் அவளை மறுக்க மனம் ஒப்பவில்லை. கைகளை உயர்த்தினான். பெருக்கல்குறி போல முழங்கைகள் மார்புக்கு முன் நீண்டன. அவனுக்கும் கைகளுக்குமிடையேயிருந்த இடைவெளியைக் காற்று தன் மென்கரங்களால் நிரப்பியது.
தான் நின்ற இடத்தை விட்டு நகர்ந்து அவனை நெருங்கி வந்தாள் – தனது முகத்தை அவனால் தெளிவாகப் பார்க்க முடிந்த வெளிச்சத்துக்குள். அவள் கண்கள் ஈரமாயிருந்தன. இன்னுமதிகமாக அவன் முகத்தை நெருங்கி அதே கிசுகிசுக்கும் குரலில் சொன்னாள்.
“இந்தக் கைகளின் இடைவெளிக்குள் என்னை நான் ஒப்புக் கொடுத்து விட்டேன். உங்களால் அதை உணர முடியுதா?”
பாறைக்குடைவுகளுக்கு மத்தியில் ஓடும் ரயிலின் அதிர்வுகள் அவனுள். ஒரு பெண்ணால் தான் உண்மையாகக் காதலிக்கப்படுகிறோம் எனும் உணர்வு மனதுக்குள் ஆடும் பேயாட்டம். தனக்கான பேருந்து வர அவள் அதில் ஏறிக் கொண்டாள். பின்புறக் கண்ணாடியின் வழியே மங்கலாகத் தெரிந்த முகத்தைப் பார்த்தவாறு மகிழ்வின் தற்கணத்தில் உறைந்தவனாக அங்கேயே அவன் நின்றிருந்தான்.
கீழமாசி வீதியின் கடைகள் மிகுந்த பரபரப்போடு இயங்கிக் கொண்டிருந்தன. மணி இன்னும் எட்டு ஆகியிருக்கவில்லை. தனது கடையை விட்டு வெளியேறி வந்தவன் நம்பர் போட்ட மரக்கதவுகளை ஒவ்வொன்றாக எடுத்து அதனதன் இடத்தில் அடுக்கி பின்னர் அடிதண்டாவைக் கொண்டு தாழிட்டான். அதன் பிறகு முன்பக்க இரும்புக் கிராதிகளை இழுத்து விட்டு பூட்டைப் போட்டான். ஒரு முறைக்கு நான்கு முறை பூட்டை நன்றாக இழுத்துப் பார்த்து திருப்தியான பிறகே சாவிகளைக் கையிலிருந்த துணிப்பைக்குள் திணித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான். மனம் லேசாகிக் காற்றில் மிதப்பதைப் போல இருந்தது. வெகு நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த வடநாட்டு வியாபாரம் உறுதியாகி விட்டதைச் சொல்லும் தகவல் அன்று மாலைதான் அவனுக்கு வந்திருந்தது. தனக்குத்தானே உறுதி செய்து கொள்வதைப் போல சட்டைப்பைக்குள் இருந்த அலைபேசியை எடுத்து மீண்டுமொரு முறை அந்தத் தகவலை வாசித்தான். சின்னதாய் ஒரு புன்னகை உதடுகளில் அரும்பியது. பஜாரில் முதன்முதலாக வேலைக்குச் சேர்ந்த நாள் அவனுடைய நினைவில் இடறியது. அப்போது அவனுக்குப் பதினைந்து வயது கூட ஆகியிருக்கவில்லை. அப்பாவின் மரணத்துக்குப் பிறகு வீட்டின் முதல் பிள்ளையாக பொறுப்புகளை எல்லாம் அவன் விரும்பியே ஏற்றுக் கொண்டான். எடுபிடி வேலையாளாக உள்ளே .நுழைந்து இன்று சொந்தமாகத் தொழில் செய்யுமளவுக்கு வளர்ந்திருக்கிறோம் என்பதை நினைக்க உள்ளுக்குள் சற்றுப் பெருமையாகவும் இருந்தது. அவன் வேலை பார்த்த கடையின் முதலாளி அடிக்கடி சொல்வார். பஜார் என்பது உண்மையில் நாய்ச்சண்டை நடக்கும் இடம்தான். இங்கே, காலைகளும் மாலைகளும், சில நேரங்களில் நடுயிரவுபொழுதுகளும் கூட, அரூபமான வியாபாரப் பேச்சுகளால் நிறைந்திருக்கும். அவற்றைச் சரியாக மோப்பம் பிடிக்க முடியாதவனால் ஒருபோதும் நல்ல வியாபாரியாக வரவே முடியாது. அதிலும் வலிமையுள்ளவன் மட்டுமே தப்பிப்பிழைத்து மேலேறிப் போக முடியும். அப்படி தப்பிப் பிழைத்தவனாக தன்னை இன்று இந்த நிலையில் பார்க்க நேர்ந்தால் அவர் மிகவும் மகிழ்ந்திருப்பார் என்றெண்ணியவன் வழியில் தென்பட்ட தெரிந்த மனிதர்களிடமெல்லாம் உற்சாகமாக வணக்கம் சொல்லியபடியே நடந்தான்.
விளக்குத்தூணைச் சுற்றி பெரிய இடைவெளிகளுடன் அமைந்திருந்த மெர்க்குரி விளக்குகளின் பால்நிற ஒளி சாலையை குளிப்பாட்டிக் கொண்டிருந்தது. வழக்கமான கடையில் சிகரெட்டுகளை வாங்கிக் கொண்டு மகாலை நோக்கி நடக்கத் தொடங்கினான். தள்ளுவண்டியில் துணி வியாபாரம் செய்து கொண்டிருந்த வடநாட்டுக்காரன் பிள்ளையை வண்டிக்குக் கீழே தொட்டில் கட்டி அதில் படுக்கப் போட்டிருந்தான். வண்டிக்குச் சற்று தள்ளி கல்லு சந்தின் இருட்டுக்குள் இன்னும் சிலர் படுத்துக் கிடந்தார்கள். அவனோடு சேர்ந்து பிழைக்க வந்தவர்களாக இருக்கக்கூடும். பகல்பொழுதுகளில் வித்தியாசமான உடையலங்காரங்களோடு கையில் துணி மூட்டைகளுடன் பஜாரின் வீதிகளில் அவர்கள் சுற்றித்திரிவதை அவன் பார்த்திருக்கிறான். எந்த நம்பிக்கையில் இந்த மனிதர்கள் சொந்த மண்ணைப் பிரிந்து வந்து இங்கே கிடக்கிறார்கள் அல்லது இதில் கிடைப்பதைக் கொண்டு அவர்கள் பெரிதாக என்ன வாழ்ந்து விட முடியும் என்கிற சந்தேகம் எப்போதும் அவனுக்கு உண்டு. ஆனாலும் கூட, பெரிய பெரிய கடைகளின் பிரமாண்டங்களையும் விளம்பரங்களையும் மீறி இவர்களுக்கான வாழ்க்கையெனவும் ஒன்று இருக்கத்தான் செய்கிறது. ஒருகணம் யோசித்தவன் தானும் கிட்டத்தட்ட அவர்களைப் போலத்தானே என்று தனக்குள் சமாதானம் சொல்லிக் கொண்டான். யோசித்தபடியே நடந்து மகாலின் பின்பகுதியை அடைந்தவன் வெளிச்சம் படாத இருட்டுக்குள் மறைந்து சிகரெட்டைப் பற்ற வைத்தான். ஆழ்ந்து புகையை உள்ளிழுத்து வெளியேற்றிய அப்பொழுதின் சந்தோசத்தை அனுபவிப்பதைப் போல கண்களை மூடிக் கொண்டான்.
சட்டென்று எழுந்ததோர் குரல் அவனைக் கலைத்தது. யாராக இருந்தாலும் ஒரு கணம் திடுக்கிடும்படியான அதிகாரக்குரல். கண்களைத் திறந்தான்.
“டேய்.. யாருடா அது இன்னேரத்துக்கு.. இருட்டுக்குள்ள?”
மூன்று பேர் அங்கே நின்றிருந்தார்கள். காக்கி நிறச் சீருடையணிந்த பெண் போலிஸ்காரர்கள். பாதி இருள் கலந்த வெளிச்சத்தில் அவனால் அவர்களைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. அவர்களின் உருவம் மொத்தமும் நிழலாகத்தான் தெரிந்தது. ஆனால் அந்தக் குரலில் தொனித்த வெறுப்பையும் எரிச்சலையும் உணர முடிந்தது. இவனிருந்த திசையில் அவர்கள் மெல்ல நடந்து வர கையிலிருந்த சிகரெட்டை பின்புறம் மறைத்தவாறே முன்னால் வந்தான்.
“உன்னத்தாண்டா கேக்குறேன்.. யாரு நீ.. இன்னேரத்துல உனக்கு இங்கன என்ன வேலை.. ம்ம்?”
“இங்கதான் பஜார்ல கடை வச்சிருக்கேன் மேடம்.. பலசரக்கு மொத்த வியாபாரம். கடை சாத்திட்டு வீட்டுக்குக் கெளம்புறதுக்குச் செத்த முந்தி எப்பவும் இங்க வருவேன். கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு..”
“அதென்னடா இருட்டுக்குள்ள ரிலாக்ஸு..?”
அவர்களில் உயரதிகாரியைப் போலிருந்தவள் கேட்டாள். குரலில் சின்னதாகப் பரிகாசமும் கலந்திருந்தது.
“ஜல்குத் ராணி எவளையாவது கரெக்ட் பண்ணிப் போடலாம்னு வந்தியா..?”
அவன் பதறிப் போய் சிகரெட்டைக் கீழே போட்டான்.
“அய்யய்யோ.. அப்படி எல்லாம் இல்லைங்க. தெனமும் இங்க கொஞ்ச நேரம் அமைதியா உக்கார்ந்து இருந்துட்டுப் போயிருவேன். அவ்ளோதான்..”
அவனுடைய குரலில் இருந்த பரிதாபமும் கெஞ்சலும் அவர்களை இன்னும் உற்சாகம் கொள்ளச் செய்தது.
“பெரிய போதி தருமரு.. அமைதியா உக்காந்திருப்பாராமாம்.. இப்படி வெளில வாடா.. வெளிச்சத்துல உம்மூஞ்சியப் பார்ப்போம்..”
இருட்டிலிருந்து நகர்ந்து நால்வரும் தெருவிளக்கின் கீழே வந்து நின்றார்கள். இப்போது அவர்களின் முகத்தை அவனால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. வெறுப்பைத் தவிர வேறெந்த உணர்வையும் அறியாதவர்களென்பதைப் போல அவர்களுடைய முகங்கள் அத்தனை இறுக்கமாயிருந்தன. இரையின் மீது பாயக் காத்திருக்கும் மிருகமென அவர்களுடைய கண்களின் தீவிரத்தை எதிர்கொள்ள முடியாமல் தலையைக் குனிந்து கொண்டான். அவர்களில் ஒருத்தி அவனை அடையாளம் கண்டுகொண்டு மற்றவளிடம் சொன்னாள்.
“இவன நான் பாத்திருக்கேன் அக்கா.. வெத்திலைப்பேட்டை சந்துக்குள்ள கையில் பொட்டலங்களோட சுத்திக்கிட்டு இருப்பான்..”
அந்தப் பொட்டலங்கள் அவன் மற்ற கடைகளில் காட்ட எடுத்துப் போகும் பலசரக்கு மாதிரிகள் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். பலமுறை ரோந்து சுற்றும் சமயங்களில் அவர்களை அவன் பார்த்திருக்கிறான். என்றாலும் தெரியாதவளைப் போல மற்றவள் அவனிடம் திரும்பிக் கேட்டாள்.
“பொட்டலமா.. ஏண்டா கஞ்சா கிஞ்சா விக்குறியா?”
பதில் சொல்லாமல் மௌனமாக நின்றவனின் உடல் நடுங்கியது. முற்றிலும் கைவிடப்பட்ட நிலை. தெருவில் கடந்து போனவர்கெளெல்லாம் சில நிமிடங்கள் நின்று அவர்களை வேடிக்கை பார்த்துச் செல்வதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. சிகரெட் பழக்கம் பஜாருக்குள் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாதென்பதற்காகத்தான் அவன் மகாலுக்கு வருவான். ஆனால் இன்று அனைவரின் முன் இப்படி நிற்கும்படி ஆகிப்போனது. அவமானமும் துயரமும் நாற்றமெடுக்கும் பூச்சிகளைப் போலத் தன் உடலெங்கும் ஊர்வதை உணர்ந்தான். வேண்டுமென்றே வம்பிழுக்கிறார்கள் எனத் தெரிந்தும் ஏதும் செய்ய முடியாததை எண்ணி எரிச்சலாகவும் கோபமாகவும் வந்தது. முகத்தின் கடுமையை அவர்கள் பார்த்து விடக் கூடாதென்பதற்காகத் தலையை இன்னும் கீழே குனிந்து கொண்டான். இருந்தும் அவர்களில் ஒருத்தி அதைக் கண்டுகொண்டாள்.
“ஏய்.. என்ன மூஞ்சி எல்லாம் சிவக்குது.. அக்கா.. இங்க பாருங்க.. மைனர் சாருக்குக் கோபமெல்லாம் வருது..”
பெரிய நகைச்சுவையைக் கேட்டதுப்போல மூவரும் சத்தமாகச் சிரித்தார்கள். உரக்கச் சிரித்தவாறே உயரதிகாரியைப் போலிருந்தவள் கேட்டாள்.
“பேசாம இன்னிக்கு நைட்டு இவன ஸ்டேசனுக்குக் கொண்டு போயிருவோமா? நல்லா பொழுது போகும் போலத் தெரியுது..”
“வேண்டாம்க்கா.. அப்புறம் மறுநா காலைல பேப்பர்ல பெண் போலிஸால் கற்பழிக்கப்பட்டு இளைஞர் தற்கொலைன்னு நியூஸ் வரும்..”
மூவரும் மீண்டும் வெடித்துச் சிரித்தார்கள். எது குறித்தும் கவலை கொள்ளத் தேவையிராத அதிகாரத்தின் சிரிப்பு. அங்கிருந்து நகரவும் முடியாமல் என்ன செய்வதென்றும் தெரியாமல் அவர்களை நிமிர்ந்து பார்க்கவும் இயலாதவனாக உள்ளெல்லாம் பற்றியெரிய அவன் அப்படியே நின்றிருந்தான். வெகுநேரம் கழித்தே அவர்களின் சிரிப்பு அடங்கியது. முகத்தில் தேங்கி நின்ற மந்தகாசப் புன்னகையோடு அவர்களில் ஒருத்தி அவனை நெருங்கி வந்தாள்.
“இதுதான் உனக்கு பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங்.. இனிமேல் ராத்திரி நேரத்துல உன்ன இந்தப்பக்கம் நான் பார்க்கவே கூடாது. புரியுதா?”
சொல்லும்போதே சிரிப்பு மறைந்து அவள் முகம் இறுகியது. கண்கள் சுருங்கி இன்னும் கடுமையானவளாகத் தெரிந்தாள்.
“மீறிப் பார்த்தேன்.. உள்ள தூக்கி வச்சு ஓத்திருவேன்.. கெளம்புடா..”
அவன் பதற்றமாக அங்கிருந்து கிளம்பினான். முதுகுக்குப் பின்னால் அவர்கள் என்னமோ சொல்லிச் சிரிப்பது காதில் கேட்டாலும் திரும்பிப் பார்க்காமல் அவ்விடத்தை விட்டு அகன்றான்.
”தாயளி.. எப்படி வேகமா ஓடுறான் பாருக்கா..”
செண்ட்ரல் மார்க்கெட் வழியாக சிம்மக்கல்லுக்குப் போகும் சாலையில் வெக்கு வெக்கென்று நடந்து கொண்டிருந்தவனின் உடலில் நடுக்கம் இன்னும் மீதமிருந்தது. ஏதோவொரு பெருஞ்சுமை தன்னை அழுத்துவதாகத் தோன்றியது அவனுக்கு. அந்நாளின் ஒட்டுமொத்த சந்தோசத்தையும் கரையான்களைப் போல அவர்கள் அரித்துத் தின்றிருந்தார்கள். நாட்காட்டியின் தாளைக் கிழிப்பதுபோல இந்த நாளைத் தன் வாழ்விலிருந்து கிழித்து வீசி விட முடிந்தால் எத்தனை நன்றாயிருக்கும்? தலைகீழாகக் கொட்டிக் கவிழ்த்ததுபோல அம்மகிழ்ச்சியான தினம் இப்படி துயரத்துக்குள் சிக்குமென்பதை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. பஜாரில் வியாபாரத்தின் பொருட்டு பல விதமான அவமானங்களை அவன் ஏற்கனவே சந்தித்திருக்கிறான். அவற்றுக்குப் பின்னால் சில அர்த்தங்களும் காரணங்களும் இருந்தன என்பதால் பெரிதாக அவை அவனை பாதித்ததில்லை. ஆனால் எந்தவித காரணமும் இல்லாமல் இன்று சந்திக்க நேரிட்ட அவமானம் அவனை ஒட்டுமொத்தமாக அடித்துச் சாய்த்து கழிவிரக்கத்துக்குள் வீழ்த்தியிருந்தது. தனக்கு நேர்ந்ததை சக வியாபாரிகள் யாரும் பார்த்திருக்கக்கூடாது என்கிற பயமும் உள்ளுக்குள் இருந்தது. ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தால் தேவலாம் என எண்ணினான். தெரு விளக்குகளின் வெளிச்சத்துக்கு சிக்காமல் ஓரமாக அமைந்திருந்த பேருந்து நிறுத்தத்துக்குள் நுழைந்தான். பாக்கெட்டுக்குள் சிகரெட்டுக்காகத் துழாவும்போது அந்தக் குரல் கேட்டது. கிசுகிசுப்பான ரகசியம் பேசுவது போன்ற குரல்.
“வாழ்க்கைல இந்த மாதிரி கஷ்டமெல்லாம் உனக்கு மட்டும்தான்னு நினைச்சியா? இதை விட மோசமான விஷயம்லாம் உலகத்துல இருக்கதானே செய்யுது. அவமானத்தையே பார்க்காத ஆள்னு ஒலகத்துல யார் இருக்கா.. என்னையே எடுத்துக்கோ.. உனக்குத் தெரியாததா.. ஆனாலும் நாம வாழலியா என்ன.. எல்லாத்துக்கும் மனசுதான் காரணம். உன்னால நிச்சயமா இதிலிருந்து வெளியேறி வர முடியும். என்னை நம்பு. எதுன்னாலும் நானும் உன்கூட இருக்கேன்..”
நிறுத்தத்தின் மறுமுனை இருட்டுக்குள் நின்றிருந்த பெண் அலைபேசியில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தாள். அவன் உடல் மீண்டுமொரு முறை நடுங்கியது – இம்முறை மகிழ்ச்சியால். ஆசிர்வதிக்கப்பட்ட அவ்வார்த்தைகளை அவள் தனக்காக உச்சரித்தாள் என்றே அவன் நம்பினான். துயரம் தாளாது வானம் பார்த்துக் கிடப்பவனிடம் நட்சத்திரம் ஒன்று இறங்கி வந்து நெற்றியில் முத்தமிட்டு ஆற்றுப்படுத்தியதைப் போல அந்த வார்த்தைகள் அவனுடைய பாரத்தை வெகுவாகக் குறைத்திருந்தன. அடிபட்டு வீழ்ந்து கிடக்கும் பறவையில் நாவில் விழும் ஒற்றைத்துளி நீர். சற்று முன்பு வரை அவமானத்தின் தீயில் தகித்துக் கொண்டிருந்தவனின் உடல் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியது. மனம் லேசானது போல உணர்ந்தவன் அந்த வார்த்தைகளுக்குரிய பெண்ணின் முகத்தைப் பார்க்க விரும்பினான். அவள் போக வேண்டிய பேருந்து கொஞ்சம் தாமதமாக வரட்டும் எனவும் வேண்டிக் கொண்டான்.
பேசி முடித்து அலைபேசியைத் தன் கைப்பைக்குள் வைத்தவள் நிறுத்தத்துக்குள் வேறொருவனும் நிற்பதைப் பார்த்து அமைதியானாள். வெகு நேரம் ஆகியும் பேருந்து இன்னும் வந்திருக்கவில்லை. உள்ளுக்குள் ஏதோ குறுகுறுக்க மெல்ல நிமிர்ந்து பார்த்தபோது எதிர்த்திசையில் நிற்பவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. இருட்டில் நிற்பதைக் காட்டிலும் சற்று முன்னகர்ந்து வெளிச்சத்தில் நிற்கலாம் என எண்ணி அதற்காகத்தான் அவன் காத்திருக்கிறான் என்பதையறியாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.
வெளிச்சத்தில் அவளை முதன்முதலாகப் பார்த்தவனின் மனம் திடுக்கிட்டது. அவளுக்கு அதிகபட்சம் போனால் முப்பது வயதிருக்கலாம். காற்றைப் போல மெலிந்த கெச்சலான உடம்பு. நீலவானில் அங்கங்கே மிதக்கும் பஞ்சுப்பொதிகளைப் போல முகத்தில் பெரும்பாலான இடங்களில் வெண்ணிறத் தேமல்கள் பூத்திருந்தன. குட்டி குட்டி தேசங்களின் வரைபடங்கள் போல கைகள் மற்றும் உடலிலும் கூட. அந்தத் தேமல்களினூடாக ஓடிய நரம்புகள் சிவப்பு நிறத்தில் நெளிந்தன. மெல்ல சுதாரித்துக் கொண்டு அவளுடைய முகத்தை உற்று நோக்கினான். அகல நெற்றி. சுருள் சுருளான கேசம். அவற்றுள் முன்நெற்றியின் வலதுபுறம் ஒற்றைச் சுருள் மட்டும் ரேடியோவின் ஆண்டெனா கம்பியைப் போல நீட்டிக் கொண்டிருந்தது. இரு கண்களுக்கிடையே நெற்றிப்பொட்டும் நாசியும் மிகச்சரியாகச் சேருமிடத்தில் பெரிய வெட்டுக்காயம். கண்களின் ஓரத்தில் சற்றே ஈரம் கசிந்ததைப் போலத் தோன்றியது. ஒட்டிய கன்னங்கள். மேலுதடுகளைக் காட்டிலும் கீழுதடுகள் பெரிதாயிருந்தன. ஒப்பனைப் பூச்சுகள் ஏதுமற்ற எளிய முகம். முடிவற்ற அன்பின் ஒளியை வெளிப்படுத்திய கண்களின் கருணையும் அதோடு சேர்ந்து அவனைக் காப்பாற்ற வந்த தேவதையாக அவளை உணர்ந்தான். துயரத்தின் பாழ்கிணற்றிலிருந்து தன்னைக் கைதூக்கி விட்டதற்காக அவளிடம் போய் நன்றி சொல்லலாமா என்றெண்ணிக் கொண்டிருக்கும்போதே அவளுடைய பேருந்து வந்து நின்றது. அவசரமாக அதில் ஏறிக் கொண்டாள். அவள் நின்றிருந்த நேரத்தையும் ஏறிப்போன பேருந்தின் எண்ணையும் மனதுக்குள் குறித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
ஒவ்வொரு நாளும் அதன் பிறகு இரவு நேரங்களில் அந்தப் பேருந்து நிறுத்தத்துக்குச் செல்வது அவனுடைய வாடிக்கையாக மாறிப் போனது. நேரம் ஏழு முப்பதை நெருங்கும்போது அவள் வருவாள். நேராக நிறுத்தத்தின் இருட்டுக்குள் சென்று நின்று கொள்வாள். அவன் எதிர்ப்புறத்தில் அவள் தன் பார்வைக்குள் இருக்குமாறு நின்று கொள்வான். பேருந்தில் ஏறிப் போகும்வரை அவளைப் பார்த்துக் கொண்டு அங்கேயே நின்றிருப்பான். பிறகு வழக்கம்போலத் தன் வேலைகளைப் பார்க்கக் கிளம்புவான். பிராயத்தில் அவன் வயதொத்த பிள்ளைகளெல்லாம் பெண்களின் பின்னால் சுற்றிய சமயங்களில் அவன் பஜாருக்குள் வியாபாரத்துக்காக முட்டிமோதிக் கொண்டிருந்தான். வளர்ந்த பிறகும் எத்தனையோ பெண்கள் அவன் வாழ்வில் குறுக்கிட்டிருக்கிறார்கள். அவர்களிடம் உணர்வுபூர்வமாக எந்தவொரு தொடர்பையும் கொண்டிருப்பதை அவன் விரும்பியதில்லை. ஆனால் அவர்கள் யாரிடமும் உணராத ஒரு ஈர்ப்பு அவனுக்கு அவளிடமிருந்தது. அவளிடம் சென்று எதையும் பேச வேண்டும் என்றெல்லாம் அவனுக்குத் தோன்றவில்லை. அவளைப் பார்ப்பதும் அவளுடைய இருப்பும் அவனுக்குப் போதுமானதாக இருந்தது. அவளைப் பார்த்தால் மட்டுமே தனது நாள் முழுமையடைந்ததாக எண்ண ஆரம்பித்திருந்தான். பஜாருக்கு விடுமுறை நாட்களான ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வண்டியை எடுத்துக் கொண்டு பேருந்து நிறுத்தத்துக்கு வருவான். அவள் வர மாட்டாள் எனத் தெரிந்தாலும் சிறிது நேரம் அங்கு நின்றிருந்து விட்டு பிறகு கிளம்புவான். அவளைப் பார்க்க முடியாமல் செய்யும் ஞாயிற்றுக்கிழமைகளின் மீது சில பொழுதுகளில் கோபம் கூட வரும். ஆதங்கத்துடன் அவளைப் பார்க்கப்போகும் மறுநாளுக்காகக் காத்திருப்பான்.
பேருந்து நிறுத்தத்தில் தனக்காக ஒருவன் தினமும் காத்திருப்பதை அவளும் கவனித்துக் கொண்டுதானிருந்தாள். முதலில் பயமாக இருந்தது. அவனால் தனக்கும் தான் பார்க்கும் வேலைக்கும் சிக்கல் வருமோ என எண்ணினாள். இப்படியொரு சிக்கலிருப்பது தெரியவந்தால் வீட்டில் அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கக்கூடும். அவளை வேலைக்குப் போக வேண்டாம் என்று கூடச் சொல்லி விடலாம். ஆனால் தொடர்ந்த நாட்களில் அவளுடைய பயம் மெல்லத் தேய்ந்து போனது. அவனுடைய முகத்தைப் பார்த்தால் ஏதும் பிரச்சினை செய்யக்கூடியவனைப் போலத் தெரியவில்லை. கெடுதியின் சாயல் சிறிதுமற்ற எப்போதும் புன்னகை தேங்கி நிற்கும் சாந்தமான முகம். அமைதியாக வந்து நின்று விட்டு பேருந்து கிளம்பியவுடன் போய் விடுவான் என்பது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொரு முறை தன் முகத்தைப் பார்த்தவுடன் அவன் கண்கள் விரிவதையும் அதில் நிறையும் மகிழ்ச்சியும் உள்ளூர அவளுக்குக் கிளர்ச்சியைத் தந்தது. பொதுவாக அவளைப் பார்க்கும் யாரும் தலையைத் திருப்பிக் கொள்வார்கள், விலகிப் போவார்கள் அல்லது தொட்டிக்குள் நீந்தும் ஏதோ வினோதமான மீனைப் பார்ப்பது போல அவளை உற்று நோக்குவார்கள். இதில் தன்னுடைய தவறு என்ன என்பதாக மனதுக்குள் குமைந்து போவாள். ஆனால் அவனோ அவளுடைய கண்களுக்குள் பார்க்கிறவனாக இருந்தான். தன்னைப் பார்க்கும்போதெல்லாம் அவன் முகத்தில் தோன்றும் வாஞ்சை அவளுக்கு ஆறுதலையும் சந்தோசத்தையும் தந்தது. அவனிடம் அவளுக்கிருந்த எல்லாவிதத் தயக்கங்களும் நாளடைவில் காற்றோடு கரைந்து போயிருந்தன.
சில சமயங்களில் அவனோடு விளையாடிப் பார்க்கலாம் எனத் தோன்றினால் வேண்டுமென்றே நிறுத்தத்துக்கு தாமதமாக வருவாள். அல்லது சீக்கிரமே வந்தாலும் கூட அருகில் எங்காவது கடைக்குப் பின்னால் ஒளிந்து நின்று அவனை நோட்டமிடுவாள். பதற்றமாக கடிகாரத்தையும் அவள் வரக்கூடிய திசையையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டேயிருப்பான். அப்போது அவன் முகம் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளை அவளால் வார்த்தைகளால் விளக்கவியலாது. மறுநாள் உலகமே அழியப்போகிறதோ எனும் பதற்றம் அவனைப் பார்க்கும் யாரிடமும் தொற்றிக் கொள்ளும். இதற்கு மேலும் அவனை அலைக்கழிக்கக்கூடாது என எண்ணும் தருணத்தில் மெல்ல வெளியேறி நிறுத்தத்தை நோக்கி நடப்பாள். உலகையே வெற்றி கொண்டவனைப் போல ஒரு புன்னகை அவனுடைய உதடுகளில் வந்தமர பதற்றம் தணிந்து நிதானத்துக்கு வருவான். அதை ரசித்தவாறே பேருந்தில் ஏறிக் கொள்வாள். அவளுடைய இந்த விளையாட்டுகளை நாளடைவில் அவனும் புரிந்து கொண்டான். கடந்து போகும் போது ஒருவரைப் பார்த்து மற்றவர் புன்னகைகளை பரிமாறிக் கொள்ளத் தொடங்கினார்கள். பிறிதொரு நாளில், இருவரும் நிறுத்தத்தின் கூரையின் கீழ் அமைதியாக நின்றிருந்த பொழுதில், அவள் தன்னுடைய அலைபேசியை வெளியே எடுத்து யாரையோ அழைத்தாள். கிசுகிசுப்பான ரகசியம் பேசுவது போன்ற குரலில் நாந்தாக்கா பேசுறேன் கேக்குதா என்றவாறே மூன்று முறை தனது பெயரை அழுத்திச் சொன்னாள். அவன் அந்தப் பெயரைத் தன் மனதுக்குள் பொதிந்து கொண்டான்.
அவனுடைய கடையை எடுத்து வைக்க அன்று சற்று நேரம் அதிகமாகிப் போனது. பூட்டிக் கொண்டு பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். இப்போதெல்லாம் அவளை எண்ணி அவன் பதற்றம் கொள்ளுவதில்லை. அவன் வரத் தாமதமானால் கூட காத்திருந்து அவனைப் பார்த்தபிறகே அவள் பேருந்தில் ஏறிப் போவாள். சிரிப்பாக வந்தது. இது என்ன மாதிரியான உறவு அல்லது வருங்காலத்தில் என்னவாக இருக்கும் என்பதை அவனால் கணிக்க முடியவில்லை. ஆனால் என்றாவது ஒரு நாள் அவள் வராமல் போனால் தன்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதை மட்டும் அறிந்திருந்தான். அவளைப் பார்ப்பதும் சிரிப்பதுமாக மட்டுமேயிருக்கும் இந்தக் கணங்கள் வாழ்க்கை முழுதும் தொடருமாயின் அதுவே தனக்குப் போதும் என நம்பினான். வானம் மோடம் போட்டிருந்தது. இன்னொரு பருவத்துக்குள் நுழைந்து கொண்டிருப்பதை அறிவிப்பது போலக் காற்றில் காற்றில் குளிர்ச்சி கூடியிருந்தது. நடையை எட்டிப் போட்டான். நிறுத்தத்தை அவன் அடைந்தபோது மெலிதாகத் தூறல் போட ஆரம்பித்தத்து. அவன் நடந்து வரும் திசையில் கண்களை விதைத்தவளாக அவள் சற்று உள்தள்ளி நின்றிருந்தாள். அவனைப் பார்த்தவுடன் புன்னகைத்தாள். அவனும் சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்த தருணத்தில் மழை சட்டென்று பெரிதாக மாறியது. நிறுத்தத்திலிருந்து சற்று தொலைவில் சாலையில் ஒரு வயதான மனிதர் சாக்குப்பாயை விரித்து கடை போட்டிருந்தார். மழையில் இருந்து காய்கறிகளைக் காப்பாற்ற அவரும் அவருடைய மனைவியும் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்தவன் சட்டென்று சாலையில் இறங்கி ஓடினான். அவர்களோடு சேர்ந்து எல்லாவற்றையும் மூட்டை கட்டிக் கொண்டு எல்லோரும் நிறுத்தத்தின் கூரைக்குக் கீழே ஓடி வந்து நின்றார்கள். மழையின் நனைந்து விட்டவனிடம் வேண்டுமா என்பதைப் போல அவள் தன் கைக்குட்டையை நீட்டினாள். வேண்டாம் என மறுத்து விட்டு கைகளால் தலையைத் துடைத்துக் கொண்டான். திரும்பிப் பார்த்தபோது பெரியவர் தன் மனைவியிடம் ஏதோ சொல்ல அந்த அம்மா பெரிதாகச் சிரித்துக் கொண்டிருந்தது.
“என்ன அம்மா.. அய்யா என்ன சொல்றாங்க.. சிரிப்பாணி பலமா இருக்கே?”
பெரியவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.
“பழைய கதைடா தம்பி.. நாங்க சிறிசுகளாயிருந்த காலத்துக் கதை..”
அவன் அவள் புறமாகத் திரும்பினான். அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இளம்பிராயத்துல அம்மாவும் ரொம்ப அழகா இருந்திருப்பாங்க இல்லையா.. இதோ.. இவங்கள மாதிரியே..”
அவன் தன்னைச் சுட்டிப் பேசுவானென்பதை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை, அழகு என்ற வார்த்தையையும்.
சிறுவயது முதல் இரண்டு தரப்பட்ட மனிதர்களையே அவள் அறிந்திருந்தாள். கேலியும் ஏளனமுமாய் அவளைப் பார்ப்பவர்கள் ஒருபுறமெனில் அவள் ஒருபோதும் யாசித்திராத கருணையோடு நெருங்கி இம்சித்தவர்கள் மறுபுறம். தனக்கு வேண்டியதை மற்றவர்களுக்குப் புரிய வைக்க முயன்று தோற்ற பிறகு தன்னைச் சுற்றி கண்ணுக்குப் புலப்படாததொரு கோட்டையை அவள் எழுப்பிக் கொண்டாள். சுவர்களெங்கும் அவமானத்தின் தழும்புகள் படர்நத அவ்வரூபக் கோட்டையின் கதவுகளை முதன்முறையாக ஒருவன் உடைத்தெறிந்திருக்கிறான் என்பதை நம்ப மாட்டாமல் அவள் திணறினாள். முகம் சிவக்கத் தலையை குனிந்து கொண்டாள். மழை அவளுக்குள்ளும் பெய்யத் தொடங்கியது. மெல்ல அவனருகே நகர்ந்து போனாள்.
“உ.. உங்களுக்கு.. ஒரு உடற்பயிற்சி சொல்லித் தரட்டுமா?”
வைகையாற்றின் கிளைகள் போல செல்லூருக்குள் நெளிந்தோடிய பல குறுக்கு சந்துகளுக்குள் ஒன்றில் இருந்தது அவனது வீடு. சீருடையணிந்து பள்ளிக்குத் தயாராகி இருந்த குழந்தை தாளில் என்னவோ வரைந்து கொண்டிருந்தான். அவனுடைய மனைவி இருவருக்கும் உணவை கட்டிக் கொண்டிருந்தாள். உறக்கத்திலிருந்து எழுந்து சாவகாசமாக இருக்கையில் அமர்ந்து கொண்டவன் விளையாட்டாகக் கேட்டான்.
“என்னடா மகனே.. உங்கம்மா ஒத்தையா வேலை செய்ய ரொம்பச் செரமப்படுறா போல.. பேசாம அப்பா ஒரு சித்தியைக் கட்டிக் கூட்டியாந்திரவா?”
அவன் சொன்னதன் அர்த்தம் புரியாமல் குழந்தை ஒரு நொடி நிமிர்ந்து பார்த்து விட்டு மீண்டும் வரையத் தொடங்கியது. மனைவி என்ன சொல்கிறாள் என்பது போல அவள் பக்கமாகத் திரும்பினான். எந்த விகல்பமுமில்லாமல் அவள் சிரித்துக் கொண்டே பதில் சொன்னாள்.
“மொதல்ல அதைச் செய்ங்க.. உங்களுக்குப் புண்ணியமாப் போவும்.. புதுசா வர்றவ உங்களையும் வேலைகளையும் பார்த்துக்கிட்டா நான் குழந்தைய இன்னும் நல்லாப் பார்த்துக்குவேன்ல..”
அவனுக்குச் சுருக்கென்றது. அவளுடைய இயல்பை அவன் நன்கறிவான். அவள் இப்படித்தான் சொல்வாளென்பது அவனுக்குத் தெரியும். ஆனாலும் நூற்றில் ஒரு முறை மாற்றிச் சொல்ல மாட்டாளா என்கிற ஏக்கம் அவனுக்குள் இருந்தது. இன்னொரு பெண் மீது தனக்கிருக்கும் ஈர்ப்பு தெரிய வந்தால் அவளுடைய எதிர்வினை என்னவாக இருக்குமென்பதை அறிந்து கொள்ள விரும்பினான். ஆனால் அதற்கான துளி வாய்ப்பையும் அவள் தருவதாயில்லை. ஒரு முறை குழந்தைக்கு முடியிறக்குவதற்காக அழகர் திருவிழாவுக்கு அவர்களை அவன் அழைத்துப் போயிருந்தான். கூட்ட நெரிசலில் குழந்தை எங்கோ தவறி விட அவள் துடித்த துடிப்பை அருகிலிருந்து பார்த்தான். கொதிக்கும் வெயிலில் செருப்பு கூட அணியாமல் அடித்துக் கொண்டு அழுதவாறே வீதி வீதியாக அலைந்தாள். கடைசியில் போலிஸ்காரர்கள் குழந்தையை பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்த பிறகுதான் அவளுக்கு உயிரே வந்தது. அவன் மீதும் குழந்தையின் மீதும் அவளுக்கு இருந்த பிரியம் யாராலும் அளவிட முடியாதது. எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாத மனுஷி. அதுவே அவனுடைய குற்றவுணர்வை இன்னும் அதிகரிக்கச் செய்தது.
ஒரு வாரமாக அவள் பேருந்து நிறுத்தத்துக்கு வரவில்லை. அவன் தவித்துப் போனான். இரவுகளின் நிம்மதியாக உறங்க இயலவில்லை. அவள் ஏறிப்போகும் பேருந்தின் வழித்தடத்தை அவனறிவான். அதில் ஏறிச் சென்று தேடலாமா என எண்ணினான். ஆனால் எங்கு இறங்குவாளென்பது தெரியாத நிலையில் எங்கே என அவளைத் தேடுவது? உடம்புக்கு ஏதும் முடியவில்லையோ என்னவோ? அல்லது வேறு ஏதும் பிரச்சினையா? ரொம்பக் குழப்பமாக இருந்தது. கடையில் ஓய்வாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் நிறுத்தத்தில் போய் நிற்பான். அவள் வந்து போகாத சாலை உயிரற்றதாகத் தோற்றமளிக்கும். மீண்டும் அவளை ஒரேயொரு முறை பார்க்க முடிந்தால் கூட போதும் எனத் தோன்றும். ஆனால் சில ஆசைகள் வாழ்வில் நிறைவேற நாம் நிறைய இழக்க வேண்டியிருக்கும் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.
எப்போதும் போல மணி எட்டை நெருங்கிக் கொண்டிருக்க அவன் நிறுத்தத்துக்கு வந்தான். தான் வருவதற்கு முன்னால் வந்து தனக்காக அவள் காத்துக் கொண்டிருக்கக்கூடும் என்கிற நப்பாசையும் இருந்தது. ஆனால் அவளைக் காணவில்லை. சற்று தள்ளி மோட்டார் பைக்கில் ஒரு மனிதன் இரண்டு குழந்தைகளோடு நின்றிருந்தான். அந்தக் குழந்தைகளின் முகம் அவனுக்கு நன்றாகத் தெரிந்த யாரோவொருவரின் சாயலைக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. இரண்டும் பெண் குழந்தைகள். மூத்த குழந்தைக்கு ஐந்து வயதிருக்கலாம். இளையவளுக்கு இரண்டு அல்லது மூன்று. சிறிய குழந்தை அழுது கொண்டிருந்தது. அந்த மனிதன் என்னவோ சொல்லி சமாதானம் செய்து கொண்டிருந்தான். அசிரத்தையாக அதைப் பார்த்தவாறே தலையைத் திருப்பியவனின் பார்வையில் அவள் தட்டுப்பட்டாள். தொலைந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்தவனின் மகிழ்ச்சி அவனை ஆட்கொண்டது. அவள் தன்னிடம் வருவாள் என எதிர்பார்த்துக் காத்திருந்தான். ஆனால் அவனை அறியாதவள் போலக் கடந்து சென்றாள். முகம் ரொம்பவே வாடி ஆளும் மெலிந்து தெரிந்தாள். நடப்பது இன்னதென்று புரியாமல் அவன் அவளைப் பார்த்தவாறே நின்றிருந்தாள். அவள் அந்த மோட்டார் வாகனத்தின் அருகில் போய் நின்றாள். இப்போது அவனால் அந்தக் குழந்தைகளின் ஜாடையை அடையாளம் காண முடிந்தது.
கையில் வைத்திருந்த பொருட்களை எடுத்து அவள் அந்த மனிதனிடம் காட்ட அவன் சிரித்தான்.
“ஏம்மா.. இத வாங்கத்தான் இவ்ளோ நேரம் எங்களக் காக்க வச்சியா.. ஏதோ இதெல்லாம் நம்ம வீட்டுப் பக்கத்துல கிடைக்கவே கிடைக்காதுங்கிற மாதிரி.. அங்க எல்லாம் கடையே இல்லையா.. இம்புட்டு நேரம் இதுகள வச்சுக்கிட்டு எவ்வளவு செரமமாப் போச்சு தெரியுமா.. சீக்கிரமா வண்டில ஏறு.. கெளம்பலாம்..”
தான் வர வேண்டுமென்பதற்காகத்தான் கடைக்குப் போவதைப் போல அவள் தாமதம் செய்திருக்கிறாள் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. பத்து நாட்களுக்குப் பிறகு அவளைப் பார்க்கிறோம் என்கிற மகிழ்ச்சி ஒரு புறம். உடல்நலம் ஏதும் சரியில்லையா என்பதை கேட்கவும் முடியாத துயரம் மறுபுறம். அவளுடைய குடும்பத்தோடு அவளைப் பார்க்க நேர்ந்ததும் அவனுக்குள் புரிபடாத உணர்வுகளை உண்டாக்கியது. அவள் வண்டியில் ஏறி அமர்வதைப் பார்த்தான். குழந்தைகள் முன்புறம் அமர்ந்திருக்க வண்டி கிளம்பியது. அவள் அவன்புறமாகத் திரும்பி மெல்லப் புன்னகைத்தாள். அவன் ஆசுவாசமாகவும் நிம்மதியாகவும் உணர்ந்தான்.
அதன் பிறகு பேருந்தில் செல்வதை அவள் நிறுத்தியிருந்தாள். தினமும் மாலை வேளைகளில் அவளுடைய கணவன் வாகனத்தில் வந்து அவளை அழைத்துச் சென்றான். கடந்து போகும் சில நொடிகளில் மட்டுமே அவளைப் பார்க்க முடிந்தது. அதை அவளுடைய கணவன் பார்த்து விடக்கூடாது என்பதிலும் கவனமாயிருக்க வேண்டியிருந்தது. அவளின் அலைபேசி எண்ணை வாங்காமல் போனதற்காக தன்னையே நொந்து கொண்டான். இறுதியில் அவளது வீட்டைக் கண்டுபிடிக்க வேண்டும் என முடிவு செய்து நண்பனின் வண்டியைக் கேட்டு வாங்கினான். மாலையில் அவர்கள் போகும்போது பின்தொடர்ந்து சென்றால் எப்படியும் அவள் வீட்டைத் தெரிந்து கொள்ளலாம். பிறகு அவளோடு பேசுவதில் அத்தனை சிரமமிருக்காது எனத் தோன்றியது.
அவள் வரக்கூடிய நேரத்துக்குச் சற்று முன்னதாகவே நிறுத்தத்தினருகே போய் நின்று காத்திருந்தான். சற்று தள்ளி அவளுடைய கணவன் வண்டியோடு நின்றிருந்தான். குழந்தைகளை அழைத்து வந்திருக்கவில்லை. சிறிது நேரம் கழித்து அவள் சாலையில் தோன்றினாள். முதுகில் பெரிய பை மாட்டியிருந்தது. இவன் நிற்பதைப் பார்த்தவள் முகத்தை எதிர்ப்புறமாகத் திரும்பிக் கொண்டு வேகமாக நடந்தாள். வண்டியை நெருங்கியவளிடம் கணவன் கேட்டான்.
“எல்லாத்தையும் எடுத்துக்கிட்டீல.. எதையும் மிஸ் பண்ணிடலையே..?”
“ம்ம்ம்..”
கிசுகிசுப்பான ரகசியம் பேசுவது போன்ற அவளின் குரல். வண்டியில் ஏறிக் கொண்டாள். அவனுக்குப் பதறியது. அவளுக்கு நிகழ்ந்தது என்னவாகயிருக்கும் எனப் பலவேறு யூகங்கள் அவனுக்குள் தோன்றி மறைந்தன. ஒருவேளை தன்னைப் பற்றி ஏதும் தெரிய வந்திருக்குமோ என்பதும் அவற்றுள் ஒன்று. அப்படியெல்லாம் இருக்காது என தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டு வண்டியைக் கிளப்பினான்.
அவன் தங்களைத் தொடர்ந்து வருவதைப் பார்த்து அவள் திடுக்கிட்டாள். முகம் மேலும் இருண்டது. அவள் தன்னை பார்ப்பதை அவனும் பார்த்தான். அவளுடைய கண்கள் ஈரமாயிருந்தன. முன்னால் அமர்ந்திருப்பவனுக்குத் தெரியாமல் இடக்கையை மெல்ல உயர்த்தினாள். விடைபெறுவது போலவும் வேண்டாம் என்பது போலவும் அந்தக்கையை மெல்ல அசைத்தாள். வாழ்க்கை தன்னைப் பார்த்துக் கையசைப்பதாக அவன் உணர்ந்தான். உதடுகளில் அவளுக்கென அவன் பிரத்தியேகமாகச் சேமித்து வைத்திருக்கும் புன்னகை தானாக வந்து அமர்ந்தது. இறுதிப் புன்னகை. கண்களில் தெளிவு பிறக்க அவளும் சிரித்தாள். அவன் வண்டியை சடாரென்று நிறுத்தினான். சிரிப்பில் உறைந்திருந்த அவளின் முகம் மெல்ல அவனை விட்டு விலகிச் சென்று பின் காணாமலானது.