பல வருடங்கள் திருமணமாகிச் சேர்ந்து வாழ்வது ஒன்றே, ஒருவரின் திருமண வாழ்க்கை, உண்மையிலேயே நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதற்குச் சான்றாகாது. ஒரு உண்மையான, ஆரோக்கியமான நிலை அவ்விருவர் மட்டுமே அறிந்த ஒன்றாக இருக்கும்.
கணவனோ மனைவியோ மற்ற எல்லோரிடமும் பழகுவதைப் போலவே, தங்களுக்குள் பழகிக்கொள்ள வேண்டும் என்பதில்லை. வன்முறை சார்ந்த புகார்கள் பொதுவாக நீதிமன்றங்களுக்கு வரும்போது, நண்பர்கள், பெற்றோர்கள், உடன் பணிபுரிபவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டு அல்லது அதிர்ச்சியடைந்து போகிறார்கள். நம்பிக்கையின் நெருக்கடி அதிகம் எழுகிறது. பெரும்பாலான நெருக்கமான துணையின் வன்முறை(Intimate Partner Violence)யை புரிந்து கொள்வது கடினம்.
வன்முறை என்பது வெறும் உடல் ரீதியான தாக்குதல் மட்டுமல்ல. அது பல வடிவங்களில் வெளிப்படுகிறது:
தொடர்ந்து அவமானப்படுத்துதல், குறை கூறுதல், சுயமரியாதையை குறைத்தல், அச்சுறுத்தல் போன்றவை மன வன்முறையில் வரும்..
பணத்தைக் கட்டுப்படுத்துதல், வேலைக்கு செல்ல அனுமதிக்காமல் இருத்தல், கல்விக்கு தடை விதித்தல் போன்றவை பொருளாதார வன்முறையில் வரும்.தொடர்ந்து ஒருவர் விருப்பப்படி செய்யலாம் என்று கூறிவிட்டு பிறகு பல இடையூற்களை ஏற்படுத்துதல் கூட அடங்கும். பல பெண்கள் இந்த அனுபவத்தை உணர்ந்திருப்பார்கள். நீ மேலே படிக்கலாம் என்றூ ஒத்துழைப்பை நல்கும் கணவன் பிறகு அதை முடிக்கமுடியாம நேர மேலாண்மை பிழைகளும் அழுத்தங்களும் கூடும் வகையில் இடைஞ்சல்களைச் செய்வார்கள். ஒரு கட்டத்தில் மனைவி விட்டுவிட நேர்கையில், : நான் நீ உன் விருப்பப்படி செய்னு தான் சொன்னேன், ஆனால் உன்னாலதான் எதையும் முடிக்க சரியா பிளான் செய்ய முடியலை” என்று அவள் மீதே பழியைப் போடுகிற கணவர்களும் உண்டு
நண்பர்கள், உறவினர்களிடமிருந்து பிரித்தல், வெளியே செல்வதைத் தடுப்பது ஆகிய செயல்கள் மூலமாக தனிமைப்படுத்துவது கூட இதில் வரும். இதைக் கூட அதீத அன்பின் வழியாக போலித்தனமாக செய்பவர்கள் உண்டு. “நீ இல்லாமல் எனக்கு ஒரு மாதிரி தனிமையா இருக்கிற மாதிரி இருக்கு, உனக்கு என்ன செய்யனும், எங்க போகனும்னு சொல்லு நாம சேர்ந்தே செய்யலாம். ஏன் அடுத்தவங்களை தொல்லை செய்யனும்”.
மொபைல், சமூக வலைத்தளங்களைக் கண்காணித்தல், தகவல்தொடர்பை மட்டுப்படுத்துதல் போன்றவையும் அடக்குமுறையில் வரும்..
கணவனின் உண்மையான நடத்தையை மனைவி மட்டுமே அறிவார். அவனது உடன் பிறந்தவர்கள், பெற்றோர்கள் கூட அறியமாட்டார்கள். ஏனெனில் இந்தியச் சூழலில் கணவனுக்கு அதிகார உரிமை அளிக்கப்படுகிறது. மனைவியை தனக்கு உரிமையுள்ள பொருளாக பல காலம் பார்த்து வந்த ஆண்கள், அல்லது அந்த மாதிரி சூழலில் வளர்க்கப்பட்ட ஆண்கள் மனைவியை தோழியாகப் பார்த்தல் கடினம். அன்னை பார்ப்பது பிள்ளையின் குணம், மனைவி அனுபவிப்பது கணவனின் தனிப்பட்ட நடத்தை.
பொதுவில் ஒரு முகம், வீட்டில் வேறு முகம். எழுத்தாளனாக இருந்தால் என்ன, கலைஞனாக இருந்தால் என்ன. அவன் வீட்டில் எப்படி நடந்து கொள்கிறான் என்பது மனைவிக்கு மட்டுமே தெரியும்.
சமூகத்தில், வீட்டில் உறவினர்களிடம் தன் கணவன் அல்லது மனைவியின் பெருமையை காக்க வேண்டும் என்பதற்காக அமைதியாகப் போகும் பெண்கள் அல்லது ஆண்கள் உள்ளனர். குழந்தைகள் நலன் உத்தேசித்து அமைதியாகிப் போகிறார்கள்.
பல பெண்களுக்கு இதில் வேலை இழப்பு, பொருளாதார சார்பு, குடும்ப சொத்துகளின் இழப்பு போன்ற பின்விளைவுகள் ஏற்ப்டலாம். சமூகத்தில் உறவினர்களின் ஆதரவி இழக்க நேரிடலாம். தன்னம்பிக்கை குறையலாம். உடல்நல பிரச்சினைகள் கூட வரலாம். மனச் சோர்வு போன்ற மனநல குறைபாடுகளும் கூட வரலாம்.
“பெண்கள் எப்போதும் புகார் சொல்லுவார்கள்” என்று சொல்கிறார்கள். இதுதான் பெண்கள் பேச தயங்குவதற்கு காரணம்.
இந்த இரண்டாம் நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டவரை மீண்டும் அமைதியில் தள்ளிவிடும். “என்னைத் தான் குற்றம் சாட்டுவார்கள், யார் நம்புவார்கள்?” என்ற நிலைக்கு கொண்டு செல்லும்.
நமக்கு பிடித்த ஒருவர் என்பதாலேயே அவர் விமரிசனங்களுக்கோ அவருக்கு மாறுபட்ட குணங்களோ இருக்க கூடாதென்பது இல்லை. அவரின் இயல்பு நாம் எழுப்பியிருக்கும் படிவத்துக்கு மாற்றாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை.
மனிதனின் பண்பு அவன் வளரும் சூழல், காலம் எல்லாவற்றையும் பொறுத்தது. அவன் நடவடிக்கைகளும் அப்படியே. நண்பர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் எதிர்ப்பாலேயே பலர் தங்கள் கணவர் அல்லது மனைவியின் இயல்பை பேச முற்படுவது இல்லை.
ஒருவர் தனது ஆதங்கத்தை, வலியை, அனுபவத்தை வெளிப்படுத்துவது என்பது குற்றம் சாட்டுவதற்கு சமம் அல்ல. ஆனால் சமூகம் இந்த இரண்டையும் ஒன்றாகப் பார்க்கிறது.
“எனக்கு வருத்தமாக இருந்தது” என்று சொல்வது வேறு, “அவர் தவறு செய்தார்” என்று சொல்வது வேறு. ஆனால் இந்த நுட்பமான வேறுபாட்டை சமூகம் புரிந்து கொள்வதில்லை.
ஒருவர் தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமையைக் கூட மறுத்தால், அது எந்த வகையான நீதியான சமூகம்? இதுவே நெருக்கமான துணை வன்முறையின் மிக நுட்பமான வடிவம் தன் இணையரின் பேசும் உரிமையையே பறிப்பது.
புகழ்பெற்ற நபர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசும்போது, அவர்களின் ரசிகர்கள் மற்றும் சமூகம் பாதிக்கப்பட்டவர் மீது கொண்டுவரும் விமர்சனங்களே இரண்டாம் நிலை வன்முறை ஆகும். இது அசல் வன்முறையைவிட சில சமயங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஒரு புகழ்பெற்ற நபரின் மனைவி தனது அனுபவங்களைப் பகிரும்போது, “அவர் இவ்வளவு நல்லவர், நீ எப்படி இப்படிச் சொல்லலாம்?” என்ற வகையிலான கேள்விகள் மற்றும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. இதில் கவனிக்க வேண்டியது – பல சமயங்களில் பாதிக்கப்பட்டவர் யாரையும் குற்றம் சாட்டவில்லை, வெறும் தன் உணர்வுகளை மட்டுமே வெளிப்படுத்துகிறார்.
எழுத்தாளர் சுஜாதா இறந்த காலத்திற்கு பின் அவர் மனைவியின் பேட்டிக்கு இத்தனை விமர்சனங்களா? அவர் என்ன சுஜாதாவின் எழுத்தையா விமர்சித்தார். தன் கணவனைத் தானே. அவர் விமரிசித்தது தனது கணவனைத் தானே. முன்பின் தெரியாத ஒருவரின் எழுத்துக்கள் மூலமே அறிந்த ஒரு நபரின் மீது செலுத்தப்படும் அன்பு நல்லதுதான் ஆனால் அதற்காக வேறூயாரும் மாற்றுக்கருத்துகள் கொள்லவே கூடாது என்று சொல்வது மோகம். மோகத்தில் சுதந்திரம் என்பது இல்லை. அதில் அகங்காரமும் வெறுப்பும் மண்டிக்கிடக்கும். அதுவே மாற்றுக்கருத்துக்கள் சொல்பவர் மீதே காழ்ப்புணர்ச்சியைக் காட்ட காரணமாகிறது. இவ்வளவு ஆண்டுகள் கழித்தும் கூட தன் கருத்தை சொல்லும் சுதந்திரம் இல்லாமல் இருக்கிறாள். பேசினால் நம்ப மாட்டார்கள் என்ற பயம்.
இந்த விவகாரம் எவ்வளவு தெளிவாக காட்டுகிறது என்றால், நம் சமூகம் ஒரு புகழ்பெற்ற நபரின் பொது வாழ்க்கை பாதுகாக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறது, ஆனால் அவரின் தனிப்பட்ட நடத்தையால் பாதிக்கப்பட்டவரின் வலியை புறக்கணிக்கிறது.
அதிலும் பேசப்படுபவர் புகழ்பெற்றவராக இருந்தால், அவருடைய ரசிகர்களுக்கு இது சினத்தை வரவழைக்கலாம். ஆனால் அதற்காக பேசுபவர் மீது விமர்சனங்கள் எழுப்புவதுகூட வன்முறையாகும்.
அமெரிக்காவில், 35% பெண்களும் 11% ஆண்களும் நெருங்கிய துணையினால் ஏற்பட்ட வன்முறை காரணமாக வெளியேறி வைப்பிடங்களில் இருக்கிறார்கள். உலக அளவில் பார்த்தால், மூன்று பெண்களில் ஒருவர் தனது வாழ்நாளில் நெருக்கமான துணை வன்முறையை அனுபவிக்கிறார்.
ஆரோக்கியமான திருமணத்தில் இரண்டு முதிர்ந்த மனிதர்கள் ஒருவரின் பலவீனத்தை மற்றவர் வலிமையாக்குவார்கள். பரஸ்பர மரியாதை இருக்கும். ஒருவர் மற்றவரின் கருத்துக்களை மதிப்பார்கள்.
கணவன் மனைவி உறவு என்பது சமனான இணையர் உறவல்லவா? மனைவியோ கணவனோ புகழ் பாடவேண்டும் என்றுதான் காரியங்களைச் செய்கிறார்களா? கருத்துப் பரிமாற்றங்களுக்கும் வேறுபட்ட உணர்வுகளுக்கும் அங்கே இடமில்லையா? எந்த இரண்டு தனிமனிதர்களும் சேர்ந்து வாழும் போது வேறுபாடுகள் சிந்தனையில் செயலில் வரத்தான் செய்யும். அதை அமைதியாக பரஸ்பர மரியாதையுடன் பேசுவது உறவுக்கு அடித்தளம் அல்லவா?
வன்முறையில், அவளால் உண்மையை மட்டுமே சொல்ல முடியும். உடல் வன்முறை, மன வன்முறை, பொருளாதார கட்டுப்பாடு, சமூக தனிமைப்படுத்தல் – இவையெல்லாம் மனைவி மட்டுமே அனுபவிக்கிறாள்.
சின்னச் சின்ன காரணங்களுக்காக உறவுகளை முறித்துக்கொள்வது தவறென்று அடுத்தவருக்கு தோன்றுவது கூட அநாவசியம். அந்தச் சின்ன காரணங்கள் பின்னால் சொல்லக்கூடாத, சொல்ல விரும்பாத காரணங்கள் இருக்கலாம்.
காரோட்ட முடியாமல் வீட்டினுள்ளே அடைந்து கிடந்து மனச் சோர்வும் சேர்ந்து கொள்ளப் பரிதாபமாக இருப்பவர்கள் நிறைய. கணவனின் விசாவில் நம்பி வந்ததனால், அவர்களால் பணிக்குச் செல்ல முடியாது. அமெரிக்கச் சட்டதிட்டங்களைச் சரிவரக் கற்றுக்கொள்ளாமல், கணவனை நம்பி அவர்கள் சொல்லும் சின்ன பொய்களை நம்பி ஏமாந்து போகிறவர்கள் ஒரு புறம்.
ஒரு மனைவியோ அல்லது கணவனோ தன் இணையரைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, அவளுக்குத் தேவை ஆதரவு தானே ஒழிய விமர்சனம் அல்ல. அவள்/ அவன் மட்டுமே அவனு/ளுடைய தனிப்பட்ட நடத்தையை அறிவாள். தாயார், நண்பர்கள், ரசிகர்கள் யாருக்கும் இந்த அனுபவம் இல்லை.
திருமணமான ஒருவர், புகாரிடும் போது, அது எந்த வகை வன்முறை என்றாலும் (சொல், செயல், பாலியல், அதிகாரம், மனம்) உதவி செய்யாவிடினும், அவர் மீதே குற்றம் சொல்லாமல் இருக்கப் பழகுவோம்.
எனவே வன்முறை காரணமாக உதவி கேட்டு வந்தால், தக்க உதவி செய்வதும், உதவி கிடைக்கும் நிறுவனங்களைப் பரிந்துரை செய்வதும் அவசியம். சில நேரங்களில் அது உயிர் காக்கும்.
நெருக்கமான துணை வன்முறை என்பது சமூகத்தின் மறைக்கப்பட்ட உண்மை. இது கல்வி, பொருளாதார நிலை, சாதி, மதம் என எந்த எல்லையையும் அறியாது. பாதிக்கப்பட்டவர்களை விமர்சிக்காமல், அவர்களுக்கு ஆதரவளிப்பதே நமது கடமை. அவர்களின் குரலைக் கேட்பதும், நம்புவதும், உதவுவதும் ஒரு நாகரீக சமூகத்தின் அடையாளம்.
1 comment
அருமையான கட்டுரை.