பொருளாதாரக் கொள்கை பற்றி நான் நண்பர்களிடத்தில் பேசும் பொழுதெல்லாம், அவை ஏதோ நவீன காலச் சிந்தனைப் போக்கின் வெளிப்பாடு என்றும், தகவல் பரிமாற்றம் மற்றும் அச்சகத்துறை, அது சார்ந்த இயந்திரங்களின் வளர்ச்சியால் விளைந்த ஒன்று என்றும்தான் அவர்கள் சொல்வார்கள். அவர்களுக்கு, ‘மனிதர்கள் வேட்டையாடிகளாக இருந்து சமூகமாக வாழத் தொடங்கிய காலத்திலேயே அவை விவாதிக்கப்பட்டு வந்தவைதான் என்றும், தற்காலத்தில் அந்தப் பொருளாதாரக் கொள்கையைப் பலர் ஒரே சமயத்தில் ஏற்றுக் கொண்டதால் அவற்றுக்கு நவீன சிந்தனைச் சாயம் பூசப்பட்டது’ என்று புரிய வைக்க முயன்று தோற்றுப் போவேன்.
ஹில்லெல் எனும், இயேசு காலத்திற்கு முன்பு யூதேயா நகரத்தில் வாழ்ந்த யூத ஞானி முன் வைத்த பொருளாதாரக் கொள்கை என்னவென்று பார்த்தால்.. அது, தற்காலத்தில் பொதுவுடைமை என்று சொல்லப் படுவதுதான். ஹில்லெல், ‘ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை, வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாதவர்களுக்கு, அந்தக் கடன் ஒப்பந்தத்தில் இருந்து விடுதலை தரப்பட வேண்டும்’ என்று சொன்னார். அவர் சட்டத்தில் இதற்கான ஒரு வழியை உருவாக்கினார், அதற்குப் ‘ப்ரோஸ்புல்’ எனப் பெயரிட்டார். இதன் மூலம், அந்தக் கடன் தொகை என்பது.. தனிநபரின் பெயரிலிருந்து அந்த நீதிமன்றத்தின் பெயருக்கு மாற்றப்படும். இப்படியாக, ஒருவர் கடன் பெற்று அதனைத் திரும்பச் செலுத்த முடியாமல் தள்ளுபடி செய்யப்பட்டு இருந்தாலும் ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் அவர் கடன் வாங்கலாம்.
நவீன காலத்திலும், ஒரு சாரார் மக்கள் வங்கிகளிலிருந்து பெற்ற கடனை அரசு தள்ளுபடி செய்வதைப் பார்த்திருப்போம். கருணையின் அடிப்படையில், பொருளாதார ரீதியாக அவர்கள் தொடர்ந்து இயங்க வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் இது செய்யப்படுகிறது. பொருளாதார இயக்கத்தில் அவர்களும் ஒரு பகுதி, அந்தப் பகுதி இல்லாமல் போய்விட்டால் இயக்கம் முழுமையானதாக இருக்காது, அல்லது பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதற்காகத்தான் கடன், தள்ளுபடி எல்லாம்.
ஹில்லெல் மற்றொரு வாதத்தை முன் வைத்தார். ‘உனக்குத் தீங்கு என நினைக்கும் ஒன்றை.. நீ மற்றவருக்குச் செய்யாதே’ என்பதாகும். கடன் தொகை, அதன் மீதான அதிக வட்டி என்பது உனக்குக் கஷ்டமென்றால் அதனை மற்றவருக்குச் செய்யாதே என மறைமுகமாகச் சொன்னார். அது அந்தக்காலத்தில் வணிகப் பொருளாதாரத்தின் அடிப்படை நோக்கத்தையே தட்டிப் பார்த்தது.
ஹில்லெல் பற்றியும் அவர் ஏற்படுத்திய சமூகத் தாக்கத்தைப் பற்றியும் பேச நிறைய இருக்கிறது. அதனை எல்லாம் வரப் போகும் அத்தியாயங்களில் தேவைப்பட்டால் சொல்கிறேன்.
ஹில்லெல் காலத்திலேயே, பொதுவுடைமையை மூச்சாகப் பின்பற்றிய மற்றொரு பிரிவினர் இருந்தார்கள். எஸ்ஸேன்கள்.. இவர்கள் யூத சமயத்தில் இருந்த ஆன்மீகக் குழு என்றாலும் இவர்கள் முன்வைத்த மொழிகள் பெரும் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தின.
எஸ்ஸேன் பிரிவில் சேரும் யாருக்கும் தனியாகச் சொத்து என்று இருக்கக் கூடாது. இவர்கள், தனிநபர் சொத்து சேகரிப்பதற்கு எதிராக இருந்தனர். கூட்டமாக வாழ்ந்து தொழில்கள், விவசாயம் ஆகியவற்றை ஒன்றாக இணைந்து செய்து, அதன் மூலம் கிடைப்பதை எல்லோரும் பகிர்ந்துகொள்ள வேண்டும் எனச் சொன்னார்கள். இவர்கள் வசதிகளில்லாதவர்களிடம் அன்பாக இருந்ததை, முக்கிய அம்சமாகச் சரித்திர ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால்.. வணிகப் பொருளாதாரத்திற்கு, முதலாளித்துவத்திற்கு எதிரான கருத்தைக் கொண்டிருந்தார்கள். அதுவே இவர்களது கோட்பாட்டின் வளர்ச்சிக்கு எதிராக அமைந்தது.
இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களை இந்த இடத்தில் நிறுத்தி வைத்துவிட்டு, போன அத்தியாயத்தில் சமூக அமைப்புக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் என்று சொல்லி இருந்தேன். அவர்கள் எல்லாம் சமூக அமைப்புக்குத் தள்ளி வைக்கப்பட்டனர். காலப்போக்கில், பொருளாதார வளர்ச்சி இன்மையால்.. அவர்கள் பொருளாதார வளர்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் அல்லது பின் தங்கிய வகுப்பினர் என அறியப்பட்டனர். மற்ற நாடுகளில் நடந்தவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது.. இவர்களும், ஹில்லெல் மாதிரியாகவோ, எஸ்ஸேன்கள் மாதிரியாகவோ வணிக ஆதிக்க வர்க்கத்தினருக்கு எதிராகக் குரல் எழுப்பியிருந்திருப்பார்கள் என யூகித்துக் கொள்ளலாம்.
சமூக அமைப்பில் இருந்து தள்ளி வைக்கப்பட்டதாலேயே, இவர்கள் வழிபட கோயில்கள், வழிபாட்டு மையங்கள் எனப் பலவற்றை உருவாக்கினார்கள். ஆனால், பிரபல பெரிய கோயில்கள் போல்.. தள்ளி வைக்கப்பட்ட சமூகத்தினரால் உருவாக்கப்பட்ட கோயில்களுக்கு, நன்கொடைகள், தானங்கள் என எதுவும் கிடைக்கவில்லை என்பதால் அவை பெரிய அளவில் வளரவில்லை. சமூக அமைப்பில் இருந்து தள்ளி வைக்கப்பட்டவர்களுடன் சமூகத்து மக்கள் யாரும் வணிகத் தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டார்கள். அப்படியே தொடர்பு வைத்து கொள்ளலாமென நினைத்தாலும், சமூகப் புறக்கணிப்புக்குப் பயந்து அத்தகைய முயற்சியில் இறங்க மாட்டார்கள்.
காலப்போக்கில்.. சமூகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகளின்படி கட்டிய கோயில், விதிகளைப் பின்பற்றாமல் கட்டிய கோயில் என இரு பிரிவு கோயில்கள் உருவாகின. விதிகளின்படி கட்டப்பட்ட கோயில்களே பொருளாதார மையங்களாக விளங்கின. நன்கொடைகள் ஒரு பக்கம் வந்துகொண்டு இருந்தாலும்.. முன்னர் சொன்னதுபோல, அந்த நன்கொடைகளை வைத்துப் பல பொருளாதாரப் பரிவர்த்தனைகளைக் கோயில் நிர்வாகம் செய்து கொண்டு இருந்தது.
வணிகத்திற்காகப் பயணம் செய்வோர்.. தங்களது பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, பொருளாதார மையமாகச் செயல்பட்டு வந்த கோயிலில் அந்தப் பணத் தொகையைத் தந்துவிட்டு, அதற்கான பத்திரம் ஒன்றை வாங்கிக் கொள்வர். அந்தப் பத்திரத்தில், ‘இந்த ஊரில் வசிக்கும் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் இவ்வளவு பணத் தொகையைத் தந்திருக்கிறார், அதற்கான பத்திரம் இது, இந்தப் பத்திரத்தைக் கொண்டு வருகிறவருக்கு.. ஆதாரங்களைச் சரி பார்த்த பின்னர் இவ்வளவு பணத்தொகையைத் தந்துவிடவும்’ என்பது போல் எழுதி இருக்கும்.
இந்த மாதிரியான பத்திரங்களை ஹுண்டி பத்திரங்கள் எனச் சொல்வர். எளிதில் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் தற்காலக் கேட்புக் காசோலை (DEMAND DRAFT) போன்றது அது.
எல்லாம் சரி.. ஒரு இடத்தில் காசைப் பெற்றுக் கொண்டு தரப்பட்ட ஹுண்டி பத்திரத்திற்கு, இன்னொரு இடத்தில் எதன் அடிப்படையில் பணம் தருவார்கள்? என்ற சந்தேகம் நான் சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே உங்களுக்கு வந்திருக்கும்.
ஒரே சமயத்தைப் பின்பற்றும் கோயில்கள், ஒரே ஆன்மீக மடத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கோயில்கள், ஒரே ராஜ்ஜியத்தின் கீழ் வரும் கோயில்கள் என பொருளாதார மையத்திற்கும், அதனைச் சார்ந்த வணிகர்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கும். இந்த நேரத்தில், மன்னர்களை தங்களது சமயத்தைப் பின்பற்ற வைக்க அந்தந்த சமயத்தை சேர்ந்த மடாதிபதிகள் போட்டி போட்டுக் கொண்டு ஏன் முயன்றனர்? என இந்த நேரத்தில் உங்களுக்குப் புரிந்து இருக்கும்.
நாட்டை ஆளும் மன்னன் ஒரு சமயத்தைப் பின்பற்றுகிறான் என்றால், அரச நன்கொடைகள் அந்தச் சமயத்தைச் சார்ந்த கோயில்களுக்கே வந்து சேரும். மன்னன் பின்பற்றும் சமயம் என்பதால் கேள்விகளின்றி ராஜ்ஜியம் முழுக்க அந்தச் சமயத்தை சார்ந்த கோயில்களே ஆதிக்கம் செலுத்தும் பொருளாதார மையங்களாகத் திகழும். வரலாற்றில், பல்வேறு சமயங்களுக்கிடையே அதிகாரப் போட்டி ஏன் இருந்தது? என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
எல்லாம் சரி.. ஒரு மன்னன் ஒரு சமயத்தைப் பின்பற்றுவதால், என்னென்ன மாதிரியான பொருளாதாரப் பரிவர்த்தனை நடக்க வாய்ப்பு இருக்கிறது ?
தொடரும்.