Home தொடர்வரலாற்றில் பொருளாதாரம் – 24

வரலாற்றில் பொருளாதாரம் – 24

by Viswanaath Thyagaraajan
0 comments

நாமார்க்கும் குடியல்லோம்
நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம்
நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணி அறியோம்
பணிவோம் அல்லோம்

என்கிற பாடலைத் திருநாவுக்கரசர் பாடிய பொழுது, இக்காலத்தில் அது பக்தி இலக்கியமாகப் பார்க்கப்பட்டாலும், பாடப்பட்ட அந்த நாளில் எழுச்சி மிகுந்த புரட்சிகரமான பாடலாகத்தான் பார்க்கப்பட்டிருக்க வேண்டும். அதிகாரத்திற்கு எதிரான பாடல்.

சைவர்களான நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை, மனவலிமை மிக்க எங்களை நோய்கள் மற்றும் அது தரும் ஒன்றும் செய்யாது, நோய் தரும் துன்பங்கள் எங்களை ஒன்றும் செய்யாது, நாங்கள் எதிரில் நிற்பது சர்வாதிகாரம் கொண்ட மன்னனாக இருந்தாலும் யாருக்கும் பணிய மாட்டோம் என்கிற அர்த்தத்தில் திருநாவுக்கரசர் பாடுகிறார். அவர் பாடிய காலம் என்னவென்று பார்த்தால், தமிழகத்தில் இருண்ட காலமான களப்பிரர் காலம் முடிந்து சைவம் தலைதூக்க ஆரம்பித்திருந்தது.

சரி, சமணத்திற்கு எதிரான இம்மாதிரியான பாடலைத் திருநாவுக்கரசர் பாடியது அடுத்துச் சமூகத்தில் எம்மாதிரியான அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் என்பதை ஆராய்ந்து பார்த்தால், மக்கள் பயப்படும் அதிகார அமைப்பைக் கண்டு ஒருவரால் பயம் இல்லாமல் சுதந்திரமாக இருக்க முடியும் என்கிற நினைப்பை விதைப்பது போலாகும். அது புரட்சிகர செயல்பாடுகளுக்கு வழிவகுத்தால் அரசு இயந்திரம் இராணுவப் படையைக் கொண்டு அடக்கிவிடும்; ஆனால் வணிக இயந்திரத்திற்கு அது முற்றிலும் ஆபத்தானது.

திருநாவுக்கரசர் சைவ சமயத்தைப் பரப்புவது சமண பக்தி மார்க்கத்திற்குப் பிரச்சனையாக இல்லை; ஆனால் சமணக் கோவில்களைச் சார்ந்த வணிக அமைப்புகளுக்கெல்லாம் எதிரானதாக இருந்தது. ஏனென்றால், சைவ சமயம் வளர்ந்துவிட்டால் மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றுவிடும். அதிக அளவில் மதிப்பைப் பெறும் சமயத்தை மன்னன் ஏற்றுக்கொண்டுவிட்டால், சமண வழிபாட்டு மையமாக இருக்கும் பொருளாதார மையத்தின் வணிகத்தை அது பாதிக்கும். சமணக் கோயிலுக்கு வர வேண்டிய நன்கொடை, காணிக்கை, அரசு நிதிகள் எல்லாம் சைவக் கோயிலுக்குப் போய்விடும் என்கிற பயத்தில் சமண வணிகர்கள் எல்லாம் சேர்ந்து, சமணக் கோயில் மூலமாகத் திருநாவுக்கரசருக்குத் தண்டனை கொடுக்கும்படி அரசருக்கு யோசனை கொடுத்தார்கள்.

ஓரிடத்தில் சமணர்களை இல்லாமல் செய்தோம் என்று திருநாவுக்கரசர் பாடியதாகச் சொல்லப்படுகிறது. அந்தப் பாடல் இருப்பதாகச் சொல்லப்படுகிற மறுமாற்றுத் தாண்டகத்தில் அந்த வரிகளை வாசித்த பொழுது இரு விதமான அர்த்தங்களைக் கொடுத்தது. ஆனால் அவையெல்லாம் சமணர்களின் வணிகத்தைச் சைவ சமயத்தினர் அழித்தார்கள் எனச் சொல்வதில்லை.

6-ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்து 12-ஆம் நூற்றாண்டிற்குள் சமணர்களின் வணிகத்தைச் சைவர்கள் எடுத்துக்கொண்டார்கள் எனச் சொல்ல நம்மிடத்தில் ஒரு மறைமுகமான ஆதாரம் இருக்கிறது.

மதுரையை ஆண்ட நின்றசீர் நெடுமாறன் காலத்தில் திருஞானசம்பந்தருடனான விவாதத்தில், தங்களது பக்க நியாயத்தை நிரூபிக்கத் தோற்ற 8000 சமணர்களைக் கழுவேற்றியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இந்தச் சம்பவம் நடந்ததாகச் சொல்ல நேரடியான எந்த ஆதாரமும் இல்லை.

அப்படியென்றால் எப்படி இந்தச் சம்பவத்தைக் குறித்த செய்தி பரவியிருக்கும்?

இதற்கு இன்றைய தேதியில் நமக்குக் கிடைக்கும் தகவல்களை வைத்து யோசித்துப் பார்ப்போம். தமிழ்நாட்டில் ஆயிரம் வருடப் பழமையான கோயில்கள் சுமார் 720 கோயில்கள் அரசு கட்டுப்பாட்டில் இருக்கின்றன. காலத்தால் அழிந்தவை எத்தனை எனச் சொல்ல முடியாது.

பழங்காலத்தில் ஒரு புதிய சமயத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளும் பொழுது, பழைய சமயக் கோயில்களைப் புதிய சமயக் கோயில்களாக மாற்றிவிடுவதுதான் இயல்பு. அப்படியான மாற்றங்களுக்கு உட்பட்ட பல கோயில்கள் இன்றைய தேதியில் “உண்மையில் இது என்ன கோயில் தெரியுமா?” போன்ற சர்ச்சையில் சிக்கியிருப்பதைப் பார்க்கிறோம். இனிவரும் அத்தியாயங்களில் அவற்றின் பின்னால் இருந்த வணிக நோக்கத்தைப் பற்றிப் பேசலாம்.

இப்பொழுது இதனை வைத்தும், சமணர்கள் அன்றைய தேதியில் வணிகப் பட்டு வழிச்சாலையைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்கிற செய்தியை இணைத்தும், மதுரையில் நடந்ததாகச் சொல்லப்படும் 8000 சமணக் கழுவேற்றத்தைப் புரிந்துகொள்வோம்.

சமணர்கள் வணிகச் சாலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்றால், அந்த வணிக வழியில் பல்வேறு சமணக் கோயில்களை வணிகப் பரிவர்த்தனைக்காக உருவாக்கி இருந்திருப்பார்கள் தானே?

மதுரைக் கழுவேற்றத்தில் வரும் 8000 என்னும் எண்ணிக்கை ஏன் மனிதர்களாக இருக்க வேண்டும்? ஏன் அந்த 8000 எண்ணிக்கை சமணப் பொருளாதார மையங்களாக இருக்கக் கூடாது?

தொடரும்…

Author

You may also like

Leave a Comment