போன அத்தியாயத்தில் ‘குழந்தை வளர்ப்புக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் தொடர்பு இருக்குமா?’ எனக் கேட்டு முடித்திருந்தேன்.
உண்மையில் மற்ற விலங்குகளைப் போல் இல்லாமல் மனிதர்கள் சமூகமாக வாழத் தொடங்கிய காலத்திலேயே.. குழந்தையர் மீதான பாசமும், அவர்கள் தங்களது வாரிசுகள்.. தாங்கள் சேர்த்து வைக்கும் வளங்களெல்லாம் அவர்களுக்கானது என்கிற எண்ணமும், வளரத் தொடங்கியது.
எல்லாம் சரி.. இந்தச் சமயத்தில் மனிதர்களிடத்தில் தங்களது குழந்தையர் மீதான பாசம் வைத்தல், ஒரு உணர்வியல் இணைப்பு உருவாகுதல் எந்தக் காலகட்டத்தில் இருந்து தொடங்கியது? எனப் பார்த்தால்.. அது குரங்குகளிடமிருந்து மனித இனம் உருவாக ஆரம்பிக்கும் முன்பிருந்தே இருக்கிறது. அதனால், அவற்றைப் பற்றிப் பெரிய அளவில் பேசிக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
மனிதன் தனது வயதான காலத்தில் அவனைப் பார்த்துக்கொள்ள, தான் சேர்த்து வைத்த வளங்களை நிர்வகிக்க வேண்டுமென, தனக்குத் தெரிந்ததை எல்லாம் தனது குழந்தையருக்குச் சொல்லித் தர ஆரம்பித்தான். மேலும், அக்காலத்தில் வலிமை என்பதை வைத்தே, வேட்டையாடிச்சமூகத்தில் ஒருவனது முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதுவே அவனைத் தலைமைப் பொறுப்பிலோ, அல்லது அதற்கு ஈடான பதவியிலோ இருக்க வைத்தது.
உடல் வலிமை, புத்திக் கூர்மை இவை கூட்டத்தை வழி நடத்த தலைவனுக்குத் தேவையானவையாக இருந்தது.
மக்கள் சக்தி அல்லது ஆள் பலம்.. வெறும் உடல் வலிமை மற்றும் புத்திக்கூர்மையை வைத்துக் கொண்டு மட்டும் ஒரு தலைவன் ஒரு வேட்டையாடுதலைத் திட்டமிட்டு நடத்த முடியாது. அதற்கு அவனுக்கு அதிக ஆட்கள் தேவைப்பட்டனர்.
அதிக ஆட்கள் கொண்ட குடும்பத்திற்கு அதிக வேட்டைப் பங்கு கிடைக்கும். அப்படி அதிகம் கிடைக்கும் வேட்டைப்பங்கைத் திட்டமிட்டு நுகர்ந்து, மிச்சமானதைச் சேகரித்து வைத்து, பிறகு அதனை வளமாய் மாற்றி வணிகப் பொருளாக பண்டமாற்றத்தின் மூலம் மற்றவரைக் காட்டிலும் வசதியிலும் வாழ்க்கைத் தரத்திலும் உயர்ந்தவர்களாக இருந்தார்கள்.
அக்காலத்தில் வசதி என்பது, மற்றவர்கள் கஷ்டப்பட்டு அடையும் ஒரு விஷயத்தை, தான் கஷ்டப்படாமல் அடைவதே.
உதாரணமாக.. குடிக்கத் தண்ணீர் எடுக்க, கொஞ்ச தூரம் காட்டில் கஷ்டப்பட்டு நடந்து போய் எடுத்துகொண்டு வரவேண்டுமென்றால், அந்தக் கஷ்டத்தைத் தான் மேற்கொள்ளாமல் இன்னொருவனை அந்தச் செயலைச் செய்ய வைக்க தனது சேகரிப்பைப் பயன்படுத்திக்கொள்வது.
இப்படியாகத்தான் வரலாற்றில் முதலாளித்துவம் என்பது உருவானது. இந்த முதலாளித்துவ மனநிலை என்பது, ஆண்டுகள் போகப்போக தனக்காக வேலை செய்பவர்களை அடிமை மாதிரி நடத்தத் தூண்டியது. இந்த நிலையில்.. பசி, வாழ்ந்தாக வேண்டும் என்கிற நெருக்கடிக்குள் உடல் வலிமை இல்லாதவர்களை.. புத்தி கூர்மை இல்லாதவர்களை.. காலம் தள்ளிவிட்டது.
சரி.. சமூகம், குடும்பம், முதலாளி, தொழிலாளி ஆகியவற்றைப் பற்றிச் சொன்னேன்.
தொழிலாளிகள் தொடர்ந்து தொழிலாளிகளாக இருக்க பல்வேறு முறைகள் உருவாக்கப்பட்டன. அதில் முக்கியமானது, வழிபாட்டு மையங்கள். நவீன காலக் கடவுளரை சுமார் 3000 வருடங்களாகத்தான் மக்கள் வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு முன்னர் மனிதன், தனக்குப் பயத்தைத் தந்த விஷயங்களை, ஆச்சர்யப்படுத்திய விஷயங்களைத் தெய்வமாக்கி வழிபட்டுக் கொண்டிருந்தான்.
சமூகம் – குடும்பம் – சட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் ஒரு நேர்கோட்டில் வைத்து, சுமூகமாக ஆட்சி செய்ய ஒரு கூட்டத்தின் தலைவனுக்கு ஒரு வலிமையான கோட்பாடு தேவைப்பட்டது. அந்தக் கோட்பாடு எத்தனை வலிமையானதாக இருக்க வேண்டும் என்றால், அதனை எதிர்த்து யாரும் சுலபத்தில் கேள்வி கேட்டுவிடக் கூடாது, அப்படியான கோட்பாட்டை உருவாக்க ஆசை வந்திருக்க வேண்டும் அக்காலத் தலைவர்மாருக்கு.
தலைவர்மாருக்கு?
உலகம் முழுக்க அந்தக் காலகட்டத்தில் ஒன்றொன்றுக்கு தொடர்பே இல்லாத எல்லா இடங்களிலும் இதே போன்ற கோட்பாடு உருவாக்கப் பட்டது.
எல்லாம் சரி.
வழிபாட்டு மையங்களுக்கும் பொருளாதாரத்திற்கும் என்ன தொடர்பு இருந்திட முடியும்? பொருளாதார வளர்ச்சிக்கு, அடிப்படையில் சமூக ஒழுங்கு தேவைப்பட்டது. அப்படியான ஒழுங்கைத் தந்தது கடவுள் பயம்தான். அந்த பயம் பக்தியாக மாறியதெல்லாம் பின்னர்தான்.
தொடரும்..