சென்ற அத்தியாயத்தில் கூறிய கிறிஸ்தவ சமய வணிகத் தொடர்பு உதாரணத்தைப் போல், இந்து சமயத்தில் காட்டலாமெனப் பார்த்தால், அத்தகைய செய்திகளைச் சொல்லும் கல்வெட்டுகளோ, செப்புப் பட்டயங்களோ நம்மிடத்தில் இல்லை.
கல்வெட்டுகள் எல்லாம் கோயிலில் இருந்து கிடைக்கப்பெற்றவைகளாக இருக்கின்றன. அக்காலத்தில் கோயிலில் கல்வெட்டுகளில் பொறித்துக் கொள்ளும் உரிமை, மன்னர்களுக்கும் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த மந்திரிகள், தளபதிகள் ஆகியோருக்குத்தான் இருந்தன. அன்று, மன்னரின் நேரடிக் கண்காணிப்பில் இருந்த கோயில்களே பெரும் நன்கொடைகள் பெற்று காலங்களைக் கடந்து நீடித்துக் கொண்டிருக்கின்றன.
ராணிகள், தளபதிகள், அமைச்சர்கள் ஆகியோரால் கட்டப்பட்ட கோயில்களை, அவர்களுக்கு அடுத்து யாரும் அவற்றைப் பராமரிக்கவில்லை என்பதால் அவை காலப்போக்கில் அழிந்து போயின. அப்படியும் தப்பிப் பிழைத்து இன்று நம்மிடத்தில் இருப்பவற்றில் செம்பியன் மாதேவியார் கட்டின கோயில்களில் சிலவையே உள்ளன.
கோயில்களிலேயே இரண்டு வகை உண்டு. இவற்றைப் பக்தியின் அடிப்படையில் பிரிப்பதை விட, பொருளாதார அடிப்படையில் பார்த்தோமானால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். பொருளாதார மையமாக இருந்த வழிபாட்டு மையங்கள், மற்றும் பொருளாதார மையமாக இல்லாத வழிபாட்டு மையங்கள்.
முதல் வகை வழிபாட்டு மையங்கள் எவ்வாறு உருவாகியிருக்கும் என்பதைக் கடந்த அத்தியாயங்களில் சொல்லியிருந்தேன். இந்த இரண்டாம் வகை மையங்கள் எவ்வாறு உருவாகி இருக்கும்? ஆரம்ப காலத்தில் சமூகம் உருவானபோது தங்களுக்கென ஒரு வழிபாட்டு மையத்தை உருவாக்கிக் கொண்டு, சமூகத்தை வழிநடத்த சட்ட திட்டங்களை உருவாக்கியது. ஏன் இந்தச் சட்ட திட்டங்களெனப் பார்த்தால்.. அவற்றின் மூலம் பொருளாதார லாபங்களை அடையத்தான். இந்தச் சட்ட திட்டங்களின் நோக்கம் கட்டுக்கோப்பான சமூகத்தை அமைத்து, பொருளாதார நிலையை அடைவதுதான்.
உதாரணமாக.. நவீன காலத்தில் ஏன் எல்லோரும் வருமான வரி செலுத்துகிறோம்? ‘விதிக்கப்பட்ட வரியைக் கட்டவில்லையென்றால் சட்ட ரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என்பதால்தான். ‘வரி செலுத்தவில்லையென்றால் எந்தவித சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்’ என்கிற நிலை இருந்தால், ‘நாட்டின் முன்னேற்றத்திற்காக வரியைச் செலுத்தப் போகிறேன்’ என்று தன்னிச்சையாக யாராவது வருவார்களா? சத்தியமாக யாரும் வர மாட்டார்கள். ஆக, உலகில் எல்லாச் சமூகத்திலும் பொருளாதார நோக்கத்திற்காகத்தான் முதன் முதலில் சட்டங்களும், அவற்றை ஏன்? எப்படிப் பின்பற்ற வேண்டுமென்ற திட்டங்களும் கொண்டு வரப்பட்டன.
இப்படியாக, சமூகம் தனக்கென்று பொருளாதாரக் கொள்கை அல்லது சட்ட திட்டங்களை உருவாக்கிக் கொண்டபொழுது அதனை ஒரு பிரிவினர் எதிர்த்தனர். சட்ட திட்டங்களை ஏற்றுக் கொள்ளாத அந்தப் பிரிவினரை, அந்தச் சட்ட திட்டங்களை எவ்விதக் கேள்வியுமின்றி ஏற்றுக் கொண்ட பெருவாரியான மக்கள் ஒன்றிணைந்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட அந்த மக்களுக்கு மத ரீதியாக அடையாளங்கள் கொடுக்கப்பட்டன. இப்படி ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் பழக்கம் நமது நாட்டில் மட்டுமன்றி உலகெங்கும் சமூக அமைப்புகளில் நடந்த ஒன்று தான்.
சரித்திரத்தில் அமைப்பால் விதிக்கப்பட்ட சட்ட திட்டங்களைக் கேள்வி கேட்டோரைச் சட்டத்திற்கு அப்பாற்பட்டோர் என அறிவித்து, சட்டம் தரும் எந்த பாதுகாப்பையும் அவர்கள் பயன்படுத்தும் உரிமையில்லை என அறிவித்தனர். அதாவது, அவர்களை யாராவது காயப்படுத்தினாலோ, அவர்களிடம் யாராவது திருடினாலோ அவர்களால் கேள்வி கேட்க முடியாது. மாறாக வஞ்சம் வைத்து பதிலுக்குக் கொன்றாலோ, சேதம் விளைவித்தாலோ அவர்களை எந்த கேள்வியும் கேட்காமல் தண்டித்தனர்.
எல்லாம் சரி.. எதனைப் பாதுகாக்க இந்த சட்ட திட்டங்கள்? என்ற கேள்வி, நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் எல்லோருக்கும் வரத்தான் செய்யும். ஆதிக்க வர்க்கத்தின் அல்லது முதலாளித்துவத்தின் பொருளாதார லாபங்களைக் காக்கவே இந்த சட்டங்கள் இயற்றப்பட்டன.
ஜெருசலேத்தின் யூதேயா நகரம், பெரிய வர்த்தக மையமாகப் பழங்காலத்தில் விளங்கியது. அங்கு இருந்த ஒரு வழிபாட்டு மையத்தில், லாப நோக்கில் நடந்து கொண்டிருந்த பணப் பரிவர்த்தனைகள், பணத்தரகர்கள் ஆகியோரைக் கேள்வி கேட்டதனால்தான் இயேசு சட்ட நீதிமன்றம் வரைக்கும் போக வேண்டியதாக ஆனது. அது என்ன? அதன் பின் என்னவானது? என்பதைப் பற்றியெல்லாம் வரப் போகும் அத்தியாயத்தில் சொல்கிறேன்.
இப்பொழுது சில வரிகளுக்கு முன்னால் கூறிய, ‘சமூக அமைப்பில் இருந்து விலக்கி வைக்கப்பட்டோர்’ என்ன செய்து கொண்டிருந்தனர்? எனப் பார்ப்போம். அவர்களும் தங்களுக்கென்று ஒரு சமூக அமைப்பை உருவாக்கிக் கொண்டனர். சமூகம் என்றொன்று உருவாகுகிறதென்றால்.. கூடவே வழிபாட்டு மையம் ஒன்றும் உருவாகும் என்பது சமூக எதார்த்தம்தானே. அப்படி உருவான கோயில்கள் எல்லாம் அந்தச் சமூக இயக்கத்திற்கு உதவி செய்ததைத் தவிர்த்து அது பெரிய லாபகாரமான பொருளாதார மையங்களாக உருவாகவில்லை.
இதனால்தான் சிறு காவல் தெய்வங்கள், வன தேவதைக் கோயில்கள் எல்லாம் பெரும்பாலும் ஊருக்கு வெளியே எல்லையில் அமைந்திருக்கும். ஏன் அப்படி எல்லையில் அமைந்திருக்கின்றன? எனப் புரிந்துகொள்ள யாரும் முயன்றதில்லை. இவற்றைத் தவிர்த்து, பொருளாதார மையங்களாக இருந்த பெரிய வழிபாட்டு மையங்கள் என்ன செய்து கொண்டிருந்தன?
கடன் வழங்குதல், முதலீடுகள் ஆகியவற்றோடு, யாத்திரிகளுக்கான பணப் பாதுகாப்பையும் செய்து கொண்டிருந்தன. வைப்பு நிதி, ஹுண்டி பத்திரங்கள்தான் அவை.
தொடரும்.