போன அத்தியாயத்தில் கோயில்களுக்கிடையே இருந்த வணிகத் தொடர்பைப் பற்றியும், பொருளாதார மையங்களாக விளங்கிய வழிபாட்டு மையங்களுக்கான கோயில்களுக்கிடையே நடந்த வணிகப் பரிவர்த்தனை பற்றியும் சொல்லி இருந்தேன். அதனைக் கேட்டபின் பலருக்குப் பல கேள்விகள் தோன்றியபடி இருக்கின்றன.
இதனைப் புரிந்துகொள்ள, கோயில்கள் அமைந்திருக்கின்ற புவியியல் இருப்பிடங்களைச் சொல்லி விடுவது நல்லதென நினைக்கிறேன். சில அத்தியாயங்களுக்கு முன்பு ‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்கிற பழமொழிக்கு உண்மையில் என்ன அர்த்தமென்று சொல்லி இருந்தேன். அதனை இப்பொழுது நினைவு படுத்திக் கொள்ளுங்கள். கோயில்களெல்லாம் பொருளாதார மையங்களாக இருந்தபடியால், அவை உற்பத்தி செய்ய தொழில் வாய்ப்பு மற்றும் வணிக வாய்ப்பு அதிகம் இருந்ததால், கோயில்கள் இருந்த ஊரில் குடியேறினால், ஒருவனது வாழ்க்கைக்குத் தேவையான பணத்தைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய வாய்ப்பினைக் கோயில் தரும்.
சரி, அப்படி வணிக வாய்ப்பினைத் தரும் கோயில்கள் எங்கு அமைந்திருக்கும் ?
பண்டைய கால வணிகச் சாலையைப் பற்றி நாம் புரிந்துகொள்வது இந்த நேரத்தில் அவசியமாகிறது. வணிகச் சாலையின் முக்கியப் பயன் பண்டைய காலத்தில் என்னவாக இருந்தது? ஒரு பொருளோ, பண்டமோ உற்பத்தி ஆகுமிடத்திலிருந்து அதற்கான சந்தைக்குக் கொண்டு போகிற வழியை வணிகச் சாலை எனப் புரிந்து கொள்ளலாம். வணிகச் சாலை, பட்டுச் சாலை, உப்புச் சாலை எனச் சொல்லும் பொழுதெல்லாம் அதனைக் கேட்கும் கூட்டத்தில் இருக்கும் மக்கள், அவை ஏதோ பண்டைக்காலச் சரித்திரத்தைச் சேர்ந்த ஒன்றெனவும் நவீன காலத்திற்கும் அதற்கும் தொடர்பு இல்லை எனவும் சொல்வார்கள். ஆனால் உண்மையில், இன்று நவீன முறை என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கும் எதுவும் புதிதாக உருவாக்கப்படவில்லை. அதெல்லாம் பண்டைய காலத்தில் இருந்து புழக்கத்தில் இருந்தவைதான். காலத்திற்கேற்றாற்போல் நவீனப்படுத்தப்பட்டு இருக்கிறது.
உதாரணத்திற்குச் சென்னையில் அமைந்திருக்கும் பழங்காலக் கோயில்களின் புவியியல் இடங்கள் பற்றிப் பார்ப்போம்.
திருவொற்றியூர் தியாகராஜர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், கோவளம் பக்கத்தில் அமைந்திருக்கும் திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாள் கோயில், மாமல்லபுரத்தில் (மகாபலிபுரம் / திருக்கடல்மல்லை) அமைந்திருக்கும் ஸ்தல சயனப் பெருமாள் கோயில், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில், விழிஞ்சம் ஆழிமலை புளிங்குடி மகாதேவ கோயில் ஆகிய கோயில்களுக்கு எல்லாம் ஒரு தொடர்பு இருக்கிறது. என்ன அது? என்று கொஞ்சம் யோசித்துப் பார்க்கவும்.
தென்னிந்தியாவின் புவியியல் அமைப்பு பற்றிக் கொஞ்சம் தெரிந்திருந்தாலும் போதும், யோசிக்காமலேயே சொல்லி விடலாம். இவையெல்லாம், இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே வணிக வர்த்தகம் முக்கியத்துவம் பெற்ற துறைமுகங்களாக இருக்கும் இடங்களில் அமைந்து இருக்கின்றன என்று.
துறைமுகங்களில் அமைந்திருப்பதால் இந்தக் கோயில்களெல்லாம், பண்டைய காலத்தில் பொருளாதார மையங்களாகத் திகழ்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்தப் பொருளாதார மையங்களில் விற்கப்படும் மற்றும் வாங்கப்படும் பொருட்களுக்கான சந்தை அங்கேயே இருக்குமா? என்றால் இல்லை என்பதுதான் பதில். அந்தத் துறைமுகங்களிலிருந்து பொருட்களைக் கொண்டு போகவும், மற்றும் துறைமுகங்களுக்குப் பொருட்களைக் கொண்டு வரவும் பயன்படுத்தப்பட்ட சாலையை, வணிகச்சாலை எனச் சொல்வார்கள்.
சோழ, சேர, பாண்டியர்கள் பற்றிய சரித்திரத்தை ஆர்வமாக வாசிப்போருக்கு, கொஞ்ச காலத்திற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ‘இராஜகேசரி பெருவழி‘ பற்றித் தெரிந்திருக்கும். ஐரோப்பிய வணிகர்களிடம் பொருட்களை வாங்கவும், விற்கவும் பல்வேறு சந்தைகளிலிருந்து உள்நாட்டு வணிகர்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்தினார்கள். இந்த இராஜகேசரி பெருவழி என்பது ஒரு வணிகச்சாலைதான். இதுபோன்று பல வணிகச்சாலைகள் தமிழகத்தில் இருந்திருக்கின்றன. ஆனால், 12ஆம் நூற்றாண்டு மற்றும் 13ஆம் நூற்றாண்டுகளில் சொல்லி வைத்தது போல் சேர, சோழ, பாண்டிய ராஜ்ஜியங்கள் வீழ்ந்ததால், தமிழகத்தில் பரவிய விஜயநகர ராஜ்ஜியத்தால் சந்தைகள் மற்றும் அதற்கான வழிகள் எல்லாம் மாறிப் போயின.
ஏதாவதொரு புள்ளியை எடுத்து கொண்டு, கோயில்களுக்கிடையே இருந்த வணிகத் தொடர்பைப் புரியும்படிச் சொல்ல முயற்சிக்கிறேன்.
மாமல்லபுரத்தில் இருக்கும் ஸ்தல சயனப் பெருமாள் கோயிலை எடுத்துக் கொள்வோம். அந்தக்காலத்தில் மாமல்லபுரம் என்பது திருக்கடல்மல்லை என்ற பெயரில் பல்லவ ராஜ்ஜியத்திலும், அதன் பிறகான காலத்தில் சோழர்கள் ராஜ்ஜியத்திலும் பெரும் வணிகத் துறைமுகங்களாக இருந்தன.
இப்படியான இடத்தில், ஸ்தல சயனப் பெருமாள் கோயிலிலிருந்து பக்கத்தில் இருக்கும் பெரிய சந்தை என்றால் அது காஞ்சிபுரம்தான். காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் கோயில் இருக்கிறது. அங்கிருந்து நேராகப் போனால் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில். வரதராஜப் பெருமாள் கோயிலிலிருந்தும், வீரராகவப் பெருமாள் கோயிலிலிருந்தும் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு நேர்வழியில் போக முடியும். அப்படி, மூன்று கோயில்களையும் இணைக்கிற மாதிரி ஒரு கோடு வரைந்தால் அது ஒரு முக்கோண வடிவத்தைத் தரும். அங்கிருந்து நேராகப் போனால் திருமலை திருப்பதி கோயிலுக்குப் போக முடியும்.
திருப்பதி கோயிலுக்கும், சோளிங்கர் கோயிலுக்குமிடையே இருக்கும் தூரத்தில்.. நடுவிலிருக்கும் நாகலாபுரம் வேதநாராயண பெருமாள் கோயிலும் அந்த ஊரும், விஜயநகர ராஜ்ஜியத்திற்காகக் கிருஷ்ணதேவராயரால் அவரது அம்மா நாகலா தேவியின் நினைவாக நிர்மாணிக்கப்பட்டன. விஜயநகர ராஜ்ஜியத்தின் காலத்திலும், அதற்கு முன் ஹரிகண்டபுரமாக இருந்த பொழுதிலும் முக்கிய வணிக மையமாக நாகலாபுரம் இருந்துள்ளது. அதனை முக்கியப் பொருளாதார மையமாகக் கிருஷ்ணதேவராயர் மாற்றினார்.
சரி.. இந்தக் கோயில்களுக்கிடையே இருக்கும் பொதுவான தொடர்பு என்னவாக இருக்க முடியும்? இந்தப் பகுதிகளெல்லாம், பல்லவர்கள் மற்றும் சோழர்கள் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளன. மேலும் இந்தப் பகுதிகள் எல்லாம் பண்டைய காலத்தில் வணிக மையங்களாக இருந்துள்ளன. மேலும், எல்லாக் கோயில்களும் வைணவ சமயக் கோயில்கள். இந்தக் கோயில்களை இணைக்கும் சாலைகளெல்லாம், பல ஊர்களின் சந்தைகளைக் கடந்து வந்து பல்லவர்களின் முக்கியத் துறைமுகத்தைச் சேர்கின்றன.
இப்பொழுது ஒரு கேள்வி எல்லோருக்கும் வரும். ஏன் இந்த வணிகச் சாலைகளெல்லாம் திருக்கடல்மல்லை துறைமுகத்தை நோக்கியே இருக்கின்றன? என்று. நான் சொல்லிருப்பது திருக்கடல்மல்லை துறைமுகத்திகான வழி மட்டுமே. மேலும், மாமல்லபுரத்தில் பண்டைய ரோமானிய மற்றும் சீன தேசத்து நாணயங்கள் கிடைத்திருக்கின்றன. ஆக.. மாமல்லபுரம் முக்கியத் துறைமுகம், முக்கிய வணிக மற்றும் பொருளாதார மையமாக இருந்தது என்பது தெரிய வருகிறது. மேலும் உலகெங்கிலுமிருந்து பொருட்கள் வரும்பொழுது, அவற்றுக்கான சந்தைகளுக்கு அவற்றை எடுத்துச் சென்றால்தான் பொருட்களை விற்க முடியும்.
இந்த வணிகச்சாலைக் கோட்பாட்டை, எல்லா முக்கியமான இடங்களோடும், கோயில்களோடும் தொடர்பு படுத்திப் பார்க்கலாம். வணிகர்கள், வணிகச் சாலை, சந்தைகள், மற்றும் கோயில்கள் இவற்றையெல்லாம் இணைத்த முக்கியமான ஒன்று என்னவாக இருக்கும்?
திருடர்களிடமிருந்து பொன், பொருட்களைக் காப்பாற்றிக் கொள்ள பொருளாதார மையங்கள் வணிகர்களுக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு தந்தன? அப்படியான பாதுகாப்பு மட்டும்தான் இருந்ததா?
இந்த எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது. அதில் முதலாவதாக வருபவை ஹுண்டி பத்திரங்கள்.
தொடரும்.