தண்டகாரண்யத்தின் பஞ்சவடி, பகல் நேரத்துச் சூரிய ஒளியில் பொன் தகடாக மிளிர்ந்தது. கோதாவரி நதி, வெயிலின் பிரதிபலிப்பில் வெள்ளிப் பளபளப்பாய் மின்ன, கரையோர மூங்கில் மரங்களின் நிழல்களை அலைகளில் மெல்ல அசைத்தது. இந்த உயிரோட்டமான வனத்தின் மத்தியில், சூர்ப்பனகையாக உருமாறிய காமவள்ளி, தன் ஆழமான கோபத்தை மறைத்து, ஒரு மோகனப் பெண்ணாக மாறி, பஞ்சவடியை நோக்கி நடந்தாள்.
அவளது அழகு, முன்பு எப்போதும் இருந்திராதபடி மந்திரத்தால் செதுக்கப்பட்டது போலிருந்தது. அவள் கூந்தல், அந்தி இருளின் அடர்மையைப் போலக் கருத்து, நிலம் வரை புரண்டது. அவள் கண்கள், தாமரை இதழ்கள் போல நீண்டு, காலைச் சூரியனின் ஒளியென மென்மையாக சிவந்து, வசீகரம் என்னும் மந்திரத்தை உமிழ்ந்தன. அவளது வனப்பு, கண்டோர் மையல் கொள்ளும் தேவலோக மங்கையின் சாயலைக் கொண்டிருந்தது. அவள் மெல்லிய உடலிலிருந்து கிளம்பிய மலர்களின் நறுமணம், காட்டின் பசுமையோடு கலந்து, மயக்கத்தை ஏற்படுத்தியது. அவள் இதயத்தில், கணவன் வித்யுத்ஜிவாவின் மரணமும், மகன் சம்புகனின் இழப்பும், இராவணன் மற்றும் இலக்குவனுக்கு எதிரான பயங்கரமான பழிவாங்கல் நெருப்பாக எரிந்தன.
இராமனும் இலக்குவனும் கோதாவரி கரையில் இருந்த தங்கள் பர்ணசாலையின் முன் அமர்ந்திருந்தனர்.
இலக்குவன், இயற்கையின் ஓசைகளில் மிகவும் ஆழ்ந்து, காட்டின் மெல்லிய அசைவுகளையும், ஆற்றின் இரைச்சலையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் பெற்றிருந்தான். அவன் காதுகள், பறவைகளின் கிசுகிசுப்பிலும், இலையின் சலசலப்பிலும் கூட, ஒரு அந்நிய சக்தி நுழைவதைப் பிரித்தறிந்தன. சாதாரணப் பெண்களின் வருகைக்கும், மந்திரத்தால் உருமாறிய அரக்கியின் வரவுக்கும் இடையே இருந்த நுட்பமான வித்தியாசத்தை அவன் உணர்ந்தான்.
”அண்ணா, இதுவரையிலும் கேட்காத ஒரு ஓசை இப்போது கேட்கிறது. வண்டுகளின் ரீங்காரத்தில் ஒரு பதட்டம் கலந்திருக்கிறது. இது ஏதோ ஒரு மாயையின் வரவு. ஏதோ தீய சக்தி நம்மை நோக்கி வருகிறது என்பதை நான் உணர்கிறேன்” என்று இலக்குவன் இராமனை எச்சரித்தான்.
இராமன் இலக்குவனைப் பார்த்து மெல்ல முறுவலித்தான்.
” இன்னுமா இலக்குவா மனதை அச்சத்தில் அலைகழிக்கின்றாய்? மாரீசன் இங்கு வர வாய்ப்பில்லை. ” என்றான்.
” அண்ணா, இது அந்த ஓசை இல்லை. மாரீசனின் காலடி ஓசையை நான் என்றும் மறவேன். இது புதியது. மெல்லிய நடை என்றாலும் அதில் கலந்திருக்கும் அதிர்வு அச்சத்தை உண்டு பண்ணுகிறது ” என்றான் இலக்குவன். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போடே சூர்ப்பனகை, தன் மாய அழகின் உச்சத்தில், தன் உடல் முழுவதும் வசீகரம் பொங்க, நடனமாடுவது போல மெல்ல நடந்து, இராமன் முன் வந்து நின்றாள்.
அவள் கண்கள், இராமனை மட்டுமே தீண்டத் துடித்தன. காட்டில் உள்ள மரங்கள் கூட அவளது அழகில் ஒரு கணம் மயங்கிவிட்டதைப் போல அசைவற்று நின்றன. சூர்ப்பனகை, தன் குரலைத் தேன் போல இனிமையாக்கி, இராமனின் முகத்தைப் பார்த்துச் சிரித்தவாறே பேசத் தொடங்கினாள். அந்தக் கணம் அவளும் சற்றே மனம் தடுமாறினாள் இராமனின் அழகைக் கண்டு.
”ஐயோ! இந்தக் காட்டுக்குள் இவ்வளவு பெரிய அதிசயம் ஒளிந்திருக்கிறதே! ஓ வனத்தின் இளவரசே, உங்கள் பெயரென்ன? நீங்கள் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர்? இந்தக் காட்டுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் மகிமை என்னவென்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லையே!” என்றாள்.
இராமன், புன்னகையுடன் அவளைப் பார்த்தான்.
”நான் அயோத்தி மன்னர் தசரதனின் மூத்தப் புதல்வன், இப்போதைக்கு இந்த தண்டகாரண்யத்தில் முனிவர்களின் காவலன். என் பெயர் இராமன். தீதற்றதாகட்டும் தங்களின் வரவு அம்மா ” என்றான்.
சூர்ப்பனகை, மேலும் அவனை நெருங்கி வந்து, அவன் தோற்றத்தை வருணிப்பது போலத் தன் கண்களை ஓட்டினாள்.
”இராமனா? ஆஹா என்ன அழகான பெயர்! ஆனால் ஏனோ இந்தப் பெயர் எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. இராவணன் என்னும் பெயர் போல இது ஒன்றும் கம்பீரமாக இல்லை. ஒப்பிடுகையில் இது மிகவும் சாதாரணமான பெயர். இராவணன் மூவுலகையும் கட்டிக் காக்கும் பேரரசன். சக்கரவர்த்திகளின் அதிபதி. அது போகட்டும் உங்களைப் போன்ற ஒருவரின் இந்த திண்ணிய மார்பையும், கரங்களில் இருக்கும் வீரத்தையும் தாங்க தேவலோக மங்கையரும் கூடச் சிரமப்படுவார்கள் போலிருக்கிறதே! இங்கிருக்கும் இந்தக் உங்களின் வில்லையும் விட, நீங்கள் தான் அதிகக் கடினமாகவும் உறுதியாகவும் தெரிகிறீர்கள்.” என்றாள்.
பேசிக்கொண்டே அவள் மேலும் தன்னை அலங்கரித்துக் கொண்டாள், உடைகளை அவ்வப்போது நெகிழ்த்திவிடவும் செய்தாள்.
”ஐயா, நான் விரும்பித் துறவறம் பூண்டு வாழும் பெண். ஆனால், இன்று உங்களை பார்த்தபின், என் தவ வலிமை எல்லாம் என்னிடமிருந்து உருகிப் போவது போல உணர்கிறேன். உங்களைப் பார்த்த பிறகு, துறவு வாழ்க்கை ஒரு சலிப்பூட்டும் விஷயமாகத் தெரிகிறது.” என்றாள்.
சூர்ப்பனகையின் கண்கள், இராமனின் கண்களை தீண்டின.
”நீங்கள் யாரோ ஒரு ராஜகுமாரிக்குச் சொந்தமானவராக இருக்கலாம். அப்படியிருந்தாலும் கூட என்னைப் போன்ற ஒரு வனராணிக்கு நீங்கள் மட்டுமே ராஜா! உங்கள் மனைவி இருந்தால், என்னைப்போல உங்களைப் புரிந்துகொண்டு, உங்கள் கம்பீரத்தையும் உங்கள் ஈடில்லா அழகையும் ரசிப்பாளா என்று தெரியவில்லை. ஆனால், நான் உங்களை முழுவதுமாக ரசிப்பேன், என் அன்பில் உங்களைக் கரைத்து விடுவேன். என்னைப் போல வேறு ஒரு பெண் உங்களுக்கு கிடைப்பது அரிது!”
சூர்ப்பனகையின் உடல்மொழி, அவள் வார்த்தைகளை விட அதிகக் கவர்ச்சியுடன் இருந்தது. அவள் இராமன் தன்னை ஏற்கும் வரை விடப்போவதில்லை என்பதில் உறுதியாய் இருந்தாள்.
” இல்லை அம்மா, நான் மணமானவன். என்னால் வேறு பெண்ணை மனதாலும் நினைக்க இயலாது ” என்றான்.
இராமன், சூர்ப்பனகையின் வசீகரிப்பைக் காணக் கூசி தலை குனிந்தான். பிற மகளிரை அவ்வாறு நோக்குவதில் அவனுக்கு எப்போதுமே சிரமம் தான். ஆனால் அவள் அதை இரசித்தாள்.
“அதிலென்ன பிழை இருக்கிறது மாவீரனே, உனக்குத் தெரியுமல்லவா உங்கள் தந்தையாருக்கு எத்தனை மனைவி என்று. உங்களுக்கு கூட ஒரு மனைவி இருந்தால் என்ன தீங்கு வந்துவிடும்” என்றாள். சீதையின் கண்கள் கனல் கக்கத் தொடங்கியதையும் சூர்ப்பனகையின் நாடகம் எல்லை மீறுவதைக் கண்டு, அவளை நேரடியாக மறுக்காமல், நகைச்சுவையாகப் பேசினான்.
”அழகியே, உங்கள் வரவுக்கு நன்றி. ஆனால், உங்கள் பேச்சுதான் மிகவும் அச்சமூட்டுவதாய் இருக்கிறது. சொன்னேனே நான் ஏற்கனவே திருமணமானவன், என் மனைவி சீதை இதோ, அருகில் தான் இருக்கிறாள்” என்று இராமன் சீதையை நோக்கிச் சொன்னான்.
”இருக்கட்டுமே பேரழகா, இரு மனைவிகள் இருப்பதில் என்ன சிரமம்?” என்று சூர்ப்பனகை சொன்னதையே திரும்பச் சொல்ல ஆரம்பித்தாள்.
இராமன் சிரித்தான். “இப்பிறவிக்கு எனக்கு ஒரு மனைவி போதும். அவள் என் உயிர், உணர்வு, என் மூச்சு, என்னைக் காக்கும் மந்திரம். ஆனால், இந்த அழகிய வனத்தில், உன்னைப் போன்ற ஒரு வசீகரமான பெண் தனிமையாக இருப்பது நியாயமில்லை தான். எனக்கு தம்பி ஒருவன் இருக்கிறான், அவன் இளமையுடன், பிரம்மச்சரிய விரதத்துடன் இங்கு வாழ்கிறான். அவன் தான் உங்களுக்கு ஏற்றவன்.” என இராமன், விளையாட்டுத்தனமாக இலக்குவனை நோக்கிக் கையைக் காட்டினான்.
”ஓ வனத்தின் நாயகனே, உன் வீரத்தையும் அழகையும் கண்டபின், நான் என்னை இழந்துவிட்டேன். நீயே என் நாயகன். என்னைப் போன்ற ஒரு வனராணியை உனது துணைவியாக ஏற்றுக்கொள்!” என்று அவள் மீண்டும் கெஞ்சும் குரலில் பேசினாள்.
இராமன், அவளது நாடகத்தை அறிந்திருந்தாலும், புன்னகையுடன் அதை எதிர்கொண்டான்.
”அழகியே, நான் ஏகபத்தினி விரதன். என் இதயம், என் தேவி சீதைக்கு மட்டுமே சொந்தமானது. நான் உன்னை ஏற்க இயலாது. ஆனால், என் இங்கே பிரம்மச்சாரி, மனைவியைப் பிரிந்திருக்கிறான். இளமையும் வீரமும் நிறைந்தவன். வேண்டுமானால் நீ அவனை அணுகிப் பார்,” என்று வேடிக்கையாகக் கூறி அவளுக்கு இலக்குவன் இருக்கும் இடத்தைக் காட்டி நகைத்தான்.
இராமன் தன்னை இலக்குவன் பக்கம் திருப்பிவிட, சூர்ப்பனகையின் முகத்தில் ஒரு கணம் சலிப்பு தோன்றியது. சட்டென தான் வந்த நோக்கத்தில் இருந்து தவற இருந்ததை உணர்ந்து மனதுக்குள் நாணினாள். இருந்தாலும், தன் நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதற்காக, தன் பேச்சில் முழு வசீகரத்தையும் திரட்டி இலக்குவனை அணுகினாள்.
இலக்குவன், இராமனின் விளையாட்டுத்தனமான பேச்சு அவன் மீது திரும்பியபோதும், அவனது முகம் எந்தச் சலனத்தையும் காட்டவில்லை. அவன் அந்தக் குடிலின் பக்கத்தில் தானே அமைத்த எச்சரிக்கை கோபுரத்தின் மீது அமர்ந்திருந்தான். அவனுக்கு சுற்றி நடப்பதைக் கண்காணிக்க அந்தக் கோபுரம் தேவையாய் இருந்தது.
சூர்ப்பனகை, கோபுரத்தின் கீழே இலக்குவன் முன் நின்று மேலே அவனை பார்த்தபடி கண்களால் வலை வீசினாள்.
”ஓ இளைய வீரனே, உன் அண்ணன் ஒரு விதிவிலக்கு. அவர் என் அன்பை மறுத்துவிட்டார். ஆனால், நான் உன்னிடம் ஓர் உண்மையான வீரனையும், அதிர்ஷ்டசாலியையும் காண்கிறேன். நான் உன் அண்ணனை விட ஆழமானவனும், தனித்துவமானவனும் நீதான் என்று நினைக்கிறேன்.” என்று ஆரம்பித்தாள்.
இலக்குவன், அவளைப் பாராமலேயே, தனது வாளைச் சுத்தம் செய்யும் பணியில் கவனம் செலுத்தினான்.
”பெண்ணே, உனது வார்த்தைகளில் தேனின் இனிமை இருக்கிறது. ஆனால், அதன் அடியில் ஒரு நஞ்சின் குணம் இருப்பதை என்னால் உணர முடிகிறது. என் அண்ணன் என்னை உன்னிடம் அனுப்பியது, என் மீதான அன்பால் அல்ல, உன்னைத் தவிர்க்க வேண்டியே அனுப்பி இருக்கிறான் என்பது உனக்குப் புரியவில்லையா? இங்கிருந்து சென்றுவிடு” என்று இலக்குவன் சற்றே சினத்துடன் தீர்க்கமாகப் பேசினான்.
சூர்ப்பனகை, தனது அலங்காரப் பேச்சை உயர்த்தினாள்.
”நீ என்ன சொல்கிறாய்? நான் உனக்கு ஏற்றவள் இல்லையா? நான் உனக்குச் சேவை செய்யமாட்டேனா? நீ என்னுடன் சேர்ந்தால், உன் அண்ணனின் மனைவி நமக்குச் சேவகி போல இருக்கலாம். நீயே இவ்வனத்தின் இளைய ராஜா ஆகிவிடுவாய்! உனக்கு நான் அடிமைத் தொழில் செய்வேன். என்னோடு நீ சொர்க்கத்தின் இன்பத்தைக் காண்பாய். உன் அண்ணனின் நிழலாக வாழ்வதை விட, என்னோடு ஒளியாக வாழலாம் அல்லவா?” என்றாள்
இலக்குவன், மெல்ல வாளைக் கீழே வைத்துவிட்டு, குனிந்து அவளைப் பார்த்தான். அவன் குரல் உறுதியாகவும், சினம் மிகுந்தும் ஒலித்தது.
”நீ பேசுவது அதர்மப் பேச்சு. நீ மானுடப் பிறவி கொண்டவள் இல்லை என்பதை நான் அறிவேன். உன் நடையும், உன்னைச் சுற்றி எழும் எதிர்மறை அதிர்வலைகளும் கொண்டு நீ யாரென்று என்னால் ஊகிக்க முடிகிறது. நான் என் அண்ணனின் நிழலாக இருப்பதே எனக்குப் பெருமை. இராமனுக்குச் சேவை செய்வதே என் தவம். அவர் என் அண்ணன் மட்டுமல்ல, எனக்கு குருவும் தெய்வமும் ஆவார். மேலும் கேள் பெண்ணே, அன்னை சீதையைப் பற்றி தவறாக ஏதும் இன்னொரு வார்த்தை உன் வாயில் இருந்து வந்தால்… ” எனக் கொலைவெறி மின்னும் கண்ணுடன் அவளைப் பார்த்தான்.
சூர்ப்பனகை, இலக்குவனின் மறுப்பைக் கேட்டு மனம் கலங்கினாள். அவளுக்குள் சினம் மெல்ல மெல்ல துளிர்த்தது. இராமனின் மறுப்பை விட, இலக்குவனின் இந்த சினம் மிகுந்தப் பேச்சு பழிவாங்க வந்த அவளின் மனதை இன்னும் தீமூட்டியது.
”நீங்கள் இருவருமே கற்பாறைகள் போல இருக்கிறீர்கள்! என் அழகு உங்களைச் சிறிதும் அசைக்கவில்லையே! காதல் என்னும் உணர்ச்சியே உங்களுக்கு இல்லையா?” என்று சூர்ப்பனகை சினத்தின் விளிம்பில் கேட்டாள்.
இலக்குவன் “காதல் இருக்கிறது. என் அண்ணன் இராமன் மீதும், என் அண்ணி சீதை மீதும். அவர்கள் மீதுள்ள பக்தி தான் என் காதல். நீ இப்போது இவ்விடம் நீங்கிச் செல்லலாம்” என்று அவளை கையை நீட்டி அவ்விடம் விட்டு அகலச் சொன்னான்.
சூர்ப்பனகை, இனி தன் நாடகம் பலிக்காது என்பதை உணர்ந்தாள். இராம இலக்குவரைத் தன் வழியில் கொண்டு வர முடியாது என்று அறிந்த அவள், தன் பழிவாங்கலைத் தொடர, வன்முறை மட்டுமே வழி என்று தீர்மானித்தாள். அவள் கண்கள், அருகில் அமர்ந்திருந்த சீதையின் மீது பழிநோக்குடன் திரும்பின.
”இவள்தானே இவர்களின் பாசத்துக்குக் காரணம்? இவளைப் பிரித்தால், இவர்களின் வீரம் உடையும்! சீதையைக் கடத்திச் சென்று இராவணனிடம் விட்டால், என் அண்ணனின் பெண்ணாசை இராமனின் வீரத்துடன் மோதச் செய்யும்!” என்று மனதுக்குள் நினைத்து சூழ்ச்சி செய்தாள்.
சூர்ப்பனகை, தன் கவர்ச்சியான உருவத்தைக் கைவிட்டு, அருவருப்பான ஓர் அசுர உருவம் எடுத்து, சீதையை நோக்கிப் பாய்ந்தாள்.
”இவர்கள் என் காதலை மறுத்ததற்குக் காரணம் நீயே! உன்னை அழிப்பேன்!” என்று சீதையைக் கடத்த முயன்றாள்.
உள்ளுணர்வாள் உந்தப்பட்ட இலக்குவன், மின்னல் வேகத்தில் தன் வாளை உருவி, “ஏற்கனவே எச்சரித்தேன் அண்ணா, இவள் அரக்கி! பிராட்டியாருக்கு இவளால் ஆபத்து!” என்று உரத்த குரலில் எச்சரித்தபடியே அவளை நோக்கிப் பாய்ந்தான்.
அமர்ந்திருந்த எச்சரிக்கை கோபுரத்தில் இருந்து அவன் குதித்தவாறே சீதையைத் தூக்கிக் கொண்டு மேலெழும்பிய சூர்ப்பனகை மீது வாளை வீசினான். அந்த வீச்சின் வேகத்தில் சூர்ப்பனகையின் மூக்கை அறுந்து வீழ்ந்தது. சீதை விடுபட்டாள்.
சூர்ப்பனகை, வலியால் வானமே அதிரக் கதறினாள்.
அவள் இரத்தம் கொட்ட, “நீங்கள் இதற்கான விலையைக் கொடுப்பீர்கள்! என் அண்ணன் இராவணன் உங்களை அழிப்பான்!” என்று அலறி, காட்டை விட்டு ஓடினாள்.
சூர்ப்பனகை அந்த இடத்தைவிட்டு நீங்கியதும் அந்த இடம் சட்டென்று ஒரு அமானுஷ்ய மௌனத்தால் நிரம்பியது. இலக்குவன் மீண்டும் அந்த எச்சரிக்கை கோபுரத்தின் மீது சென்று அமர்ந்தான். அவன் கைகள் வாளை இன்னும் உறுதியாகப் பிடித்திருக்க, கண்கள் எச்சரிக்கையுடன் அந்த இடத்தைச் சுற்றி கண்காணிக்கத் தொடங்கியது. பெரும் ஆபத்து வரப்போகிறது என்று இலக்குவனின் உள்ளுணர்வு சொல்ல
” அண்ணா, நாம் இன்னும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டிய நேரம் இது” என்றான்.
இராமனும் சீதையும் ஸ்தம்பித்து நின்றார்கள்.