இப்போதைய வெளிநாட்டு வாழ்க்கையில் தீபாவளி என்பது விடுமுறை நாளாகக் கூட இல்லாமல் வேலை நாளாய்த்தான் கடந்து செல்கிறது. எனது சிறுவயதுத் தீபாவளிக் கொண்டாட்டம் இப்போது எங்கள் ஊரிலும் மாற்றம் கண்டிருந்தாலும் தீபாவளிக்கு ஊரில், அதுவும் சொந்தங்களுடன் இருப்பது மகிழ்வுதானே. அந்த மகிழ்வை பல வருடங்களாக இழந்தாச்சு என்பது வருத்தமும் வேதனையும்.
சிறுவயதுத் தீபாவளிகளை தொலைக்காட்சி காவு கொள்ளாமல் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறோம். இரவே எல்லாரும் கோவில் முன் கூடி வெடி போட்டு மகிழ்ந்து உறங்கி, பாதி இரவில் அம்மாவும் அக்காள்களும் பலகாரங்கள் செய்ய ஆயத்தமாகும்போதே நாமும் எழுந்து அவர்களுக்கு உதவுகிறேன் பேர்வழி என கூடவே உட்கார்ந்து இருப்பதும், விடிந்தும் விடியாமலும் அப்பா சூலம் பார்த்து, இந்தத் திசையில் உட்காருங்க எனச் சொல்லி எண்ணெய் தேய்த்துவிட, புலிமார்க் சீயக்காயைத் தேய்த்து கண்மாயில் தண்ணீர் நிறைந்து கிடந்தால் அங்கும், இல்லையேல் அடிபம்பிலும் குளித்து, புத்தாடைகளை வைத்துச் சாமி கும்பிட்டு அவசர அவசரமாக உடை அணிந்து கோவிலுக்கு ஓடி எல்லோருக்கும் புத்தாடையைக் காட்டி, வெடி போட்டு பின் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் ஆட்டம்தான்.
கல்லூரி படிக்கும் போதே தலையில் மட்டும் சாத்தரப்புக்கு எண்ணெய் வையுங்கள். எண்ணெய்யில் குளிப்பாட்ட வேண்டாம் எனச் சொல்ல ஆரம்பித்து, இப்போது எண்ணெய் தேய்த்துக் குளித்து எத்தனை வருடமிருக்கும் என எண்ணத் தோன்றுகிறது.
சாமி கும்பிட்டு வீட்டார் சாப்பிட்டதும் வீட்டுக்கு வீடு மாறி மாறிப் பலகாரங்கள் கொடுத்துக் கொள்வார்கள். அதுபோக, மாமா வீடு, சின்னம்மா, பெரியம்மா வீடுகள், அக்கா வீடுகள் என அவர்களின் ஊர்களுக்கு சைக்கிளில், பின்னர் வண்டியில் கொண்டு போய் கொடுத்துவிட்டு அவர்கள் கொடுக்கும் பலகாரங்களை வாங்கி வருவதும் உண்டு. பெரும்பாலும் மீந்து போன பலகாரங்கள் எல்லாமே மாட்டுத் தொட்டியில் ஊறி மாடுகளுக்கு உணவாகிவிடும்.
எங்க பெரியக்காவுக்கு திருமணம் ஆன பின், தீபாவளி அன்று மதிய விருந்துக்கு வீட்டுக்கு வருவார்கள். அவர்களுக்காகக் காத்திருப்போம். ஐத்தான் வெடி நிறைய வாங்கி வருவார். அப்போது அவர் கொண்டு வரும் வெடிகள் கிராமங்கள் அதிகம் பார்க்காத விதவிதமான வெடிகளாய் இருக்கும். இன்று வானத்தில் போய் வெடிக்கும் பலவகையான வெடிகள் வந்துவிட்டன. என் மகனெல்லாம் ரெண்டு வாரத்துக்கு முன்னாலயே வெடி போட ஆரம்பித்துவிட்டான். அப்போதெல்லாம் அரசு வெடி வெடிக்க நேரம் ஒதுக்குவதில்லை, எல்லா நேரமும் வெடிக்கும். இப்போது நேரம் ஒதுக்கினாலும் அப்படித்தான் வெடிக்கிறது. மகிழ்வைக் கொண்டாட இந்த நேரம் மட்டும் போதும் என்று சொல்ல முடியுமா..?
தொலைக்காட்சி எட்டிப் பார்த்தபோது எல்லாமே அப்படியே இருந்தாலும் எல்லாரும் கூடி வெடிப் போடுவதும், அவற்றை கொட்டாச்சி, மாட்டுச் சாணம் என வைத்து மகிழ்வது எல்லாம் போய் நடிகர்களின் பேட்டியும், புதிய பாடல்களும், படங்களும் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டன. அதில் மூழ்கிய போது தீபாவளியின் மகிழ்வும் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிட்டுப் போனதை நாம் விரும்பியே ஏற்றுக் கொண்டோம்.
என்னையெல்லாம் ஏழாவது விடுமுறையில் எங்க மாமா ஒருத்தரின் தையற்கடையில் முழுப்பரிட்சை விடுமுறைக்கு காசா கட்ட அனுப்பி விட்டார்கள். ஒவ்வொரு வருடமும் விடுமுறை விட்டதும் ‘மாப்ளய வரச் சொல்லுக்கா’ எனச் சொல்லி விடுவார். அப்படிப் போய் பதினொன்றாவதில் இருந்து தீபாவளிக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு அவர் கடையில்தான் நிற்பேன். அதுவும் தீபாவளிக்கு முதல் நாள் இரவு முழுவதும் அங்குதான் இருப்பேன். திருமண முடிந்த முதல் வருட தீபாவளிக்கும் முதல் நாள் அவர் கடையில்தான் இருந்திருக்கிறேன். இரவு முழுவதும் விழித்திருந்து கிளம்பும் போது அன்றிரவு அளவெடுத்து தைத்த சட்டை, இனிப்பு எனக் கொடுத்துப் போகச் சொல்வார். அதுவும் தீபாவளிக்கென வரும் மழை மெல்ல ஆரம்பிக்கும் போது அதில் நனைந்தபடி சைக்கிளில் பயணிப்பதில் அத்தனை பேரானந்தம். இப்போது ஊருக்குப் போகும் போதெல்லாம் “மாப்ள தீபாவளிக்கு இங்க இருந்தாலும் மாமாவுக்கு உதவுவீங்க”ன்னு சொல்வார், “தீபாவளியே கொண்டாடாமக் கெடக்கேன் மாமா” எனச் சொல்லி நகர்வேன்.
கல்லூரி போன பின் மாமாவின் தையல் கடையில் கார்டு கொண்டு வருபவர்களின் எண்ணையும் துணியையும் பார்த்து எடுத்துக் கொடுத்து பணம் வாங்கிப் போடும் வேலை மட்டும்தான். இரவெல்லாம் நின்று விட்டு அதிகாலையில் வீட்டுக்கு வந்து குளித்து, சாமி கும்பிட்டு, சாப்பிட்டதும் வெடியாவது, தீபாவளி கொண்டாட்டமாவதுன்னு விழுந்தடித்துத் தூங்கிருவேன். மதியம் நாட்டுக்கோழி குழம்பு வைத்து சாப்பிடக் கிளப்புவார்கள். எல்லாரும் கூடி ஒன்றாக வெடிகள் போட்டு, அன்றிரவோ அல்லது மறுநாளோ வெடித்த பேப்பர்களை எல்லாம் குவித்து எரிப்பதும், அப்படி எரிக்கும் போது வெடிக்காமல் கிடந்த வெடிகள் வெடிப்பதும் கொடுத்த மகிழ்ச்சியை இன்றைய தீபாவளி கொண்டாட்டங்கள் கண்டிப்பாகக் கொடுப்பதில்லை என்றே நினைக்கிறேன்.
கிராமங்களில் மனிதர்கள் குறைந்து விட்டார்கள். திருவிழாக்கள் மட்டுமே அவற்றை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன எனலாம். எங்கள் ஊரில் எல்லாம் தீபாவளி என்பது சம்பிரதாயத்துக்குக் கொண்டாடுவது போலாகிவிட்டது. இப்போதெல்லாம் முதல் நாள் இரவு பலகாரம் செய்தல் என்பது வழக்கொழிந்து போய் விட்டது. வைத்துச் சாப்பிடும் பதார்த்தங்களை ஒரு வாரம் முன்னதாகவே செய்து விடுகிறார்கள். தீபாவளி அன்று எண்ணெய்ச்சட்டி வைக்க வேண்டும் என்பதற்காக வடையும், பனியாரமும் செய்கிறார்கள்.
எங்கம்மா சுருள்போளி என்று ஒரு இனிப்பு செய்வார். நாலைந்து நாளைக்கு முன்னரே செய்து பாத்திரங்களில் அடுக்கி, அறைக்குள் பூட்டி வைத்திருப்பார். மாலை நேரத்தில் ஆளுக்கு ஒன்றென தீபாவளிக்குப் பின்னரும் சில நாள்கள் வரும். எங்கம்மா அடுப்படிக்குள் போவது குறைந்தபோது சுருள்போளியும் காணாமல் போய் விட்டது. இப்போது ஆசையிருந்தாலும் அதைச் செய்து தர ஆட்கள் இல்லை. லட்டும், முறுக்கும், ஆட்டுக்கால் கேக்கும், குலாப் ஜாமூனுமாய் தீபாவளி ஊரில் மகிழ்வாய் நகர்வதில் மகிழ்ச்சியே என்றாலும் இங்கு அன்று வேலைக்குப் போயாக வேண்டுமே என்ற எண்ணம் சிறு வருத்தத்தைச் சுமக்க வைக்கிறது.
அன்று வீட்டில் எடுக்கும் உடை, அரவக்குறிச்சியில் இருந்து வரும் அண்ணன் தைத்துக் கொண்டு வரும் உடை, தையல் கடையில் மாமா எடுத்துத் தைத்துத் தரும் உடை என மூன்று புத்தாடைகள் கிடைக்கும். இப்போது இங்கு தீபாவளியே இல்லை துணியெடுத்து என்னாகப் போகுது என்ற யோசனைதான் வரும். ஊரில் எடுத்து சாமி கும்பிட்டு விட்டு, தீபாவளி முடிந்ததும் ஊரில் இருந்து வரும் உறவுகளிடம் கொடுத்து விடுவார்கள். திருமணத்துக்குப் பின் மாமா வீட்டிலும் புத்தாடை எடுத்து விடுவார்கள் என்பதால் இரண்டு உடைகள் இப்போதும் கிடைக்கின்றன தீபாவளிக் கொண்டாட்டம் இன்றி. இந்த முறை புத்தாடையை மனைவியின் மாமா கொண்டு வந்து கொடுத்துவிட்டார்.
நல்லது, எல்லோருக்கும் தீபாவளி சிறப்பாக அமையட்டும்.