Home இலக்கியம்கங்காதரன் வெங்கடேசன் கவிதைகள்

மகனே! மகளே!: பாடல்!!
(Twinkle! Twinkle!LittleStar பாடல் மெட்டு)
(நீலக் கடலின் ஓரத்தில்: பாடல் மெட்டு)

மகனே! மகளே! இளங்குருத்தே!
சாப்பிடச் சொன்னால் அழலாமா?
மரமும் செடியும் கொடிவகையும்
சாப்பிடும் அழகைப் பார்த்தாயா?
(மகனே! மகளே!

இரவும் பகலும் வேர்க்கூட்டம்
நிலத்தடி நீரை உறிஞ்சுவதேன்?
நீரை உறிஞ்சித் துளிரனைத்தும்
இலையாய்க் காயாய்க் கனிகிறதே!

கனியும் காயும் பழவகையும்
சுவையாய் இருக்கும் காரணமென்?
கீரை தானியம் கிழங்குகளும்
பூவும் மணமுமாய் விளங்குவதேன்?
(மகனே! மகளே!

பகலின் ஒளியில் பச்சையத்தை
பாங்காய்ச் சமைக்கும் கலைநயத்தை
தினமும் தினமும் கண்டாலே
அகமும் முகமும் மலர்ந்துவிடும்!

அதனை அறிந்து உன்வாயால்
பாலும் தேனும் உண்ணுவாயே!
சுவையாய்ச் சுவையாய் அன்னைதரும்
அமுதை எனக்குநீ தருவாயா?
(மகனே! மகளே!

மனமும் புத்தியும் மூளைத்திறன்
எனவும் உள்ள திறமைகளை
திறம்படச் செயலில் காட்டிடவே
வைட்டமின் முதலிய சத்துவேணும்!

வாயால் உண்டுப் பழகாமல்
உடல்கூ றுகளும் வளர்வதுஎன்?
குடலும் இதயமும் போல்தானே
அறிவுக் கருவிகள் இயங்கிடுமாம்!
(மகனே! மகளே!

எதையும் எதையும் உண்ணுவதால்
விரைவாய் நீயும் வளர்வாயே!
மகிழ்வாய் உலகின் அறிவனைத்தும்
மனதில் இருத்தி ஒளிர்வாயே!

தியானம் யோகாப் பழகிடவும்
உடல்நலப் பயிற்சிகள் செய்திடமும்
உணவு இன்றி அமையாதே!
நிதமும் நன்றாய் உண்ணவேணும்!
(மகனே! மகளே!

தூரத் தூரப் பால்வெளியில்
மின்னும் மின்னும் தாரகைகள்
நீயும் நானும் அருகருகே
இருப்பது போலும் இருக்கிறன!

கணக்கு என்னும் அருஞ்சுவையை
அறிவியல் சாறெனும் பெட்டகத்தை
திறந்த வெளியில் புத்தகத்தில்
அழகாய்க் கற்றுத் தேர்வாயே!
(மகனே! மகளே!

துளிரின் படக்கதை பெரியயெழுத்து
ஜந்தர் மந்தர் பதிவனைத்தும்
பாங்காய் லகுவாய் அறிவியலை
நமக்கு ஊட்டும் சாதனங்கள்!

பழங்கதை சாத்திரம் கெடுத்துவைத்த
பாரத மக்களின் அறிவுத்திறன்
பாழாய்ப் போன குப்பையென
புராணப் பொய்களின் மேடாச்சு!

பொய்கள் என்னும் இருளகற்ற
அறிவியல் விளக்கு ஒளிபாய்ச்சி,
வாழும் உலகில் அறிவுசூழ
இனிநம் வாழ்வை அமைத்திடவா!!
(மகனே! மகளே!

***************************************************************************************************

பனைமரம்நான்! பனைமரம்நான்!
பலபொருட்கள் நான்தருவேன்!…
நான்தந்த பொருள்களினால்
நானிலத்தை மகிழவைப்பேன்!
(பனைமரம்நான்!…

சில்லறைகள் சேர்த்துவைக்க
குழந்தைகளின் வங்கியாவேன்!
உண்டியெனும் பெயரதனால்
நற்பழக்கம் படியவைப்பேன்!

சிறுபொம்மைப் பலவடிவம்
விறுவிறென்று உருவாக்கி
குழந்தைகளின் பொழுதினையே
அழகழகாய் பழகவைப்பேன்!
(பனைமரம்நான்!…

ஆக்கம்தரும் அரும்பொருட்கள்
செய்மகளிர் வருமானம்,
சுயவுதவிக் குழுக்களுக்கு
கொழுத்தநல்ல வெகுமதியாம்!

மகளிர்கையில் வண்ணங்களாய்
மகிழ்விளங்குப் பைகளென
நாகரீக மங்கையர்க்கு
காதணிமூக் குத்தியாவேன்!

வீடுகளில் தோரணங்கள்
தளம்தொங்கும் ஆபரணம்
தொட்டிலிலே விளையாட்டுக்
கிலுகிலுப்பை என்குழந்தை!

அலமாரி அழகுறவே
விளங்கநல்ல அணிகலன்கள்
என்னுடைய ஓலையினால்
பின்னிவைத்தால் மகிழ்ச்சியன்றோ?
(பனைமரம்நான்!…

பனஞ்சாறு தருங்குளிர்ச்சி
மனம்மகிழும் பானமாகும்!
பனங்கள்ளும் உணர்ச்சியுடன்
ஆரோக்யம் அளித்திடுமே!

பனங்கட்டி பனைவெல்லம்
சர்க்கரைக்கு மாற்றுஅன்றோ?
நம்நாட்டு சர்க்கரைக்கு
ஈடேதும் உலகிலுண்டோ?

வெயிலிலே வரும்வெக்கை
பனைவோலை விசிறிவிடும்!
ஓலைக்குடை வண்ணமிட்டு
விற்றுவரப் பணம்குவியும்?

பனைமரத்தின் அடியினிலே
நீரோடை நிலம்காக்கும்!
பனைவரிசை பார்ப்பதற்கு
கண்களுக்கே குளிர்ச்சிதரும்!
(பனைமரம்நான்!…

பனைஎண்ணெய் மலேசியாவின்
மிகப்பெரிய உற்பத்தி!
பலநாட்டில் பலர்வீட்டில்
கொழுப்புமிகாச் சமையல்தரும்!

பனங்கிழங்கு பனைமாவு
பணமில்லா நல்லுணவு
விளம்பரமே இல்லாத
நம்மூரின் தனிவுணவு

பலசரக்குக் கடைகளிலும்
நியாயவிலைக் கொடைகளிலும்
ஏழைமக்கள் தவறாமல்
வாங்கிச்செலும் பண்டமாகும்!

நுங்குதரும் ஒரேவள்ளல்
நானன்றி யாருமில்லை!
நன்றியுடன் நன்மக்கள்
எனைக்காக்க உதவுங்கள்!

தோப்பாகத் தனியாக
எப்படியும் அருள்புரிவேன்!
சோழர்தம் படையினர்க்கு
இலச்சினையாய் வாழ்ந்திருந்தேன்!

பனைமரம்நான்! பனைமரம்நான்!
பலபொருட்கள் நான்தருவேன்!…
நான்தந்த பொருள்களினால்
நானிலத்தை மகிழவைப்பேன்!

படுக்கநல்ல பாயாவேன்
பஞ்சணைக்கு நாராவேன்
அடுக்கடுக்காய்ப் பானைகளை
அடுக்கிவைக்க உரியாவேன்.

Author

You may also like

Leave a Comment