ஒற்றைச் சிறகு ஓவியா என்னும் சிறார் நாவலுக்காக 2025ஆம் ஆண்டுக்கான சாகித்திய பாலபுரஸ்கார் விருதைப் பெற்றிருக்கும் விஷ்ணுபுரம் சரவணன் தொடர்ந்து சிறார் இலக்கியத்தில் இயங்கி வருகிறார். பத்திரிகையாளராகவும் பேச்சாளராகவும், கதை சொல்லியாகவும் பயணப்பட்டு வருபவரை, பண்புடன் சிறார் இலக்கிய இதழுக்காக நேர்காணல் ஒன்று எடுத்தோம். இனி அவரின் எண்ணங்கள்..
பாலசாகித்திய விருது பெற்றமைக்கு பண்புடன் இணைய இதழ் சார்பாக, எங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்கிறோம். முதல் கேள்வி..
1. கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் சிறார் இலக்கியத்தின் வளர்ச்சி எப்படி உள்ளது? ஒரு படைப்பாளியாக உங்கள் பார்வையைக் கூறுங்கள்.
கடந்த 75 ஆண்டுகளை அளவிட்டுப் பார்க்கையில் கடந்த 15 ஆண்டுகளில் ஏராளமானவர்கள் சிறார் இலக்கியம் எழுத வந்துள்ளனர். பலர் வரும்போது பல்வேறு வகையான எழுத்துகளும் வரத்தானே செய்யும்? சில ஆழமாக இருக்கும், பல மேலோட்டமாக இருக்கும். கதை மையங்கள் எனப் பார்க்கையில் புதிய, சமகால விஷயங்கள் அதிகளவில் எழுதப்படுகின்றன. குறிப்பாக, இதற்கு முன் இதையெல்லாம் ஏன் சிறார் இலக்கியத்தில் எழுத வேண்டும் என்ற முன்முடிவோடு ஒதுக்கிய பாலின, சாதிய, பொருளிய, சிறப்புக்குழந்தைகள், அரசியல் சார்ந்த கதை மையங்கள் வரத் தொடங்கியுள்ளன. ஆயினும் இப்படைப்புகளுக்குப் பின் ஒரு கருத்தியல் பின்புலம் இல்லாதது பலவீனமாகத் தென்படுகிறது. ஏனெனில், சில இடங்களில் பரிதாபத்தின் தொனி அல்லது நாடகப் பாணியிலான முடிவுகள் என்பதாகப் பார்க்க முடிகிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால், யெஸ்.பாலபாரதி, ஒரு பேட்டியில் சொன்னது போல, ‘சிறார் இலக்கியம் அகலமாக விரிந்திருக்கிறது. ஆழமாகப் பயணிக்கவில்லை’
2.சிறார் நூல்களைப் பொறுத்த அளவில் இன்று வாசிப்பவர் ஒருவராகவும் நூலை வாங்குபவர் ஒருவராகவும் உள்ளனர். இந்த முறையால் எழுத்தாளர்களுக்கு இருக்கும் சவால் என்ன? அவர்கள் என்ன செய்யவேண்டும்?
குழந்தைகள் வாசிக்க பெற்றோர்களே வாங்கித் தர வேண்டியுள்ளது. இது எல்லாக் காலக்கட்டங்களிலும் இருக்கும் முறைதான். அதனால், பெற்றோருக்குப் பிடித்த கதைகளே அதிகளவில் வெளிவருகின்றன. முன்பெல்லாம் நீதிக்கதைகள் பெற்றோருக்குப் பிடிக்கும், அவை மாத்திரமே குழந்தைகளுக்குக் கிடைத்தன. காலம் மாற மாற ரசனையும் மாற கதைகளின் போக்கும் மாறுகிறது. இதனால் குழந்தைகளுக்கே உரிய ரசனைக்கேற்ற புத்தகங்கள் வரவில்லை என்ற பார்வையும் இருக்கிறது. இந்த இடத்தில் நார்னியா நாவல் எழுதிய சி.எஸ்.லூயிஸின் மேற்கோள் ஒன்றைச் சுட்ட விரும்புகிறேன். அவர், ’குழந்தைகளுக்கான கதை என்பது குழந்தைகளுக்கு மட்டுமே இருந்தால் அது நல்லது அல்ல’ என்கிறார். குழந்தைகளுக்கான நாவல் / கதை / பாடல் என்றாலும் பெரியவர்கள் பயணிக்கவும் அதில் இடமிருக்க வேண்டும். சிறார் எழுத்தாளர்கள் இதை உள்வாங்க வேண்டியுள்ளது. பெரியவர்களைப் பயணிக்க வைக்கவும் அதேநேரம் குழந்தைகளின் ரசனைக்கு ஏற்ற கதை மையங்களையும் எழுத்து முறையையும் அமைத்துக்கொள்ள வேண்டும். அதற்குத் தீவிர வாசிப்பும், நல்ல எழுத்துப் பயிற்சியும் அவசியம்.
3.சமூக வலைதளத்தைத் திறந்தாலே நிறைய சிறார் நூல்களின் விளம்பரங்கள் கண்ணில் படுகின்றன. சிறார் இலக்கிய உலகம் மிக ஆரோக்கியமானதாகத்தான் இப்போது இருக்கிறதா? அல்லது மாற்றங்கள் வேண்டுமா?
பலர் எழுத வருவது ஆரோக்கியமானதுதான். ஆனால், படைப்புகளும் சத்தானதாக இருக்க வேண்டும். நல்ல படைப்புகள் வருகின்றன என்பதையும் மறுக்க முடியாது. அதேநேரம் மிக மேலோட்டமான படைப்புகள் குவிகின்றன என்ற விமர்சனத்தையும் தவிர்க்க முடியாது.
கர்நாடக இசையில் பாடகராக அரங்கேற்றம் செய்ய குறைந்தது ஐந்து ஆண்டுகளேனும் பயிற்சி எடுக்க வேண்டும். ஓர் ஓவியர் தனது ஓவியங்களைக் கண்காட்சியில் வைக்குமளவு முன்னேற குறைந்தது ஐந்தாறு ஆண்டுகளாவது பயிற்சி எடுக்க வேண்டும். இப்படி, கலை சார்ந்த எந்தத் துறையிலும் குறிப்பிட்ட காலம் பயிற்சி என்பது மிக அவசியமாகிறது.
எழுத்துத் துறையில் தீவிர வாசிப்பும், எழுதி எழுதிப் பழகிப் பார்த்தலும் மிக அடிப்படையானது. இப்போது வெளியாகிற சிறார் இலக்கிய நூல்களை வாசிக்கையில் பெரும்பாலான நூல்களுக்குப் பின் தீவிர வாசிப்பும், எழுத்துப் பயிற்சியும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. மேலும், சிறார் இலக்கியப் படைப்பாளிகள் கருத்தியல் தளத்தில் தங்களை வலுவாக்கிக்கொள்ளும் முயற்சிகள் இருப்பதாகவும் தெரியவில்லை. அவை படைப்புகளில் வெளிப்படவுமில்லை. கருத்தியல் சார்ந்த தெளிவு இருக்கும்பட்சத்தில் எழுதும் கதை மையங்களின் தொனியும் தெளிவாக இருக்கும். இதைப் படிக்கும்போது சிலருக்கு ஒரு கேள்வி எழும், ஒரு படைப்பாளி தீவிர வாசிப்பிலும் எழுத்துப் பயிற்சியிலும் கருத்தியலிலும் இல்லை என்பதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? என்பதே அந்தக் கேள்வியாக இருக்கும். உண்மைதான். ஒவ்வொருவரின் வாசிப்பு நிலை குறித்து எனக்கும் தெரியாதுதான். ஆனால், அவர்களின் படைப்பில் அது வெளிப்படும் அல்லவா? படைப்பின் பாடுபொருள், மொழிநடை, அது பேசத் தவறும் கருத்தியல் நிலைபாடு என படைப்பில் இருந்தே படைப்பாளியை மதிப்பிடுகிறேன் என்பதே அதற்கான பதிலாக அமையும்.
4.தமிழ் சிறார் நூல்களைவிட, ஆங்கிலத்தில் எழுதப்படும் நூல்களைவிட, ஆங்கில சிறார் நூல்கள் தான் இங்கே அதிகம் விற்பனை ஆவதாகச் சொல்கிறார்களே? தமிழ் சிறார் எழுத்தாளராக இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இயல்பாகவே நம் மக்களுக்கு ஆங்கிலம் மீது ஒரு மோகம் இருக்கிறது. ஆங்கில மொழியைக் கற்பதில் பேரார்வம் உள்ளது. அதுவும் தமிழ் மொழியைக் கற்பதை விடவும் பேரார்வம். அதேதான் சிறார் இலக்கியத்தில் நிலவுகிறது. முந்தைய கேள்வியை இப்போது நினைவுகூரலாம். பெற்றோர்கள் வாங்கித் தருவதைத்தான் குழந்தைகள் படிக்க வேண்டியுள்ளது. பெற்றோர் கதைப் புத்தகங்களைக்கூட ஆங்கிலம் கற்றுத்தரும் கருவியாகப் பார்க்கிறார்கள். அதனால் இந்த விளைவு என்று நினைக்கிறேன். கதைப் புத்தகங்கள் வாசிப்பதன் வழியாக மொழியை நன்கு கற்க முடியும்தான். ஆயினும் கதை வாசிப்பதன் முதல் நோக்கம் குழந்தையின் படைப்பூக்கத்தைச் செழிக்கச் செய்வதே!
5.சிறுவர்களுக்கு எழுதுவதோடு கதை சொல்லியாகவும் பயணப்படுகிறீர்கள். பல மேடைகளில் நீங்கள் கதை சொல்லும் முறையைக் கேட்டிருக்கிறோம். கதை கேட்கப் பழக்கப்பட்டுவிட்டால் அடுத்த தலைமுறையினர் வாசிப்பில் இருந்து விலகிவிட மாட்டார்களா? ஏற்கெனவே அடுத்த தலைமுறையினரின் வாசிப்பு குறைந்துள்ளதாக பலரும் சொல்கின்றனரே?!
நம்முடைய மரபே முதலில் கதை கேட்பதுதான். நாம் சிறுவயதினராக இருக்கையில் பாட்டியோ, தாத்தாவோ, அம்மாவோ, அப்பாவோ கதைகள் சொல்லி உறங்க வைத்திருப்பார்கள். இதன் நீட்சிதான் நாம் வாசிப்புக்குள் நுழைந்தது .
இன்றைக்குக் கதை சொல்லும் வீடுகள் அருகிவிட்டன. கதை சொல்வதையும் ஒரு பண்டமாக வெளியே இருந்து வாங்க நினைக்கின்றனர் பெற்றோர்கள். இது சரியா… இல்லையா என்பதைக் கடந்து யதார்த்தம் இதுவே. இந்த நிலையில் கதை சொல்லல் வழியாக அவர்களை வாசிப்பிற்கு இழுத்து வந்துவிட முடியும் என்றே நம்புகிறேன். ஏற்கெனவே ஆடியோ புக்ஸ் போன்ற வடிவங்கள் வந்த நிலையில் நேரடி கதை சொல்லல் என்பது கதை சொல்லிக்கும் கேட்பவருக்கும் இடையே ஒரு பந்தத்தை ஏற்படுத்துகிறது. அதன் வழியே அவர் காட்டும் திசையில் நடக்க பல குழந்தைகள் விரும்புகிறார்கள். அவர்களைப் புத்தக வாசிப்பை நோக்கித் திருப்பும் வேலை எளிதாகி விடுகிறது. மாறாக, கதை சொல்லல் என்பது வெறும் நிகழ்த்து கலையாக, அதாவது நான் சொல்வதைக் கேட்டால் மட்டும் போதும் என்ற புரிதலோடு ஒரு கதை சொல்லி இருந்தால் குழந்தைகள் கேட்டலோடு தேங்கிவிடும் அபாயமும் இருக்கிறது.
-கனியப்பா