தண்டகாரண்யத்தின் எல்லையைக் கடந்து, சூர்ப்பனகை இலங்கையை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தாள். பகல் நேரத்தின் சூரிய ஒளி அவளைச் சுட்டெரித்தது. கடலின் அலைகளில் பொன்மயமாகப் பரவி மின்னினாலும், கடற்கரையின் மணல் வெயிலில் தகதகத்தது கூட அவளுக்கு நெருப்பாற்றில் செல்வது போல உணர்வை ஏற்படுத்தியது. கடல் அலைகள், “பழி! பழி! பழி!” என அவளை இலங்கையை நோக்கி உந்தித் தள்ளியது போல ஒலித்தது.
சூர்ப்பனகையின் மூக்கு மற்றும் காதுகள் அறுபட்டு, இரத்தம் தோய்ந்த முகம், கடல்காற்றில் காய்ந்து, அவள் கண்கள் வெறியின் தீயுடன் எரிந்தன. அவள் இதயத்தில், கணவன் வித்யுத்ஜிவாவின் மரணமும், மகன் சம்புகனின் இழப்பும், இராம-லக்ஷ்மணரின் வீரமும், சீதையின் அபூர்வ அழகும் ஒரு பயங்கரமான சூழ்ச்சியாக உருவெடுத்தன.
பல காலம் கழித்து, இதோ அவள் இலங்கையின் தெருக்களில் நடக்கிறாள். இலங்கை அழகும் வளமும் முன்பு தான் பார்த்ததை விட மேம்பட்டிருந்ததைக் கண்டாள். இலங்கை நகரம், தங்க மாளிகைகளாலும், தேவ சிற்பங்களாலும் ஒளிர்ந்தது. இராவணனின் அரண்மனை, பவளக் கற்களாலும், மாணிக்கங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, சூரிய ஒளியில் தீப்பிழம்பாக மின்னியது.
“இராவணனின் ஆணவத்தையும் காமத்தையும் தூண்டி, இராமனுடன் மோதவைப்பேன். இந்த இரு வீரர்களின் அழிவில் என் பழிவாங்குதல் பூரணமடையும்!” என்று அவள் முணுமுணுத்தாள். அவள் குரல் ஒளிமிகுந்த இலங்கைக்கு இருள் சூழவைக்கும் சபதமாய் ஒலித்தது.
இலங்கை நகர மக்கள் அச்சத்துடன் அவளைப் பார்த்தனர். சிலர் “எம் நாட்டு இளவரசிக்கு இக்கொடுமை செய்தவன் யார், யார்?” எனச் சொல்லி வாய்விட்டு அழுதனர். சிலர் இராவணன் இவளைக் கண்டு சீற்றத்தால் இலங்கையை அழித்துவிடுவானோ என்று பயந்தனர்.
சூர்ப்பனகை, அரண்மனையின் பிரம்மாண்டமான வாயிலை அடைந்தாள். அவள் விகாரமான உருவம், இரத்தம் தோய்ந்த முகம், கோபத்தால் எரியும் கண்கள் இவை கண்ட அரண்மனையின் காவலர்கள் திகைத்தனர். அவள் இராவணனின் தங்கை என்ற உண்மை அறிந்து, அவர்கள் அவளை வணங்கினர்.
சூர்ப்பனகை, பெருத்த அலறலுடன் அரண்மனையின் மைய மண்டபத்தை அடைந்தாள். இராவணன், தன் பொன் மண்டபத்தில், மாணிக்கங்கள் பதிக்கப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான். அவன் பத்து தலைகள், தேவனின் மகிமையையும், அசுரனின் அளவு கடந்த ஆணவத்தையும் பறைசாற்றின.
சூர்ப்பனகை, இராவணன் முன் நின்றதும், தன் விகாரமாக மாறிய முகத்தைக் காட்டி, வானமே அதிரும்படி கதறினாள்.
“அண்ணா! இலங்கையின் மன்னா! பார், என் கதியைப் பார். எனக்கென இருந்த துணையை நீ அழித்தாய். நீயும் துணையாக நிற்கவில்லை. இன்று நான் அடைந்திருக்கும் இழிவான கதியைப் பார்!” என்று கதறினாள்.
இராவணன் மனம் பதறியது. முன்பு அவனுக்கு உண்டான கோபம் வித்யுத்ஜிவாவின் மீதான கோபமே தவிர, அவள் மீதானதல்ல. அவன் உள்ளம் தங்கையின் நிலை கண்டு பெருங்கோபத்தாலும் சீற்றத்தாலும் துடித்தது.
“யார் இச் செயலைச் செய்தது? யாருக்கு இந்தத் துணிச்சல் வந்தது? யார் தன் அழிவைத் தேடி உன்னை இந்த நிலைக்குத் தள்ளியது?” என்று பாம்பின் சீற்றத்தைப் போலக் கோபத்தால் மூச்சை விட்டுக் கொண்டே சொன்னான்.
“உன் தங்கையை இந்த அவமானத்துக்கு உள்ளாக்கியவர்கள், பஞ்சவடியில் இருக்கும் வெறும் மனிதர்கள்! உன் தங்கையின் மூக்கையும் காதுகளையும் வெட்டினார்கள்! என் கணவன் வித்யுத்ஜிவாவை நீ கொன்றாய், மகன் சம்புகனை இவர்கள் கொன்றார்கள். என்னை எல்லோரும் சேர்ந்து நிர்க்கதியாக்கிவிட்டீர்கள்!” என்று சூர்ப்பனகை கதறினாள்.
அவள் கண்ணீர், கோபத்துடனும் துயரத்துடனும் கலந்து, அரண்மனையின் மாணிக்கத் தரையில் விழுந்து, மேலும் இரத்தச் சிவப்பு நிறத்தைப் பரப்பியது. இராவணன், தன் தங்கையின் துயரையும், விகாரமான முகத்தையும் கண்டு, பாசத்தில் உருகினான்.
சிம்மாசனம் விட்டு கீழிறங்கி ஆறுதலாய் அவள் தோளைப் பற்றி அவளை உற்று நோக்கிய இராவணன் சற்று நிதானித்தான். அவள் கண்களில் உண்மையுடன் சற்றே கள்ளத்தனம் சேர்ந்திருப்பதை அவன் உணர்ந்தான். பின் கேட்டான்
“நீ என்ன தவறு செய்தாய்?”
சூர்ப்பனகை, இராவணனின் பாசத்தை உணர்ந்து, தன் நாடகத்தின் அடுத்த கட்டத்திற்குத் தயாரானாள். இராவணனின் அந்தக் கேள்வி அவன் தன் மீது ஏதோ சந்தேகப்படுவதைப் போலத் தெரிந்தது. அவள் குரலைத் திடீரெனத் தாழ்த்தினாள்.
“நான் என்ன செய்தேனா? நான் என்ன செய்ய முடியும்? ஒரு அபலை அல்லவா நான்? இழந்த அண்ணனின் அன்பு வேண்டி, காட்டில் இருந்த ஒரு மானுடப் பெண்ணை உனக்கு மனைவியாக்க நினைத்தேன். அவள் பேரழகி. பேரழகிக்கெல்லாம் அரசி. எப்படி நீ உலக சாம்ராஜ்ஜியத்தின் அதிபதியோ, அது போல அவள் உலகத்தின் அத்தனை அழகிற்கும் அரசியானவள். அவளை உன்னிடம் கொடுத்து உன் அன்பை மீட்டெடுக்க முனைந்தேன்.”
“அப்போதுதான் அவர்கள் என்னைத் தடுத்தார்கள் அண்ணா. இராமனாம், இலக்குவனாம். இந்த மனிதர்கள் சாதாரணர்கள் அல்ல. உன் பெயரைச் சொல்லி அவர்களை பயமூட்டியதும் தான் என் மூக்கையும் காதையும் அரிந்தனர். இராமனால் உன் பதினாலாயிரம் அரக்கப் படையும், கர தூஷணர்களும் ஒரு முகூர்த்த நேரத்தில் அழிந்தனர்.”
இந்த வார்த்தைகள் இராவணனின் காதில் எரியும் நெருப்பைப் போல விழுந்தது. அற்ப மானிடர்களா இச் செயலைச் செய்தது? கர தூஷணர்களை அழிக்கும் அளவிற்கு அவர்கள் வல்லவர்களா என்று அவன் சிந்தனையில் மூழ்கினான்.
சூர்ப்பனகைத் தொடர்ந்தாள். “அண்ணா, அவர்களை வெறும் மானிடர்கள் என்று நினைக்காதே, இருவரும் மன்மதர்களைப் போல் காணப்படுகின்றனர். அந்தப் பெண், அவளின் பெயர் சீதை… அவள் அவர்களின் பலம். அவர்களின் ஆன்மா. அவளின் பேரழகு உனக்கு மட்டுமே சொந்தமானது. ஆனால் அவளோ அற்ப மானிடர்களுடனல்லவா வசிக்கிறாள். அதனால் தான் அவளை உனக்குப் பரிசளிக்க நினைத்தேன், பார்… இது தான் அதற்குப் பரிசு,” என்றாள்.
அவன் கண்கள், சீதையின் பெயரைக் கேட்டதும் நிமிர்ந்தன. மிதிலையில் ஜனகன் தனக்கு அழைப்பு விடுக்காது நடத்திய சுயம்வரத்தின் அவமானங்கள் நினைவுக்கு வந்தன.
சூர்ப்பனகை, தன் குரலை மேலும் கவர்ச்சியாகவும், மென்மையாகவும் மாற்றி, அவன் காமத்தின் நெருப்பைத் தூண்டும் வகையில் வர்ணிக்கத் தொடங்கினாள்.
“அண்ணா, சீதையைப் பற்றி உனக்கு எப்படிச் சொல்வேன்? என் நாக்கு, அவளைப் பற்றி வர்ணிக்கவும், அவளது அழகைச் சொல்லவும் வெட்கமடைகிறது! அவள் இந்த உலகின் அபூர்வம்! அவள் அழகு, தேவலோக அப்சரஸ்களையும் வெட்கித் தலைகுனிய வைக்கும்! உன் மனைவியாக இருக்கும் மண்டோதரியின் அழகை விட, பல மடங்கு அழகுடையவள் அவள்!”
“அவள் கண்கள்… மீனைப் போல, தாமரை இதழ்களைப் போல நீண்டு, நட்சத்திரங்களைப் போல மின்னுகின்றன. அவற்றைப் பார்த்தால், உன் பத்து தலைகளிலும் காமம் பொங்கும்!”
“அவள் உடல்… பவளத்தால் செதுக்கப்பட்ட சிற்பம் போல, சூரிய ஒளியில் ஒளிவீசுகிறது. அவள் நடை, காற்றின் மென்மையை மிஞ்சும்! ஒவ்வொரு அசைவிலும், ஏதோ ஒரு மந்திரம் மறைந்திருக்கிறது. பெண்ணான எனக்கே அவள் மீது ஆசை வந்துவிட்டது என்றாள் பாரேன். ஆம், அவள் உனக்கே உரியவளாக இருக்க வேண்டும்!”
சூர்ப்பனகையின் வார்த்தைகள், இராவணனின் அவமானத்தையும், கோபத்தையும் மீறி காமத்தைத் தூண்டின. இத்தனை பெரும் அழகியை இராமன் என்னும் சாதாரண மனிதன் அனுபவிப்பதா என்று மனதில் பொறாமையடைந்தான்.
“அண்ணா! உன் வீரத்துக்கும், உன் சாம்ராஜ்யத்துக்கும் அவளைப் போன்ற ஒரு பெண்ணை துணையாக்குவதுதான் நியாயம்! அவளை நீ உன் அரண்மனைக்குக் கொண்டு வந்தால், இலங்கை தேவலோகத்தை விடப் பன்மடங்கு மகிமையுடன் ஒளிரும்!” என்று சூர்ப்பனகை சொல்லி முடித்தாள்.
இராவணனின் மனம், சூர்ப்பனகையின் அபரிமிதமான வர்ணனைகளால் முற்றிலும் மயங்கியது. அவன் பத்து தலைகளிலும், சீதையின் கற்பனை அழகு நிழலாடியது. அவன் மனம் இவ்வளவு பெரிய அழகை வேறு ஒருவன் வைத்திருக்கக் கூடாது என மீண்டும் மீண்டும் அலைகழித்தது.
சூர்ப்பனகை, இராவணனின் மனமாற்றத்தை உணர்ந்து, இறுதித் தூண்டுதலைக் கொடுத்தாள்.
“அண்ணா, அந்த மனிதன் இராமனின் வீரம் உனக்கு ஒரு பெரும் சவால். ஆனால், சீதையைப் பறித்தால், அவன் உன்னை எதிர்க்கும் சக்தி பெறமாட்டான். அவளை உன் துணையாக்கு. இராமனை இழிபிறவியாக நிறுத்து! உன் பெயர் உலகெங்கும் பரவும்!”
இராவணனின் கண்கள், காமத்தாலும் வெறியாலும் மின்னின. அவன் இதயம், சீதையைப் பறிக்க வேண்டும் என்ற உறுதியில் துடித்தது.
“தங்கையே! நான் உடனே புறப்பட்டுச் சீதையை இலங்கைக்குக் கொண்டு வருவேன்! பின் இராமனும் இலக்குவனும் என் முன் மண்டியிடுவார்கள்!” என்று அவன் ஆக்ரோஷமாக முழங்கினான்.
அவளுக்குண்டான மருத்துவங்களைச் செய்யச் சொல்லியும், அவளின் அறுபட்ட உறுப்புகளை மீட்டெடுக்கவும் தேவ மருத்துவர்களிடம் பணித்துவிட்டு, அவன் காம மிகுதியில் மண்டபம் விட்டு விலகினான்.
சூர்ப்பனகை, இராவணனின் நிலைக் கண்டு, மனதுக்குள் வெற்றியின் களிப்பில் ஆழ்ந்தாள். அவள் கண்கள் பழி பழி என்று மின்னின.
அங்கே இராவணன், தன் மனதி காம நெடுங்கதவைத் திறந்தான்.
1 comment
காமவள்ளி – சூர்ப்பனகை பாத்திரப் படைப்பு, வருணனை மிகவும் நேர்த்தியாக இருக்கிறது.